Headlines News :
முகப்பு » , , , , » சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ - காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – :I - சமுத்திரன்

சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ - காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – :I - சமுத்திரன்

என்.சரவணனின் "தலித்தின் குறிப்புகள்" நூல் வெளியீடு கடந்த 18.08.2019 அன்று நோர்வே stovner நூலகத்தில் நிகழ்ந்தது.  இதில் சமுத்திரன் (பேராசிரியர் சண்முகரத்தினம்), கலாநிதி சர்வேந்திரா, எழுத்தாளர் சத்தியதாஸ் (டென்மார்க்) ஆகியோர் திறனாய்வுரைகளை நிகழ்த்தினர். இந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தியவர் சித்திவிநாயகநாதன் அவர்கள். சமுத்திரன் அவர்களின் ஆய்வுரை பல பக்கங்களைக் கொண்ட திறனாய்வாக இருந்தது. மார்க்சிய கண்ணோட்டத்துடன் எந்தவொரு சிக்கலையும் அணுகும் அவரின் இந்த உரை எழுத்துவடிவத்தில் அவரின் இணையத்தளத்தில் (https://samuthran.net/) வெளியாகியிருக்கிறது. இது அதன் முதல் பகுதி.

‘தலித்தின் குறிப்புகள்’ பிரதி ஒன்றினை எனக்குத் தரும்போது சரவணன் ‘இது இலேசான வாசிப்புக் கட்டுரைகளைக் கொண்டது’ எனக் கூறியது நினைவுக்கு வருகிறது. ஆயினும் இந்தக் கட்டுரைகளை வாசித்தபோது எனக்குப் பல கனதியான விடயங்கள் நினைவுக்கு வந்தன. இங்கு அவை எல்லாவற்றையும் பற்றிச் சொல்வது சாத்தியமில்லை. ஆனால் ‘தலித்தின் குறிப்புகள்’ என் சிந்தனையைப் பலமாகத்தூண்டி வரலாறு மற்றும் கோட்பாடு தொடர்பான கேள்விகளுக்கு இழுத்துச் சென்றன என்பது உண்மை. இந்த அனுபவத்தின் உதவியுடன் சரவணனின் நூல் பற்றியும் அதன் பேசுபொருளுடன் தொடர்புள்ள சில பொதுவான அரசியல் விடயங்கள் பற்றியும் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1990களிலிருந்து 2017 வரையிலான காலகட்டத்தில் எழுதிப் பிரசுரிக்கப் பட்ட 30 கட்டுரைகளுடன் ஆதவன் தீட்சண்யாவின் அணிந்துரை மற்றும் ஆசிரியரின் ‘என்னுரை’ யையும் உள்ளடக்குகிறது இந்தத் தொகுப்பு. கட்டுரைகளின் ஒரு பகுதி சரவணன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ‘சரிநிகர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. அப்போது அவர் ‘அருந்ததியன்’ எனும் புனைபெயரில் எழுதினார். தன்னை அடையாளப்படுத்த இந்தப் புனைபெயரை அவர் தேர்ந்தது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது.  மற்றைய கட்டுரைகள் அவர் நோர்வேக்குப் புலம்பெயர்ந்த பின்னர் எழுதப்பட்டு வெவ்வேறு வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டன. ஏறக்குறைய மூன்று தசாப்த காலம் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைகளின் பிரதான பேசுபொருள் சாதியம், தலித்தியம் எனலாம், அதிலும் அருந்ததியர் சமூகம் மையமுக்கியத்துவம் பெறுகிறது. அதேவேளை இந்தப் பேசுபொருளுக்கும் இலங்கையில் மேலோங்கி நிற்கும் இனத்துவ அடையாள அரசியலுக்குமிடையிலான உறவும் இந்தத் தொகுப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இலங்கையின் ‘இந்திய வம்சாவழித்’ தமிழ் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையினர் தலித்துக்கள் என்பதால் அவர்களின் சமூக, கலாச்சார, அரசியல் பிரச்சனைகள் பெரும்பாலான கட்டுரைகளின் கருப்பொருட்களாகின்றன. மற்றைய கட்டுரைகளில் போரின் விளைவாக நோர்வே போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த வடக்குக் கிழக்குத் தமிழ் சமூகத்தில் தொடரும் சாதியம் மற்றும் அதன் நடைமுறை வடிவங்கள்பற்றிய அவருடைய அவதானிப்புக்களையும் விளக்கங்களையும் சரவணன் பகிர்ந்து கொள்கிறார். பல இடங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களையும் நேரில் கண்டவற்றையும் உயிர்ப்புடன் எழுதுகிறார். கட்டுரைகளில் இழையோடும் சுயவரலாறு சொல்லும் நடை இந்தத் தொகுப்பின் சிறப்பம்சம். 

சரவணன் எழுதுகிறார்:‘தலித்தியம் பேசுவது என்பது அவ்வளவு இலகுவானதுமில்லை, இன்பமானதுமில்லை. உயர்த்தப்பட்டவர்கள் பேசும்போது அவர்களுக்கு ஒரு மதிப்பும் கிடைத்துவிடுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பேசும்போது அவர்களின் அடையாளம் வெளிப்பட்டு அவமானப் பார்வைக்கு உள்ளாக்கப்பட்டு விடுகிறார்கள். தலித் மக்களின் உரிமை குறித்து பேச சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து குரல்கள் உரியவகையில் பதியப்படாததன் அரசியல் இதுதான்.’ சரவணன் தலித்தியம் பற்றிப் பேசுவதையோ எழுதுவதையோ அவருடைய உறவினர்கள், நண்பர்கள் பலர் விரும்பவில்லை. அவர் தனது தலித் அடையாளத்தைப் பெருமிதமாக வெளிப்படுத்தித் தலித்துக்களின் பிரச்சனைகள் பற்றி எழுதத் துணிந்ததால் அவரை விட்டு விலகிய உறவினர்களுமுண்டு என்பதையும் பதிவு செய்கிறார். பலகாலமாக இந்தியாவில் பரவிய தலித்தியப் போக்குகளினால் அவர் 1990களில் ஆகர்சிக்கப்பட்டார் என்பதையும் அறியமுடிகிறது. இந்தக் கட்டுரைகளுக்கூடாகத் தலித்தியம் எனும் பதத்தையும் அது சொல்லும் கோட்பாட்டையும்  இலங்கையில் சாதியம் பற்றிய கதையாடலுக்கு அறிமுகம் செய்துள்ளார். இலங்கையில், விசேடமாக இந்த நூலில் பிரதான முக்கியத்துவம் பெறும் சமூகங்களில், சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் இதுவரை  கருத்தியல்ரீதியிலும், அரசியல்ரீதியிலான அணிதிரட்டலைப் பொறுத்தவரையிலும் தலித்தியத்தின் பங்கு என்ன என்ற கேள்வி வாசகர் மனதில் எழலாம். இது ஒரு முக்கியமான கேள்வி. ஆயினும் இது பற்றி ஆழ, முழுமையாக ஆராய்வது இங்கு சாத்தியமில்லை. இந்தத் தொகுப்பின் உள்ளடக்கங்களை விமர்சனரீதியில் அணுகும்போது தலித்தியம் வரையறுக்கும் அடையாள அரசியல் பற்றிச் சில கேள்விகள் எழுகின்றன. அவைபற்றி இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். 

‘தலித்திய குறிப்புகள்’ பேசும் விடயங்களும் அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுப்பும் கேள்விகளும்   வாசகரை ஒரு நீண்ட வரலாற்றுக் காலத்துக்குள், அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்திய காலத்திலிருந்து நவதாராள உலகமயமாக்கல் தொடரும் இருபத்தியோராம் நூற்றாண்டின் சமகாலம்வரை, அழைத்துச் செல்கிறது. இந்தக் காலகட்டத்தில் இலங்கையின் ‘இந்திய வம்சாவழி’ மக்களின் வரலாறு தனியே மாற்றமின்றி முழுக்க முழுக்க அசைவற்று உறைந்து போய் நின்றுவிடவில்லை. அது ஒரு புறம் மாற்றத்தையும் மறுபுறம் மாற்றத்தைத் தடுக்கும் நிறுவனங்களின், விழுமியங்களின் தொடர்ச்சியையும் உள்ளடக்கிய போக்குகளைக் கொண்டுள்ளது என்பதே உண்மை. இந்தப் போக்கினைப் புரிந்து கொள்ள இந்தத் தொகுப்பின் கட்டுரைகளும் உதவுகின்றன. 

ஆயினும் இந்த நூலை வாசிக்கும்போது நிரப்பப்படவேண்டிய இடைவெளிகள் சிலவற்றையும் சந்திக்கிறோம்.  இந்தத் தொகுப்பின் பயன்பாட்டினை நன்கு புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் இதில் உள்ளடக்கப்பட்ட கட்டுரைகள் பேசும் விடயங்களின் வரலாற்றுக் காலகட்டப் பின்னணிபற்றிய ஒரு விரிவான குறிப்பு உதவியாயிருந்திருக்குமென நம்புகிறேன்.அத்தகைய ஒரு அறிமுகம் இந்தத் தொகுப்பினைச் மேலும் சிறப்பித்திருக்கும். அந்தக் குறையை நிரப்புவது எனது நோக்கமில்லை. ஆயினும்  எனது உரையை வரலாற்றுப் பின்னணி பற்றிய சில குறிப்புகளுடன் ஆரம்பிக்க வுரும்புகிறேன். அதைத் தொடர்ந்து அருந்ததியர் சமூகம், மலையகத் தமிழர், புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகம், மற்றும் இனத்துவ அரசியல் பற்றி இந்த நூல் கூறும் விடயங்கள் பற்றிப் பார்ப்போம். இறுதியில் ஒரு கலந்துரையாடலை நோக்கிச் சில முடிவுரைகள். 

வரலாற்றுப் பின்னணி

நீண்ட வரலாற்று நோக்கில் இலங்கையின் தமிழர்கள், சிங்களவர்கள் அனைவரும், அல்லது இவர்களில் மிகப் பெரும்பான்மையினர், இந்திய வம்சாவழியினர்தான். ஆனால் ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ எனும் பதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்  தமிழகத்திலிருந்து பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காகப் புலம் பெயர்க்கப்பட்டு இலங்கைக்கு வருவிக்கப்பட்ட மக்களையே குறிக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராச்சியம் கொடிகட்டிப் பறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் அந்தக் கொலோனிய கிரீடத்தின் அதி உயர்ந்த மணிக்கல்லென விளங்கிய இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மற்றைய கொலொனிகளுக்கு தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். இதற்கு முன்பிருந்தே ஒரு சர்வதேச கொலோனிய தொழிற்பிரிவு உருவாகிக்கொண்டிருந்தது. இது கொலோனியத்தின் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மைகளில் முக்கியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை பிரிட்டிஷ், பிரெஞ்ச், ஒல்லாந்த கொலொனிகளில் அடிமைகளே தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர். 1833இல் பிரிட்டிஷ் கொலொனிகளில் அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. இதற்குப்  பின்னர் வேறுவழிகளால் கட்டுப்படுத்தப்பட்ட, அதாவது சுதந்திரமற்ற நிலைமைகளில், தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொலொனிகளுக்கு ஏற்றுமதி செய்யும் போக்கு ஆரம்பமாகி 1920கள் வரை தொடர்ந்தது.[1] இப்படியாக ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் தமது தாயகத்தின் சாதியமைப்பினால் ஒடுக்கப்பட்டு கொலோனிய அரசாங்கத்தினால் கவனிக்கப்படாது பஞ்சத்தில் அல்லது அதன் விளிம்புகளில் வாழ்ந்து வந்தார்கள். காலாதி காலமாக இந்திய சாதியமைப்பினால் நிலமற்றவர்களாக்கப்பட்ட மக்கள், அதாவது தலித்துக்கள், விரிந்து செல்லும் பிரித்தானிய கொலோனிய சாம்ராச்சியத்தின் பல இடங்களில் தோன்றிய உழைப்பாளர் பற்றாக்குறையை நிரப்பும் மலிவான மனிதவள இருப்பாகப் (reserve)பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் பல்வேறு கொலொனிகளில் முற்றிலும் பரிச்சயமற்ற, இலாபத்தை நோக்காகக் கொண்ட உற்பத்தி அமைப்புக்குள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இணைக்கப்பட்டனர்.

இலங்கையில் 1815இல் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியபின் 1860களிலேயே பிரிட்டிஷ் பெருந்தோட்ட முதலீட்டாளர்கள் தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். ஆயினும் அதற்கு மூன்று நான்கு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்குப் புலம்பெயரும் போக்கு ஆரம்பித்துவிட்டது. அப்படி வருவிக்கப்பட்டவர்கள்தேயிலைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கோப்பித் தோட்டங்களில் வேலைசெய்தார்கள். ஆனால் கோப்பிப் பயிரை அழிக்கும் வியாதியின் பரவலால் அந்த உற்பத்தி கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி பெருமளவில் ஊக்கிவிக்கப்பட்டது.மலைநாட்டில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு உகந்த செழிப்பான நிலங்கள் காடுகளாயிருந்தன. காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றுவதற்கும் மற்றைய தேவைகளுக்கும் வேண்டிய தொழிலாளர்களை இலங்கையில் பெற முடியவில்லையெனக் கொலோனிய நிர்வாகிகளும் வெள்ளை முதலீட்டாளர்களும் குறைபட்டபடி இருந்தனர். கண்டிய விவசாயிகளை அவர்களின் உற்பத்தி சாதனங்களிலிருந்தும் கிராமிய சமூக அமைப்பிலிருந்தும் பெருமளவில் பலவந்தமாகப் பிரித்து வெளியேற்றித் தோட்டத் தொழிலாளர்களாக மாற்றுவது சாத்தியமில்லை என்பதை ஆட்சியாளர்கள் அநுபவரீதியாக உணர்ந்திருந்தனர். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் அங்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் இழந்த பிரபுக்களின் தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சிகளில் விவசாயிகள் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வகையில் விசேடமாக 1848இல் இடம்பெற்ற கிளர்ச்சி ஆங்கிலேயருக்குச் சில பாடங்களைப் புகட்டியது. பிரபுக்கள் வர்க்கத்தை அந்நியப்படுத்திய தவறினை உணர்ந்த ஆட்சியாளர் அவர்களுக்கு மேனிலை அந்தஸ்தையும் சலுகைகளையும் வளங்கித் தமக்குச் சார்பானவர்களாக்கினர். இது மேலும் கிளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக உதவியது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கண்டிய விவசாயிகளைத் தோட்டத் தொழிலாளர்களாக மாற்றுவதற்குச் சாதகமற்ற இன்னுமொரு காரணத்தையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. கண்டிய சிங்கள விவசாயிகள் தமது கிராமங்களில் நெற்செய்கையிலும் சுற்றுமுறை (‘சேனா’)விவசாயத்திலும்(shifting cultivation)ஈடுபட்டிருந்தனர். நெற்காணிகள் பள்ளத்தாக்கின் கீழ்மட்டத்தில் இருப்பதால் தேயிலைப்பயிர்ச் செய்கைக்கு உகந்தவையல்ல. ஆகவே கொலொனிய அரசு அவற்றைச் சுவீகரிக்க முயற்சிக்கவில்லை. விவசாயிகளின் பிரதான உற்பத்தி சாதனமான நெற்காணிகளிலிருந்தும் கிராமியப் பொருளாதாரத்திலிருந்தும் அவர்கள் பிரிக்கப்படவில்லை. அதாவது அவர்கள் உற்பத்திச் சொத்துக்களற்றவர்களாக்கப்பட்டு உழைப்பு சக்தியை விற்பதில் மட்டுமே தங்கியிருக்கும் பாட்டாளிவர்க்கமயப் படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் அவர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய முன்வரவில்லை.[2]

ஆகவே பெருந்தோட்டத் துறையை விருத்தி செய்யத் தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். புலம்பெயர்ந்தநிலையில் பெருந்தோட்டங்களில் சுதந்திரங்கள் மறுக்கப்பட்ட சூழலில் குடியமர்த்தப்பட்டனர். அதேகொலோனிய காலத்தில் தோன்றிய நகரங்களுக்கு நகரசுத்தித் தொழிலாளர்கள் தேவைப் பட்டனர். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழகத்திலிருந்து அருந்ததியர் கொண்டுவரப்பட்டனர். 

நீண்டகாலமாக இலங்கைக் கொலொனியைப் பொறுத்தவரை  தமிழகத்திலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவரும் சேவை கங்காணிகளின் பொறுப்பிலேயே இருந்தது. Kangani என்பது கண்காணிப்பவர் (மேற்பார்வையாளர்)எனும் சொல்லின் ஆங்கிலமயமாக்கலே. இவர்கள் தம்மையும்விடக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ஒடுக்கப்பட்டு அடிக்கடி பஞ்சத்துக்காளாக்கப்படும் விளிம்புநிலையில் வாழும் தலித் கிராமிய மக்களை அவர்களுக்குத் தொழில்பெற்றுத்தருவதாகக் கூறி இலங்கைக்குக் கொண்டுவரும் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். சரவணன் உட்படப் பல ஆய்வாளர்கள் சொல்வதுபோல் இந்த முறைமை நடைமுறையில் தமிழகத்திலிருந்த சாதியமைப்பையும் இறக்குமதி செய்தது. ஆயினும் புலம்பெயர்க்கப்பட்டுக் கொலோனிய சுரண்டல், அடக்குமுறை அதிகார உறவுகளைக் கொண்ட அமைப்புக்குள் குடியமர்த்தப்பட்டனர் என்பது முக்கியமான மாற்றம் என்பதைக் குறிப்பிடவேண்டும்.  பெருந்தோட்டங்களில் ‘லயினறைகளில்’ குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்களைக் கட்டுப் படுத்தவும் வேலைநேரத்தில் மேற்பார்வை செய்யவும் அவர்களுக்கு மேலே கங்காணிகளிருந்தனர். நீண்டகாலமாக அவர்கள் வாழ்ந்த தோட்டமே அவர்களின் முழு உலகமாயிருந்தது. நகரசுத்தித் தொழிலாளர்களான அருந்ததியர் ஒரு சிதறுண்ட விளிம்புநிலைச் சமூகமாக நகர்ப்புறங்களில் வசதிகளற்ற சூழலில் குடியமர்த்தப்பட்டனர். தொழிற்புலங்களில், குடியிருப்புகளில் சாதிய அடக்குமுறைகள் தொடர்ந்தன. 

பெருந்தோட்ட முகாமை அமைப்பில் வர்க்கரீதியான சுரண்டலுக்குச் சாதிய மற்றும் பால்ரீதியான அடக்குமுறை துணைபோனது.  இந்திய சாதியமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த உற்பத்தி அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு மூலதனக் குவியலை நோக்காகக் கொண்ட கொலோனிய சுரண்டல் உற்பத்தி அமைப்பின் அங்கமானபோதும் அவர்கள் சாதியத் தளையிலிருந்து முற்றாக விடுபடவில்லை. தலித் சமுகங்களிடமிருந்து எதிர்வினைகள் தோன்றாமலில்லை.  இவைபற்றி நூலில் பேசப்படுவனபற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவு பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் சூரியன் மறைந்து செல்லும் செய்தியையும் அறிவித்தது. ஆயினும் 1948 இல் வந்த இலங்கையின் சுதந்திரத்துடன் இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமையின் இழப்பும் கூடவே வந்தது. இதைத் தொடர்ந்து சுதந்திர இலங்கையில் இனத்துவ அரசியல் வர்க்க அரசியலுக்குப் பெரும் சவாலாக எழுந்தது. பல்லின நாட்டில் சிங்கள பௌத்த தேசத்தினதும் அரசினதும் உருவாக்கம் தொடர்ச்சியான போக்காகியது. பேரினவாதமும் அதற்கெதிரான தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்துவ தேசியவாதங்களும் அரசியல் வெளியை இனத்துவ அடையாள அரசியலின் களமாக மாற்றிவிட்டன. இனரீதியான பெரும்பான்மையே ஜனநாயகம் சொல்லும் பெரும்பான்மை எனும் அரசியல் ஜனநாயகத்தையே தலைகீழாக நிறுத்தியது. வர்க்கம், சாதி, பால் ரீதியான சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் இனத்துவ அடையாளக் கருத்தியலின் மேலாட்சிக்குக் கீழ் முக்கியத்துவம் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 1964ஆம் ஆண்டு குடியுரிமை இழந்த மக்களின் பங்குபற்றலின்றி வந்த சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் 525,000 இந்திய வம்சாவழியினரை இந்தியாவுக்கு அனுப்புவது, 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை இன்னொரு 150,000 பேரின் நிலைபற்றிப் பின்னர் ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்த ஜனநாயக விரோத ஒப்பந்தத்தின் அமுலாக்கல் பல தடைகளுக்குள்ளானது. எல்லாமாக 400,000 பேர்வரை இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் உயர்சாதியினரென்பதும் தோட்டங்களில் தொழிலாளர்களையும்விட உயர்நிலையிலிருந்தவர்களென்பதும் குறிப்பிடத்தக்கது (ஜெயசீலன்& சந்திரபோஸ், 2018). இறுதியில் 2003இல் ஒருவித தீர்வு எட்டப்பட்டது. ஒரு பகுதியினரின் குடியிரிமை மீட்கப்பட்டது மலையகப் பாராளுமன்ற அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது என்பதை மறுக்கமுடியாது.   

உள்நாட்டுப்போரும் புலப்பெயர்வுகளும் முழு நாட்டிலும் விசேடமாக தமிழ் சமூகத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மறுபுறம் சமூகரீதியில், பிரதேசரீதியில் அசமத்துவமான முதலாளித்துவ விருத்தியுடன் இணைந்த  குறைவிருத்திப் போக்குகளின் முரண்பாடுகள் ஆழமடைகின்றன. இவையெல்லாம் தலித் சமூகங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் அதேவேளை பழைய நிறுவனங்களின் தொடர்ச்சியையும் சாதியத்தின் புதிய வடிவங்களையும் காண்கிறோம். இந்த ‘மாற்றம்-தொடர்ச்சி’ பரிமாணத்தின் சில அம்சங்கள் சரவணனின் கட்டுரைகளின் பொருட்களாகின்றன.

இலங்கையில் இந்திய வம்சாவழியினர் பற்றிப் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ள போதும் சாதியச் சாடலுக்கு அதிகம் பலியான அருந்ததியர் சமூகம் பற்றிய முதலாவது நூல் இது எனும் தகவலைத் தருகிறார் நூலாசிரியர். அவர்களின் நிலைமைகள் பற்றி பலரும் அறிந்திராத விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது இந்த நூல். 

அருந்ததியர் – ‘தலித்துக்களிலும் தலித்துக்கள்’

‘அருந்ததியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் தலித்துக்களிலும் தலித்துக்களாகவே எங்கெங்கிலும் உள்ளார்கள்.’ (ப42)
‘ஒரு வளமற்ற, பலமற்ற, ஆதரவற்ற சமூகம் என்றளவில் தமக்காகத் தாமே போராடும் சமூகத்தவர்கள் அவர்கள். அதற்கான திறனற்ற ஒரு சமூகமாகவும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. தமது வரலாற்றுப் பின்னணி குறித்து எந்த போதிய பதிவுமில்லாத சமூகமும்கூட. வாய்மொழி மூலம் கடத்தப்பட்ட சில தகவல்கள் மற்றும் சில எஞ்சிய ஆவணங்களும் மாத்திரமே அருந்ததியர் சமூகம் குறித்த ஓரளவு உண்மைகளை வெளித்தெரிய வைத்திருக்கிறது.’ (ப14)
வரலாற்றுப் பின்னணி குறித்துப் போதிய பதிவில்லாத சமூகம் பற்றிப் பல முக்கியமான தகவல்களை அந்தச் சமூகத்துக்குள்ளிருந்து ஒரு பங்குபற்றுபவனின் அவதானிப்புகளுக்கும் உரையாடல்களுக்குமூடாக ஆவணப்படுத்துகின்றது இந்தத் தொகுப்பு. எனது அபிப்பிராயத்தில், இந்தத் தொகுப்பில் அருந்ததியர் சமூகம் பற்றிய கட்டுரைகள் மற்றவையையும்விட ஒப்பீட்டுரீதியில் மிகவும் செறிவானவை.  இவை அருந்ததியர்களின் மனித மேம்பாட்டிற்கு, சமூக முன்னேற்றத்திற்கு எதிரான அமைப்புரீதியான தடைகளை அம்பலப்படுத்துகிநன்றன. தலித்துக்குள்ளே இருக்கும் சாதியப் படிநிலை யதார்த்தத்தின் மிகக்கசப்பான தாக்கங்களை அருந்தியர்கள் அநுபவிக்கிறார்கள்.இந்தப் படிநிலையில் அடிமட்டத்திலிருக்கும் அவர்கள் இந்தியவம்சாவழிச் சமூகதிற்குள்ளேயே அந்நியப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் பலர் இன்றும் நகரசுத்தியுடன் தொடர்புடைய தொழிலில் தங்கியிருப்பது மற்றும் அவர்கள் வாழும் மோசமான குடியிருப்பு நிலைமைகள் அவர்களின் சாதி அடையாளத்தைச் சுலபமாக வெளிப்படையாக்குகின்றன. அவர்கள் மத்தியில் உருவான சில சமூக இயக்கங்கள் அரசியல் இயக்கங்களாகப் பரிணமிக்கவில்லை. உதிரிச் சமூகங்களாக பல நகர்ப் புறங்களில் சிதறுண்டிருப்பதால் அரசியல்ரீதியிலும் ஆட்சியாளரின் கவனத்தை ஈர்க்கவல்ல குரலற்ற விளிம்புநிலையிலிருக்கின்றனர். இந்தச் சிதறுண்டிருக்கும் குழுக்களுக்கிடையே சமூகரீதியான வலைப்பின்னல்கள் இருந்தபோதும் அவை உரிமைகளுக்குக் குரல்கொடுக்கும் இறுக்கமான அமைப்புக்களாக மாறவில்லை. மலையகத்தில் செறிவான சமூகமாயிருக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு இருக்கும் கூட்டான அரசியல் பலம் இந்தச் சிதறுண்ட சமூகத்திற்கு இல்லை. இதற்கு ஆதாரம்போல் அமைகிறது ஒரு சமீபகால அநுபவம்.

2015ஆம் ஆண்டு வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடனான வீடமைப்புத் திட்டமொன்றை அமுல்படுத்தத் தொடங்கியது. இதற்குப் பொறுப்பாக மலையகத் தமிழர் ஒருவர் தோட்ட வீடமைப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பல தலைமுறைகளாக லைன்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு. பல தலைமுறைகளாக நாட்டின் பல்வேறு நகர்ப்புறச் சேரிகளில் சொந்தமற்ற குடிசைகளில்  வாழ்ந்துவரும் அருந்ததியர்களுக்கும் அதுபோன்ற ஒரு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கவேண்டுமெனும் கோரிக்கையுடன் சரவணன் அந்த அமைச்சரைச் சந்திக்கிறார். அமைச்சர் அருந்ததியர் சமூகம்பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்களின் நிலைமையை விளக்கிய பின்னரும் அவரிடமிருந்து நம்பிக்கைதரும் பதில் கிடைக்கவில்லை. அருந்ததியர் சமூகம் அவருடைய அரசியல் தொகுதிக்கு வெளிவாரியான தென்பதும் அவரின் அக்கறையின்மைக்குக் காரணமாயிருந்த்திருக்கலாம்.  தொழில் காரணமாக அரசநிலங்களில் வழங்கப்பட்ட சொந்தமற்ற குடிசைகளில் வாழும் அருந்ததியர் அந்த வாழிடத்தை இழக்காமலிருப்பதற்காகவே தலைமுறை தலைமுறையாக நகரசுத்தித் தொழிலாளர்களாகத் தொடரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்களின் இளம் சந்ததியினர் இந்தக் குறைவிருத்திப் பொறியிலிருந்து வெளியேறுவது ஒரு பெரிய சவாலாகிறது. அருந்ததியர் சமூகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக அகமணமுறை, சாதிய வசவு, சமூகநகர்ச்சி, ‘அடையாளத் தற்கொலை’ போன்றவை பற்றிப் பலவிடயங்களை ஆவணப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. 

சாதியமைப்பின் நிறுவனரீதியான மீளுற்பத்திக்கு அகமணமுறை ஒரு அடிப்படை விதியாகிறது. ‘உயர்சாதிகளின்’ சொத்துக்களையும் அதிகார அந்தஸ்தையும்  பேண இது அவசியமாகிறது. கலப்புத் திருமணங்கள் பரவலாகும் போதும் எல்லா சாதிகளிலும் அகமணமுறை இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். இலங்கையின் அருந்ததியர் சமூகத்தில் அகமணமுறையினால் சில மரபுரீதியான நோய்களும் சந்ததிகளுக்கூடாகக் கடத்தப்படுவதன் விளைவுகளை ஆதாரபூர்வமாக விளக்குகிறது ஒரு கட்டுரை (ப39-44). உதாரணங்களாக சொரியாசிஸ் (psoriasis), நீரிழிவு, மனநோய் போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அளவுரீதியில் சிறிதான இலங்கை அருந்ததியர் சமூகத்தில் அகமணத்தின் பாதகமான விளைவுகள் பெரிதாகின்றன.  

அருந்ததியர் சமூகத்தவர் சாதிமாறிக் கலப்புத் திருமணம் செய்யாமாலில்லை. இந்தக் கலப்புத் திருமணங்கள் பொதுவாக தலித் சாதிகளுக்குள்ளேதான் நடந்தன. வேறுசாதிகளை சேர்ந்தவர்களுடன் திருமணங்கள் விதிவிலக்காக நடந்தன வென்றும் அவற்றுள் கணிசமானவை சாதிமறுப்புத் திருமணங்களெனவும் பதிவிடும் நூலாசிரியர் அவற்றிற்குச் சில உதாரணங்களையும் தருகிறார். ‘தனது இளம் வயதில் 30 வருடங்களுக்குமுன் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணோடு மாயமான எனது பெரியப்பாவை என் அப்பா உள்ளிட்ட அவரின் சகோதரர்கள் அவரை இறந்தபோது சவப்பெட்டியில்தான் பார்த்தார்கள். அவர் மாளிகாவத்தை பகுதியில் எங்கள் குடியிருப்பில் இருந்து அருகாமையில் தான் அத்தனை காலமும் வாழ்ந்திருக்கிறார். ஆனால் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை’ (p42-43). மறுபுறம் சமூக முன்னேற்றத்திற்கு அமைப்புரீதியான தடைகளைத் தொடரவைக்கும் குறைவிருத்திச் சூழல் மாறாதவரை  இத்தகைய அநுபவங்கள் அருந்ததியர் சமூகத்திற்குள் அகமணமுறையை மேலும் வலுவூட்டும் போக்கிற்கு உதவுகிறது.  

சாதியம் நிலவும் சமூகத்தில் ஒருவரை மற்றவர் சொல்லால் புண்படுத்துவதற்கு  சாதிய வசவு ஒரு ஆயுதமாகிறது என்பதை நினைவூட்டுவதுடன் இத்தகைய சாதியச் சாடலுக்கு அதிகம் பலியாகிய இலங்கைச் சமூகம் அருந்ததியர்களே என்பதற்குப் பல ஆதாரங்களையும் தருகிறது இந்த நூல். உதாரணமாக அருந்ததியருக்குப் பிராமணியம் கொடுத்த பெயரான ‘சக்கிலி’ எனும் சொல் தமிழிலும் சிங்களத்திலும் ஒருவரை அல்லது ஒரு குழுவை, நிறுவனத்தை மிகவும் கீழ்த்தரமாக அவமதிப்பதற்கும் புண்படுத்துவதற்கும்  பயன்படுத்தப்படுகிறது. இதற்குச் சிங்களத்திலும் தமிழிலும் பல உதாரணங்களை இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரை தருகிறது. அவற்றில் ஒரு சில:‘சக்கிலி சந்தேசய’ – இது சிங்கள BBC  சேவை தமிழருக்குச் சார்பாக நடந்துகொள்கிறது எனக் குற்றம் சாட்டும் சொல்லாடல். ‘சக்கிலி மாலிங்கய’ – கிரிக்கெட் வீரர் மாலிங்க திறமாக ஆடவில்லை என்பதால் ஆத்திரமடைந்தவரின் சொல்லாடல். ‘சக்கிலி மகாராஜா’ – இது மகராஜா நிறுவனத்தின் ஊடகத்திற்கு எதிராக. ‘சக்கிலி பௌத்தயன்’ – இது முஸ்லிம்களுக்குச் சார்பாகப் பேசும் பௌத்தர்கள்மீதான வசவு. ‘சக்கிலி நாயே மேடையை விட்டு வெளியே வா’ – இது தந்தை செல்வா நினைவு தினத்தில் ராஜதுரைமீது சிவாஜிலிங்கம் வீசிய வசவு. ‘சக்கிலி இந்தியா கடந்த முப்பது ஆண்டு காலமாகத் தனது அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களைப் பாவித்திருக்கிறது’ – இது முகநூலில் முன்னாள் ஈரோஸ் தலைவர் அருளரின் பதிவு. இத்தகைய வசவுகள் நாட்டின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்திப் புண்படுத்துமென்பதைக்கூட உணரமுடியாதளவுக்குச் சாதியச் சொல்லாடல் பலரின் அன்றாட வழக்கில் உள்வாங்கப்பட்டுள்ளது. 

அருந்ததியர் சமூகத்தில் இடம்பெற்றுவரும் பலவிதமான மாற்றங்கள் பற்றியும் விமர்சன நோக்கில் இந்தத் தொகுப்புப் பேசுகிறது. காலப்போக்கில் துப்புரவுத் தொழிலிருந்து ஒரு பகுதியினர் வெளியேறியுள்ளனர். கல்விக்கூடாகச் சிலரால் நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகரவும் முடிகிறது. ஆனால் இந்த நகர்ச்சி அவர்களைத் தம் பிறப்போடு வந்த சாதிய அடையாளத்திலிருந்து விடுவிக்கவில்லை. இவர்களில் பலர் சாதியை மூடிமறைக்க முயற்சிப்பதுண்டு. இந்தப் போக்கினை ‘அடையாளத் தற்கொலை’ எனக்கூறும் சரவணன் அதற்குப் பல உதாரணங்களையும் தருகிறார். அருந்ததியர் செறிந்து வாழும் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறுவது, ‘சாதி மறுப்புத் திருமணம்’, காலாகாலமாகப் பேசிவந்த தெலுங்கு மொழியைக் கைவிடுவது, மத மாற்றம், உயர்சாதியினரின் பேச்சு மொழியைப் பேசுவது மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, இன அடையாள மாற்றம் போன்ற வழிகளுக்கூடாக இது நடைபெறுகிறது.  

கல்விக்கூடாக ஆங்கிலப் புலமை பெற்றவரும் அருந்ததியர் சங்கத்தின் தலைவருமாக இருந்த ஒருவர் ‘நான் ஒரு சக்கிலியன்’ எனத் தன்னைப் பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொண்டபோதும் அவருடைய பிள்ளைகள் இந்த விடயத்தில் தமது தகப்பனைப் பெருங்குற்றவாளியாகவே கருதினர். அவர்கள் தங்கள் சாதிய அடையாளங்களை மறைக்கும் நோக்கில் உறவினர்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து கொண்டது மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களை மணந்து அந்தச் சமூகங்களின் அடையாளங்களைப் பெற்றுக்கொண்டனர்.  இத்தகைய அடையாள மாற்றத்தைப் பலர் தேர்ந்தெடுக்கிறார்கள்.  சுயமுயற்சியால் அமைப்புரீதியான தடைகளையும் தாண்டி முன்னேறியவர்மீது தொடர்ந்தும் சாதிய லேபலைச் சுமத்துவது சமூகத்தின் ‘உயர்’ சாதியினரே. சாதிமறைப்பு இதன் உணர்வுபூர்வமான எதிர்வினை என்பதை மறந்துவிடலாகாது. 

தலித்துக்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றும் முயற்சியில் ‘பைபிள் சபைகள்’ ஈடுபடுகின்றன. இந்த மதமாற்ற அணுகுமுறையில் விளிம்புநிலையில் அல்லல்படும் தலித்துக்கள் தாம் சமூகத்தில் அநுபவித்திராத மரியாதையை, மனிதாபிமானத்தைக் காண்கிறார்கள். ‘எங்களை மனிசர்களாகவாவது மதிக்கிறார்களே’ என்று அவர்களில் சிலர் சொல்கிறார்கள். இப்படியாக வரும் மதமாற்றம் சாதிக்கு வெளியே கிறிஸ்துவரை மணமுடிப்பதுவரை செல்வதுண்டு. இந்த நிலைமயைப் பதிவிடும் கட்டுரை இப்படி விளிம்புநிலையில்  அல்லலுறும் மக்களை முற்போக்கு அல்லது புரட்சிகர அரசியல் சக்திகள் கவனிக்கவில்லை எனும் விமர்சனத்தையும் முன்வைக்கிறது. இன்றைய இலங்கையில் அந்த சக்திகள் உண்டா அப்படியென்றால் அவற்றின் அடையாளங்கள் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த விடயத்தை இந்த நூல் தொடவில்லை. இலங்கையில் தமிழ் சமூகத்தில் சாதியத்திற்கு எதிரான ஒரு இடதுசாரிப் போராட்ட மரபு  தோன்றி வளர்ந்து பின்னர் வலுவிழந்து போனது பற்றி, மற்றும் அது வட இலங்கைக்கு, குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு, அப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்காது போனதை நினைவூட்டுதல் தகும். 

வேறு மதத்திற்கு மாறும் போக்கு ஒருபுறமிருக்க அருந்ததியரும் வேறு தலித் சமூகத்தவரும்  இதுவரை பின்பற்றிய சிறுதெய்வ வழிபாட்டுக் கலாச்சாரத்திலிருந்து உயர்சாதியினரின் கடவுள்களை வழிபடும் வழக்கத்திற்கு மாறும் போக்குப் பற்றிப் பல தகவல்களைத் தருகிறது இந்தத் தொகுப்பு.  அருந்ததியரின் அடையாளங்களைப் பறைசாற்றும் முனியாண்டிசாமி, மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற சிறு தெய்வங்களுக்கு மத்தியில் சைவக் கடவுள்களின் விக்கிரகங்களை வைப்பது, சைவ இந்துச் சடங்குகளையும் பழக்கங்களையும் பின்பற்றுவது போன்ற நடைமுறைகள் பரவுகின்றன. சிறு தெய்வங்கள் முக்கியத்துவமிழந்து சைவ-இந்து தெய்வங்கள் பிரதான இடத்தைப் பெறுகின்றன. மனித மேம்பாடு மற்றும் சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்கள் குன்றிய சூழலில் அருந்ததியரைச் சைவமயமாக்க முயலும் இந்த மாற்றம் அவர்களைச் சாதியடக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்கு மாறாக இந்து சாதிப் படிநிலையமைப்பிற்குள் மேலும் இறுக்கமாக உள்வாங்கும் ஒரு வழியாகிறது. 

அருந்ததியரின் இனத்துவ அடையாள மாற்றத்தைப் பொறுத்தவரை சிங்கள மயமாக்கல் அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தறை, காலி, ஹம்பந்தோட்டை போன்ற பகுதிகளில் நிகழ்வதுபற்றி அறிகிறோம். வீட்டில் சிங்கள மொழியில் பேசுவது, பிள்ளைகளைச் சிங்களப் பாடசாலையில் சேர்ப்பது பொன்ற நடைமுறைகளைப் பெற்றோர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் வாழுமிடங்களில் தமிழ்ப் பாடசாலைகள் இல்லாமையால் பிள்ளைகளைச் சிங்களப் பாடசாலையில் சேர்ப்பது ஒரு காரணமாயிருக்கலாம். ஆயினும் இன அடையாளத்தை மாற்றுவது சாதி அடையாளத்தை இழப்பதற்கு உகந்தவழி என்பதும் ஒரு அநுபவபூர்வமான உண்மை போலவே படுகிறது. இதற்கு ஆதாரம் போல் அமைகிறது சரவணன் காதில் பட்ட  ‘தமிழர்களே எங்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளாதபோது…..’ எனும் வார்த்தைகள். 

சாதிய அடையாளங்களை மூடிமறைக்கும் செயற்பாடுகள் அடிமட்ட சாதிகளில் காணப்பட்டுவந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைகளின் மறைவுக்கு இட்டுச்செல்வது பற்றிக் குறிப்பிடும் அதேவேளை சாதிய அடையாளங்களைத் தற்கொலை செய்வதால் சாதியத்திலிருந்து மீள முடிகிறது என்றும் சொல்கிறார் நூலாசிரியர். மறுபுறம் ‘இந்த அடையாளத் தற்கொலைகளானது தப்பித்தலாகவும், ஒளிவதாகவும், மறைத்து வைப்பதாகவும் தொடருவது நிலவுகின்ற கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்பபடுத்தப்போவதில்லை’ என வாதிடுகிறார் (ப85). இந்த வாதத்தில் நியாயமிருப்பதுபோல் படலாம். ஆனால் அது குறைபாடுள்ளது என்பதே எனது கருத்து. அடையாளத் தற்கொலை கட்டமைப்பு மாற்றத்துக்கூடாக வரும்போதுதான் அர்த்தமிக்கதாகிறது. ஆனால் இலங்கையில் இயக்கரீதியான அரசியல் பலமின்றி சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்கள் அற்பமாயுள்ள சூழலில் சாதியத்தினால் அவலத்திற்குள்ளாகும் அருந்ததியர் தனிமனித அல்லது சிறுகுழு மட்டத்தில் தமது மனிதத்துவத்தை முடிந்தவரை உறுதிசெய்ய சாதி மறைப்பை ஒரு எதிர்வினை உபாயமாகப் பயன்படுத்துகிறார்கள். சமூகரீதியில் பலவீனர்களாக ஆக்கப்பட்டவர்களுக்கு தமது அதிருப்தியை, எதிர்ப்பைக் காட்டக் கிடைத்த ஆயுதம் அதுதான். இது ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott) அறிமுகம் செய்த ´weapons of the weak´ – ‘பலவீனரின் ஆயுதங்கள்’ – எனும் கருத்துருவை நினைவூட்டுகிறது.  தனிமனித மட்டத்தில் சாதி அடக்குமுறையிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பலரும் பயன்படுத்தும் வழிமுறைகளைக் குறை சொல்வதில் நியாயமில்லை என்பதே எனது கருத்து. அவற்றை அவர்களின் உணர்வுபூர்வமான முனைப்பாற்றலின் வெளிப்பாடாகப் பார்ப்பதே நியாயமானது.  

சாதியத்திற்கெதிராக அடக்கப்பட்ட சாதி மக்களை அணிதிரட்டும் அரசியல் ஒரு அடையாள அரசியலாகவே கருத்தியல்மயப்படுத்தப்படுகிறது. இத்துடன் வரும் முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்கும் தேவை பற்றி இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்போம்.

..தொடரும்..

அடிக்குறிப்புகள்
[1] கொலொனிய அடிமைமுறை மற்றும் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான சர்வதேசரீதியானதகவல்கள் Wikipedia மற்றும் அவை தொடர்பாக இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டன.   

[2] இந்த விடயங்கள் தொடர்பான ஆய்வுகள் பற்றியும் எனது விளக்கம் பற்றியும் மேலும் அறிய பின்வரும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை உதவியாயிருக்கும்: N. Shanmugaratnam, 1985, Colonial Agrarian Changes and Underdevelopment, in Charles Abeysekera (ed), Capital and Peasant Production Studies in continuity and discontinuity of agrarian structures in Sri Lanka, Social Scientists´ Association of Sri Lanka,1985: 1-20.


சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ - காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – :II - சமுத்திரன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates