Headlines News :
முகப்பு » , , , , , » புத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (பண்டாரநாயக்க கொலை - 2) - என்.சரவணன்

புத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (பண்டாரநாயக்க கொலை - 2) - என்.சரவணன்


சென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம்  அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெளியானது. இக்கட்டுரை பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரியான புத்தரக்கித்த தேரரின் உருவாக்கம், வளர்ச்சி வீழ்ச்சி, வகிபாகம் குறித்து விளக்கும் இரண்டாவது பகுதி. (இன்றைய தினக்குரலில்) 
புத்த ரக்கித்த தேரரை இலங்கையின் வரலாறு இலகுவில் மறக்காது. பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியமைவதற்காக சிங்கள பௌத்த சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டன. “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” (மதகுருமார்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்) ஆகிய சக்திகளை ஒன்றிணைக்கும் பலமான தேசிய அணி என்று அழைக்கப்பட்டது. அதை “பஞ்ச மகா சக்திகள்” (பஞ்ச மஹா பலவேகய) என்று பிரபலமாக அழைத்தார்கள்.

இவர்களில் முதன்மையானவர்களும், முக்கியமானவர்களுமாக கருதப்பட்டவர்கள் “சங்க” எனப்படும் “பௌத்த பிக்குமார்”. பௌத்த மகா சங்கத்திலேயே உயர்வாக கருதப்படும் “சிங்கள பௌத்த கொவிகம” சாதியினருக்கே உரிய “சீயம் நிக்காயவை சேர்ந்தவர் புத்த ரக்கித்த தேரர்.

அப்படி பௌத்த பிக்குமார்களின் சங்கங்கள் பத்தில் ஒன்பது சங்கங்கங்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் தான் அன்றைய களனி பன்சலையின் பிரதான விகாராதிபதியாக இருந்த புத்தரக்கித்த தேரர். இலங்கையில் பௌத்த தரப்பின் மைய இடங்களில் ஒன்று களனி பன்சலை. ஒருமுறை அங்கு சென்று வணங்கினால் பிறப்பிலிருந்து செய்து வந்த பாவங்கள் அனைத்தும் இல்லாமல் போகும் என்று பௌத்தர்கள் கூறும் தளம்.
வல்பொல ராஹுல தேரர்
1940களின் போது இலங்கையின் பிரதான பௌத்த மையமாக இருந்த இடம் களனி விகாரையும், வித்தியாலங்கார பிரிவென்னும் தான். இந்த காலப்பகுதியில் பௌத்த தேசியவாதத்தின் முக்கிய கருத்துருவாக்கவாதியாக திகழ்ந்தவர் “வல்பொல ராஹுல தேரர்”. வித்தியாலங்கார பிரிவென்னின் உபவேந்தராக அவர் இருந்தார். பின்னர் அதுவே களனி பல்கலைக்கழகமாக மாறியபோது அதன் உபவேந்தராக இருந்தார். இலங்கையின் பௌத்த வரலாற்றில் மிகவும் விவாதப்பொருளாக ஆகிய நூலான “பிக்குமாரின் உரிமை” (பிட்சுவகே உறுமய) என்கிற நூலை எழுதியவர் அவர். அதுமட்டுமன்றி ஏராளமான பிரபல சிங்கள வரலாற்று நூல்களை எழுதியவர். தீவிர பிக்குமாரை அவர் “அரசியல் பிக்குகள்” என்று அழைத்தார். அவரின் பல கருத்துக்கள் இடதுசாரித்துவத்துக்கு சாதகமாக கருதப்பட்டது. வித்தியாலங்காரவில் அவர் தலைமையில் இருந்த அமைப்பு சித்தாந்த ரீதியில் பிளவுபட்டுபோனது. இந்த அணியில் மாப்பிட்டிகம புத்தரக்கித்த  தேரரும் இருந்தார். இடதுசாரிகளை அவர் வெறுத்தபோதும்
வேறுவழியின்றி வல்பொல ராகுல தேரரின் அணியில் இருந்தார். இடதுசாரித்துவம் என்றாலே வெறுப்பைக் கொண்ட டீ.எஸ்.சேனநாயக்க அதன் நிறைவேற்றுக் குழுவில் இருந்து விலகிச் சென்றார். அவர்களுடன் அன்று இருந்த ஆனந்த சாகர என்கிற பிரபல பிக்கு அன்றைய சோஷலிச எழுச்சியில் முக்கிய அங்கமாக இருந்தார். பிற் காலத்தில் அவர் காவியுடையை கழற்றி எரிந்து விட்டு சாகர பலன்சூரிய என்று பெயரையும் மாற்றிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.

இப்படிப்பட்ட சூழலில் தான் 06.01.1947 பௌத்த நிறுவனங்கள் இணைத்துகொண்டு மகா சங்கத்தினர் களனியில் வைத்து “சுதந்திரப் பிரகடனம்” என்கிற பிரகடனத்தை வெளியிட்டார்கள். புத்தர் முதன் முதலில் இலங்கைக்கு வந்த நினைவு நாள் அது. புத்தரின் களனிக்குத் தான் முதன்முதலில் வந்தார் என்கிறது மகாவம்சம். அதுவும் களனியை அன்று ஆண்ட அரசாட்சியில் நிகழ்ந்த சண்டையைத் தீர்ப்பதற்காகவெ புத்தர் வந்தார் என்று நம்புகின்றனர். 

“களனி வீழும் அந்த நாளில் இலங்கையும் வீழும். களனி எழும் அந்நாளில் இலங்கையும் எழும்” இப்படி சிங்களவர்கள் கூறிக்கொள்வதுண்டு.
விஜேவர்தன குடும்ப செல்வாக்கு
பிக்குமாரின் இந்த அரசியல் எழுச்சியை அன்று களனி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன விரும்பவில்லை. அதை எதிர்க்கவும் செய்தார். அன்று களனி விகாரையின் இணைப்புச் சபையின் அதிகாரம் ஜே.ஆரின் மாமனார்களான டீ.சீ.விஜேவர்தன, வோல்டர் விஜேவர்தன ஆகியோரிடமே இருந்தது. 1942 இல் வோல்டரின் மரணத்தின் பின் அந்த அதிகாரம் டீ.சீ.விஜேவர்தனவுக்கு முழுமையாக வந்து சேர்ந்தது. ஆனால் அவரை 1946 இல் அந்த சபை நீக்கியது. விகாரையின் ஓவியங்களில் அவரது பரம்பரையினனரின் உருவங்களைப் பதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் களனி விகாரையின் விகாராதிபதி தம்மரக்கித்த தேரர் மரணப்படுக்கையில் கிடந்த போது டீ.சீ.விஜேவதர்னவும் அவரின் மனைவி விமலா விஜேவர்தனவும் நெருக்கமாகக் கவனித்து வந்தார்கள். அவர் இறக்கும் போதும் அருகிலே இருந்தார்கள். அனைவரும் வியக்கக்கூடிய வகையில் அவரின் இறுதி விருப்பத்துக்கிணங்க அவருக்குப் பின் விகாராதிபதியாக 26 வயதே ஆன மாபிட்டிகம புத்த ரக்கித்த தேரர் நியமிக்கப்பட்டார்.

தம்மரக்கித்த தேரரின் மரண சாசனம் எழுதப்பட்ட போது இறுதியில் அவருக்கருகில் டீ.சீ.விஜேவர்தன இருந்தபடியால் அதில் சந்தேகமிருப்பதாகக் கூறி களனி நிர்வாகத்தில் இருந்தவர்கள் வழக்கு தொடுத்தார்கள்.

வழக்கு இழுபறிபட்டுக்கொண்டே போன நிலையில் புத்தரக்கித்த தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் ஜே.ஆர்.அங்கே சென்றார். அவரைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதமிருந்துகொண்டிருந்த புத்த ரக்கித்த தேரரை தூக்கிக்கொண்டு விகாரையின் அறையொன்றில் கொண்டு போய் வைத்தனர். பின்னர் அப்படி செய்த 10 பேருக்கு எதிராக புத்தரக்கித்த தேரர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் புத்தரக்கித்த தேரருக்கு எதிராக ஜே.ஆர் சாட்சி சொன்னார். களனி விகாராதிபதி பதவி பிரச்சினை தேசிய அளவில் முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது. வழக்கின் இறுதியில் புத்த ரக்கித்த தேரர் வென்றார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜே.ஆர். மேன்முறையீடு செய்தார். பின்னர் அதை அவர் மீளப் பெற்றுக்கொண்டார். ஆனாலும் பகை ஓயவில்லை. சங்கரக்கித்த தேரர் அப்பதவி முறைப்படி தனக்கு வரவேண்டியது என்று ஜே.ஆரின் தூண்டுதலில் வழக்கு தொடர்ந்தார். அதிலும் புத்தரக்கித்த தேரர் வெற்றி பெற்றார். அதிலிருந்து ஜே.ஆரின் ஜென்மப் பகையாளியாக புத்தரக்கித்த தேரர் ஆனார். ஜே.ஆரின் அரசியல் கோட்டையை அவரின் களத்தில் இருந்தபடியே தோற்கடிக்க புத்தரக்கித்த தேரர் நிறையவே உழைத்தார். குறுகிய காலத்தில் அவர் பெரும் செல்வமீட்டும் தனவந்தராகவும், அரசியல் செல்வாக்கு மிக்க பிக்குவாகவும் மாறினார். இந்தப் பின்னணியில் இருந்து தான் புத்த ரக்கித்த தேரரின் உருவாக்கத்தையும் அவரின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் கணிக்க முடியும். 

1956 தேர்தல்
அவர் 1952 தேர்தலில் விமலா விஜேவர்தனவை களனி தொகுதியில் ஜே.ஆருக்கு எதிராக நிற்கவைத்த வேளை விமலாவுக்காக கடுமையாக உழைத்தார். ஆனால் அத்தேர்தலில் ஜே.ஆர் வென்றார். ஜே.ஆருக்கு எதிரான விஜேவர்தன குடும்பத்தின் பகையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு விஜேவர்தன குடும்பத்தினரின் நெருக்கமான நண்பரானார் புத்த ரக்கித்த. விமலா விஜேவர்தனவுடன் புத்தரக்கித்த தேரருக்கு இருந்த இரகசிய காதல் உறவு பிற்காலத்தில் இலங்கையருக்கு இரகசியமாக இருக்கவில்லை. 1956 தேர்தலில் விமலா விஜேவர்தனவை களனிக்கு அருகில் இருந்த மீரிகம தொகுதியில் போட்டியிட வைத்தார். விமலாவுக்காக பெரும் செலவையும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.  வெல்லவைத்தார்.

வரலாற்றில் “களனி” ஒரு பேரினவாதத்தின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. அப்பேர்பட்ட பௌத்த தேசியவாத தளத்துக்கே தலைமை தாங்கிய புத்த ரக்கித்த தேரர் வெறும் சாதாராண பிக்குவாக மட்டும் இருக்கவில்லை. அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகித்தார்.  அதே வேளை 'எக்ஸத் பிக்கு பெரமுணவை' (EBP - ஐக்கிய பிக்கு முன்னணி) தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார். “இலங்கை மகா சங்க சபை” என்கிற அமைப்பையும், புத்த ரக்கித்த தேரர் தலைமை தாங்கிய அகில இலங்கை பிக்கு அமைப்புகளின் காங்கிரஸ் (All Ceylon congress of Bhikku Societies) என்கிற அமைப்பையும் இணைத்து உருவானது தான் ஐக்கிய பிக்கு முன்னணி. இதன் இணைச்செயலாளர்களாக புத்த ரக்கித்த தேரரும், தல்பாவில சீலவன்ச தேரரும் இயங்கினர். 

மக்கள் ஐக்கிய முன்னணியின் வெற்றிக்காக பிக்குமார்களையும் இணைத்துக்கொண்டு பாரிய பிரச்சாரத்தில் இறங்கினார் புத்த ரக்கித்த தேரர். குறிப்பாக வீடு வீடாக சென்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் கத்தோலிக்கர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள். ம.ஐ.மு.வுக்கு அளிக்கப்படும் வாக்குகளே பௌத்தர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள்  என்று பிரச்சாரம் செய்தார். 

அவர் பணம் படைத்த செல்வாக்கு மிக்க வர்த்தகராகவும் இருந்தார். இன்னொரு வகையில் அவர் எதற்கும் துணிந்த ரவுடியாகவும் அறியப்பட்டிருந்தார். அவர் இந்த அமைப்புகளை நடத்த வேறெவரிடமும் கையேந்தப் போகவில்லை அந்தளவு செல்வாக்கு அவருக்கு இருந்தது.

1956 ஆம் ஆண்டு எழுச்சியின் போது பணம் படைத்த செல்வந்தர்கள் பலர் பண்டாரநாயக்கவின் வெற்றியின் மீது சந்தேகம் கொண்டிருந்தனர். ஐ.தே.கபோன்ற ஒரு பிரமாண்டமான கட்சியில் இருந்து பிரிந்துவந்துவிட்டால் மாத்திரம் வென்று விடமுடியுமா என்பதே அவர்களின் சந்தேகம். எனவே பண்டாரநாயக்கவுக்கு உடனடியாக ஆதரவு வழங்கத் தயங்கினர். 1956 தேர்தல் செலவுக்காக பண்டாரநாயக்க தனது றோஸ்மீட் பங்களாவை ஒரு வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் அடகு வைத்து பணம் திரட்டினார் என்பது பின்னர் வெளியான கதைகள். இந்தத் தேர்தலுக்காக களனி பன்சலையின் உண்டியல் பணப் பொதிகளை புத்தரக்கித்த தேரர் தேர்தலின் போது பயன்படுத்தினார் என்பதும் பின்னர் அவரே மற்றவர்களிடம் வெளியிட்ட தகவல்.

கிங் மேக்கர்
அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர் அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக றோஸ்மீட் பங்களாவில் பிரதானிகள் அனைவரும் கூடியவேளை அங்கே அமைச்சர்களை நியமிப்பதில் கிங்மேக்கராக செயற்பட்டவர் புத்த ரக்கித்த தேரர். அந்தளவு அவர் அரசியலில் செல்வாக்கு பெற்ற முதன்மை நபர்களில் ஒருவராக அறியப்ட்டிருந்தார். இதன்போது குறிப்பாக களனி - மீரிகம தொகுதியைச் சேர்ந்த விமலா விஜேவர்தனவுக்கு சுகாதார அமைச்சுப் பதவியைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று பண்டாரநாயக்கவிடம் பிடிவாதமாக இருந்தவர் புத்தரக்கித்த தேரர். பிக்குமார்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலை வழிநடத்துபவர்களாக செல்வாக்கு பெற்றிருந்த காலம் அது. இந்தக் காலப்பகுதியில் பிக்குமார் எந்தளவு தமது வேலைத்திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டார்கள் என்பது பற்றி விரிவாக பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலிருந்து இடதுசாரி அணியினரை வெளியேற்றுவதற்கு புத்த ரக்கித்த தேரர் பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார். குறிப்பாக புத்தரக்கித்த தேரரின் வியாபார முயற்சிகளுக்கு சட்ட ரீதியிலான இடையூறாக அவர்கள் இருந்த்தது முக்கிய காரணம். 

தனிச் சிங்கள சட்டத்தை நிறைவேற்றச் செய்தவர்களும் அவர்களே. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பண்டாரநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையில் 1957 இல் செய்துகொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்கவின் றோஸ்மீட் இல்லத்துக்கே 09.04.1958 அன்று ஊர்வலமாக சென்று பண்டாரநாயக்கவை கிழிக்கச் செய்தவர்கள் புத்தரக்கித்த தலைமையிலான இந்த பிக்குமார்கள் தான்.
றோஸ்மீட் இல்லத்துக்கு ஊர்வலமாக சென்று கிளர்ச்சி செய்த பிக்குமார்களிடம் சரணடைந்து பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த நாள்
டீ.சபாரத்தினம் “அடிமைத்தனத்திற்கு வெளியே” (Out of bondage) என்கிற தலைப்பில் தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார் . அதில் 62ஆம் பக்கத்தில் தொண்டமான், எஸ்.நடேசன், எம்.சீ.எம்.கலீல், சேர் அருணாச்சலம் மகாதேவா, கந்தையா வைத்திநாதன் எல்லோரும் சேர்ந்து தனிச்சிங்கள கொள்கை குறித்து உரையாட பண்டாரநாயக்கவிடம் தமிழ்-முஸ்லிம் தூதுக்குழுவாக சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்து குறுக்கிட்ட புத்தரக்கித்த தேரர் “சிங்களம் தான் இலங்கையின் ஒரே மொழி” என்று வாதிட்டிருக்கிறார். கலீல் “நாங்கள் பிரதமரோடு தான் உரையாட வந்திருக்கிறோம். உங்களோடு அல்ல. பிரதமரை பதிலளிக்க விடுங்கள்” என்று வாதிட்டிருக்கிறார்.

அங்கிருந்த பண்டாரநாயக்க “அவர்கள் எனது கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பேச உரிமையுண்டு” என்று கூறியிருக்கிறார்.

இடையில் மீண்டும் குறுக்கிட்ட புத்தரக்கித்த தேரர் “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லத் தேவையில்லை. மக்கள் ஆணை கிடைத்திருகிறது. எனவே அதை மாற்ற மாட்டோம்” என்று ஆக்ரோசப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போன தூதுக்குழு விரக்தியில் திரும்பி வந்தார்கள்” 

இந்தளவு அரசியல் செல்வாக்கு மிக்கவராகவும், பண்டாரநாயக்கவை தேவையானபோது இயக்குபவராகவும்  புத்தரக்கித்த இருந்திருக்கிறார்.
சந்திரிகா வாவியை திறப்பதற்காக சென்றவேளை வாகனத்தில் பண்டாரநாயக்க, விமலா விஜேவர்தன, சீ.பி.டி.சில்வா, பிலிப் குணவர்தன 

பண்டாவோடு பகை
புத்தரக்கித்த தேரரின் ஆசை நாயகியாக அன்றைய அமைச்சர் விமலா விஜயவர்தன இருந்திருப்பது இலங்கையின் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒன்றல்ல. புத்தரக்கித்த தேரர் 56’ ஆட்சியின் மூலம் தனது வியாபார வர்த்தகத்தை பலப்படுத்த பயன்படுத்திக்கொண்டார். தான் செய்த செலவை வட்டியும் முதலுமாக அந்த ஆட்சியில் மீள சம்பாதித்துக்கொள்வதே அவரின் இலக்காக இருந்தது. ஆனால் பண்டாரநாயக்கவின் ஆட்சியில் புத்தரக்கித்தவின் முயற்சிகள் பலிக்கவில்லை. கப்பல் காப்புறுதிக் கம்பனி ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் அதனை விண்ணப்பிப்பதற்கு தேவையான சொத்து விபரங்களை அவர் உறுதிப்படுத்தாததால் பண்டாரநாயக்க அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதுபோல ஒரு சீனி உற்பத்தி நிறுவனமொன்றையும் ஆரம்பிக்க முயற்சி செய்தார். ஆனால் பிலிப் குணவர்தன, ஆர்.ஜி.சேனநாயக்க ஆகியோரின் ஆலோசனைப்படி பிரதமர் பண்டாரநாயக்க  அதற்கு அனுமதிக்கவில்லை.
பண்டாரநாயக்க கொலை வழக்கு விசாரணையின் போது இந்த விபரங்களும் வெளியாகின. தன்னால் உதவிபெற்று அமைக்கப்பட்ட ஆட்சியால் தனக்கு உதவி கிடைக்கவில்லை என்கிற ஆத்திரத்திலேயே இந்தக் கொலையை செய்யத் துணிந்தார் என்று தான் இன்றும் கூறப்பட்டு வருகின்றன. பண்டாரநாயக்கா தமிழர்களுடன் அரசியல் சமரசத்துக்கு போவது ஆகிய காரணங்கள் உள்ளிட்ட காரணிகளால் புத்த ரக்கித்த பண்டாரநாயக்க மீது வெறுப்பையும், ஆத்திரத்தையும், பகையையும் வளர்த்துக்கொண்டே வந்தார் என்று தான் சிங்கள ஆய்வாளர்கள் பலர் எழுதிவைத்துள்ளனர்.
பண்டாரநாயக்க தான் “இலங்கையை சிங்கள பௌத்த அரசாக மாற்றுவேன்” என்கிற உறுதிமொழியை நிறைவேற்றாத காரணமும் புத்தரக்கித்த தேரருக்கு இருந்த வெறுப்பின் உச்சம். 

ஆனால் இதுவெல்லாம் ஒரு பிரதமரைக் கொல்ல வலுவான காரணமா என்கிற அழுத்தமான சந்தேகம் எவருக்கும் இருக்கும்.

மேன்லியின் பதிவு
பிரபல லேக்ஹவுஸ் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மன்னி கந்தப்பா (Manny Candappa) பிற்காலத்தில் “The Palm of His Hand” என்கிற நூலொன்றை வெளியிட்டார். அவர் ஊடகவியலாளராக கடமையாற்றிய காலத்தில் கிடைத்த அனுபவங்கள் அதில் கொட்டிக்கிடந்தன. பண்டாரநாயக்க கொலை பற்றிய விடயத்தை அதில் அவர் எழுதுகையில் அப்போது நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் தெற்காசிய பிராந்தியத்தின் தலைவராக இருந்த மேன்லி (Manley); புத்தரக்கித்த தேரரை சந்தித்தது பற்றி இப்படி குறிப்பிடுகிறார். 

“...முழுமையாக சவரம் செய்துகொண்ட, முகமும் உருண்ட தலையும் அவரின் செழிப்பான தோற்றத்தைக் காட்டியது. பெரிய கருத்த கண்களும் பளிச்சிடும் பற்கள் தெரியக்கூடிய சிரிப்போடும் காணப்பட்டார். வெள்ளை நிற சட்டையையும், கருப்பு நிற காற்சட்டையும் அணிந்தபடி அன்று காணப்பட்டார். உங்களுக்கு ஸ்கொட்ச்சோடு சோடா அல்லது றம், அல்லது  பியர் வேண்டுமா என்றார் தேரர்.”

பேச்சின் இடையில் தானின்றி தேர்தலில் பண்டாரநாயக்க வெற்றி பெற்றிருக்க முடியாது என்றார். “நான் தேர்தலுக்காக லட்சக்கணக்கில் செலவளித்தேன்." என்றவர் பண்டாரநாயக்க வெற்றி பெற்றதும் தனக்கு உதவவில்லை என்கிற ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். அவரின் கப்பல் கம்பனி குறித்து சொல்லும்போது “நான் இதற்காக அரை மில்லியன் செலவளித்திருந்தேன். எமக்கு ஐந்து வருட ஒப்பந்தம் மட்டும் தான் தேவைப்பட்டிருந்தது. ஆனால் பண்டாரநாயக்க அதை அரசாங்க கப்பல் கூட்டுத்தாபனத்துக்கு கொடுத்துவிட்டார். மிகவும் அநீதியானது.” என்றார். ஒரு தேர்ந்த குடிகாரரைப் போல அழகாக மூன்று விரல்களால் ஸ்கொட்ச் கிளாசைத் தூக்கி, சர்வசாதரணமாக சோடாவை மூடியை உடைத்து ஊற்றினார்.

மேன்லி இப்படி கேட்கிறார் “சரி, இனி பண்டாரநாயக்க பற்றிய குழப்பங்களை எப்படி கையாளப் போகிறீர்கள்?”

“ஆ...! நாங்கள் அவரை வீழ்த்துவோம்!”

“சரி...! அது சாத்தியமாகாவிட்டால்?”

“வேறேதாவது வழி பண்ணுவோம்”

மேன்லி தொடர்ந்தும் இப்படி கேட்கிறார்

நீங்கள் பணப்புழக்கத்தைக் கொண்டவர். போதைவஸ்து பாவிக்கிறீர்கள். இவையெல்லாம் பௌத்த பிக்குமாருக்கு தடை செய்யப்பட்டவை அல்லவா?

அதற்கு புத்தரக்கித்த தேரர் இப்படி பதில் கொடுக்கிறார்.

“..நான் பன்சலைக்குள் தான் காவியணிந்த துறவி. பன்சலைக்கு வெளியில் தேவையானபோது இதோ காற்சட்டையும், சேர்ட்டும் அணிவேன். நான் எனது பன்சலை கடமைகளை திறமாகச் செய்கிறேன். பன்சலையையும் அதன் வருமானத்தையும் பார்த்துக்கொள்கிறேன்...” 

இவ்வாறு புத்த ரக்கித்த தேரரின் குண இயல்புகள், நடத்தைகள் பற்றி அப்போது அவரை நேரில் அறிந்தவர்கள், சந்தித்தவர்களின் பதிவுகள் நிறையவே உள்ளன.

களனி கொடுத்த காவு
பண்டாரநாயக்க பதவியேற்றதும் பௌத்த ஆசீர்வாதம் பெறுவதற்காக தனது அமைச்சரவை சகிதம் கண்டி தலதா மாளிகைக்கு போகாமல் களனி விகாரைக்குத் தான் சென்றார். புத்தரக்கித்த தேரரின் நிர்ப்பந்தத்தாலேயே அவர் அப்படி செய்தார். நல்லாசி பெறுவதற்காக எந்த விகாரைக்கு கூட்டிச் செல்லப்பட்டாரோ அதே விகாரையின் விகாராதிபதினால் மூன்றே வருடத்தில் அவரின் உயிர் எடுக்கப்பட்டது தான் அரசியல் முரண்நகை.

பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டு ஒரு சில வாரங்களின் பின்னர் தான் 20.10.1959 அன்று புத்தரக்கித்த தேரர் சந்தேக நபர்களில் ஒருவராக கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. மரணதண்டனை விதிக்கப்பட்டது. மேன்முறையீட்டின் பின் புத்த ரக்கித்த தேரருக்கும் எச்.பி.ஜெயவர்த்தனவுக்கும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

புத்தரக்கித்த தேரர், சோமராம தேரர், எச்.பி.ஜெயவர்த்தன ஆகியோர் பிரிவுக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தபோதும் 1962 மே 16 அன்று அதுவும் அந்த முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

சோமராம தேரர் தூக்கிலிடப்பட்டார். புத்த ரக்கித்த தேரருக்கு 20 வருடகால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டபோதும் 1967 இல் அவர் சிறையிலேயே இறந்துபோனார்.

பண்டாரநாயக்கவை சுட்ட சோமராம தேரர் இந்த சதியில் எப்படி இழுக்கப்பட்டார் என்பதை அடுத்தவாரம் பார்ப்போம்.

நன்றி - தினக்குரல்

Share this post :

+ comments + 1 comments

5:17 PM

நல்ல தகவல்🌟🌟🌟

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates