இலங்கையில் தோட்டத்தொழிலாளர்கள் 200 வருட வரலாற்றைக் கொண்டவர்கள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், இன்றைய வாழ்க்கைமுறை, அபிவிருத்தி என்பவற்றில் மெச்சத்தக்க வகையிலான முன்னேற்றங்களைக் காணமுடியாதுள்ளது. அதேவேளை இந்த 200 வருட வாழ்க்கைமுறையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சில விடயங்களைப் பிரிக்க முடியாமலுள்ளது. அவற்றில் லயன் அறைகள் முக்கியமானவை, அதைவிடவும் மண்மூடைகள் இன்னும் பிரதானமானவை. பெருந்தோட்ட மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதில் மண்மூடைகளுக்கு முக்கிய பங்குண்டு.
கடந்த 200 வருடங்களாக வாழ்ந்து வரும் லயன் அறைகள் பாழடைந்து கிடப்பதாலும் அவற்றின் கூரைகள் எந்த வேளையிலும் காற்றினாலும் கடும் மழையினாலும் அள்ளுண்டு போகும் சூழ்நிலை காணப்படுவதால் தடுப்புகளாக பாரமான கற்கள் அல்லது மண்மூடைகளை வைக்கும் வழக்கம் காணப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் அதுவே முக்கிய தேவைகளில் ஒன்றாகவும் மாறிப் போய்விட்டது. இன்று பெரும்பாலும் லயக்கூரைகளை கற்களும் மண் மூடைகளுமே ஆக்கிரமித்திருக்கின்றன. இது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற தனிவீட்டுத் திட்டத்தையும் விட்டுவைக்கவில்லை.
தற்போதைய தனிவீட்டுத்திட்டங்களில் மண்மூடைகள் கூரையிலிருந்து இறங்கி தரைக்கு வந்துவிட்டன. புதிதாக நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வுகளின் போது வீடுகளை விடவும் வீட்டுக்கு முன்னால் வெள்ளைநிறப் பைகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள மண்மூடைகளை அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றுக்கு விதிவிலக்காக கந்தப்பளை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டமொன்றில் கடுமழையின் போது வீசிய காற்றினால் கூரைகள் பறந்து சென்றிருந்த நிலையில், பின்னர் கூரைகள் பறக்காமல் இருப்பதை தடுக்க மண்மூடைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுவே தனிவீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் கூரையில் மண்மூடை வைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இருந்தது. ஆனால் இன்று தனிவீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள வீடுகளின் முன்னாலும் பின்னாலும் இந்த மண்மூடைகளை அதிகம் காணமுடிகின்றது.
புதிய வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போது, அதற்காக தெரிவு செய்யப்படும் காணியானது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஆய்வு செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட பின்பே கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும். இவ்வாறு பல படிமுறைகளின் பின் இடம்பெறும் நிர்மாணங்களை கேள்விக்குறியாக்கும் வகையில் மண்மூடைகள் அமைந்திருக்கின்றன. வீடுகளுக்கு முன்னாலுள்ள பள்ளத்தை நிரப்பி சமன் செய்யவும் பின்னாலுள்ள மண்மேடுகள் சரிந்துவராமல் இருக்கவுமே மண்மூடைகள் வரிசையாக அடுக்கப்படுகின்றன. அவ்வாறெனினல் தேசிய கட்டிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகள் பொய்யானவை என்றே கருதவேண்டியுள்ளது.
மண்மூடைகள் அடுக்கும் அளவுக்கு மண்சரியும் அபாயம் இருப்பது தெரிந்தால் ஏன் அங்கு வீடுகளைக் கட்ட வேண்டும். மலையகத்தில் மலைமேடுகள் மட்டுமே இல்லை. சமதரைகளும் இருக்கின்றனவே. வீடுகளுக்கு முன்னால் முற்றம் இல்லாத சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு மண்மூடைகள் அடுக்கப்பட்டு மண் நிரப்பப்பட்டு புதிய முற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனைத் தடுக்க வேண்டுமாயின் வழங்கப்படும் காணியின் அளவை அதிகரிக்க வேண்டும். தற்போதுள்ள நிலைமையைப் பார்த்தால் அமைச்சின் மூலம் பைகள் வழங்கப்பட்டு மண்நிரப்பி மூடைகளாக்கும் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவே தெரிகின்றது. இவ்வாறு அடுக்கப்படும் மண்மூடைகள் ஒவ்வொன்றும் நீடித்து நிலைக்கக்கூடியது அல்லவே? மீண்டும் பெய்கின்ற மழைக்கு அவை எப்போதாவது கரைத்து சென்றுவிடக்கூடும். மீண்டும் அந்த இடத்துக்கு புதிய மண்மூடைகளே வைக்கப்படுகின்றன. இதுவே காலங்காலமாக மலையகத்துக்கும் மண்மூடைகளுக்கும் இருக்கும் பந்தமாக இருக்கின்றது.
மண்மூடைகளைத் தயாரிப்பதற்காகப் பயன்படும் பைகள் அமைச்சால் அல்லது தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகிறதா, இல்லை பயனாளிகளே பணம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றார்களா தெரியவில்லை. பாதுகாப்பான இடத்தில் வீடுகளைக் கட்ட நினைக்கும் அதிகாரிகள், மண்மூடை வைத்து பாதுகாப்புப் பெறவேண்டிய இடங்களை தேர்வு செய்வது ஏன். ஒருவேளை மலைப்பாங்கான இடங்களில் வீடுகளை நிர்மாணிக்கும் நிலைவந்தால், மண்மூடைகளுக்குப் பதிலாக கொங்றீட் சுவர்களை எழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கலாமே? தனிவீட்டுத்திட்டம் ஒன்றும் தற்காலிக குடியிருப்புகள் அல்ல. 200 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்ட லயன் அறைகளை விடவும் மிக நீண்டகாலத்துக்கு பயனாளர்கள் வாழுமிடமாக இருக்கப்போகின்றமையால் மிகவும் அவதானத்துடன் செயற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. வீட்டுத்திட்ட திறப்புவிழாவுக்கு அமைச்சர்கள், ஏனைய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், இராணுவத் தளபதி, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் என சகலரும் கலந்து கொள்ளும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைதரும் விடயமாக இருக்கிறது.
குறைந்தது பயனாளிகள் மண்மூடைகளுக்குப் பதிலாக கொங்றீட் சுவர்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலகு கடன்கள், வட்டியில்லாக் கடன்கள் என்பவற்றை பெற்றுக் கொடுக்கலாம். அல்லது பொருட்களை வழங்கி பயனாளிகளே பூர்த்தி செய்து கொள்வதற்கு அறிவுறுத்தப்படலாம். அண்மையில் பூண்டுலோயாடன்சினன் மகாத்மா காந்தி புரவீடமைப்புத்திட்டத்தில் இடம்பெற்ற மரநடுகை விழாவில் கலந்து கொண்ட இலங்கை இராணுவத்தளபதி. எந்நேரத்திலும் இந்திய வீட்டுத்திட்ட நடவடிக்கைகளுக்குக்கு இராணுவத்தினரின் சேவையை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார். எனவே இராணுவத்தினரைப் பயன்படுத்திக் கூட அபாயகரமான பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மண்மூடைகளுக்குப் பதிலாக கொங்கீறீட் சுவர்களை எழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எனவே இவை தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, வீடுகளின் தற்காலிக ஆபத்தான காவலனான மண்மூடைகளை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...