Headlines News :
முகப்பு » , , , , , » பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் (பண்டாரநாயக்க கொலை -1) - என்.சரவணன்

பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் (பண்டாரநாயக்க கொலை -1) - என்.சரவணன்

பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது நாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியின் பின் ஒரு அறிவித்தல் செய்யப்பட்டது.

“காலமான பிரதமரைப் பற்றி இப்போது களனி ரஜமகாவிகாரையின் விகாராதிபதி மாபிட்டிகம புத்தரக்கித்த தேரர் சோகத்தை பகிர்ந்துகொள்வார்....”

சகலரும் அவரின் உரைக்காக காத்திருந்தனர். புத்தரக்கித்த தேரர் அழுது புலம்பியபடி சோகத்துடன் தனது உரையை நிகழ்த்தினார்.

“...நமது சமூகத்துக்கும், நாட்டுக்கும், இனத்துக்கும், பௌத்தர்களுக்கும் சிங்கள மொழிக்கும் பெரும் சேவையை ஆற்றிய பிரதமர் பண்டாரநாயக்க அவர்களை இந்தளவு குரூரமாகக் கொன்றது  சூரியன், சந்திரன், வானம், பூமி அனைத்தையும் உலுக்கும் பெரும் அநியாயம். இதைச் செய்தவர்களின் பரம்பரயே நாசமாகப் போகக்கூடிய அநியாயம். அவர் ஆளுமைமிக்க, அப்பாவித்தனமான, சிறந்த குணநலமுள்ள தலைவர் என்பதை நமது நாட்டில் மட்டுமன்றி உலகுக்கே நிரூபித்திருக்கிறார். நமெக்கல்லாம் அவர் ஒரு முன்னுதாரணமானவர்....” இப்படி 20 நிமிட உரையை அவர் ஆற்றிகொண்டிருந்த வேளை இடைக்கிடை அவர்; பலரும் கேட்கும்படி அழுது விம்மினார்.

பண்டாரநாயக்கவின் இறுதிச் சடங்குகள் முடிந்து ஓரிரு கிழமைகளில் அதாவது 20.10.1959 அன்று மேற்படி விம்மி அழுது புலம்பிய புத்த ரக்கித்த தேரரும், அவரால் பரிந்துரைக்கப்பட்டு சுகாதார அமைச்சராக ஆன விமலா விஜேவர்தன, எச்.பீ.ஜெயவர்த்தன, கொலன்னாவை தொகுதி உள்ளூராட்சிசபைத் தலைவர் அமரசிங்க உள்ளிட்ட அனைவரும் 21.10.1959 அன்று கொலைச் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்று பத்திரிகை செய்திகளும், வானொலி செய்திகளும் அறிவித்தன.

“நட்பே பகை”
பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டு இந்த மாதம் 25ஆம் திகதியுடன் 60 ஆண்டுகளை எட்டிவிட்டது.

1956 தேர்தலில் பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக் கட்சி ஏனைய கட்சிகளையும், அமைப்புகளையும் திரட்டிக்கொண்டு அமைத்த மக்கள் ஐக்கிய முன்னணி மாபெரும் வெற்றியை அடைந்தது.

ஏ.சீ.பீ.த.சில்வா, பிலிப் குணவர்த்தன, டீ.பீ.இலங்கரத்ன, பீ.எச்.விலியம் த சில்வா, மைத்திரிபால சேனநாயக்க, டபிள்யு தஹாநாயக்க போன்றோர் முக்கிய பாத்திரத்தை ஆற்றிய அமைச்சர்கள். அரசாங்கம் முதல் இரண்டு ஆண்டுகள் தமது திட்டங்களை வேகமாக செயற்படுத்திக்கொண்டு சென்றது. ஆனால் அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்க 27.05.1959 அன்று தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துகொண்டு அந்த அரசாங்கத்தை அமைத்த பிரதான தூண்களாக அறியப்பட்டவர்கள் சிலருடன் வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்துகொண்டனர்.

அன்றைய தினம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பிலிப் குணவர்தன எழுந்து பிரதமரை நோக்கி

“பிரதமர் அவர்களே நீங்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எதிரிகளிடம் இருந்தல்ல உங்களோடு இருக்கும் நண்பர்களிடம் இருந்து...” என்றார்.

அதற்கு பதிலளித்த பண்டாரநாயக்க மேலே பார்த்தபடி புன்னகையுடன் “ எனக்கு எதிரிகள் கிடையாது...” என்றார். பண்டாரநாயக்க உளப்பூர்வமாகத் தான் தனக்கு எதிரிகள் இல்லையென்று அன்றைய தினம் கூறியிருந்தார். ஆனால் அந்த 27.05.1959 ஆம் நாளின் போது இன்னும் பல எதிரிகள் அவருக்கு எதிராக சதிகளை மேற்கொள்ளத் தொடங்கியிருந்ததை பண்டாரநாயக்க உண்மையிலேயே அறிந்திருக்கவில்லை. பண்டாரநாயக்காவின் நம்பிக்கையை தவிடுபொடி ஆக்கியபடி சரியாக நான்கே மாதங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியல்ல ஆளைக் கொல்லும் சதியே நிகழ்ந்து முடிந்தது. அதுவும் தனக்கு நெருக்கமானவர்களால் அவர் இல்லாமலாக்கப்பட்டார். தான் நினைத்தும் பார்த்திராத காவியுடை தரித்த பிக்குவால் அவர் கொல்லப்பட்டார்.

உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொலை அது. ஆரம்பத்தில் இக்கொலையில் சம்பந்தப்பட்டவர்களாக சந்தேகிக்கப்பட்டவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியாகவில்லை. தல்துவே சோமராம தேரர் வெறும் அம்புதான் என்றும் ஆனால் அதை எய்தவர்கள் யார் என்கிற வினா நாட்டில் பெரும் சலசலப்பாகவே இருந்தன.

இலங்கையின் வரலாற்றில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க மீதான கொலை ஏற்படுத்திய அதிர்வை வேறெந்த மரணமும் ஏற்படுத்தியதில்லை எனலாம். அரச தலைவர்களாக இருக்கும் போதே கொல்லப்பட்டவர்களின் வரிசையில் அதற்கடுத்ததாக பிரேமதாசாவைக் கூற முடியும் ஆனாலும் இரண்டினதும் பரிமாணங்கள் முற்றிலும் வேறானவை. சொந்த இனத்தவரால், சொந்த மதத்தவரால், சொந்த நட்புறவால், அதிலும் பௌத்த மதத் துறவியொருவரால் கொல்லப்பட்டதை எவருமே நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

எனவே தாம் இந்தப் படுகொலை நிகழ்ந்தவுடன் பண்டாரநாயக்கவை சுட்டது காவி வேடம் தரித்த சோமராமன் என்கிற தமிழர் ஒருவரே என்று வதந்திகள் வேகமாக பரவ வழிவிட்டன. அன்றைய ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க வேகமாக இயங்கி கொலையாளி தமிழரல்ல என்றும் காவியுடை தரித்த சோமராம என்கிற பிக்குவே என்றும் ஊடகங்களுக்கு அறிவித்தார். வீண் வதந்திகளால் 1958 போன்று இன்னொரு கலவரத்தை உண்டுபண்ணிவிடவேண்டாம் என்று ஊடகங்களின் மூலம் அறிவித்து செப்டம்பர் 25ஆம் திகதி மு.ப 11 மணியிலிருந்து அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். அன்றிருந்த இனத்துவ முறுகல் சூழலில் ஒரு தமிழரால் நிகழ்ந்தது என்கிற வதந்தியை நம்பவைப்பதற்கான முழுச் சூழலும் சாதகமாகவே இருந்தது.

25 செப்டம்பர்
பண்டாரநாயக்க தனது உத்தியோக அலுவல்களை கவனிப்பதற்காக பிரதமரின் அதிகாரபூர்வமான இல்லமான அலரி மாளிகையையும், தனது சொந்த இல்லமான இல.65,றோஸ்மீட் பிளேசிலுள்ள வீட்டிலும் மாறி மாறி பயன்படுத்துவது வழக்கம். சில நேரங்களில் அவரது பரம்பரை இல்லமான ஹொரகொல்லை வளவிலும் இருந்து தனது அலுவல்களைக் கவனிப்பது வழக்கம். தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றி அவ்வளவாக பண்டாரநாயக்க அலட்டிக்கொண்டதில்லை.

செப்டம்பர் 25 அன்று காலை அன்றைய அமெரிக்க உயர்ஸ்தானிகர் பேர்னார்ட் கப்லர் (Bernard Gufler உயர்ஸ்தானிகராக பதவியேற்று ஒரு மாதத்தில் நிகழ்ந்த சந்திப்பு இது.) பண்டாரநாயக்கவை அவரது றோஸ்மீட் இல்லத்தில் சந்திக்க வந்திருந்தார். அவர்களின் உரையாடல் மடிந்து பேர்னார்ட் கப்லர் உரையாடிவிட்டு கிளம்பிவிட்டார்.

வழமைபோல அங்கு பண்டாரநாயக்கவை சந்திக்க வந்த இருபது பேர் அளவினர் வராந்தாவிலும், வெளியில் வரிசையாக நாற்பது பேர் அளவினரும் அவரின் அழைப்புக்காக காத்திருந்தார்கள். அந்த வரிசையில் அன்று சோமராம தேரரும் காத்திருந்தார். 9.45 மணி இருக்கும் சோமராம தேரரின் முறை வந்தது. 
பண்டாரநாயக்க பொதுவில் பிக்குமார்களை வரவேற்கும் விதம்
பௌத்த பிக்குவைக் கண்டதும் பிரதம் பண்டாரநாயக்க தான் அமர்ந்திருந்த கதிரையில் இருந்து எழுந்து வந்து  சம்பிரதாயபூர்வமாக குனிந்து வணங்கி வரவேற்றிருக்கிறார். நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று வினவினார். அவர் கற்றுக்கொடுக்கும் ஆயுர்வேத ஆஸ்பத்திரி தொடர்பான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்காக வர வந்திருப்பதாக அங்கு அவர் தெரிவித்திருக்கிறார்.

குறித்த ஆவணங்களை சமர்பித்தால் அது குறித்த உதவிகளை சுகாதார அமைச்சர் ஏ.பி.ஜெயசூரியவிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். சற்று தடுமாரியவராக சோமராம தேரர் தன்னிடம் இருந்த கோப்புகளை குனிந்து அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு புரட்டியிருக்கிறார். பிரதமரும் அதனை பெற்றுக்கொள்வதற்காக தயாராக காத்திருக்கும் வேளை குனிந்தபடி காவிக்குள் மறைத்துவைத்திருந்த a.45 webley Mark VI ரக கைத்துப்பாக்கியை வெளியே எடுத்து சுட ஆரம்பித்தார். பிரதமர் “சிறிமா... சிறிமா...” என்று சத்தமிட்டபடி சரியும்போது நான்கு ரவைகள் அவரின் உடலில் பாய்ந்திருந்திருந்தன.
பண்டாரநாயக்க சுடப்பட்ட இடம்
அங்கே அமர்ந்திருந்த ஆனந்த தேரர் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் கத்தத் தொடங்கினார். துப்பாக்கியை ஆனந்த தேரரை நோக்கி காட்டியபடி சுற்றி வர சுடத் தொடங்கினார் சோமராம தேரர். அங்கே குழுமியிருந்தவர்களில் இருந்த குணரதன என்கிற ஆசிரியர் ஒருவரும் காயப்பட்டார். காயப்பட்டிருந்த பண்டாரநாயக்கவின் கையிலும் மீண்டும் ஒரு தோட்டா பாய்ந்தது. ஒரு தோட்டா கதவிலும், மலர்த்தொட்டியிலும் பாய்ந்தது.

வாசலில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த சந்தங்களைக் கேட்டு ஓடி வந்து சோமராம தேரரை நோக்கி சுட்டார். காயப்பட்ட சோமராம தேரரை சுற்றி வளைத்தனர் அங்கிருந்தவர்கள்.

என் நாட்டுக்காகவும், இனத்துக்காகவும், மதத்துக்காவும் இதனை செய்ததாக அவர் கத்திக்கொண்டிருக்கும் போது அங்கு காவலுக்கு இருந்த ஒரே ஒரு பொலிஸ் கான்ஸ்டபிலும், காத்திருந்த மக்களும் சோமராம தேரரை சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டனர்.


ஒரு குண்டு இடது மணிக்கட்டில் பாய்ந்திருந்தது. இரண்டாவது குண்டு வலது விலாவில் பாய்ந்து கல்லீரலில் ஊடுருவி இடது பக்கம் விலா வழியாக வெளியே சென்றுவிட்டது. மூன்றாவது குண்டு முதுகிலும், நான்காவது குண்டு அடி வயிற்றிலும் பாய்ந்திருந்தன. அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் போது கூட ஓரளவு பேசக்கூடியவராகத் தான் இருந்தார்.

மூன்று குண்டுகள் உடலைத் துளைத்து விட்டு வெளியே சென்று விட்டன. வயிற்றில் தங்கிவிட்ட ஒரு குண்டை, ஐந்து மணி நேரம் ஆபரேஷன் செய்து அகற்றினார்கள். உடம்புக்குள் இரத்தப் பெருக்கு அதிகமாக இருந்தது. அறுவை சிகிச்சையின் போது நான்கு பைந்து இரத்தம் வெளியே எடுக்கப்பட்டது. அதன்பின் இருபது பைந்து இரத்தம் உள்ளே செலுத்தப்பட்டது. மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதைக் கூட உணராத அவர் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார். “அரசியல்வாதிகளான நாங்கள் தடித்த பேர்வழிகள் தான்” என்று கூடச் சொன்னார். 

ஐந்து மணித்தியால சத்திரசிகிச்சை பலனளிக்காது 26ஆம் திகதி காலை 7.45க்கு மயக்கம் அடைந்தார். 7.45அளவில் அவரின் உயிர் பிரிந்தது.

அவரின் உடலைப் பார்வையிடுவதற்காக இரவு பகலென்று பாராமல் 50,000க்கும் மேற்பட்டவர்கள் பொறுமையாக வரிசையில் காத்திருந்தார்கள். முதலில் அவரது இல்லத்திலும் பின்னர் பாராளுமன்றத்திலும் அவரின் தேகம் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. 

கொலையாளிகள்
பண்டாரநாயக்கவை கொலை செய்தது சோமராம தேரராக இருந்தாலும் அதன் சூத்திரதாரி அவர் இல்லை என்பதை அதன் பின் வந்த நாட்களில் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் தான் அரசாங்கம் அறிந்துகொண்டது.

இந்தக் மர்மக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக 7 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் கொலையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.
  1. களனி ரஜமகா விகாரையின் பிரதான விகாராதிபதி மாப்பிட்டிகம புத்தரக்கித்த தேரர்.
  2. கொழும்பு பேஸ்லைன் வீதியைச் சேர்ந்த அமரசிங்க ஆராச்சிகே கரோலிஸ் அமரசிங்க
  3. வெல்லம்பிட்டிய அவிஸ்ஸாவெல வீதியைச் சேர்ந்த ஹேமச்சந்திர பியசேன ஜெயவர்தன
  4. மரதானை பொலிஸ் இன்ஸ்பெக்டர் வீரசிங்க ஆராச்சிகே நியுட்டன் சில்வா
  5. களனி, பியகம வீதியைச் சேர்ந்த பளிஹக்காரகே அனுர த சில்வா
  6. ராஜகிரிய – ஒபேசேகரபுர அமர விகாரைச் சேர்ந்த தல்துவே சோமராம தேரர்
  7. கொழும்பு புல்லர்ஸ் வீதியைச் சேர்ந்த விமலா விஜேவர்தன
பரபரப்பாக நடந்த வழக்கு, மேன்முறையீடுகளின் பின், கொலையாளி தல்துவே சோமராம தேரர், அக்கொலையின் சூத்திரத்தை புத்தரக்கித்த தேரர், அவர்களுக்கு உதவிபுரிந்த எச்.பீ.ஜயவர்த்தன ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மேன்முறையீட்டின் பின்னர் புத்தரக்கித்த தேரருக்கும், ஜயவர்த்தனவுக்கும் அத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பாம்புக்கு பாலை வார்த்து...
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க என்கிற அரசியல் ஆளுமை, அரசியலுக்குள் பிரவேசித்த போது இலங்கையின் மையை பிரச்சினையாக அதிகாரப் பகிர்வு, பரவலாக்கம் என்பவற்றை அடையாளம் கண்டது உண்மை. அதற்காகவே அவர் 'சமஷ்டி முறை' அரசு ஒன்றே இலங்கைக்கு ஏற்ற தீர்வு என்றார்.

ஆனால் மூன்று தசாப்தங்களுக்குள் அதிகாரப் பகிர்வு என்கிற கருத்தாக்கத்திலிருந்து அதிகாரங்களை மையப்படுத்தும் ஒற்றையாட்சி கருத்தாக்கத்திற்கு பரிமாற்றம் செய்திருந்தார். அவரின் “சுதேசிய” கனவுக்குள் தமிழர்கள் அடக்கப்படாதவர்களாக இருந்ததையே அவரின் எழுச்சி உணர்த்தியது. தன்னை அதிகாரத்தில் உட்கார வைத்தவர்களின் வேலைத்திட்டத்தை அவர் முன்னெடுக்க வேண்டியவராக இருந்தார். தனது  சொந்தக் கொள்கைகளை அவர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டியவரானார். “பண்டாரநாயக்க அரசியல் அலை”க்குள் அவரின் பன்முகப்பட்ட சிந்தனை காணாமல் போய் “சிங்கள – பௌத்த – கொவிகம” சிந்தனையாக குறுகியது. 'இலங்கைத் தேசியம்' முலாம் பூசிய அப்பட்டமான 'சிங்கள-பௌத்த' பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு அவரை தலைமைகொடுக்க வைத்தார்கள். அந்த நிகழ்ச்சிநிரலை அவரை சூழ இருந்தவர்கள் நெறிப்படுத்தினார்கள்.

அவரைக் கட்டியெழுப்பியதற்குப் பின்னால் இருந்த சிங்கள பௌத்த தேசிய சக்திகளை திருப்திபடுத்துவதில் அவர் கண்ட இன்பம் அந்த சக்திகளின் எதிர்பார்ப்புகளை நிவர்த்திசெய்யும் கடமைக்குள் இலகுவாக தள்ளப்பட்டார்.  அந்த சக்திகளின் எதிர்பார்ப்பு எல்லைமீறிய எதிர்பார்ப்பாக மாறிய போது அவராலேயே அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டார். பாம்புக்கு பாலை வார்த்த கதையாக அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட பாம்புகளுக்கு அவரே இறுதியில் பலியானார். முதலில் அவர்களின் சித்தாந்தத்துக்கு பலியானார் அதற்கடுத்து தன்னையே அவர்களுக்கு பலியாக்கினார்.
“இந்த மனிதனிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்றும் அவர் மீது பழிவாங்க முயற்சிக்கக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.”
என்பதே பண்டாரநாயக்க சாகுமுன் விடுத்த இறுதி வேண்டுகோள்.
இறுதி மரியாதை செலுத்த வரிசையாக வந்தோர்

இக்கொலை சம்பந்தமாக புத்தரக்கித்த தேரோ, சோமராம தேரோ ஆகிய பௌத்த பிக்குகள் உட்பட மற்றும் சிலர் மீதும் குற்றம் சாட்டி. வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை மாதக் கணக்கில் நடைபெற்றது. கொலைக்குற்றத்துடன் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

பிலிப் குணவர்தன கூறியது போல பண்டாரநாயக்கவின் பின்னால் உள்ள நண்பர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த இலக்கு சாத்தியப்படாமல் போயிருக்கலாம். பண்டாரநாயக்க பதவி வகித்த காலம் மூன்றே மூன்று ஆண்டுகள் தான். ஆனால் இலங்கையின் வரலாற்றில் முக்கிய வருடங்கள் அவை. இலங்கையின் வரலாற்றை அப்படியே புரட்டிப்போட்ட ஆட்சியும் கூட. அவரின் ஆட்சி செய்த பாதகங்களைப் போல சாதகங்களும் கவனிக்கப்படவேண்டியவை.

பண்டாரநாயக்கவின் படுகொலையில் பின்னணியில் உள்ள சதிகள் குறித்து இன்றுவரை பல குழப்பங்களும், சந்தேகங்களும் நீடித்தே வருகின்றன.

இந்தக் கொலையில் உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அவர்கள் இக்கொலையில் எப்படி இழுக்கப்பட்டார்கள்?  பண்டாரநாயக்கவை கொலை செய்ய தூண்டிய காரணிகள் எவை? சீ.ஐ.ஏ. இந்தக் கொலையில் எப்படி சம்பந்தப்பட்டது என்பது போன்ற விபரங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates