Headlines News :
முகப்பு » » ஜனாதிபதித் தேர்தல் : எழுத்து மூலமான கோரிக்கைகளும் இணக்கப்பாடுகளும் தேவை - பானா தங்கம்

ஜனாதிபதித் தேர்தல் : எழுத்து மூலமான கோரிக்கைகளும் இணக்கப்பாடுகளும் தேவை - பானா தங்கம்


ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. இத்தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதை பற்றி சிறுபான்மை கட்சிகள் மிகவும் நிதானமாக சிந்தித்து செயற்படத் தயாராக உள்ளன. அதேபோல் மலையகக் கட்சிகளும் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றன. தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருக்கின்ற போதிலும் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இ.தொ.கா. தகுந்த நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கை தேர்தல் விஞ்ஞாபனத்தில்
தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து உருவாக்கப்பட்ட “தமிழ் முற்போக்கு கூட்டணி” முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை சந்தித்தது. ஐக்கிய தேசியக் கட்சியில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரி பாலசிறிசேனவுக்கு ஆதரவு கொடுத்து வெற்றி கண்டது. பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ.தே. கவுக்கு ஆதரவு கொடுத்து தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட போது மனோ கணேசன், பி. திகாம்பரம் ஆகியோர் கெபினட் அமைச்சர்களாகவும், வீ. இராதாகிருஷ்ணன் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றார்கள்.

இரண்டு தேர்தல்களுக்கும் முன்னதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்கள் தொடர்பான கோரிக்கைகளை ஐ.தே. க. விடம் முன்வைத்து அவற்றை ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறச் செய்திருந்தது. மலையக மக்களுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகளைக் கட்டிக் கொடுத்தல், அவற்றுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்குதல், மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதேச சபைகளை அதிகரித்தல், பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மலையக அபிவிருத்திக்கென தனியான அதிகார சபையை உருவாக்குதல், மலையகத்துக்கான பல்கலைக்கழகம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்வி சுகாதார மேம்பாட்டுக்கு உதவுதல் முதலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவற்றை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்ததோடு மாத்திரம் நின்று விடாமல் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது. அமைச்சர் திகாம்பரம் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டும் இலக்கை நிர்ணயித்து சுமார் 10 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார். காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் பிரதேச செயலகங்கள் விரைவில் அமையவுள்ளன. மலையகத்துக்கென தனியான அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டுள்ளது. இழுபறி நிலையில் இருந்து வந்த இந்திய அரசாங்கத்தின் 4 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான பணிகளும் ஆரம்பமாகவுள்ளன. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பல விடயங்கள் நடைமுறையில் செய்து காட்டப்பட்டுள்ளமை மலையக மக்களின் பொன்னான வாக்கு பலத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

அதேபோல் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு வழங்கும் வேட்பாளரிடம் ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு நிரந்தரமான அடித்தளம் இடப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்துக்கு மாற்று ஈடாக ஒரு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் சகல தொழிற்சங்கங்களும் பங்குபற்றக் கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆரம்ப காலத்தில் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரலாம். பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தும் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு மக்களின் சுகாதாரம் பேணப்பட வேண்டும். தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவும் மக்களுக்கு பொருளாதார சுபீட்சம் ஏற்படவும் தோட்டக் காணிகளை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது போல ஆசிரியர்கள் மற்றும் தோட்ட சேவையாளர்களுக்கு கிராமங்களை அமைக்கும் திட்டத்தையும் முன்வைக்க வேண்டும். மலையக இளைஞர்கள் சர்வதேச ரீதியில் விளையாட்டுத் துறையில் கால்பதித்து வருகின்றார்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கோரிக்கைகள் எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்டு இணக்கம் காணப்பட வேண்டும்.
 இ.தொ.கா. வின் நிலைப்பாடு
மலையகத்தில் மிகப்பெரிய தொழிற்சங்கமாக இருந்து கோலோச்சி வந்த இ.தொ.கா. வுக்கு கடந்த காலத் தேர்தல்கள் சரிவை ஏற்படுத்தியிருந்தன. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கிய போதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி 6 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இ.தொ.கா. வுக்கு 2 உறுப்பினர்கள் மாத்திரமே கிடைத்திருந்தனர். இதனால் அரசியல் ரீதியில் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னணியில் இருந்து கொண்டு இ.தொ.கா. பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. வழமையாக ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் இ.தொ.கா. இம்முறை வெறுமனே பார்வையாளராக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இருந்தும் தாங்கள் ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதை விட்டுக் கொடுக்காமல் வெளிப்படுத்தி வந்தார்கள்.

அதேநேரம் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து சில சபைகளில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அந்தக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வும் உதவியாக இருந்தார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இ.தொ.கா. வின் இரண்டு கண்கள் என்று விளக்கம் கொடுத்து வந்தது போல இம்முறை யாருக்கு ஆதரவு வழங்குவது என்று தீர்க்கமான முடிவு எடுப்பதில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் நிபந்தனைகளை விதித்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த இ.தொ.கா. அண்மையில் 30 அம்சக் கோரிக்கையை முன்வைத்து அவற்றை நிறைவேற்ற யார் முன்வருகின்றாரோ அவருக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளமை வரவேற்கக்கூடியது. காலம் கடந்த சிந்தனை என்று சிலர் விமர்சனம் செய்தாலும் காலத்துக்குத் தேவையான கோரிக்கை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வெகுஜன போராட்டம் நடத்தினால் என்ன ?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் மற்றும் சம்பள உயர்வை வலியுறுத்தி மலையகத்தில் மாத்திரம் அல்லாமல் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி கொழும்பு காலி முகத் திடலில் மலையக இளைஞர்களின் மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது. அதேபோல் மலையக மக்களுக்கு தகுந்த சேவையை வழங்கக் கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துமாறு கோரி வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்த முன்வந்தால் என்ன என்ற கருத்தும் இப்போது தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு மலையகம் முழுவதும் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்படுகின்றது. அரசியல் தொழிற்சங்க பேதமின்றி இந்த செயற்பாட்டை முன்னெடுக்க யார் முன்வருவார்கள் என்பது கேள்விக் குறியாகவும் காணப்படுகின்றது. 
மலையகம் ஓரணியில் அணி திரளுமா ?
மலையகத்தில் எதிரும் புதிருமாக அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் கலாசாரம் காலம் காலமாக இருந்து வருகின்றது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மற்றவர்களை தலைதூக்க விடாமல் செய்யும் கைங்கரியங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. சந்திரிகா அம்மையார் 1994 இல் மலையக மக்கள் முன்னணி தலைவர் அமரர் சந்திரசேகரனின் ஒரு ஆசனத்தை வைத்து அரசாங்கத்தை அமைத்த போது அவரால் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. அந்தளவுக்கு சிரேஷ்ட மலையக அரசியல்வாதிகளின் கைகள் ஓங்கியிருந்தன. புதிதாக அரசியல் சக்திகள் உருவெடுத்து அதன் ஊடாக தங்களின் அரசியல் செல்வாக்கு குறைந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக காய் நகர்த்தி வந்தார்கள். இருந்தும் சந்திரசேகரனின் எழுச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. மலையக அரசியலில் அவர் பேசப்படும் சக்தியாக உருவெடுத்தார்.

ஆனால் இன்றைய அரசியலில் அவ்வாறான நிலைமை இல்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பஞ்ச தந்திரங்களில் ஒன்றான பிரித்தாளும் தந்திரத்தில் கைதேர்ந்தவராக இருந்தார். பிரிக்க முடியாமல் இருந்த ஜே.வி.பி. கூட அவரது பதவிக் காலத்தில் தான் பிளவு கண்டது. கருத்து முரண்பாடுகள் காரணமாக பல புதிய கட்சிகள் அவரது காலத்தில் தான் தோற்றம் பெற்றன. அதேபோல் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இரு துருவங்களாக இருந்தவர்களையும் ஒரே அணிக்கு கொண்டு வந்த பெருமையும் அவருக்கு இருக்கின்றது.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் 2013 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இ.தொ.கா. வும் தொழிலாளர் தேசிய சங்கமும் இணைந்து போட்டியிட்டன. நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. வுக்கு ஆறு உறுப்பினர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு மூன்று உறுப்பினர்களும் தெரிவாகி இருந்தார்கள். அதேபோல் அவரது ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது பி. திகாம்பரம், வீ. இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதியமைச்சர்களாக நியமனம் பெற்றார்கள். இவ்வாறு மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தமது அரசியல் தேவைக்காக ஒன்றிணைத்து வரலாறு படைத்திருந்தார். அத்தகைய நிலைமை மீண்டும் சிலவேளை உருகாகக் கூடிய வாய்ப்பும் வரலாம்.
ஜனாதிபதித் தேர்தலில் ஒரே வேட்பாளருக்கு ஆதரவு ?
ஜனாதிபதித் தேர்தலில் மலையகத்தில் உள்ள இரு பெரும் அமைப்புகளான இ.தொ.கா. மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை ஒரே வேட்பாளரை ஆதரிக்கக் கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது. அவற்றின் நிதானமான போக்கு அதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகின்றது. நாடளாவிய ரீதியில் அவரது செல்வாக்கும் அதிகரித்து வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சிறுபான்மை கட்சிகளின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கக் கூடிய வாய்ப்பே காணப்படுகின்றது. எனவே கடந்த தேர்தலில் இ.தொ.கா. வின் தீர்க்க தரிசனம் பொய்த்து விட்டதைப் போல இம்முறையும் ஏமாந்து விடத் தயாராக இருக்காது. காற்று அடிக்கின்ற திசையில் செல்வதற்கே அது உசாராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு பெருகும் போது அவருக்கு கை கொடுக்கும் நிலைப்பாட்டை நிச்சயம் இ.தொ.கா. எடுக்கும் என்பதில் ஐயமில்லை.

அதேபோல் ஐ.தே.கட்சி சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்தா விட்டால் தாங்கள் தனியான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவ்வாறு தனியான தீர்மானம் எடுத்தால் ஒரு வேளை பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க முன்வரலாம்.

எது எப்படியோ மலையகத்தில் உள்ள இந்த அமைப்புகளும் யாரோடு சேர்ந்தும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவே தயாராக இருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது இந்த இரண்டு அமைப்புகளையும் அரவணைத்துக் கொண்டது போல புதிய ஜனாதிபதியும் செயற்படத் தயாராக இருக்கும் பட்சத்தில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஒரே கூட்டணியில் மலையகக் கட்சிகள் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும். ஒரே அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக இருப்பார்கள். மலையகத்தில் போட்டி போட்டுக் கொண்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் அற்புதங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் தான் பதில் சொல்லக் கூடியதாக இருக்கும்.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates