Headlines News :
முகப்பு » , , » சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ - காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – :II - சமுத்திரன்

சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ - காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – :II - சமுத்திரன்

என்.சரவணனின் "தலித்தின் குறிப்புகள்" நூல் வெளியீடு கடந்த 18.08.2019 அன்று நோர்வே stovner நூலகத்தில் நிகழ்ந்தது.  இதில் சமுத்திரன் (பேராசிரியர் சண்முகரத்தினம்), கலாநிதி சர்வேந்திரா, எழுத்தாளர் சத்தியதாஸ் (டென்மார்க்) ஆகியோர் திறனாய்வுரைகளை நிகழ்த்தினர். இந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தியவர் சித்திவிநாயகநாதன் அவர்கள். சமுத்திரன் அவர்களின் ஆய்வுரை பல பக்கங்களைக் கொண்ட திறனாய்வாக இருந்தது. ஈழத்து தமிழ் சூழலில் ஆழமான மார்க்சிய கண்ணோட்டத்துடன் திறனாய்வு செய்வதற்கு நமக்கு எஞ்சியுள்ள முக்கிய அறிஞர். மார்க்சிய கண்ணோட்டத்துடன் எந்தவொரு சிக்கலையும் அணுகும் அவரின் இந்த உரை எழுத்துவடிவத்தில் அவரின் இணையத்தளத்தில் (https://samuthran.net/) வெளியாகியிருக்கிறது.
சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ - காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – :I - சமுத்திரன் முதல் பாகம் இதற்கு முன் வெளியானது. இது இறுதிப் பகுதி.
மலையகத் தமிழ் சமூகம்
பல்வேறு நகர்ப்புறங்களில் வாழும் அருந்ததியர் சமூகமே பிரதான பேசுபொருளாகவிருக்கும் இந்தத் தொகுப்பில் மலையகத் தமிழர் என அடையாளப்படுத்தப்படும் ‘இந்திய வம்சாவழியினர்’ பற்றி ‘மலையகத் தலித்துக்கள்  சில புரிதல்கள்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழ்த் தேசம் பற்றிச் சில முக்கியமான விடயங்களைச் சொல்வதுடன் விவாதத்திற்குரிய அரசியல் கேள்விகளையும் எழுப்புகிறது. மலையகத் தமிழ்த் தேசியத்திற்கு இந்தக் கட்டுரை பிரதான முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆயினும் அந்த விடயத்தை அரைகுறையில் விட்டுள்ளதாகவே படுகிறது. முதலில் ஒரு புள்ளிவிபரம் பற்றிய திருத்தம். 136ஆம் பக்கத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது,‘இத்தேசத்தின் அதிக பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பெருந்தோட்டத்துறை எனும் குறிப்பிட்ட உற்பத்தி நடவடிக்கையுடன் தம்மை பிணைத்துக்கொண்ட கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.’ பல காலமாக மலையகத் தமிழரில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிக பெரும்பான்மையினராக இருந்தனர் என்பது உண்மையாயினும் கிடைக்கும் புள்ளிவிபரங்களின்படி தற்போது மலையகத் தமிழ்ச் சனத்தொகையில் ஒரு சிறுபான்மையினரே பெருந்தோட்டத் தொழிலாளர்கள். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தினதும் உள்நாட்டு இடம்பெயர்வுகளினதும் விளைவுகளால் மலையகத் தமிழரின் சனத்தொகைப் புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை பற்றிப் பிரச்சனைகள் உண்டு. ஆயினும் ‘இலங்கையில் மொத்தமாக 15 இலட்சம் மலையகத் தமிழர்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு லட்சத்திற்குக் குறைவானவர்களே தோட்டத் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர்’(சந்திரபோஸ் & ரமேஷ், 2018: xxxv).இதன்படி மலையகத் தமிழர்களில் 13 வீதத்திற்கும் குறைவானோரே இன்று தோட்டத் தொழிலாளர்களாயிருக்கிறார்கள். இந்த இலக்கத்திற்குப் பின்னால் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் பலமுக்கியமான மாற்றப் போக்குகள் இருக்கின்றன என்பதைச் சமீபகால ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் 2018 ஆண்டு ஏ. எஸ். சந்திரபோஸ் மற்றும் இரா. ரமேஷ் தொகுத்து வெளியிட்டுள்ள ‘இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள் (1867/2017)’ எனும் தலைப்பிலான நூல் பல பயன்மிக்க ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ஆயினும் சாதியத்தின்மீது இந்த மாற்றப் போக்குகளின் தாக்கங்கள் பற்றி விரிவான, ஆழமான ஆய்வுகள் இனிமேல்தான் வெளிவரவேண்டும். 

மலையகத் தமிழ் சமூகத்தில் தலித்துக்கள் பெரும்பான்மையினராகவும் ஆதிக்க சாதியினர் சிறுபான்மையினராகவும் இருக்கையில் சிங்கள மற்றும் வடக்குக் கிழக்குத் தமிழ் சமூகங்களில் ஆதிக்க சாதியினரே அளவுரீதியிலும் பெரும்பான்மையினர் எனும் ஒப்பீட்டுரீதியானத் தகவலைத் தருகிறது சரவணனின் கட்டுரை. அத்துடன் அளவுரீதியில் சிறுபான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினர் தலித்துக்கள்மீது தீண்டாமையைத் தவிர வேறு பல கொடுமைகளைப் புரிவது பற்றிக் கூறுகிறது. சமீபத்தில் வெளிவந்த வேறு ஆய்வுகளின்படி இந்த ‘உயர்சாதியினரில்’ ஒரு தொகையினர் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது (ஜெயசீலன் & சந்திரபோஸ், 2018). இதுவும் ஆதிக்கசாதியினரின் தொகையைக் குறைக்க உதவியுள்ளது. மலையகத் தமிழர்களில் மிகப்பெரும்பான்மையினர் – 81 வீதத்தினர் – தலித்துக்கள் எனும் முக்கியமான தகவலைச் சுட்டிக்காட்டியபடி ‘இது மலையகத் தேசத்தை தலித் தேசமாக அடையாளப்படுத்துகிறது’ எனக் கூறும் சரவணன் மேலும் ‘மலையகத் தேசத்தின் அடையாளமானது உழைக்கும், வர்க்க தலித்திய மற்றும் பெண்களின் நேரடி பங்கேற்பின் உருவாக்கத்திலானதாகவுள்ளது. மலையகத் தேசத்தின் இப்பண்பானது, தேச உருவாக்கங்களில் மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றே எனக் கூறலாம்’ எனக் கூறுகிறார் (ப136). மலையகத் தமிழ்த் தேசியத்தின் உருவாக்கம் பற்றிய இந்தக் கருத்தைச் சமகால நிலைமைகளுடன் இணைத்துப் பார்த்தல் பயன் தருமென நம்புகிறேன்.  மலையகத் தமிழ் சமூகத்தின் மாற்றப் போக்குகளை மனதிற்கொண்டு சமகாலத்தில் மலையகத் தமிழரின் தேசிய உருவாக்கத்தின் பண்புகளை இனங்காணல் அவசியம். இனத்துவ அரசியலின் மேல்நிர்ணய ஆற்றலுக்குட்பட்ட இலங்கையின் அரசியல் பொருளாதார, கலாச்சார சூழலில் மலையகத் தமிழ் தேசியத்தின் உருவாக்கத்தின் பரிணாமப் போக்கினை அவதானித்தல் அவசியம். இது ஒரு ஆய்வுக்குரிய விடயம். 

நான் மேலே குறிப்பிட்டுள்ள 2018ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வுத் தொகுப்பில் இது தொடர்பான பல கட்டுரைகள் உள்ளன. இங்கு ஒரு சில தகவல்களை மட்டும் குறிப்பிடலாம். மலையகத் தமிழ் சமூகத்தில் அறிவாளர்களை உள்ளடக்கிய ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகும் போக்குத் தொடர்கிறது. சமீப தசாப்தங்களில் ஒரு கணிசமான மலையகத் தமிழர்கள் நிரந்தரமாக வடக்கு கிழக்குக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இன்னொரு புறம் இளம் மலையகத் தமிழரின் கொழும்பு, மற்றைய நகர்களை நோக்கிய நகர்ச்சி தொடர்கிறது. மலையகமே தாயகமெனும் அடையாளம் தொடரும்போதும், ஒரு புறம் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்குக் கிழக்கில் நிரந்தரமாகக் குடியமரும் போக்கு, மறுபுறம் தெற்கிலே பெரும்பான்மை சிங்கள இன மக்கள் மத்தியில் வாழ்க்கையை அமைக்கும் போக்கு. எனவே பல்வேறு காரணங்களால் மலையகத் தமிழ் சமூகத்தின் புவியியல் நாட்டிற்குள் மலையகத்திற்கும் அப்பால் பரந்து விரியும் போக்குகள் அந்தச் சமூகத்தவரின் கூட்டு அடையாளத்தை எப்படி மீள்வரையறுக்கின்றன, இந்த நிலைமைகளில் அந்த மக்களின் சுயநிர்ணய உரிமையை அரசியல்ரீதியில் எப்படிக் கையாள்வது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த மாற்றப் போக்குகளுக்கு மத்தியில் மலையகத் தமிழர்களில் பெரும்பான்மையினர் தொழிலாள வர்க்கத்தினர், தலித்துக்கள், வருமானம் மற்றும் மனிதமேம்பாட்டைப் பொறுத்தவரை வறியவர்கள் எனும் யதார்த்தமும் கண்கூடு. இதில் பெண்கள் பால்ரீதியான ஊதிய வேறுபாட்டிற்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என்பதும் இந்த யதார்த்தில் அடங்கும். 

மலையகத் தமிழரின் கோரிக்கைகளும் போராட்டங்களும் வர்க்கம், பால், சாதி, இனம், பிரதேசம் என ஒன்றுடன் மற்றவை தொடர்புள்ள பல பரிமாணங்களைக் கொண்டவை. இவற்றின் ஊடறுப்பைக் (intersection)கிரகிக்க உதவும் நடைமுறை சார்ந்த அணுகுமுறை தேவை.  

மலையகத் தமிழர் எனும் அடையாளத்திற்கு மாறாக இந்த மக்களைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவழித் தமிழர்களென்றே அடையாளப்படுத்த வேண்டுமெனெ அந்தச் சமூகத்தில் அரசியல் செல்வாக்குமிக்க ஒருசாரார் வலியுறுத்தி வருகின்றனர். மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் திலகராஜா, அருணாசலம் அரவிந்தகுமார், மற்றும் சுரேஷ் வடிவேலு போன்ற அரசியல் தலைவர்கள் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் மலையகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மூக்கையாவின் கருத்தில்:

‘கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாகவே இலங்கைவாழ் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களை மலையகத் தமிழர்கள் என்றழைக்கவேண்டும் என்ற கருத்து கணிசமாக இச்சமூகத்து மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. .. சமூகத்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எம்மை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று அடையாளம் செய்து கொள்வதிலேயே பல நன்மைகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று நியாயமான வாதங்களை முன்வைத்தனர். மறுபுறத்தில் தம்மை இந்தியாவுடன் அடையாளப்படுத்திக்கொள்வது அரசியலில் பின்னடைவுகளுக்கு ஆளாக்கும் என்ற கருத்தில் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் சிலரும் அரசியலில் இந்திய எதிர்ப்பு சிந்தனையுடனான ஒரு சிலரும் தம்மை மலையகத் தமிழர் என்று கூறிக் கொள்வதே சிறந்தது என வாதிட்டு வந்துள்ளனர்.’ (மூக்கையா, 2018:212-213).[1]

இந்தக் கருத்து இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் மத்தியில் மலையகத்தமிழர் எனும் கூட்டு அடையாளம் ஒரு பரிணாமப் போக்கில் தொடர்ச்சியாக உருவாக்கம் பெறுகிறது எனும் கருதுகோளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மலையகத் தமிழர் எனும் கூட்டு உணர்வும் தேசிய அடையாளமும்  எந்த அளவிற்கு அந்த மக்களிடம் பதிந்துள்ளன எனும் கேள்வி எழுகிறது. இதுவரை இந்த மக்களின் அடையாளம் பற்றிய சர்ச்சையும் விவாதங்களும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கப்பால் செல்லவில்லையா?  இலங்கைக்குப் புலம்பெயர்ந்து 150-200 வருடங்களுக்குப் பிறகு ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ அல்லது ‘மலையகத்தமிழர்’ என்ற இரண்டில் எது மக்களின் கூட்டு அடையாள உணர்வில் மேலோங்கியுள்ளது?இந்தச் சமூகத்தின் புவியியல்ரீதியான மற்றும் அதனுடன் இணைந்த அரசியல் பொருளாதார மாற்றங்களின் தாக்கங்கள் எத்தகையன?காலப்போக்கில் நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் தம்மை இலங்கைத் தமிழராக இனங்காணும் போக்கே இந்தச் சமூகத்தில் பலம் பெறும் எனக் கருதுவது தவறா?மறுபுறம் இன அடையாள மாற்றப் போக்கினை வலுவூட்டும் பேரினவாதத் திட்டத்தின் தாக்கம் எத்தகையது? அறிவாளர்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் வகிக்கும் பங்குகள் எத்தகையன?   இவை விவாதத்திற்குரிய கேள்விகள். இந்தக் கேள்விகள் விவாதத்தின் கட்டமைப்பைத் தன்மைரீதியில் மீள்வரையறுக்கின்றன.

புகலிடத்தில் சாதியம்
பொதுவாக வெளிநாடுகளில் குடியேறியிருக்கும் சமூகங்கள் தமது மரபுகளையும் பல பழக்கவழக்கங்களையும் பலவழிகளால் பல்வேறு வடிவங்களில் மீளுற்பத்தி செய்வதை காண்கிறோம். மொழி, மதம் மற்றும் கலாச்சார செயற்பாடுகள் போன்றன புலம் பெயர்ந்து வாழும் ஒரு சமூகத்தவரை இணைக்கும் அடையாள உருவாக்கத்தின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. ஆயினும் இந்தப் போக்கு அதே சமூகத்திற்குள் வேறுபடுத்தலுக்கு, ஏன் பாகுபாட்டுக்குக்கூட, உதவும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மீளுருவாக்குவதையும் காணலாம். ஆபிரிக்கர்களும் ஆசியர்களும் எதிர்கொள்ளும் நிறவாதப் பிரச்சனைகள் நிலவும் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகங்களிற்குள் சாதியம் மற்றும் ஆணாதிக்கத்துடன் பிரதேசவாதச் சிந்தனையும் தொடர்வது உண்மையே. நோர்வேயில் வாழும் ஈழத்தமிழ் சமூகத்தில் தொடரும் சாதியம், ஆணாதிக்கம், மதவாதம், பிரதேசவாதம் பற்றிய தனது அவதானிப்புகளையும் சிலதனிப்பட்ட அநுபவங்களையும் ‘வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். 

சரவணன் தொலைபேசியில் பேசிய தமிழைக் கொச்சைத் தமிழெனக் கேலிசெய்யும் யாழ்ப்பாணத் தமிழர். அவருக்கு ‘ஏன் நீங்கள் எங்களைப் போல கதையுங்களேன். இல்லையெண்டா இப்பிடித்தான் எல்லாரும் கேலி செய்வாங்க’ எனப் புத்திமதி கூறும் நண்பி. இந்தவகையான யாழ்மையப் பிரதேசவாதம் ஒருபுறம் மறுபுறம் தமிழ் சமூகத்திற்குள்ளே தொடரும் சாதியப் பாகுபாடுகள். ஆனால் இங்கு ஒரு விடயத்தை நினைவூட்டுது நல்லது. இங்கு வாழும் தமிழ் சமூகத்திற்குள் நிலவும் சாதியம் இந்த நாட்டின் சமூக அமைப்பிற்கும், அதன் அதிகார உறவுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் வெளிவாரியானது மட்டுமன்றி இந்த சமூகத்தின் செல்வாக்குமிக்க ஜனநாயக விழுமியங்களுக்கும் முரணானது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இங்கு வாழும் ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்கள் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனை நிறவாதம் தொடர்பானது. இதற்கு ஒரு வெளிப்படையான ‘வர்ணத் தோற்றம்’ இருந்தாலும் இது இந்துமதத்தின் வர்ணாசிர முறையுடன் தொடர்புடையதல்ல!

புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களில் ஈழத்தில் சாதியம் பற்றிய உரையாடல்களில் ‘அங்கே சாதியம் இப்போ இல்லை என்றும், அது இப்போ ஒரு சமூகப் பிரச்சனையல்ல’ போன்ற கருத்துக்களை கேட்கிறோம். இங்கேயே இன்னும் சாதியத்தின் செல்வாக்குத் தொடரும்போது அங்கே அதன் இன்றைய நிலை என்ன எனும் கேள்வி எழுகிறது. அங்கே சாதியச் சிந்தனையும் அதன் நடைமுறைகளும் உள்ளூர் நிகழ்வுகளில், கோவில் சடங்குகளில், அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்வதைக் காண்கிறோம்.

சில முடிவுரைகள்
‘தலித்தியம்’ இலங்கைத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக இந்திய வம்சாவழி/மலையக தமிழ்ச் சமூகத்தில் இதுவரை எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?  

இந்தியாவில் தலித்தியமெனும் கருத்துருவின் வருகை அந்த நாட்டின் சமூக, பண்பாட்டு, அரசியல் கதையாடல்களிலும் செயற்பாடுகளிலும் குறிப்பிடத்தகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.வர்ணாசிரமத்தை பேணுவதை நோக்காகக் கொண்ட காந்தியினால் ‘ஹரிஜனர்’, அதாவது கடவுளின் பிள்ளைகள், என்றும் இந்திய யாப்பின்படி சட்டபூர்வமாக ‘பட்டியல் சாதிகள்’ அல்லது ‘அட்டவணைச் சாதிகள்’ (Scheduled castes) என்றும் அழைக்கப்பட்டவர்கள், மற்றும் இவர்களைப் போன்று நசுக்கப்பட்டவர்களான பட்டியல் ஆதிவாசிகள் (Scheduled tribes)தம்மைத் தலித்துக்கள் எனப் பெருமையுடன் அடையாளப்படுத்தியது அவர்களின் வரலாற்றில் ஒரு சமூக, பண்பாட்டு, அரசியல் முக்கியத்துவம் மிக்க திருப்பத்தின் அறிவிப்பானது. இந்தியாவின் வடமொழிகளில் ‘நசுக்கப்பட்டோர்’, ‘சிதறுண்டவர்கள்’ எனும் அர்த்தங்களைக் கொண்ட சொல்லான ‘தலித்’ அந்த நிலைக்காளான மக்கள் தமது தாழ்த்தப்பட்ட நிலைமையை உணர்ந்து அதற்கு எதிராக அணிதிரளும் கூட்டு அடையாளத்தையும் பலத்தையும் குறிக்கும் மாற்றுக் கோட்பாடாகப் பரிணமித்தது. இந்தியாவில் தலித்திய இயக்கம் பல மட்டங்களில் தாக்கமுள்ள பங்குகளை வகிக்கிறது. ஆயினும் அங்கு தலித்துக்களிடையே காணப்படும் படிநிலைச் சாதியமைப்பினதும் வர்க்க மற்றும் சமூக அந்தஸ்து வேறுபடுத்தல் போக்குகளினதும் விளைவுகளான பல்வகைமை தலித்தியத்தின் அடையாள அரசியலின் ஒருமைப்பாட்டு நோக்கத்திற்கு நிரந்தர சவாலாகியுள்ளது. தலித்துக்களை உள்ளடக்கும் சாதியமைப்பின் அடிமட்டத்திலுள்ளோர் உயர்மட்ட தலித்துக்களால் ஓரங்கட்டப்படுவதையும் காண்கிறோம். 

இலங்கையில் மலையகத்தமிழர் மத்தியில் வர்க்கரீதியான தொழிற் சங்கங்களும் இன அடிப்படையிலான அரசியல் அமைப்புக்களுமே முக்கிய இடங்களைப் பெற்றுள்ளன.  சாதி அடிப்படையில் அருந்ததியர் தலித்துக்கள் மத்தியிலும் ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இலங்கையில் தலித்தியம் செயற்பாடுமிக்க ஒரு இயக்கபூர்வமான வளர்ச்சியைக் காணவில்லை. இதற்கான காரணங்களைத் தெளிவாக அறியவேண்டும். அருந்ததியர் சமூகத்தில் பல வழிகளுக்கூடாக இடம்பெறும் சாதி அடையாள மறுப்பு அல்லது அடையாளத் தற்கொலை பற்றி சரவணன் ஆவணப்படுத்தியுள்ளார். அவர் தன்னை அருந்ததியன் என அடையாளப்படுத்தியதை, அருந்ததியர் சமூகத்தின் பிரச்சனைகள் பற்றி எழுதுவதை அவரின் உறவினர்கள் விரும்பவில்லை. இவை ‘தலித்தியம்’ பிரதிநிதித்துவப்படுத்தும் உணர்வுபூர்வமான எதிர்ப்பு அடையாள அரசியலுக்கு மாறான உதாரணங்கள். 

தலித்தியக் கதையாடல் இலங்கைக்குவருமுன் ஒரு காலகட்டத்தில் நாட்டின் வடபகுதியில் சாதியத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் செயற்பட்டன. 1960களில் யாழ்ப்பாணத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி (மாஓயிச) சாதியத்திற்கு, குறிப்பாகத் தீண்டாமைக்கு, எதிராக வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்பிப் போராடியது. மற்றைய இடதுசாரிக் கட்சிகளும் அங்கே சாதியத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டன. ஆனால் இந்தப் போக்கு 1970 களுக்குப்பின் தொடரவில்லை. இது குடாநாட்டிற்கு அப்பால் செல்லவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். 

சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய கணிப்புக்கள் என்ன? இலங்கையில் மனித மேம்பாட்டுச் சந்தர்ப்பங்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்குமான பரந்த வெகுஜன அரசியலின் தேவை பலமட்டங்களில் உணரப்படுகிறது. அத்தகைய ஒரு அரசியலுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுடன் தொடர்புகளை வளர்ப்பது சாதிய எதிர்ப்பு சக்திகளின் இன்றைய தேவை இல்லையா?

சாதிய எதிர்ப்பு அரசியலின் நோக்கம் சாதிய படிநிலையை, அடக்குமுறையை, அதாவது மனிதரைச் சாதி அடிப்படையில் அடையாளப் படுத்தும் வழக்கத்தை, அதை தொடர உதவும் அதிகார உறவுகளை, இல்லாதொழிப்பதாகும்.  ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அணிதிரட்டல் சாதிய அடையாளங்களை,விசேடமாக எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் நோக்கிலே மீள்வரையறுக்கப்பட்ட அடையாளங்களை,மையப்படுத்தும் அரசியலை அறிமுகம் செய்கிறது. சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கிய தேவையாயிருக்கும் இந்த அரசியல் சாதி அடையாளத்தை நிரந்தரமாகத் தக்கவைக்க உதவும் அரசியலாக மாறுவது அதன் ஆரம்ப நோக்கத்திற்கு எதிரானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.  இந்த முரணான மாற்றப்போக்கினைத் தவிர்ப்பதற்கு சாதிய எதிர்ப்புப் போராட்டம் பரந்த ஆழமான ஜனநாயக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களுடன் நெருக்கமான பங்காளியாக இருத்தல் அவசியம்.   கடந்த பல தசாப்தங்களாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையிலிருக்கும் நவதாராள முதலாளித்துவக் கொள்கைள் பாரிய ஏற்றத் தாழ்வுகளை வளர்த்து வறிய தலித்துக்கள் உட்படப் பெருந்தொகையானோரை விளிம்பு நிலைக்கு தள்ளியவண்ணமிருக்கின்றன. நவதாராள உலகமயமாக்கலில் மனித சுதந்திரம், சமசந்தர்ப்பம் என்பன மக்களை ஏமாற்றும் அர்த்தமற்ற சுலோகங்களாகிவிட்டன. இந்தப் போக்கிற்கு எதிராக ஜனநாயகத்திற்கும் தக்கவைக்கவல்ல தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கும் போராடும் சக்திகளுடன் சாதியத்திற்கு எதிரான சக்திகள் தமது கோரிக்கைகளுடன் இணைவது இன்றைய காலகட்டத்தின் தேவை.   

(2019 August 18ஆம் திகதி ஒஸ்லோவில் இடம்பெற்ற சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ நூலின் வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

அடிக்குறிப்பு:
[1] மூக்கையா, மா.செ. (2018), இலங்கையில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களின் மக்கள் தொகையும் அதன் பிரதான பண்புகளும், ஏ. எஸ். சந்திரபோஸ் மற்றும் இரா. ரமேஷ் (பதிப்பாசிரியர்கள்), இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள் (1867 – 2017).எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 2018.
Share this post :

+ comments + 1 comments

இந்நூல் தமிழகத்தில் எங்கு கிடைக்கிறது?

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates