பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் போது, தேயிலை பறிப்பவர்களையும் இறப்பர் பால் வெட்டுபவர்களையும் பிரதானமாக கொள்ளுகின்றார்கள். ஆனால் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளில் தொழில் புரிபவர்களை முதன்மையாகவும் முக்கியமாகவும் கொள்வதில்லை. காரணம், கூட்டு ஒப்பந்த சரத்துக்களை முழுமையாக அனுபவிப்பவர்கள் என்ற வாதம் காணப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் தேயிலை தொழிற்சாலைகளில் ஆண்கள் மாத்திரமே பணிபுரியும் சூழல் காணப்பட்டது. அதற்கு வேலைநேரங்கள் மற்றும் கடினவேலை என்பன காரணமாகவிருந்தன. ஆனால் தற்போது பெண்களும் இத்துறையில் பங்குபற்றும் சூழல் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்பின்மை, வருமானமின்மை போன்ற காரணங்களினால் மிகவும் கடினமான வேலையாகவிருந்தாலும் அதனை செய்யும் நிலையில் தற்போது பல பெண்கள் தொழிற்சாலைகளிலும் கடமையாற்றிவருகின்றனர். இவர்கள் எந்நேரமும் ஆபத்து நிறைந்த கனரக இயந்திரங்களுடனேயே பயணிக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது.
அவ்வாறான சூழ்நிலையில் தொழிலின் போது விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது மரணம் சம்பவிக்க நேர்ந்தாலோ எவ்வாறு இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவே இப்பத்தி அமைகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த நட்டஈட்டை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தினை (01/2019) வினவிய போது பல தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் பெருந்தோட்டங்களில் தேயிலை பறிக்கும் மற்றும் இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். ஆதலால் இவர்கள் நிவாரணங்களுக்காக தோட்ட நிர்வாகத்தினையே நம்பியிருக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. தொழிற்சாலைகளில் கடமைபுரிபவர்கள் நிவாரணங்களை பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக கருதப்படுகின்ற போதும் அவை தொடர்பான போதிய விளக்கமில்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு தொழிற்சாலைகளில் கடமைபுரிபவர்கள் தொழில் புரிகின்ற நேரத்தில் விபத்துக்கள் அல்லது மரணம் ஏற்படும் பட்சத்தில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தினை நாடும் போது இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.
வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தின் பிரதான செயற்பாடு, தொழிலில் ஈடுபட்டிருக்கையில் அல்லது அத்தகைய தொழிலின் விளைவாக விபத்து, சுகயீனம் அல்லது இறப்பு ஏற்படுகையில், அத்தகைய வேலையாள் அல்லது அவரில் தங்கியிருப்பவருக்கான நட்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதாகும். தொழில் புரிகின்ற நேரத்தில் விபத்துக்கள் அல்லது மரணம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் நாம் ஏன் நட்டஈட்டினை எதிர்பார்க்க வேண்டும் என்ற கேள்வி எம்முன் பலரில் எழக்கூடும்.
நிறுவனமொன்றில் நாளாந்த அல்லது மாதாந்த வேதன அடிப்படையில் பணியாற்றுகின்ற நபரொருவர் விபத்தினால் தற்காலிக அல்லது நிரந்தர இயலாமை அல்லது இறப்பிற்கு ஆளாக முடியும். அத்தகைய வேலையாளருக்கு அல்லது அவரில் தங்கியிருப்பவருக்கு நியாயமான நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதென்பது பாரிய நிவாரணமாக அமையுமென கூறப்படுகின்றது. அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு 247 சம்பவங்களுக்காக 87,132,172.55 ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 437 சம்பவங்களுக்காக 116.8 மில்லியன் ரூபாவும் 2017 ஆம் ஆண்டு 426 சம்பவங்களுக்காக 147.2 மில்லியன் ரூபாவும் 2018 ஆம் ஆண்டு 634 சம்வங்களுக்காக 218.8 மில்லியன் ரூபாவும் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தினால் நட்டஈடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே வேலையாளருக்கு அந்த விபத்து அல்லது சுகயீனம் ஏற்பட்டது என்பதை நிரூபிப்பதன் மூலம், மதுபானம் அல்லது போதையின் தாக்கத்தின் காரணமாக விபத்து ஏற்படாதபோது, கட்டளைகளுடன் இணங்காமையின் காரணத்தினால் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பமொன்று அன்றேல், வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணத்தைப் பயன்படுத்தாமையின் காரணமல்லாத விபத்து போன்ற சந்தர்ப்பங்களுக்காக நட்டஈட்டினை பெறமுடியும்.
நட்டஈட்டினை பெறுவதற்கு தேவையான விண்ணப்பப்படிவங்களை வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்திலும் நாட்டின் எந்த தொழில் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்பட்டு ஆணையாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்க வேண்டும். இவ்விண்ணப்பங்கள் விபத்து/இறப்பு ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமென்பது முக்கியமாகும். காயம் ஏற்படுகையில் - படிவம் ’எஸ்’ இலுள்ள மருத்துவ அறிக்கையுடன் படிவம் ’ஏ’ மற்றும் விபத்து ஏற்படுகையில் - படிவம் ’பி’ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை விபத்து அல்லது சுகயீனம் ஏற்படுகையில் தகைமையுள்ள மருத்துவ அலுவலரினால் வழங்கப்பட்ட விதந்துரைக்கப்பட்ட படிவத்திலுள்ள மருத்துவச் சான்றிதழ், இறப்பு ஏற்படுகையில் இறந்தவரின் மரணச் சான்றிதழ் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை என்பன இறந்தவரின் பிரதான தங்கியிருப்பாளரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். ஆனால் இந்த நட்டஈட்டுக் கொடுப்பனவானது, பெருந்தோட்டங்களில் கடமையாற்றுகின்ற தொழிற்சாலையுடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருப்பது, ஏனைய தொழிலாளர்களுக்கான சாபமாக அமைந்திருக்கிறது. பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தேயிலை பறிப்பவர்கள், இறப்பர் பால் வெட்டுபவர்கள், சாரதிகள், சிற்றூழியர்கள் போன்றோருக்கு வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தின் மூலம் நட்டஈட்டினை பெறுவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இதில் தேயிலை பறிப்பவர்களும் இறப்பர் பால் வெட்டுபவர்களும் தினந்தோறும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றவர்களாக இருக்கின்றனர்.
குளவித் தாக்குதல், சிறுத்தைத் தாக்குதல், பாம்புக்கடி, அட்டைக்கடி, வழுக்கி விழுதல், கவ்வாத்தின் போது காயமேற்படுதல், பாரம் சுமப்பதினால் ஏற்படும் பாதிப்புகள், சீரற்ற காலநிலையின் போது ஏற்படும் பாதிப்புகள், இடி,மின்னல் தாக்கம் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான நட்டஈடு தொடர்பாகவோ இல்லது நிவாரணங்கள் தொடர்பாகவோ நிர்வாகங்களே தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியாக இருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகங்களிடம் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முரண்படவேண்டிய சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது. அத்துடன் 2016/2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் 1 ஆம் சரத்தில் அ(II) இல் குறித்தவொரு தொழிலாளி தொடர்ச்சியாக 03 மாதங்கள் வருகைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவைப் பெற்று நடைமுறை மாதத்தில் நோயின் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றதன் காரணத்தால் முறையாக வேலைக்குச் சமூகமளிக்காது ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கு தகுதியற்றவராக காணப்பட்டாலும் அவருடைய முன்னைய மூன்று மாதங்களின் வருகையைக் கவனத்திற் கொண்டு வருகைக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கு குறித்த தொழிலாளி தகுதி பெறுவார். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியசாலை அல்லது வைத்திய அதிகாரியிடம் பெற்ற வைத்திய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுவே ஒப்பந்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிவாரணமாகும். ஆனால் 2019/2021 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் இச்சரத்து இடம்பெறவில்லை. எனவே எதிர்காலத்தில் சகல பெருந்தோட்ட தொழிலாளர்களும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...