Headlines News :
முகப்பு » , , , » ஸ்ரீ மகாபோதியும், தலதா பத்திருப்பும் பெண்களுக்குத் தீட்டா? - என்.சரவணன்

ஸ்ரீ மகாபோதியும், தலதா பத்திருப்பும் பெண்களுக்குத் தீட்டா? - என்.சரவணன்

“நான் பிக்குணியாகி 50 வருடங்களாகிவிட்டது. இதற்கு முன் ஜயஸ்ரீ மகாபோதியின் மேற்தளத்திற்கு இரண்டு தடவைகள் சென்று வணங்கியிருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் எங்களை போக விடுவதில்லை.”
இப்படி கூறியிருப்பவர் சாதாரண பெண் அல்ல. இலங்கை பிக்குணி அதிகார பீடத்தின் பொதுச்செயலாளரான “கொத்மலே ஸ்ரீ சுமேத” என்கிற பிக்குணி.

ஸ்ரீ மகாபோதியின் மேற்தளம் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக நெடுங்காலம் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஓகஸ்ட் 13 அன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அந்த மேற்தளத்திற்குச் சென்று போதி மரத்தை வணங்கிச் சென்ற செய்திகள் வெளிவந்ததும் மீண்டும் இது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாயவும் அவரின் சகோதரர் மகிந்த மற்றும் பிரமுகர்கள் சகிதம் தமது பிரச்சாரப் பணிகளின் அங்கமாக ஸ்ரீ மகாபோதியை வணங்கச் சென்றிருந்தனர். அப்போது அங்கே அவர்களுடன் ஷிரந்தி ராஜபக்சவும் ஸ்ரீ மகா போதியின் மேற்தளத்திற்கு சென்று வணங்கி வந்திருந்தார். 

சிங்கள ஊடகங்களிலும், சமூகத்திலும் இந்த செய்து இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. அனைத்துப் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்  ஷிரந்தி எப்படி அங்கே சென்றார் என்கிற கேள்வி பலமாக எழுந்துள்ளது. ஆனால் பௌத்த தலைமைப் பீடங்கள் அத்தனையும் மகிந்த தரப்பை ஆதரவளித்து வருவதால் இந்த சம்பவத்தை அவர்கள் இந்த சர்ச்சையில் இருந்து ஒதுங்கி கண்டும் காணாது இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதற்கு முன்னர் சந்திரிகா பண்டாரநாயக்க, சஜித் பிரேமதாசவின் மனைவி, சரத் பொன்சேகாவின் மனைவி, ஜெனெரல் தயா ரத்நாயக்கவின் மனைவி, அமைச்சர் சந்திராணி பண்டார போன்றோர் ஸ்ரீ மகா போதியை தொட்டு வணங்கிவிட்டு வந்திருக்கின்றனர். அது மட்டுமன்றி இதற்கு முன்னர் ஜே.ஆரின் ஆட்சி காலத்தில் பிரித்தானிய மகாராணி எலிசபத் இலங்கை வந்திருந்த போதும் கூட அவரை ஜே.ஆர். ஸ்ரீ மகா போதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.


மாதவிடாய் காரணமாக பெண்கள் தூய்மையற்றவர்கள் என்றும், எனவே ஸ்ரீ மகா போதி என்கிற புனிதப் பிரதேசத்திற்குள் பெண்கள் நுழைவதால் அதன் தூய்மை கெட்டுவிடும் என்கிற ஐதீகம் பௌத்தர்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. இது வெறும் நம்பிக்கையோடு நின்று விட்டால் கூட ஒரளவு சகிக்கலாம். ஆனால் அதையும் தாண்டி பெண்களை அங்கு அனுமதிக்காதபடி தடையும், கண்காணிப்பும் இருப்பது தான் இதன் உச்சபட்ச பாரபட்சம்.

மூட நம்பிக்கைகளும், தவறான ஐதீகங்களும், பாரபட்சமான மரபுகளும், சடங்குகளும் தற்போதைய காலத்தின் நவீன மனிதம் மிக்க சமத்துவ, ஜனநாயக சிந்தனை வளர்ச்சிகளால் குறைந்து கொண்டும், இல்லாதொழிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இங்கே முன்னர் இல்லாத அசமத்துவமும், பாரபட்சமும் புதிதாக திணிக்கப்பட்டு வருவது “இலங்கையின் பௌத்த நடைமுறை”யும், பௌத்த நடத்தையும் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்றே கேட்க வேண்டியிருக்கிறது.

நமது பிரச்சினை ஷிரந்தி போதிமரத்தை வணங்கியதல்ல மாறாக அதே உரிமை ஏன் ஏனைய அனைத்துப் பெண்களுக்கும் மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சந்திரிகா அங்கு சென்று வணங்கியிருக்கிறார்.

சமீபத்தில் மைத்திரிபாலவின் மனைவி ஜெயந்தி புஷ்ப குமாரி சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது அவர் கடும் சுமவீனமுற்றிருந்த போது அவருக்கு ஆசி வேண்டி 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி இதுபோலவே ஷிரந்தி இந்த ஸ்ரீ மகா போதி மரத்தை வணங்கிச் சென்றார். அப்போதும் கூட இதே போன்று ஊடகங்களில் அது சர்ச்சைக்குள்ளானபோதும் மகிந்த ராஜ்ஜியத்தின் செல்வாக்கு அந்த சம்பவத்தை ஊதிப்பெருப்பிக்க விடவில்லை. அதுபோல தனது பாரியாருக்கு உள்ள உரிமை இந்த நாட்டு பெண் பிரஜைகள் அனைவர்க்கும் இருக்கிறது என்று கூட அறிவிக்க முன்வராத நாட்டுத் தலைவர்கள் அவர்கள்.

இத்தனைக்கும் ஷிரந்தி ராஜபக்ச பௌத்த மதத்தைச் சேர்ந்தவருமல்ல. அவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அனைவரும் அறிவர். ஆக அதிகாரமும், செல்வாக்கும் தான் அவர்களின் தீட்டையும், துடக்கையும் தூய்மைப்படுத்துகின்றனவா? அதிகாரமும் செல்வாக்கும் இல்லாத ஒரே காரணத்தால் தான் பாமரப் பெண்கள் தூய்மை இழந்து கிடக்கிறார்களா? உரிமை மறுக்கப்படுவதற்கான அளவுகோள் அது தானா?

இது பற்றி பிரபல ஜனநாயக செயற்பாட்டாளரான தம்பர அமில தேரர் கடந்த ஓகஸ்ட் 19 அன்று நடத்திய ஊடக மாநாட்டில் தனது எதிர்ப்பை இப்படி பதிவு செய்தார்.
“இப்படி பிறப்பால் பெண்ணவர் தலதா விகாரையின் ஆசீர்வாதம் கிடைக்காது என்று கருதுகின்றனர். சிறிமா போதியும் அப்படித்தான். நான் ஏனைய
பௌத்த தலைமைகளிடம் கேட்கிறேன் இதோ உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. இப்போதாவது ஏனைய பெண்களுக்கும் இவற்றை வணங்க வாய்ப்பைப் பெற்றுக்கொடுங்கள். அப்படி செய்யாது போனால் கோத்தபாயவும், ஷிரந்தியும், மகிந்தவும் உங்களை துப்பாக்கிமுனையில் உங்களை மிரட்டி இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் என்று நாங்கள் கருத வேண்டிவரும். இதற்கு நீங்கள் பதிலளித்தாகவேண்டும்.
அதுபோல தலதா மாளிகையிலும் வர்க்க வேறுபாடு கடைபிடிக்கப்படுகிறதா? நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு தான் அனுமதியா? முன்னாள் பாதுகாப்பு அமைச்சராகவோ, வெள்ளை வேன் கடத்தல்காரர்களுக்கோ, கொலைகாரர்களுக்கோ தான் இந்த அனுமதியா? அப்படியென்றால் தலதாவை வணங்க மற்றவர்களும் இப்படியான குற்றங்களை செய்துவிட்டு வந்தால் தான் அனுமதிப்பீர்களா?”
ஸ்ரீ மகா போதி
புனித வெள்ளரசு மரத்தைத் தான் சிறீ மகாபோதி என்கிறோம். புத்தர் ஞானம் பெற்ற அந்த வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது. 

கலிங்கப் போரின் இறுதியில் யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட மாபெரும் மனிதப் பேரழிவினால் அசோக மன்னன் (கி.மு : 304-232) பௌத்த பிக்குவின் உபதேசத்தைப் பெற்று பௌத்த மதத்தைத் தழுவிக்கொண்டான். அசோகனின் மகன் மகிந்தன், சங்கமித்தை ஆகியோரும் பௌத்த மதத்தை தழுவி பௌத்தத் துறவிகளானார்கள். பௌத்த மதத்தை பரப்புவதற்காக இருவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.

அசோகனின் இதே காலப்பகுதியில் இலங்கையை ஆண்ட தேவநம்பியதிஸ்ஸன் அசோகனின் சமகாலத்து நண்பன். தேவநம்பியதிஸ்ஸனின் (கி.மு : 250-210) வேண்டுகோளின் பிரகாரம் அசோகன் இலங்கையில் பௌத்தத்தை நிறுவுவதற்காக மகிந்தனையும் சங்கமித்தையையும் அனுப்பினான்.

இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டு வந்து சேர்த்தவர் அந்த மகிந்தனே. முதலில் மகிந்தனே இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனுக்கு, புத்தர் அமர்ந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்றைத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தான். இதனை நிறைவேற்று முகமாக அசோகனே அவ்வெள்ளரசு மரம் இருக்கும் இடம் சென்று கிளையொன்றை வெட்டுவித்து சங்கமித்தவிடம் கொடுத்து அனுப்பியதாகவும் இலங்கையின் பௌத்த வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இலங்கையில் பௌத்த பிக்குணிகளின் மரபும் இங்கிருந்து தான் தொடங்குகிறது. இலங்கையின் பிக்குணி சாசனம் ஆரம்பிக்கப்பட்டதும் சங்கமித்தாவின் வருகையுடன் தான். இதன் போது தான் தேவநம்பியதிஸ்ஸனின் சகோதரன் மகாநாகனின் மனைவி அனுலா தேவியும் அவருடன் 500 பெரும் பிக்குணிகளாக ஆனார்கள். இலங்கையின் முதலாவது பிக்குணி அனுலா தேவி.

புனித வெள்ளரசு மரம் கி.மு 249 இல் தேவநம்பியதிஸ்ஸனால் நடப்பட்டதாக இலங்கையின் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவென்று கூறப்படுவது வழக்கம்.

புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம் இந்தியாவில்  யுத்தத்தால் அழிக்கப்பட்ட நிலையில் பிற்காலத்தில் மீண்டும் இலங்கையில் இருந்து ஒரு கிளை கொண்டு செல்லப்பட்டு நடப்பட்டது. அந்த கிளையே இன்றும் புத்தகயாவில் வணங்கப்படுகிறது என்பது இன்னொரு கிளைக்கதை.

இனி விடயத்துக்கு வருவோம். இலங்கைக்கு வெள்ளரசு மரக் கிளையை பத்திரமாக மடியில் வைத்து பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்ததே ஒரு பெண்தான் என்பதைக் கவனிக்கவேண்டும்.

பிக்குணியான “கொத்மலே ஸ்ரீ சுமேத” சமீபத்தில் பி.பி.சி யிடம் (2019 ஓகஸ்ட் 17) அளித்த பேட்டியில் கூறும்போது
“மாதாந்த மாதவிடாய் காலத்து துடக்கின் காரணமாக இந்த இடத்துக்கு செல்லக்கூடாது என்று கூறுபவர்கள் அங்கு இதுவரை அனுமதிக்கப்பட்ட பெண்கள் மட்டும் தீட்டில்லையா. .. எனக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் உள்ள பணக்கார, அரசியல் பலம் உள்ள  பெண்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுகிறது. இது மிகவும் வேதனைக்குரிய ஒன்று” என்கிறார்
அப்படி எந்தவித தடையையும் பெண்களுக்கு நாங்கள் விதிக்கவில்லை என்று ஸ்ரீ மகாபோதியைச் சேர்ந்த பிக்கு ஒருவரும் பி.பி.சி.யிடம் கூறியிருக்கிறார். ஆனால் இந்த விதிகள் உத்தியோகபூர்வமாக நேரடியாக பிரயோகிக்கப்படவில்லை. மேலும் தீட்டையும் துடக்கையும் ஏற்றுக்கொள்ளும் சாதாரண பெண்கள் தாமாகவே அந்தத் தணிக்கை நியாயமானது என நம்பிக்கொண்டு தம்மை தாமே அங்கு செல்வதை தணித்துக்கொள்கின்றனர். புனிதத்தைக் கெடுப்பது தெய்வகுற்றமாக புனையப்பட்டுள்ள கட்டுக்கதைகளை சாதாரண பெண்கள் நம்பிக்கொண்டு இதனை எதிர்க்காமல் தவிர்த்து விடுகின்றனர்.
“ஸ்ரீ மகா போதியை தரிசிக்க எங்களுக்கு பேரவா உண்டு. எது என்ன எப்படி இருக்கும் என்பதை இன்னமும் எங்களால் அறிந்துகொள்ள முடியாது இருக்கிறது. தூரத்தில் மேலிருந்து பார்க்க முற்பட்டால் கூட சரியாக அதனைக் காணக் கிடைப்பதில்லை. தூரப் பிரதேசத்தில் இருந்து இதற்காகவே வந்து செல்லும் நாங்கள் அதைச் சரியாகக் காண முடியாமலேயே திரும்பி விடுகிறோம்”
என்று வருடாந்தம் கொழும்பிலிருந்து ஸ்ரீ மகாபோதி தரிசனத்திற்காக செல்லும் ஒரு பெண் யாத்திரிகை பி.பி.சிஇடம் தெரிவித்திருக்கிறார்.

தலதா பத்திருப்பு – பெண்களுக்குத் தடை
தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியும் பெண்களின் தீட்டு பட்டுவிடக்கூடாது எனக் கூறி பெண்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவே இன்றும் இருக்கிறது.

இலங்கையில் பௌத்தர்களின் மிக முக்கிய புனிதஸ் தளமாகக் கருதப்படுவது தலதா மாளிகை. அங்கே புத்தரின் புனிதப்பல் (Sacred Relic of the tooth of Buddha, Buddh-dantya) வைக்கப்பட்டு வணங்கப்பட்டுவருகிறது. 

கலிங்க அரசன் யுத்தத்தில் தோல்வியுறும் தருவாயில் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தை கணக்கில் கொண்டு தான் அதுவரை பாதுகாத்து வந்த புத்தரின் தாதுப்பல்லை இளவரசன் தத்த மற்றும் இளவரசி ஹேமமாலாவிடம் கொடுத்து அனுப்பினார். பௌத்த யாத்திரிகை போல வேடமிட்டு இரகசியமாக உடலில் மறைத்து வைத்துக்கொண்டு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்தார் ஹேமமாலா. “தாதுவம்சம்” என்கிற காவியத்தில் இவர்கள் இந்த தாதுப்பல்லை இலங்கைக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்காக பட்ட பாடுகளை விபரிக்கின்றன.

பிரேமதாச ஜனாதிபதியாக ஆன போது அவர் தனது பதவியேற்பை தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இருந்து செய்தார். அவருடன் அவரின் குடும்பத்தினரும் இருந்தனர். அவரின் மனைவி ஹேமா பிரேமதாச பத்திருப்பு பகுதிக்கு சென்றது பெரும் சர்ச்சையாக ஆனது. இன்றளவிலும் அது உரையாடப்படுகிறது.

இலங்கைக்கு மாதக்கணக்காக புத்தரின் தாதுப்பல்லை  உடலில் மறைத்துக்கொண்டு வந்த ஹேமமாலாவிடம் காணாத தீட்டை எப்படி இன்று சகல பெண்கள் மீதும் பிரயோகித்து வருகிறார்கள்.
தீட்டும் துடக்கும்
இதே தீட்டிக் காரணம் காட்டி சபரிமலைக் கோவிலுக்கு பெண்கள் செல்வதை தடை செய்திருந்ததையும் அதற்கெதிரான வழக்கின் தீர்ப்பு சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டிருந்ததையும் அறிவீர்கள். அந்த தீர்ப்பின் படி அந்தத் தடை சட்ட ரீதியில் தடுக்கப்பட்டது. ஆனால் பெருவாரி ஆண்களை எதிர்த்து அங்கே செல்வதை பெண்களே தவிர்த்து வருகின்றனர்.

உலகில் உள்ள எந்த மத விதிகளும் பெண்களால் உருவாக்கப்பட்டதில்லை. ஆண்களே உருவாக்கினார்கள். ஆணாதிக்க சமூகத்தை மறுத்து தொழிற்பட முடியாத பெண் சமூகம் அதனை பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த விதிகளை அவர்களே பேண வேண்டும் என்கிற நம்பிக்கைக்கு அவர்களே ஆளாக்கப்பட்டார்கள். அதன் விளைவு; பெண்களே பெண்களுக்கு எதிரான ஆசாரங்களை பாதுகாத்து நியாயப்படுத்தி, அமுல்படுத்தும் நிலைக்கு ஆனார்கள். அதாவது ஆணாதிக்க நிகழ்ச்சிநிரலை தாமே ஏற்று நடத்தினார்கள். அதன் பின்னர் ஆணாதிக்க விதிகளையும், நிர்ப்பந்தங்களையும் அமுல்படுத்த நேரடியாக ஆண்கள் தேவைப்பட்டதில்லை. பெண்களே அதனைப் பார்த்துக் கொண்டார்கள்.

பாலுறவுக்கு பாலுறுப்பு வேண்டும், பரம்பரை தழைக்க பாலுறுப்பு வேண்டும். ஆனால் அதன் இயற்கை இயல்பு மட்டும் எப்படி தீட்டானது. அதைக் காரணம் காட்டி எப்படி உரிமைகளைத் தடுக்க முடிகிறது? சடங்குகளுக்கும், வைதீக மரபுகளுக்கும் அப்பால் மனசாட்சியின் பால் ஆண்கள் சிந்திக்க முடியாதா? தன்னை ஈன்ற தாயை,  வாழ்க்கையின் சக பயணியை, தான் பெற்ற மகளை தீட்டு - துடக்கின் பேரால் பலவற்றிலும் ஒதுக்கி வைக்கும் நிலையை நெஞ்சில் ஈரமுள்ள ஆண்கள் ஆதரிக்க முடியுமா? சகிக்க முடியுமா? எதிர்க்க வேண்டா? கொதித்தெழ வேண்டாமா?

வைதீக நம்பிக்கைகள், சடங்குகள், மரபுகள் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் நவீன சமூகத்தில் உலகம்; உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்துக்கும், சமத்துவத்துக்கும்  முன்னுரிமை கொடுத்து அடுத்தக் கட்டத்திற்கு வளர்ந்து கொண்டு செல்கிறது

அரசியல் பலம், அதிகார பலம், பண பலம் போன்ற பின்னணியையுடைய VIP க்களுக்கு மட்டும் சலுகையையும், விதிவிலக்கையும் தரும் இந்தப் போக்கை நிச்சயம் நாம் எதிர்க்க வேண்டும். மற்ற பெண்களுக்கு இல்லாத அனுமதி ஷிரந்தி ராஜபசவுக்கும் இருக்கக் கூடாது என்பதல்ல நமது வாதம். ஷிரந்திக்கு இருக்கக் கூடிய அதே உரிமையும், சலுகையும் அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே நமது முழக்கம்.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates