இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குதலுக்கு; சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய பல பிழையான பலமான ஐதீகங்களும், புனைவுகளும் செல்வாக்கு செலுத்தி வருவதை நாம் அறிவோம். அப்பேர்பட்ட புனைவுகள் தான் தமிழர்கள் அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என்பது போன்ற பீதிகள்.
“தமிழர்களுக்கு தமிழ்நாடு இருக்கிறது எங்களுக்கு உலகில் எவர் உண்டு” என்கிற வாசகம் சிங்களத்தில் பிரபல்யம். இந்தியா இலங்கையில் பண்பாட்டு ரீதியில் செல்வாக்கு செலுத்துவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அரசியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்வி இலங்கை வாழ் மக்களிடம் நிலவவே செய்கிறது. என்னதான் இந்திய – இலங்கை பண்பாட்டு உறவுகள் அசைக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்ததாக இருந்தாலும்; வரலாற்றில் இலங்கையின் மீதான இந்திய படையெடுப்புகள் இந்தியா மீதான வெறுப்பையும், கசப்பையும், அச்சத்தையும், சந்தேகத்தையும், பகைமையையும் எச்சரிக்கை உணர்வையும் தக்கவைத்திருக்கிறது என்பதையும் கவனித்தாக வேண்டும்.
இலங்கையானது இந்தியாவின் நவகாலனித்துவ நாடாக நடத்தப்பட்டு வருகிறது என்பதை இன்றைய அரசியல் சூழலில் மறுப்பதற்கில்லை. இதன் நீட்சியானது எதன் தொடக்கம் என்பதை ஆராய தென்னிந்திய படையெடுப்புகளை ஒரு அங்கமாகக நோக்கப்படுவது அவசியம் அதற்காகவே இந்தக் கட்டுரை.
இந்தியப் பீதியின் பின்னணி
இலங்கையின் மீதான இந்தியாவின் ஆதிபத்திய கருத்தாக்கம் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தே இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இருந்தே வந்திருக்கிறது. இந்தியா என்று நெடுங்காலத்துக்கு முன்னர் இருந்தே அழைக்கப்பட்டாலும் அப்படியொரு நாட்டை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் தான் என்றால் அது மெத்தச் சரியாகும். தமது காலனித்துவக் கட்டுப்பாட்டின் கீழ் சகல பேரரசுகளையும் சிற்றரசுகளையும் கொண்டு வந்து இணைத்து ஒரு குடையின் கீழ் ஆட்சி செலுத்தத் தொடங்கிய போது அவர்களால் உருவாக்கப்பட்டதே “இந்தியா”.
சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவைப் பொறுத்தளவில் தென்னிந்திய அரசுகளால் இலங்கை காலத்துக்கு காலம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இவ்வாறு நிகழ்ந்த ஆக்கிரமிப்புகள் இலங்கையின் பண்பாட்டு வடிவத்தை காலத்துக்கு காலம் மாற்றியமைத்திருக்கின்றன. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என அனைத்து விதத்திலும் இந்தியாவின் செல்வாக்கை - குறிப்பாக தென்னிந்தியாவின் அரசியல் பண்பாட்டு செல்வாக்கை இலங்கையில் கொலோச்சியிருக்கின்றன.
இன்றைய உடை, உணவு, பண்பாட்டு நடத்தை உள்ளிட்ட பல அம்சங்களிலும் “இந்தியா” இரண்டறக் கலந்துவிட்ட போதும் இந்தியா பற்றிய பீதியையே இலங்கையின் வரலாறு இலங்கை மக்களுக்கு போதித்து வந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளின் வீரியம் அந்தளவு வியாபித்திருப்பதால் இலங்கை வாழ் பெருந்தேசிய இனத்துக்கு காலத்துக்கு காலம் கருத்தேற்றப்பட்டுள்ள இந்திய வெறுப்புக்கு ஒரு நியாயம் இருக்க வாய்ப்புண்டு.
இலங்கையானது தனியான தீவாக இருந்தாலும் அருகில் உள்ள இந்தியாவைத் தாண்டி அது பயணிக்க முடியாதபடி அதன் புவியியல் இருப்பிடம் ஒரு அச்சாக இருக்கிறது. இந்த அருகாமையே அதன் சகல வல்லாதிக்கத்தனத்துக்குமான நியாயங்களை கற்பித்துவிடுகின்றன.
ஆக்கிரமிப்பு வரிசை
இந்திய ஆக்கிரமிப்பு குறித்து கே.என்.ஓ.தர்மதாச தனது “ஜாத்தியானுறாகய” என்கிற நூலில் இதுவரையான தென்னிந்திய ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு சிறந்த பட்டியலைத் தொகுத்திருக்கிறார் (பக்கம் 141). இதுவரையான தென்னிந்திய அரசுகளின் அல்லது தென்னிந்திய தொடர்புடைய படையெடுப்பு ஆக்கிரமிப்புகளின் எண்ணிக்கை 21. இதில் திருமணத்தின் மூலம் ஏற்பட்ட தென்னிந்திய ஆட்சிகளை உள்ளடக்கவில்லை. குறிப்பாக கண்டி இராஜ்ஜியத்தில் நாயக்கர் வம்ச ஆட்சி உள்ளடக்கப்படவில்லை.
இலங்கையின் வரலாற்றில் 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்தேய நாடுகளின் காலனித்துவ ஆக்கிரமிப்பு வரை இலங்கையில் இந்தியாவே பெரும் செல்வாக்கை செலுத்திவந்தது. அரசாட்சியைக் கைப்பற்றுவதோடு அது நின்றுவிடவில்லை. நாளடைவில் பெரும் பண்பாட்டு ஆக்கிரமிப்பாகவே ஆகி விட்டது. பண்பாட்டு ஆக்கிரமிப்பு என்பது அரசியல் ஆக்கிரமிப்பாக பரிமாற்றம்பெற அதிக தூரம் செல்லத் தேவையிருக்கவில்லை.
சிங்கள பௌத்த புனித மகாவம்ச வரலாற்றுக் காவியம் தரும் தகவல்களின்படி விஜயனே இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பாளனாக பதிவுசெய்யப்படுகிறான். 700 தோழர்களுடன் இலங்கையில் கரை சேர்ந்த அவன் இலங்கைவாழ் ஆதிக்குடிகளுடன் சேர்ந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கி சிங்கள இனத்தை உருவாக்கியதாகத் தான் மகாவம்சம் கூறுகிறது.
இதே வேளை இராமாயணக் காவியக் கதையையே உதாரணமாகக் கொண்டால் அதற்கும் முந்திய இலங்கை மீதான ஆக்கிரமிப்பாக இராமனின் வானரப் படைகளைத் தான் குறிப்பிட வேண்டும். இதை இந்திய இராமாயண காவிய வரலாற்றை நம்புபவர்கள் மாத்திரமல்ல இலங்கையைச் சேர்ந்த சிங்கள பௌத்தர்களும் அக்கதையை போற்றிப் பரப்பத் தொடங்கியுள்ளார்கள். இராவணனே சிங்களவர்களின் மூத்த தலைவர் என்று இன்று கொண்டாடத் தொடங்கியிருப்பதன் மூலம் இந்த இராமாயணக் கதைகளுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கியிருப்பதை நாம் இன்று காண்கிறோம்.
எப்படியோ விஜயன் காலம் தொட்டு இறுதியாக ஆரிய சக்கரவர்த்தியின் ஆக்கிரமிப்பு வரையான 15 நூற்றாண்டுகளுக்குள் 21 தடவைகள் தென்னிந்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருப்பதாகக் கொள்ளலாம். இவற்றில் முழு நாட்டையும் அல்லது நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றிய ஏழு சந்தர்ப்பங்களை குறிப்பிடலாம். அந்த ஏழு சந்தர்ப்பங்களையும் கூட்டினால் கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு மேல் எனலாம். இன்னும் சொல்லப்போனால் அந்த 15 நூற்றாண்டு காலத்துக்குள் 13 வீத காலம் என்று கூறலாம்.
மேலும் இலங்கையைக் கைப்பற்றிய ஏழு சந்தர்ப்பங்களில் ஐந்து சந்தர்ப்பங்கள் தென்னிந்திய அரசுகளின் அனுசரணையில் நடக்காதவை. சேனன், குட்டிகன் ஆகிய இருவரும் வியாபாரிகளாக இலங்கைக்கு வந்தவர்கள் என்கிறது மகாவம்சம். 44 வருடங்கள் ஆட்சி செய்த எல்லாளன் யார், அவனின் பூர்வீகம் என்ன? எவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றினான் என்பது போன்ற விபரங்கள் வரலாற்று ஆவணங்களில் இன்றளவிலும் தெளிவற்றதாகவே காணப்படுகிறது.
மேலும் சேன, குத்திக, எல்லாளன் போன்றவர்களை கபடமானவர்களாக சித்திரிக்கவில்லை. மாறாக இவர்களை நீதியானவர்களாகவும், சிறந்த அரசர்களாகவும் சித்திரித்திருக்கிறது மகாவம்சம்.
மகாவம்ச வரலாற்றுக் காவியத்தின் மையக் கதை துட்டகைமுனு x எல்லானுக்கு இடையில் நிகழ்ந்த சண்டையே. அப்பேர்பட்ட மகாவம்சத்தின்படி இலங்கையின் ஆட்சியாளர்களிலேயே அதி சிறந்த நீதிநெறிமிக்க ஆட்சியாளனாக எல்லாளனைத் தான் குறிப்பிடுகிறது மகாவம்சம் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும். இதனை விகடர் ஐவன் போன்ற ஆய்வாளர்களும் உறுதியாக தெளிவுறுத்தியிருக்கிறார்கள். (1)
வட்டகாமினி அபயவின் (வலகம்பா) (2) ஆட்சிகாலத்தில் ஆக்கிரமிப்பு நோக்குடன் படையெடுத்து வந்து சண்டை செய்த ஏழு தமிழர்கள் கூட தென்னிந்திய அரச தொடர்புகளைக் கொண்டிருந்ததாக எந்த குறிப்புகளும் கிடையாது. இந்த ஏழு தமிழர்களில் ஒருவர் அரசியை கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர். இன்னுமொருவர் மன்னரால் பாதுகாக்கப்பட்டு வந்த புத்தரின் அன்னப்பாத்திரத்தை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.(3) அடுத்த ஐவரில் ஒருவரான பூலஹத்த மூன்று ஆண்டுகள் ஆண்டுகொண்டிருக்கும் போது அவனின் தளபதி “பாகிய” அவனைக் கொன்றுவிட்டு ஆட்சியேறினான். “பாகிய” இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்த நிலையில் “பாகிய”வை அவனின் தளபதி “பனயமார” கொன்று ஆட்சியைப் பறித்து ஒரு சில வருடங்கள் ஆட்சி செய்தான். பனயமாரை அவனின் தளபதியான “பிளயமறக” கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியபோதும் ஏழு மாதங்கள் மட்டுமே அவனால் ஆழ முடிந்தது. அவனையும் தளபதி “தாதிக்க” கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். அவனுடன் போர் புரிந்து மீண்டும் வட்டகாமினி ஆட்சியைத் தனதாக்கிக்கொண்டான். ஆக இந்த ஐந்து தமிழர்களும் மொத்தம் 14 ஆண்டுகளும் ஏழு மாதங்களும் ஆண்டிருக்கிறார்கள். (4)
வட்டகாமினி எனப்படும் வலகம்பா அரசன் இவர்களுடன் நடத்திய போரைப் பற்றி சமீபத்தில் இலங்கை வரலாற்றிலேயே பெரும் பொருட்செலவில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. “ஆலோகோ உதபாதி” என்கிற அந்தத் திரைப்படம் பல சர்வதேச விருதுகளைக் குவித்தது. (5)
மன்னர் மித்தசேனவின் ஆட்சி காலத்தில் (428-429) படையெடுத்த 6 தமிழர்கள் தென்னிந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதை வரலாற்றாசிரியர்களால் தெளிவாக கூற முடியாமல் இருக்கிறது. அந்த படையெடுப்பு தென்னிந்திய அரச படையெடுப்பென்றோ அல்லது தென்னிந்திய அரசுகளின் அனுசரணையுடன் படையெடுத்ததாகவோ சான்றுகள் கிடையாது.
ஆனால் அவர்கள் அனுராதபுர அரசாட்சியில் பல குழப்பங்கள் நிலவிய காலப்பகுதியில் திடீர் படையெடுப்பை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இந்த ஆக்கிரமிப்புடன் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் மாறி மாறி 27 வருடங்கள் ஆட்சிசெய்தார்கள். இறுதியில் மன்னன் தாதுசேனன் அவர்களை தோற்கடித்து ஆட்சியை மீளக் கைப்பற்றினான். இந்த அறுவரும் யார், எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் மதம் என்ன என்பது போன்ற விபரங்கள் வரலாற்று நூல்களில் இல்லை. குருநாகலை மாவட்டத்தில் அரகம் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து இவர்கள் பௌத்த மதத்துக்கு தொண்டாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
இலங்கையில் அதிக நாசத்தை ஏற்படுத்திய படஎடுப்பாக கருதப்படுவது இறுதி ஆக்கிரமிப்பாக கருதப்படும் கலிங்க மகா ஆக்கிரமிப்பு. ஆனால் இந்த ஆக்கிரமிப்பும் தென்னிந்திய அரச அனுசரணையுடன் நிகழ்ந்த ஆக்கிரமிப்பாக கருத முடியவில்லை. அனுராதபுர ராஜ்ஜியத்தில் குழப்பங்கள் அதிகரித்திருந்த காலப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து கூலிப்படைகளை தருவித்து அவர்களை ஒன்றிணைத்து ஒரு பெரும் ஆக்கிரமிப்பை நிகழ்த்த முடியும் என்பதை நிரூபித்த படையெடுப்பு அது.
சில படையெடுப்புகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கானதாக இருந்ததுமில்லை. உதாரணத்திற்கு
1ஆம் சேனன் (833-855) காலப்பகுதியில் பாண்டிய அரசனான சீவல்லபன் இலங்கையை ஆக்கிரமித்தான். சிறிமாற சிறிவல்லபனை(6) எதிர்த்து மன்னன் சேனன் படைகளை அனுப்பி போரிட்டபோதும் நேரடியாக தானே போர்க்களத்தில் இறங்கவில்லை. சேனனின் படைகளைத் தோற்கடித்து அனுராதபுரத்தைக் கைப்பற்றிய சிறிவல்லபன் அனுராதபுரத்தை தக்கவைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கவில்லை. அங்கிருந்த விலைமதிப்பு மிக்க பொக்கிசங்களை சூறையாடிச் செல்வதே அவனின் நோக்கமாக இருந்தது. மன்னன் சேனன் தன்னிடமிருந்த செல்வங்களை தர முன்வந்ததன் பின் சிறிவல்லபன் தான் கைப்பற்றிய ஆட்சியை சேனனிடம் கையளித்துவிட்டு செல்வங்களை அள்ளிக்கொண்டு தென்னிந்தியாவுக்கே திரும்பிவிட்டான். போர்த் தோல்வியால் இழந்த புகழை மீட்கும் எண்ணம் ஈடேறாமலேயே முதலாம் சேனன் 853 இல் பொலநறுவையில் மரணித்தான்.
இதில் இன்னொரு சுவாரசியம் நிகழ்ந்தது. 1ஆம் சேனனின் சகோதரனான கசபனின் மகன் “2ஆம் சேனன்” என்கிற பெயரில் அனுராதபுரத்தில் ஆட்சியேறினான். பாண்டிய மன்னன் சிறிவல்லபன் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரசைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை மன்னனான 2ஆம் சேனனை மதுரை மீது படையெடுக்குமாறுத் தூண்டினான். இரண்டாம் சேனன், மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். சேனனின் படை மதுரையைத் தாக்கி, கைப்பற்றி சிறிவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டினான். வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் 2ஆம் சேனனுக்கு மாயப் பாண்டியன் கொடுத்த ஏராளமான பரிசுகளுடன் ஏற்கெனவே இலங்கையில் இருந்து சிறிவல்லபனால் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட செல்வங்களையும் மீட்டு வந்தான் என்கிறது மகாவம்சம். (7)
இதன் பின்னர் மன்னர் 5ஆம் காசியப்பனின் காலத்தில் (914-923) தெனிந்தியாவில் சோழர் படையெடுப்பால் கைப்பற்றப்பட்டது பாண்டிய அரசு. தோல்வியுற்ற பாண்டிய அரசன் இலங்கையின் உதவியை நாடினான். காசியப்பன் காலத்தில் பாண்டிய அரசுடன் நெருக்கம் கொண்டிருந்ததால் காசியப்பன் பாண்டியனின் கோரிக்கையின் பேரில் தனது சேனையை அனுப்பினான். ஆனால் அனுப்பப்பட்ட படை பெருந்தோல்வி கண்டதனால் படையை பின்வாங்கச் செய்து நாட்டுக்கு வரவழைத்துக்கொண்டான். காசியப்பனின் மரணம் இந்தத் தோல்வியில் ஏற்பட்ட அவமானத்தினால் ஏற்பட்டது என்கிறது மகாவம்சம்.
தோல்வியடைந்திருந்த ராஜசிங்க பாண்டியன் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்தான். அப்போது இலங்கையை ஆண்டுகொண்டிருந்த அரசன் நான்காம் தப்புல பாண்டியனுக்காக மீண்டும் படைகளைத் திரட்டிக்கொடுத்து சோழரிடம் இருந்து ஆட்சியை மீளப்பெற உதவ முன்வந்தபோதும் அரசனின் அமைச்சர்கள் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை. அதனால் அந்த யோசனையைக் கைவிட்டான் அரசன். தான் இலங்கையில் தொடர்ந்தும் இருப்பதால் இலங்கை அரசனுக்கு சிக்கல் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்று எண்ணி பாண்டிய மன்னன் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் மன்னன் காசியப்பனிடம் கொடுத்துவிட்டு இந்தியாவுக்கே திரும்பிவிட்டான்.
பாண்டிய அரசைக் கைப்பற்றிய முதலாம் பராந்தக சோழன் தனது பட்டாபிஷேகத்துக்காக பாண்டிய கிரீடத்துக்கு சொந்தமான அந்த மணிமுடியையும், செங்கோலையும் கோரி தனது தூதுவர்களை அனுப்பினான். ஆனால் அப்போது இலங்கையில் ஆட்சிசெய்த அரசன் நான்காம் உதயன் (946-964) அதனைக் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்தான். அதன் விளைவாக 4ஆம் உதயனின் காலத்தில் பராந்தக சோழன் இலங்கைக்கு படையெடுப்பை நடத்தி ஆக்கிரமித்து கைப்பற்றினான். ஆனால் அந்த படையெடுப்பில் பின்வாங்கிச் சென்ற 4ஆம் உதயன் அனுராதபுரத்தைக் கைவிட்டு ருகுனுவுக்கு தப்பிச் சென்று மீண்டும் படைகளைத் திரட்டிக்கொண்டு வடதிசையால் வந்து போரிட்டு சோழர்களை தோற்கடித்தான். சோழர்கள் தமது வெற்றி ஈடேறாத நிலையில் திரும்பிச் சென்றனர்.
993 இல் ராஜராஜ சோழன் இலங்கைக்கு படையெடுத்து அனுராதபுரத்தையும் பின்னர் வடபகுதியையும் கைப்பற்றினான். தனது ஆட்சிப்பகுதியை மும்முடிச் சோழ மண்டலம் என்றும் பெயரிட்டான்/ அனுராதபுரவுக்குப் பதிலாக தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றினான். அந்த நகருக்கு ஜனநாத மங்கலம் என்று பெயரிட்டான்.
கி.பி 1017 யில் இராசேந்திர சோழன் 5ஆம் மகிந்தனை தோற்கடித்து ருகுணு ராஜ்ஜியத்தையும் கைப்பற்றினான். மகிந்தனின் ஆட்சியில் மக்கள் வரிகட்ட பின்வாங்கியதால் திறைசேரி வெற்றாக இருந்தது. இதனால் தனது படையை பலப்படுத்தும் வல்லமையை இழந்திருந்தான். பொருளாதார ரீதியிலும் வீழ்ச்சியடைந்திருந்த அவனின் பலவீனமான அரசை; நாடுகள் பலவற்றை வென்ற இராசேந்திர சோழன் இலகுவாகக் கைப்பற்றினான். பாண்டிய கிரீடத்துக்கு சொந்தமான மணிமுடி, செங்கோலுக்காக 70 வருடகாலமாக நீடித்திருந்த பகையை சோழர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர். அதன் மூலம் முழு இலங்கையையும் தமது இராச்சியத்தின் சோழர்கள் கீழ் கொண்டுவந்தனர்.
அரசியையும், இளவரசனையும் சிறைபிடித்திருந்த நிலையில் மகிந்தன் சோழனிடம் தமக்கு தஞ்சம் தரும்படி மன்றாடினான். ஆனால் மகிந்தனை கைதியாக சோழ தேசத்துக்கு அனுப்பினான். 1029இல் அவன் சாகும்வரையில் மகிந்தனின் வாழ்க்கை சிறையிலேயே கழிந்தது. அனுராதபுரத்தின் இறுதி அரசன் அந்த 5ஆம் மகிந்தன் தான். ஏழு தசாப்தங்களுக்கும் மேல் ஆட்சி செய்த சோழர்களை 17 ஆண்டுகால தொடர் யுத்தத்தின் பின் முதலாம் விஜயபாகு தோற்கடித்தான்.
இலங்கையின் வரலாற்றில் சிறந்த போர்வீரனாக கருதப்பட்ட முதலாம் விஜயபாகு ஏனைய தேசங்களைக் கைப்பற்றும் ஆவல் கொண்டவனாக இருந்தான். அவனின் 11ஆம் 12ஆம் ஆட்சி காலப்பகுதியில் பர்மிய அரசனுக்கு பாடம் புகட்டும் நோக்கில் தனது படைகளை பர்மாவுக்கு அனுப்பி அந்த நாட்டைக் கைப்பற்றினான். அப்படைகளை தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள் தமிழர்கள்.
இந்த வெற்றியோடு நிற்காமல் விஜயபாகு தென்னிந்தியாவுக்குப் படையெடுத்து சோழர்களை வெற்றிகொள்ள திட்டமிட்டபோதும் அந்த திட்டத்தை எதிர்த்து படைத்தளபதிகளும் சிப்பாய்களும் கலகம் செய்தார்கள். அரசனின் சகோதர்களையும், பிள்ளைகள் மூவரையும் கூட அவர்கள் சிறைபிடித்தனர். மாளிகையையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் மன்னன் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான்.
பாண்டிய நாட்டை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கு எதிராக குலசேகரபாண்டிய இளவரசன் போராடினான். பராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னன் பராக்கிரமபாகுவிடமும் குலசேகர பாண்டியன் சோழ அரசரிடமும் உதவி கேட்டனர். பராக்கிரமபாகு பாண்டிய அரசுனுக்காக பெரும் சேனைகளை அனுப்ப தயார் செய்துகொண்டிருக்கும்போது குலசேகர பாண்டியனால் சோழர்களின் உதவியுடன் மதுரைக் கைப்பற்றி பராக்கிரம பாண்டியனையும் அவனது குடும்பத்தினரையும் கொன்றுவிட்டார்கள் என்கிற செய்தி வந்து சேர்ந்தது. ஆனால் பராக்கிரமபாகு பாண்டிய அரசைக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிடாமல் குலசேகரபாண்டியனை வீழ்த்தி பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை முடியில் அமர்த்த படையெடுக்கும்படி தனது சேனாதிபதிக்கு கட்டளையிட்டான்.
ஆரம்பத்தில் அந்த சேனாதிபதி சில வெற்றிகளை கண்டாலும் பின்னர் அங்கு அனுப்பப்பட்ட படைகள் தொடர் அழிவுகளையே சந்தித்தன. ஆனால் பராக்கிரமபாகு தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையைக் கைவிடாமல் அழிவுதரும் அந்த படையெடுப்பை பத்தாண்டுகளாக தொடர்ந்துகொண்டே இருந்தான். இந்த சமயோகிதமற்ற யுத்தத்தால் இலங்கைப் படையினர் பல உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிட்டது. பராகிரமபாகுவின் இறப்பின் பின்னரும் இதன் விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிட்டது.
1215 ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து கலிங்க “மாகன்” படையெடுப்பின் மூலம் இலங்கை மோசமான அழிவுகளை சந்தித்தது. அதுவே இந்தியாவிலிருந்து இலங்கையின் மீதான இறுதி படையெடுப்பாகக் கொள்ளப்படுகிறது. காலிங்க வம்சத்தைச் சேர்ந்த மாகன் கேரளாவிலிருந்து கூலிப்படையினரை பெருமளவு திரட்டிக்கொண்டு வந்து பொலன்னறுவையை கைப்பற்றினான்.
பொலன்னறுவை ஆட்சி செய்த முதலாம் விஜயபாகுவிலிருந்து பொலன்னறுவை ஆட்சி செய்த அனைத்து அரசர்களும் ஒரு வகையில் கலிங்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான். ருகுணு தேசத்தை ஆட்சி செய்த தென்னிந்திய பின்னணியைக் ஜகதிபாலாவின் மகள் தான் முதலாம் விஜயபாகுவின் முதலாவது மனைவி; இரண்டாவது மனைவியான திரிலோக சுந்தரியும் கலிங்க இளவரசி தான். முதலாம் விஜயபாகுவின் மகள் மித்ராவை பாண்டிய இளவரசனுக்குத் தான் மனமுடித்துவைத்தான். 1ஆம் விஜயபாகுவின் பட்டத்து இராணியும் பாண்டிய இளவரசியே. தனக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் மனைவியின் சகோதரனை இரண்டாம் விஜயபாகுவாக முடிசூட்டினான்.
இலங்கையின் வரலாற்றில் அதிக கல்வெட்டுகளை பதிவுசெய்த மன்னன் நிஸ்ஸங்க மன்னனும் கலிங்க வம்சத்தைச் சேர்ந்தவன் தான். 24,000 கேரளக் கூலிபடைகளுடன் படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றி 21 வருடங்கள் கொடுங்கோல் ஆட்சி செய்த மாகனும் காலிங்க வம்சத்தைச் சேர்ந்தவனே.
சூலவம்சம் தரும் தகவல்களின்படி மாகன்; குரூர அதர்ம, துர்நீதியை அமுல்படுத்திய தன்னிஷ்ட கொடுங்கோலன். பௌத்த மத அழிப்பை மோசமாக மேற்கொண்டதுடன், தனது சிப்பாய்களைக் கொண்டு நாட்டு மக்களின் கை கால்கள், அவயங்களை வெட்டி வதை செய்து, அவர்களின் சொத்துக்களை சூறையாடி, விகாரைகளை நிர்மூலமாக்கி, பிக்குமார்களை வதைத்து நூல்களை நாசம் செய்து மோசமான ஆட்சியை நடத்தினான் என்கிறது சூலவம்சம்.
இலங்கையில் ஆட்சியில் குழப்பங்கள் நிறைந்து பலவீனமான காலங்களில் தான் தென்னிந்திய படையெடுப்புகள் வெற்றிபெற்றுள்ளன. இலங்கை மீதான தென்னிந்திய படையெடுப்புகள் அனைத்துமே “மத்திய கால இலங்கையின் வரலாறு” என்கிற நூலின் ஆசிரியர் அமரதாச லியனகேவின் கூற்றின்படி இந்த அரசர்கள் அனைவரதும் ஆட்சியைக் இயல்பாக கைமாறவில்லை. அவர்களின் ஆட்சிகாலம் முடிவடையுமுன் சேனாதிபதியால் கொல்லப்படுவதும், அல்லது சிம்மாசனத்திலிருந்து தூக்கியெறியப்படுவதும் தான் நிகழ்ந்தது. பல சந்தர்ப்பங்களில் சேனாதிபதிகள் பலம் பொருந்தியவர்களாக தலையிட்டிருக்கிறார்கள். இப்படியான உட்குழப்பங்களே ஆட்சிப் பறிப்புகளுக்கு இலகுவாக வழிவிட்டிருக்கின்றன.
சுந்தர பாண்டியனின் உதவியின் மூலம் தான் இரண்டாம் பராக்கிரமபாகு மாகனை வெற்றிகொண்டான் என்பதற்கான ஆதாரங்கள் தென்னிந்திய கல்வெட்டுக்களில் இருந்து அறியமுடிகிற போதும் மகாவம்சம், சூலவம்சம், பூஜாவலிய போன்வரவற்றில் அது பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. தனக்கு உதவிய பராக்கிரமபாகுவுக்கு அளிக்கப்பட பரிசுகள் குறித்தும், அதற்குப் பதிலாக பராக்கிரமபாகு பாண்டிய அரசருக்கு வழங்கிய குதிரைகள், ஆபரணங்கள் பற்றியும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. (8)
இலங்கையை தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து ஆட்சி செய்த தமிழர்களை இப்படி தொகுத்திருக்கிறேன்.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், தீபவம்சம், ராஜாவலிய போன்ற நூல்களின் படி ஆட்சியைப் பிடிப்பதற்காக சொந்த இரத்த பந்தங்களை எப்படியெல்லாம் கொன்று ஆட்சிகளை நிறுவினார்கள் என்பதை அறிந்தால் வியப்பாக இருக்கும். “ராஜாவலிய” (அரசவம்சவழி) நூல் இலங்கையில் ஆட்சி செய்த 194 அரசர்களைப் பற்றிய குறிப்புகளைக் கூறுகிறது. அதில்...
- 175 அரசர்கள் சிங்களவர்கள்
- சிங்கள அரசர்களில்...
- 5 பேர் தமது தந்தைமாரைக் கொன்று ஆட்சிக் கட்டிலேறியவர்கள்
- 60 பேர் அரசர்களைக் கொன்று அரசர்களானவர்கள்
- 53பேர் தமது சொந்த சகோதரர்களைக் கொன்று அரசர்களானவர்கள்
- 30பேர் அரசனைக் கொன்று அரசேறிய படையினர்கள்
- அரசனைக் கொன்று அரசேறிய அரசியொருவரும் உண்டு
- அரசனைக் கொன்று ஆட்சியேறிய வாசல்காவலனும் உண்டு
- அரச வம்சத்தின் பிரகாரம் உரியமுறையில் ஆட்சியேறிய அரசர்கள் 25 பேர் மாத்திரமே.
இவை வியப்பைத் தரும் தகவல்கலாயினும் சுவாரசியமாக பதியக்கூடிய வரலாற்றுத் தகவல்கள்.
இந்திய ஆக்கிரமிப்பின் சாரம்
இந்திய அரசியல் பண்பாட்டு முற்றுகையின் கீழ் தான் தான் எப்போதும் இலங்கை இருந்துகொண்டிருக்கிறது. இலங்கையின் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிப்பதில் இந்தியாவின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவின் வர்த்தக - வியாபார மூலதனத்துக்கு ஊடாக மட்டுமல்ல, அரசியலுக்கு ஊடாக மட்டுமல்ல பண்பாட்டு ஆக்கிரமிப்புடன் இன்றைய நவீன தொலைதொடர்பு சாதனங்களுக்கு ஊடாக சிந்தனா ரீதியிலான ஆக்கிரமிப்பிலும் கொலோச்சிக் கொண்டே வருகிறது. காலனித்துவத்தின் பின்னான இந்தியாவின் ஆக்கிரமிப்பு வடிவத்தையும், சமகாலத்தில் பண்பாட்டு அம்சங்களுக்கு ஊடாக மக்களின் சிந்தனையிலும் நடத்தையிலும் எப்பேர்பட்ட கருத்தாதிக்க முடுருகைக்குள் சிக்க வைத்திருக்கிறது என்பதைப் பற்றி தனியொரு கட்டுரையில் கவனிப்போம்.
அடிக்குறிப்புகள்
நன்றி - காக்கைச் சிறகினிலே
- இலங்கை வரலாற்றின் உண்மைத்தன்மை கி.மு-300- கி.பி 1948 (ஸ்ரீ லங்காவ: இதிஹாசயே சத்யத்வய ) - 2016
- துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். ஆகவே துட்டகைமுனுவுக்குப் பின் அரச பதவி அவரின் சகோதரன் சத்தாதிஸ்ஸவுக்கே போனது. சத்தாதிஸ்ஸவின் மரணத்துக்கு பின் அவரது மகன்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்து மாறி மாறி ஆட்சி செய்தனர். அவர்களில் கடைசி இளைய மகன் தான் வலகம்பா. “வட்டகாமினி” என்கிற பெயராலும் வரலாற்று நூல்களில் அறியப்படுபவர்.
- புத்தர் தனது வாழ்நாளில் பல அன்னப்பாத்திரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அதில் ஒன்றென கருதப்படும் பாத்திரமொன்றை அசொகசக்கரவர்த்தி வைத்திருந்தார். பௌத்த துறவியாக ஆன அவரின் மகன் மகிந்தனின் வேண்டுகோளுக்கு அமைய அந்தப் பாத்திரம் சுமண சாமனேற என்கிற பிக்குவுக்கு வழங்கப்பட்டது. அவர் இலங்கை வரும்போது அப்பாத்திரத்தைக் கொண்டுவந்தார். மன்னன் தேவநம்பியதீசன் விகாரையொன்றைக் கட்டி மூலஸ்தானத்தில் வைத்து வழிபட்டான். அதன்பின் வந்த அரச வம்சத்தினரும் பரம்பரையாகக் காத்து வந்தார்கள். இந்த பாத்திரத்தைத் தான் இலங்கையில் இருந்து சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றனர். பின்னர் கஜபா மன்னன் அந்தப் பாத்திரத்தை மீண்டும் இலங்கை கொண்டு வந்து சேர்த்ததாக “ராஜாவலி”யவில் கூறப்படுகிறது.
- Geiger, Wilhelm - Mahavamsa : the great chronicle of Ceylon - University of California Libraries - 1912
- 2100ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.மு 89இல் மன்னர் வலகம்பா அரசாட்சி செய்த சமயத்தில் தென்னிந்தியாவிலிருந்து “தமிழ் – சைவ” சோழர்கள் படையெடுத்து வந்து நாட்டின் சொத்துக்களையும், ஆட்சியையும் கைப்பற்ற போர் நடத்தியதுடன், பௌத்தத்தை அழித்து தமது சமயத்தை நிறுவுவதற்கும் முயற்சித்தார்கள் என்றும், அப்போது ஏராளமான பிக்குகளை தமிழர்கள் கொன்றார்கள் என்றும், பிக்குமார் பலர் காடுகளிலும், குகைகளிலும் மறைந்து வாழ்ந்ததாகவும், 14 ஆண்டு காலம் சோழர்களை எதிர்த்து போராடிய அரசர் வலகம்பா பிக்குமாரை அலுவிகாரை எனப்படும் இடத்தில் தலைமறைவாக வைத்திருந்து திபிடகவை எழுதச் செய்தார் என்பது தான் கதை. ஆயிரக்கணக்கான உண்மையான பிக்குமார் இந்தத் திரைப்படத்தில் நடிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். 41 நாடுகளில் காண்பிக்கப்பட்டு பல நாடுகளில் சர்வதேச விருதுகளைக் குவித்தது.
- அரசர் வலகம்பாவுக்கு சோமாதேவி, அனுலாதேவி என இரண்டு மனைவிகள். சோழர்களின் ஆக்கிரமிப்பின் போது பின்வாங்கி ஒரு வண்டிலில் தப்பிச் செல்லும்போது ஐந்துபேர் கொண்ட வண்டி ஒரு கட்டத்தில் எடை காரணமாக வேகமாக செல்லாததால் அந்தப் எடையைக் குறைக்கும் நோக்கத்துடன் சோமாதேவி வண்டிலை விட்டு பாய்ந்து தன்னை அர்ப்பணிக்கிறாள். அனுலா தேவி ஏற்கெனவே கர்ப்பிணியாக இருப்பதாலும், மன்னர் வலகம்பா தப்பினால் தான் இந்தப் போரில் மீண்டும் ஈடுபடமுடியும் என்பதாலும், மற்ற இருவரும் சிறு பிள்ளைகள் என்பதாலும் இந்த முடிவை சோமா தேவி எடுத்தார் என்கின்றன சிங்கள இதிகாசக் கதைகள். வண்டிலை விட்டு பாய்ந்த சோமா தேவி தமிழர்களிடம் அகப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுசெல்லப்படுகிறாள். இன்றளவிலும் சோமா தேவி சிங்கள சமூகத்தில் பெரிய தியாக வீராங்கனையாக சித்திரிக்கப்படும் பாத்திரம். தன்னை இழந்து இலங்கை தேசத்தை காப்பாற்றிய தியாகியாக வணங்கப்படுகிறார் சோமாதேவி.
- வேறு பல வரலாற்று நூல்களில் சீவல்லபன் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறான்.
- கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பிமூன்றாம் நூற்றாண்டு வரையான ஒன்பது நூற்றாண்டுகளின் வரலாறு தான் (37 அத்தியாயங்கள்) மகாவம்ச மூல நூலாக கொள்ளப்படும் முதலாம் தொகுதியில் உள்ளது. கி.பி 301 இலிருந்து 1815வரையான காலப்பகுதி இரண்டாம் தொகுதியில் உள்ளது. இந்தத் தொகுதியில் 38ஆம் அத்தியாயத்திருந்து அடுத்த 42 அத்தியாயங்களை உள்ளடக்கியிருக்கிறது. அதில் 51வது அத்தியாயத்தில் இலங்கையிலிருந்து படையெடுத்து முதலாம் சேனன் பாண்டியர்களைத் தோற்கடித்துவிட்டுத் திரும்பிய விபரங்கள் உள்ளன.
- S.Pathmanathan - The Kingdom of Jaffna - 1978
நன்றி - காக்கைச் சிறகினிலே
காக்கைச் சிறகினிலே September 2019 by SarawananNadarasa on Scribd
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...