ஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு பொருத்தமான தமிழ் பெயர்களை சூட்டும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த பெயர் மாற்றத்தில் உள்ள அரசியலை செந்தில் தொண்டமான் சரியாக இனங்காணவில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போது மேலெழுந்துள்ளது.
பாரம்பரியமாக அசைக்க முடியாமல் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கு கடந்த சில தேர்தல்களின் மூலம் சரிந்து வந்திருப்பது உண்மை. ஒரு பெரிய தொழிற்சங்கம் என்கிற நிலை சரியத் தொடங்கியது அதன் அரசியல் தவறுகளால் மட்டுமல்ல மறுபுறம் தோட்டத்துறையின் வீழ்ச்சி, பெருந்தோட்டத்துறையில் இருந்த தோட்டத்தொழிலாளர்கள் பெருந்தோட்டத் துறையிலிருந்து வேறு துறைகளுக்கு மாற்றலானமை. அதனால் தொழிற்சங்க உறுப்புரிமை சகல தொழிற்சங்கங்களில் இருந்தும் வீழ்ச்சியடந்தமை போன்றவற்றையும் கூறிக்கொள்ளலாம். ஒரு தொழிற்சங்க நிலையிலிருந்து அரசியல் கட்சியாக பரிமாற்றமடையும் செயற்பாட்டில் இ.தொ.கா முழுமையான அளவில் வெற்றிபெறவில்லை.
இ.தொ.கா.வின் அரசியல் ஸ்தம்பித இடைவெளியை ஏனைய அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் பயன்படுத்திக்கொண்டன. இ.தொ.கவின் இடத்தை படிப்படியாக அவை கைப்பற்றின. மலையகத்தில் அதிகாரபோதையில் தழைத்திருந்த இ.தொ.கவின் செல்வாக்கு சரிந்ததும் மைய அரசியல் அதிகாரத்திலிருந்தும் ஓரங்கட்டப்பட்டது.
ஒரு காலத்தில் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக தென்னிலங்கையில் கணிக்கப்பட்ட இ.தொ.க; மைய அரசியலில் பேரம்பேசும் ஆற்றலையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது தற்செயல் அல்ல. மக்கள் கொடுத்த அத்தண்டனை இ.தொ.கவின் அந்தஸ்தை வெகுவாக பாதித்தது. வரலாற்றில் அதிகாரம் இல்லாத ஒரு காலகட்டத்தை அனுபவிக்கத் தொடங்கிய வேளை இருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி மேலே வந்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில் பல வருடங்களாக வாசம்புரிந்த செந்தில் தொண்டமான் இந்த சூழலில் தான் இ.தொ.காவின் வாரிசுரிமையை கைமாற்ற இலங்கைக்கு இறக்கப்பட்டார். எந்தவித அடிப்படை அரசியல் பணிகளிலும் இ.தொ.கா வுக்குள் ஈடுபட்டிராத செந்தில் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் வந்து இலகுவாக அமர்ந்துகொண்டார். வட இந்திய அரசியல் வாதிகளின் பாணியில் உடைகளை அணிவது, தனது நிகழ்சிகளில் தன் கால்களில் விழுந்து வணங்குவதை மரபாக்குவது, தமிழக பாணியில் சாதி அமைப்புகளை உருவாக வழிசெய்வது, தனக்கென பாதுகாப்புக்கென கும்பலை வைத்துக்கொண்டு அவர்களுக்கு கருப்புடை அணிவித்து பரபரப்பாக பந்தா காட்டுவது என அவர் வந்திருந்த தமிழ்நாட்டு பாணியிலேயே தன்னை பெருப்பித்துக் காட்டத் தொடங்கினார். இன்றைய மலையக மக்கள் பாட்டனார் காலத்து அடிமைகள் போல இல்லை என்பதை அவர் அறியார்.
தமிழ்நாட்டில் பல வருடங்களாக வாசம்புரிந்த செந்தில் தொண்டமான் இந்த சூழலில் தான் இ.தொ.காவின் வாரிசுரிமையை கைமாற்ற இலங்கைக்கு இறக்கப்பட்டார். எந்தவித அடிப்படை அரசியல் பணிகளிலும் இ.தொ.கா வுக்குள் ஈடுபட்டிராத செந்தில் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் வந்து இலகுவாக அமர்ந்துகொண்டார். வட இந்திய அரசியல் வாதிகளின் பாணியில் உடைகளை அணிவது, தனது நிகழ்சிகளில் தன் கால்களில் விழுந்து வணங்குவதை மரபாக்குவது, தமிழக பாணியில் சாதி அமைப்புகளை உருவாக வழிசெய்வது, தனக்கென பாதுகாப்புக்கென கும்பலை வைத்துக்கொண்டு அவர்களுக்கு கருப்புடை அணிவித்து பரபரப்பாக பந்தா காட்டுவது என அவர் வந்திருந்த தமிழ்நாட்டு பாணியிலேயே தன்னை பெருப்பித்துக் காட்டத் தொடங்கினார். இன்றைய மலையக மக்கள் பாட்டனார் காலத்து அடிமைகள் போல இல்லை என்பதை அவர் அறியார்.
இந்த வேளை 2017 யூலையில் தமக்கு தற்செயலாக கிடைத்த ஊவா மாகாண கல்வி அமைச்சை தம்மை மீட்பதற்கான ஒரு கருவியாக ஆக்கிக்கொள்ளும் குறைந்தபட்ச சந்தர்ப்பமாக நினைத்துக்கொண்டார்கள். ஆனால் இ.தொ.க ஒரு குடும்பக் கட்சி. சௌமியமூர்த்தி குடும்பத்தின் கட்சி. வரலாற்றில் சொந்த மக்களுக்கு செய்ததை விட தமது குடும்பத்தின் செழிப்புக்காக தோட்டத் தொழிலாளர்களை பயன்படுத்திக்கொண்ட கட்சி. சௌமியமூர்த்திக்கு பின், ஆறுமுகன், ஆருமுகனுக்குப் பின் செந்தில் என்கிற வரிசையிலேயே அக்கட்சியின் பரம்பரைத்தனம் போஷிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி அமைச்சும் அந்த வரிசையில் அடுத்தவாரிசான செந்தில் தொண்டமானின் அதிகார இருப்புக்கான ஒன்றாக ஆக்கப்பட்டது.
2020 என்பது இலங்கையின் தேர்தல் ஆண்டு. அத்தேர்தலுக்கு முன் செல்வாக்கை சரிசெய்வதும், நிலை நிறுத்துவதும் சகல கட்சிகளின் பிரதான வேலைத்திட்டத்திற்குரிய நிகழ்ச்சிநிரல் தான்.
பரபரப்பாக ஏதாவது செய்தாகவேண்டும். அதற்காக கிடைத்த உத்திகளில் ஒன்றுதான் பாடசாலைகளின் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றுவது என்கிற போலித்தனம்.
ஒரு தமிழ் பாடசாலைக்கு சிங்களப் பெயரை வைத்திருக்கிறார்கள் என்றால் அதை “சிங்களமயமாக்கல்” என்று கூறி அதை மாற்றுவதை விளங்கிக் கொள்ளலாம். இங்கு அப்படியல்ல தோட்டங்களின் அல்லது தோட்டப் பிரிவுகளின் அடையாளங்களே இன்றும் பெயர்களாக இருக்கின்றன.
அந்தத் தோட்டங்களின் பெயர்களுக்கு என்று ஒரு வரலாறும், பூர்வீக முதுசமும் உண்டு. மலையக மக்களின் இருப்பின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட பெயர்கள் அவை.
அத்தோட்டத்தின் ஆரம்பம், அதைக் கட்டியெழுப்பிய நம் மக்களின் இரத்தக்கறை பொதிந்த வரலாறு, சம்பள உயர்வுக்காகவும், முதலாளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் அர்ப்பணிப்பு மிக்க பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்த வரலாறுகளை அப்பெயர்கள் சுமந்துகொண்டிருக்கின்றன.
சரி, இவை ஆங்கிலப் பெயர்கள் ஆகவே தமிழ் பெயர்களாக மாற்றுகிறோம் என்கிற வாதத்துக்கு வந்தால் கூட இங்கே செந்தில் தொண்டமான் வெளியிட்டிருக்கிற “பெயர்மாற்ற” பாடசாலைகளின் வரிசையில் உள்ளவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர மிகுதி அனைத்தும் தமிழ் பெயர்களே அல்ல. அவை சமஸ்கிருதப் பெயர்களும், இந்துக் கடவுள்களின் பெயர்களுமே. முத்தமிழ், திருவளுவர், மலைமகள், செந்தூரன், ஏகலைவன் போன்ற பெயர்களும் வைக்கப்பட்டிருப்பதையும் இங்கு பதிவு செய்தாகவேண்டும். அதேவேளை தமிழ்மயப்படுத்தல் என்கிற பெயரில் இந்துத்துவமய / சமஸ்கிருதமயப்படுத்தலை இங்கு சுட்டிக்காட்டியாகவேண்டும். பாடசாலைகளுக்கு பெயர் சூட்ட தமிழ் பெயர்களுக்கா பஞ்சம். ஆனால் இந்துத்துவ - சமஸ்கிருத வரையறைக்குள் சுருக்குவதன் அரசியல் என்ன?
உதாரணத்திற்கு சில பெயர்கள்:
இந்த வகையில் சமீப காலமாக மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் சிறந்த உதாரணங்கள். அந்த வீடமைப்புத் திட்டங்களுக்கு மலையகத்தில் வாழ்ந்து மலையகத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகளின் பெயர்களே சூட்டப்பட்டன. அதன் மூலம் நம் மக்களுக்கு அந்தப் பெயர்களுக்கு ஊடாக நமது வரலாற்றை மீள பதிவு செய்யும் அற்புதமான திட்டம் அது.
ஆனால் செந்தில் தொண்டமான் “தமிழ் பெயர்கள்” என்கிற பெயரில் தமிழல்லாத பெயர்களை வைக்குமளவுக்கு துணிவதன் அர்த்தம் என்ன? இவையெல்லாம் தமிழ் பெயர்கள் தான் என்று தான் சொல்லிவிட்டால் அனைவரும் அப்படியே நம்பிவிடுவார்கள் என்கிற பாட்டன்காலத்து நம்பிக்கையா?
செந்தில் தொண்டமான தரப்பில் “அதிகமான ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஒரே ஊர் பெயரில் இலக்கம் 1,2,3 என அழைக்கப்பட்டன. இதன் காரணமாக அவற்றை அடையாளம் காண்பதிலும் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் சிரமங்கள் உள்ளன” என்று சாட்டு கூறப்படுகிறது. அப்படியானவற்றுக்கு தனியான தீர்வை காண்பதில் யாரும் குறுக்கே நிற்கப்போவதில்லை.
இந்த 60 பாடசாலைகளுக்கும் பெயர் மாற்றியதையிட்டு விழா கொண்டாடப்போவதாக அறிவித்தல்களை அவதானிக்க முடிகிறது. பெரும் எடுப்புடன் கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படவிருக்கிற இந்தக் கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டிலிருந்தெல்லாம் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. ஊவா மாகாணத்தில் கழிவறைகள் கூட இல்லாத பாடசாலைகள் இன்றும் இருப்பதை செந்தில் தொண்டமானுக்கு தெரியுமா தெரியாது? மழை வந்தால் வகுப்புகளை நடத்த முடியாத அளவுக்கு தண்ணீர் ஒழுகி நிறையும் வகுப்பறைகளைப் பற்றி இரு நாட்களுக்கு முன்னர் படங்களோடு செய்திகள் வெளிவந்தன. அந்த நமுனுகுல பிங்கராவ தமிழ் வித்தியாலயம் கூட செந்தில் தொண்டமானின் அதிகாரத்தின் கீழ் உள்ள பாடசாலை தான்.
இந்த நிகழ்வை பாராட்டி தமிழ் அமைப்புகளிடம் வாழ்த்துச் செய்திகளைப் பெற்று தரும்படி என்னிடம் கூட கோரப்பட்டது. அவர்களுக்கு இந்த விளக்கங்களை கொடுத்ததன்பின் விளங்கிக்கொண்டு பின் வாங்கினார்கள்.
ஏற்கெனவே மலையகத்தில் நாம் வணங்கிவந்த சிறுதெய்வ வழிபாடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு சேடமிழுத்துக்கொண்டிருக்கின்றன. மாடசாமி, முனியாண்டிசாமி, சுடலைமாடன், மதுரைவீரன், கருப்புசாமி, நொண்டிவீரன், இருளன், ஐயனார் என அனைத்து சாமிகளையும் விரட்டிவிட்டு அங்கெல்லாம் இந்துக் கடவுகளை கொண்டுவந்து அவற்றுக்கு பெரிய கோவில்கள் கட்டி வேறு வடிவத்துக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு இது தான் நமது அடையாளம் என்று நாமே நம்மை ஏமாற்றிவிட்டிருக்கிறோம். நாமே நமது சாமிமாருக்கு பூசாரிகளாக இருந்த காலம் போய் சமஸ்கிருதம் கற்ற பிராமண ஐயர் மாரை கொண்டுவந்து சேர்த்து தெய்வங்களிடம் இருந்து தள்ளி நின்று வரம் கேட்க தள்ளப்பட்டோம். இந்தக் கோவில்களின் வருகையின்பின் மலையகத்தில் சாதியும் அதுகூடவே சேர்ந்து தலைதூக்கிவிட்டதை எவர் மறுக்கமுடியும்.
பி.பி.தேவராஜ் இந்து கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து பிராமணர்களை இறக்குவித்து நம்மவர்களுக்கு சம்ஸ்கிருத பூசை சொல்லிகொடுத்து பிராமணமயப்படுத்துவதை, சமஸ்கிருதமயப்படுத்துவதை நம்மவர்கள் பெருமையாகவும் விடிவாகவும் பார்க்க பழக்கப்படுத்தப்பட்டார்கள். அந்த சம்ஸ்கிருதமயப்படுத்தலின் நீட்சி இன்று மீண்டும் ஐயர் மாரே கோவில்களை ஆக்கிரமித்துவிட்ட போக்கை நாம் காண்கிறோம். மலையகத்தின் பாரம்பரிய தெய்வவழிபாட்டு மரபு இதுவல்ல என்பதை நாம் மறந்தேவிட்டோம். இன்று தீட்டு, துடக்கு, சாதி, தீண்டாமை, அனைத்துமே புது வடிவத்தில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கிறது.
நமது மக்கள் மத்தியில் தனது பிடியை வைத்துக்கொள்ள இந்தியா பல வடிவங்களில் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்திய பண்பாட்டு வடிவத்திலான மறைமுக ஆக்கிரமிப்பு என்பது அதன் நவகாலனித்தவ வடிவங்களில் ஒன்று. அதற்கு சோரம்போகும் பல அரசியல் தலைவர்கள் நம்முடன் இருக்கவே செய்கிறார்கள். பி.பி.தேவராஜ், சௌமியமூர்த்தி குடும்பம் போன்றோர் இந்தியாவின் இப்படியான அரசியல் அடியாள்களாகவும், எஜெண்டுகளாகவுமே நமக்கு இருந்து வந்திருக்கிறார்கள். இதற்கு பல உபகதைகளை வரிசப்படுத்தமுடியும்.
செந்தில் தொண்டமானால் மலையக மக்கள் மத்தியில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சாதி அமைப்புகளின் உருவாக்கத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு மனோ கணேசன் போன்றோர் கண்மூடித்தனமாக ஆதரவு கொடுப்பது அவர்களின் சாதி அரசியலையும் சேர்த்து சந்தேகிக்க வைக்கிறது. இதனை நூலளவிலும் கூட அவர்கள் நியாயப்படுத்தவே முடியாது.
மலையகத்தின் அடையாள இருப்பை ஏற்கெனவே பேரினவாத அரசாங்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து நமது அரசியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி பலவீனப்படுத்திவிட்டார்கள். இப்போது எஞ்சியதையும் கூட நம் தலைவர்களை வைத்து நம் கண்களை குத்திக் குருடாக்கும் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகிக்கொண்டிருக்கிறோம்.
Uva School Names Changes by SarawananNadarasa on Scribd
+ comments + 3 comments
Nalla chenge panraaga
Super
Super
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...