முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பில் மக்களுக்கான இடம் உழைப்பாளிகளாக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. உழைக்கும் இனத்தினால் கிடைக்கும் அனுகூலங்களை முதலாளிகள அனுபவிப்பதோடு உழைக்கும் வர்க்கத்தை காலகாலமாக தக்கவைத்துக் கொள்ளும் ஏற்பாடுகளை உறுதியாக வடிவமைத்துக்கொள்வர். காரணம் தொழில் உலகின் இயக்கத்திற்கும் முதலாளித்துவத்தின் தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் மனித உழைப்புத் தேவை. அவர்களின் அன்றாட தேவைகளை முதலாளிகள் பொறுப்பு எடுத்துக்கொள்வதால் மக்கள் அவர்களில் தங்கி வாழ்வதற்கு இலகுவாக இருக்கின்றது. இலங்கைக்கு சர்வதேச அடையாளம் கொடுக்கும் மலையக பெருந்தோட்டச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிலிருந்து தொழிலுக்காக மட்டும் எம்மவர்கள் இடம்பெயரவில்லை. உணவு உடை பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவர்களுக்கு ஒரு நிறுவன கட்டமைப்புத் தேவைப்பட்டது. அதுவே மலையக பெருந்தோட்டங்கள்.
அன்று எம்மவர்களுக்கான இருப்பிடமாக லயன்களும் பிரதான உணவுப்பொருளாக கோதுமையும் வழங்கப்பட்டன. இவற்றுக்கு மேலதிகமாக ஊழியமும் இதர தேவைகளும் தோட்ட நிர்வாகத்தினராலேயே வழங்கப்பட்டது. குறிப்பாக போர்வைக் கம்பளிக்கூட தோட்ட நிர்வாகமே வழங்கி வைத்தது. இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் தமது தேவைகளை தாமே பூர்த்திச் செய்துக்கொள்ளும் வாய்ப்பை கம்பனிகளில் எம்மக்களுக்கு வழங்கவில்லை. அனைத்து தேவைகளுக்கும் அவர்களையே சார்ந்து சிறைப்பட்டிருக்கும் நிலையில் மக்களை வைத்திருந்தனர்.
இன்றைய நிலைமை என்னவென்றால் தொழிற்சங்க அரசியல் கட்டமைப்புகளும் பெருந்தோட்ட கம்பனிகளும் மலையக மக்களை தம்மில் தங்கியிருப்பதற்கான அனைத்து சட்டரீதியான அனுமதிகளையும் கொண்டிருக்கின்றனர். வடகிழக்கு தமிழர்களின் நிலையையும் இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அண்மையில் மத்திய வங்கியின் பொருளாதாரப் புள்ளி விபரங்களை எடுத்து நோக்கினால் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வறுமை நிலை உயர்வாகக் காணப்படுகின்றன.
மாகாண அடிப்படையில் எடுத்து நோக்கும் இடத்து வடமாகாணத்தில் 7.7% சதவீதமாகவும் கிழக்கில் 7.3% சதவீதமாகவும் வறுமை தொடர்கின்றது. மலையக மக்கள் அடர்த்தியாக வாழும் மத்திய மாகாணத்தில் 5.4ம% வீதமாகவும் ஊவா மாகாணத்தில் 6.5% வீதமாகவும் சப்ரகமுவ மாகாணத்தில் 6.7% வீதமாகவும் உயர்ந்துக் காணப்படுகின்றது. மேல் (1.7%) தென் (3.1%) மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இது மிக உயர்வான வறுமை நிலையாகும்.
இலங்கையைப் பொருத்தவரையில் பெருந்தோட்ட கைத்தொழிலே மிகப் பாரிய தொழில் துறையாகவும் தொழிலாளர் படையைக் கொண்டதுமாகும். பெருந்தோட்ட கைத்தொழிலுக்கு என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கூடாக இத்தொழிற்துறை அபிவிருத்திச் செய்யப்படுகின்றது. பிரதான ஏற்றுமதி உற்பத்தியாக தேயிலை காணப்படுகி;றது. எனினும் அது சார்ந்து இயங்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான தேசிய பாராபட்சம் காட்டப்படுவது மேற்குறித்த புள்ளிவிபரங்களில் வெளிப்படையாக புரிந்துக்கொள்ள முடிகிறது.
அடிப்படைத் தேவைகளுக்காக தோட்ட கம்பனிகளும் பொதுத்தேவைகளுக்காக தொழிற்சங்க அரசியல் முதலாளிகளிடமும் இருபத்தோறாம் நூற்றாண்டிலும் மலையக சமூகம் கையேந்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது திட்டமிட்ட சிறைப்படுத்தல் நுட்பமாகும். நேரடியாக அரச நன்மைகளை எம்மவர்கள் அனுபவிக்க முடியாமல் அதனை தொழிற்சங்க அரசியல் முகவர்களுக்கு ஊடாக வழங்கி வைப்பதன் மூலம் முதலாளித்துவ கட்டமைப்பை இறுக்கமாக்கும் ஏற்பாடுகள் அன்றாடம் இடம்பெறுகின்றன.
தமது தேவைகளுக்காக அரசியல்வாதிகளை நம்பி பாமரன் முதல் பட்டதாரி வரை வரிசையில் காத்திருக்கின்றார். அவ்வாறான நிர்ப்பந்தத்தை முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கின்றது. பெருந்தோட்ட மக்களின் ஊதிய பிரச்சினை இதன் தீவிரத்தை புரிந்துக்கொள்ள சரியான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. எவ்வாறு உழைக்கும் வர்க்கமும் இளைஞர்களும் கையாளப்பட்டார்கள் என்பதும் போராட்டங்கள் விலைப்பேசி வாங்கப்பட்டன என்பதும் இங்கு கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியது.
மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை நேற்று இன்று உருவானது அல்ல. ஒரே பிரச்சினையை காலங்காலமாக அரசியல்வாதிகள் தீர்த்து வைத்திருக்கின்றனர். அதற்கேற்றவாறு பிரச்சினைகளின் ஆயுட்காலமும் அமைந்திருப்பது அவர்களுக்கு மிக வாய்ப்பான ஒன்றே. மக்களும் அதற்கு இசைவாக்கமடைந்து வருவதையும் இங்கு அடையாளப்படுத்த வேண்டும். உதாரணமாக தோட்டப்பகுதிகளில் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரே பாதையை மீண்டும் மீண்டும் செப்பனிடும் அரசியல் நுட்பத்தை நாம் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். நிரந்தரமான முடிவை மக்களுக்கு பெற்றுத்தந்து விட்டால் அரசியல்வாதிகளின் தேவை அற்றுப்போய்விடும் என்பதால் குறுகிய கால சலுகைகளும் பிரச்சினை தீர்த்துவைக்கப்படாத நுட்பமும் அவர்களுக்கு சாதகமான தன்மையை தோற்றுவிக்கின்றன. மாற்று அரசியல் என்று முன்வருவோர் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக சுயநலமாக சில தீர்மானங்களை மேற்கொள்வதும் தம்மை மீட்பர்களாக காட்டிக்கொள்வதும் மலையகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. சாதாரண மக்கள் மட்டுமின்றி மலையக பட்டதாரிகளும் இலகுவில் ஏமாற்றப்படுகின்றமை விசித்திரமானது.
இம்முறை சம்பளப் பிரச்சினையை சமூக மயப்படுத்துவதில் சிவில் சமூகமும் இளைஞர்களும் அதிகளவில் பங்களிப்புச் செய்திருந்தனர். எனினும் பிரச்சினையை அணுகுவதிலும் அதனை அடுத்த தளத்திற்கு நிலைமாற்றுவதும் சற்று சவாலான விடயமாகவே இருந்தது. சில தனிநபர்களும் குழுக்களும் தாம் யாருக்கு எதிராக போராடுகின்றோம் என்ற புரிதல் இன்றி வெறுமனே கூவினர் என்பதே உண்மை.
பிரச்சினையின் வேரறியாமல் அதனை முழுமையாகக் களைவது சாத்தியம் இல்லை. உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராடுவதைக் காட்டிலும் சரியான தெளிவுடனும் அறிவார்ந்து அணுகுவது அவசியம். அரசியல்வாதிகளை கொண்டாடுவதும் சில சமயங்களில் திட்டித்தீர்ப்பதும் மறுபடியும் கொண்டாடுவதும் உழைக்கும் மக்களின் குணம். எனவே படித்தவனும் பாமரனும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அதனையே அறிவார்ந்த நுட்பம் எனக்கூறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கொடும்பாவிகள் எறியூட்டப்பட்ட பல அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் ஆளுயர கொழுந்து மாலைகள் காத்திருப்பது காலக்கொடுமை.
09.01.2019 சூரியகாந்தியில் பிரசுரமானது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...