(இக்கட்டுரையை வாசிப்பவர்கள் கட்டுரையின் இறுதியில் உள்ள அடிக்குறிப்புகளையும் கவனிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.)சேர் பொன் இராமநாதன் தனது இறுதிக் காலத்தில் சைவ சமயப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். தனது பெயரையும் “ஸ்ரீ பரானந்தா” என்று பயன்படுத்தத் தொடங்கினார். தியானம், சமயப் பரப்புரை, சைவக்கோவில்களை அமைத்தல், சீர்திருத்துதல் என்பவற்றை செய்தபோதும் அவரின் ஆய்வுகள், தேடல்கள், எழுத்து என்பவற்றை அவர் நிறுத்தவில்லை. ஸ்ரீ பரமானந்த யோகி என்கிற பெயரில் அவர் யோகாசனம், தியானம் என்பவற்றையெல்லாம் கற்பித்திருக்கிறார். அப்படி அவரிடம் யோகாசனம் கற்ற ஒருவர் தான் அல்லன் பென்னெத் (Allan Bennett). (1)
1898 இல் அவர் “இயேசுவின் நற்செய்தியின் புனித மத்தேயு அதிகாரம் குறித்த ஒரு கிழக்கத்தேய பார்வை” (he Gospel of Jesus according to St. Matthew) என்கிற தலைப்பில் 342 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலையும், 1902இல் “இயேசுவின் நற்செய்தியின் புனித ஜோன் அதிகாரம் குறித்த ஒரு கிழக்கத்தேய பார்வை” (An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John) என்கிற தலைப்பில் 332 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். இந்த இரு நூல்களும் பைபிள் பற்றி ஆசிய நாடொன்றில் வெளிவந்த முதலாவது விரிவான விளக்கம் எனலாம்.(2) இவற்றைத் தவிர வேதாகமத்தின் மேலும் சில விடயங்களைப் பற்றி அவர் அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பித்திருக்கிறார்.(3) மேலும் சில அச்சுக்கு எற்பாடாகிக்கொண்டிருக்கிற போதும் அவையும் வெளிவரவில்லை.(4) இந்த இரு நூல்களைப் பற்றியும் அமெரிக்க பயணத்தின் போது பல்கலைக்கழக அறிஞர்கள் எந்தளவு கொண்டாடினார்கள் என்பது பற்றி எம்.வைத்திலிங்கம் தொகுத்த சேர் பொன் இராமநாதனின் வாழ்க்கை வரலாற்று நூலில் அடங்கியுள்ளது.
கிறிஸ்தவ சமயம் பற்றிய இந்த இரண்டு ஆங்கில நூல்களையும் அவரின் சொந்தப் பெயரில் வெளியிடவில்லை. “ஸ்ரீ பரானந்தா” (Sri Parananda) என்கிற பெயரிலேயே வெளியிட்டார். லண்டனைச் சேர்ந்த KEGAN PAUL, TRENCH, TRUBNER & CO. Ltd. என்கிற பதிப்பகம் தான் வெளியிட்டிருக்கிறது. இந்த நூல் தமிழில் வெளியாகவில்லை. இந்த இரு நூல்களும் எச்.எல்.ஹரிசன் அம்மையாரால் (R. L. Harrison) தொகுக்கப்பட்டுள்ளன.(5)
“கடவுள் பற்றிய அனுபவத்தின் வெளிச்சத்திலிருந்து ஸ்ரீ பரானந்தா” என்று மத்தேயு பற்றிய அந்த நூலின் முகப்பில் எழுதப்பட்டிருக்கிறது. பரானந்தா என்கிற பெயரை நூல்களுக்கான புனைபெயராக பாவித்ததோடு நின்றிருக்கிறார். அவரை எவரும் பரானந்த யோகியாக அறிந்திருக்கவில்லை. ஏன்? அதுவும் அவர் கிறிஸ்தவ திறனாய்வுக்கு மட்டும் அப்பெயரை ஏன் பயன்படுத்தினார்? 1914இல் இந்து மதம் சார்ந்த “பகவத் கீதை”யை மொழிபெயர்த்து வெளியிட்ட போது கூட சொந்தப் பெயரை அல்லவா பயன்படுத்தினார்? இந்த முடிச்சுகள் அவிழ்க்கப்படவேண்டியவை.
இராமநாதனின் கடிதம்
இந்த இரு நூல்களின் டிஜிட்டல் வடிவத்தை சமீபத்தில் தேடி எடுத்தேன். அந்த நூல் இராமநாதன் வசம் இருந்த நூல் என்று அறிய முடிகிறது. அந்த நூலின் உள் பக்கத்தில் அவரின் கைப்பட ஒரு கடிதத்தை Mr.Bridge என்பவருக்கு எழுதி கொடுத்திருக்கிறார். 02.09.1906 திகதியிடப்பட்டு Cornell பல்கலைக்கழக நூலகரை விளித்து எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்; அனுப்பட்டுள்ள அந்தப் பொதியில் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுக்காக தனது மூன்று ஆய்வுகளை அனுப்பப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். தான் நியூ யோர்க்கிலிருந்து லண்டனுக்கு 6ஆம் திகதி புறப்படுவதாகவும் லண்டன் விலாசமொன்றையும் குறிப்பிட்டு அந்த விலாசத்துக்கு அனுப்படும் கடிதங்கள் தன்னைச் சேரும் என்றும் விடைபெறுகிறார்.
கடிதத்தின் கீழ் “பிற்குறிப்பு” (P.S) இட்டு “My full name is Ponnambalam Ramanathan” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இந்த நூலை தன்னை அறியாத புது நபர் ஒருவருக்கு அனுப்பியிருக்கிறார் என்று கருத முடிகிறது. அதன் காரணமாகத் தான் அந்த நூலின் முகப்பில் Sri Parananda என்று அச்சிட்டிருப்பதற்குக் கீழ் அவர் தனது கையெழுத்தில் “P.Ramanathan” என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதையும் காண முடிகிறது.
பின்னர் இது பற்றிய இன்னொரு குறிப்பை எம்.வைத்திலிங்கத்தின் நூலில் சில குறிப்புகள் காணமுடிந்தது. அமெரிக்க பயணத்தின் போது வோஷிங்டனில் உள்ள அமெரிக்க காங்கிரஸின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகவும் அங்கு இருந்த நூலகத்தில் இராமநாதனின் எழுதிய சட்ட நூல் தொகுப்புகளை காணக் கிடைத்ததாகவும், அங்கிருந்த நூலகர் “உங்கள் ஏனைய நூல்களின் பிரதிகள் சிலவற்றையும் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம்” என்று கூறியதாகவும், அதற்கு பதிலளித்த இராமநாதன் இலங்கைக்கு திரும்பியதும் தான் நிச்சயம் அனுப்பிவைப்பதாக அவருக்கு வாக்குறுதி அளித்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆனால் இந்தக் கட்டுரைக்காக மேற்படி இராமநாதனின் கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிற நூலில் Cornell பல்கலைக்கழகத்திற்கே இந்த நூல்கள் அனுப்பப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. சில வேளைகளில் அவர் காங்கிரசுக்கும் அது போலவே தனியாக அனுப்பியிருக்கக் கூடும்.
1906 இல் சேர் பொன் இராமநாதன் - அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் அவரின் எதிர்கால மனைவி ஹரிசன் அம்மையார். |
பரானந்த இரகசியம்
இந்த இரு நூல்களின் உள்ளடக்கமும் தமிழில் ஆராய வேண்டிய நூல்கள் ஏனென்றால் அவர் இந்த பெரிய ஆய்வில் வெறும் வேதாமகத்தை மட்டும் ஆய்வு செய்யவில்லை. அவர் தான் கற்ற சைவ சித்தாந்த வழிமுறைகளுக்கு ஊடாகவும் பகுத்தாய்ந்திருப்பதை கவனிக்க முடிகிறது. இராமநாதனின் தமிழ் - சைவ -வேளாளத்தனத்தை ஆராய முற்படுபவர்கள் இந்த நூல்களை தவிர்த்து விட்டு ஆராய்வதில் பலனில்லை என்றே படுகிறது.
கிறிஸ்தவ விடயங்களை அவர் எழுதியதற்கு; அவரை அரசியலுக்குக் கொண்டுவந்த நாவலர் முன்னோடியாக இருந்திருக்கவேண்டும். பைபிளை தமிழுக்கு மொழிபெயர்த்ததில் நாவலரின் வகிபாகம் பற்றி நாமறிந்ததே.
மேற்படி “புனித ஜோன்” பற்றிய நூலில் ஓரிடத்தில் இராமநாதன் 1895இல் எழுதிய “Mystery of Godliness” என்கிற ஒரு வெளியீட்டைப் பற்றியும் குறிப்பிடப்படுகிறது.(6) இந்த நூலின் விற்பனை முகவர்களின் விலாசங்களாக நூலின் இறுதிப் பக்கத்தில் அமெரிக்க, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய நாட்டு நிறுவனங்களின் முகவரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நூலுக்கான முன்னுரையைக் கூட ஸ்ரீ பரானந்தா என்கிற இராமநாதனால் எழுதப்படவில்லை. மாறாக அதனைத் தொகுத்த அவரின் துணைவி ஹரிசன் அம்மையாரால் தான் எழுதப்பட்டிருக்கிறது. அந்த முன்னுரையின் கீழ் திகதி “பெரிய வெள்ளி – 1902” (Good Friday, 1902) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முன்னுரை ஐந்து பக்கங்களில் காணப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் 4 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள மேற்சொன்ன புனித மத்தேயு பற்றிய நூலின் முன்னுரையை ஹரிசன் அம்மையார் ஒரே பக்கத்தில் 6 வரிகளைக் கொண்ட பந்தியில் சிறியதாக முடித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத் தக்கது.
ஏன் ஸ்ரீ பரானந்தா என்கிற இராமநாதனால் இந்த இரு நூல்களுக்கும் முன்னுரை எழுதப்படவில்லை என்பது ஆச்சரியமாகவும் பரகசியமாகவும் உள்ளது. முன் அட்டையைத் தவிர உள்ளே வேறெங்கும் அவரது பெயர் இல்லை.
இராமநாதனால் எழுதப்பட்ட, தொகுக்கப்பட்ட பல நூல்கள் உள்ளன. அவை ஆங்கில வாசகர்களுக்கே அதிகம் எழுதப்பட்டவை. ஆனால் அவை அனைத்தும் அவரால் தான் எழுதப்பட்டனவா என்பது குறித்து புலமைத்துவ மட்டத்தில் இன்றும் சில சந்தேகங்கள் நிலவவே செய்கின்றன.
இரு வருடங்களுக்கு முன்னர் ஒஸ்லோவில் நிகழ்ந்த ஒரு நூல் வெளியீடு நடந்தது. அங்கு பலரும் அறிந்த வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான இரகுபதி எனது கருத்தொன்றுக்கு பதிலளிக்கையில் சேர் பொன் இராமநாதன் எழுதியதாக அறியப்பட்ட சில நூல்கள் அவரால் எழுதப்பட்டவை அல்ல என்கிற ஒரு தகவலைக் கூறிக் கடந்து சென்றதையும் இங்கு நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது. அந்தத்தகவல் உண்மையாக இருக்கக்கூடும் என்று பல முறை நான் எண்ணியதுண்டு.
இராமநாதன் இந்த பரானந்தா என்கிற பெயரை எங்கிருந்து பெற்றார் என்று ஆராய்கிற போது அவருக்கு ஆன்மீக ஆசானாக இருந்தவர் ஸ்ரீலஸ்ரீ அருள் பரானந்த தேசிகர் (அருள்பரானந்த சுவாமிகள் என்கிற பெயரிலும் இவரை அழைப்பார்கள்) என்பதை அறிய முடிகிறது. இராமநாதன் மட்டுமல்ல அவரின் சகோதரர் அருணாச்சலமும் கூட அருள்பரானந்த தேசிகரிடம் சமயம், தத்துவம், தியானம், யோகாசனம் என்பவற்றைக் கற்று தேர்ந்திருக்கின்றனர். சேர் பொன் இராமநாதனின் மானசீக குருவான அருள்பரானந்த சுவாமிகள் தஞ்சாவூரைச் சேர்ந்த பிராமணர். அருள்பரானந்தரை சந்தித்ததன் பின்னர் தான் இராமநாதன் தனது அரசியல், சமூக போக்கு என்பவற்றிலிருந்து சைவ சித்தாந்தத்திலும், ஆன்மீகக் காரியங்களிலும் ஆழ்ந்த அக்கறை செலுத்தத் தொடங்கினார்.(7) இராமநாதன் சகோதர்கள் இருவருக்குமே பரானந்த தேசிகர் தான் ஆன்மீக குருவாக இருந்தவர்கள். (8)
1930 ஆம் ஆண்டு ச.பொன்னம்பலபிள்ளை “ஸ்ரீ ராமநாத மான்மியம்” என்கிற பெயரில் இராமநாதனின் வரலாற்றை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா வடிவில் எழுதியிருக்கிறார். இராமநாதன் மரணித்த அதே 1930ஆம் ஆண்டு குறுகிய காலத்தில் அது எழுதி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நூலில் தான் அருள் பரானந்த தேசிகரின் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் அந்த நூலில் 331வது பாடலில்
“வாய்ந்தபரா னந்தசாமித் தேசிகனைத் தன்னகமேன் மன்ன வைத்தே, யாய்ந்த பதி சாத்திரத்தி னுண்மைகளை யுள்ளவண்ண மகத்திற் பின்னுந், தோய்ந்தபல பொருளையநு வதித்தரிதிற் கேட்டறிந்துந் தொல்லை ஞாலத், தேய்ந்த பரந் தேர்ராம நா தமகா ஞானியென்றே யிலங்கு மையன்,
ஆனபரா னந்த குருத் தந்தவுப தேசமுளத் தமைய விந்த, மான வுல கதுமாய மெனவுதிக்கு முணர்வுலகை மறைக்க வைய, னீனவுட லேனுமிதன் பயனிதுவென் றதுதுணைய யிருந்து கித்த, ஞானகிலை நின்றுபரா னந்தவமு துண்ணமன நயந்து”அதாவது “ஆன பரானந்த குருத் தந்த உபதேசம் உளத்து அமைய விந்த...” என்று கடக்கிறது. அருள் பரானந்த தேசிகரின் வகிபாகம் குறித்து ச.பொன்னம்பலபிள்ளையும் பதிவு செய்ய மறக்கவில்லை.
”
அதே அருள் பரானந்த தேசிகரின் பேரன் சுப்பையா நடேசனைத் தான் இராமநாதனின் மகள் சிவகாமிசுந்தரி மணமுடித்தார்.
இராமநாதன் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் டொக்டர் போக்கின் (Dr. Boake) வழிகாட்டலில் கற்றவர். பின்னர் முன்பட்டப்படிப்பை சென்னையில் கலாநிதி தொம்சன் (Dr. Thompson), சீ.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தலில் கற்றவர். சட்டக் கல்வியை சேர் ரிச்சர்ட் மோர்கனின் (Sir Richard Morgan) வழிகாட்டலில் கற்றவர். அரசியல் அரிச்சுவடியை தனது மாமனார் சேர் முத்து குமாரசுவாமியின் மூலம் கற்றார். அதுபோல ஆன்மீக விவகாரங்கள் அனைத்தையும் அருள்பரானந்த சுவாமிகள் மூலம் கற்றுக்கொண்டார். (9)
பகவத் கீதை; சேர் பொன் இராமநாதன் ("பொ.ராமநாத துரை" என்றிருக்கிறது) சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்து 1914இல் யாழ்-நாவலர் அச்சுக் கூடத்தில் வெளியான அரிதான பெரிய நூல். இதற்கு அணிந்துரை எழுதியுள்ள ஸ்ரீமத் மு.ஸர்வேஸ்வர ஸர்மா சமஸ்கிருதத்திலேயே எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது. ஒரு புறம் முஸ்லிம்களுடன் அவர் முரண்பட்டிருந்தார். மறுபுறம் சைவப் பணிகளை முன்னெடுத்தார். சைவப் பள்ளிக்கூடங்களையும், கோவில்களையும் கட்டினார். சமஸ்கிருதத்தைப் போற்றினார். சைவ சமய எழுத்துக்களில் ஈடுபட்ட அதே வேளை இப்படி கிறிஸ்தவ ஆய்வுகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
யாழ் - சைவ-வேளாள - படித்த – மேல் வர்க்க – ஆணாதிக்க அரசியல் தான் அவரின் இயங்குதளமாக இருந்தவற்றுக்குப் பின்னுள்ள வைதீக பின்புலத்தை அறிந்துகொள்ளவேண்டுமென்றால் நாம் ஸ்ரீ பரானந்த யோகியையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
அடிக்குறிப்புகள்:
- இங்கிலாந்தைச் சேர்ந்த அல்லன் பெல்லெத் (Charles Henry Allan Bennett - 1872-1923) 1900 ஆம் ஆண்டு ஆஸ்துமா நோயை குணப்படுத்துவதற்காக கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். முதலில் அவர் இலங்கையை வந்தடைந்ததும் பௌத்த மதத்தால் கவரப்பட்டார். சிறிது காலம் சேர் பொன்னம்பலம் இராமநாதனிடம் பணிபுரிந்திருக்கிறார். அவரிடமே யோகாசனம், தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். அல்லன் கற்றதை பின்னர் இங்கிலாந்திலிருந்து வந்த அவரது நண்பர் அலீஸ்டருக்கு (Aleister Crowley)
- Jesus in Asia By R. S. Sugirtharajah – Havard University press – 2018 – P-68
- The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905), The Culture of the Soul among Western Nations (1906)
- The Exposition of the Psalms of David (I-XXX) According to Jnana Yoga; Lectures on the Sermon on the Mount; and Lectures on the Doctrine of the Resurrection of the Dead, Being a Commentary on the XVth Chapter of the First Epistle of Paul to the Corinthians.
- அவுஸ்திரேலியாவிலிருந்து ஆன்மீகத் தேடலுக்காக இலங்கை வந்தவர் ஹரிசன். பின்னர் இராமநாதனின் அந்தரங்கச் செயலாளராக ஆனார். சேர் பொன் இராமநாதனின் துணைவியார் இறந்ததன் பின்னர் ஹரிசன் அம்மையாரை சேர் பொன் இராமநாதன் மணமுடித்தார். அவரின் பெயரைக் கூட லீலாவதி என்று மாற்றிக்கொண்டார். சேர் பொன் இராமநாதனால் உருவாக்கப்பட்ட சைவ மங்கையர் சபைக்கு தலைவியாக இருந்து பொதுப் பணிகளை மேற்கொண்டவர் லீலாவதி அம்மையார். இந்த நூல்களை எழுதுவதில் அவரின் வகிபாகத்தின் காரணமாக அவருக்கு இலங்கைப் பல்கலைகழகம் சட்டக் கலாநிதி பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது.
- “An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John” – by Sri Parananda (Author), R. L. Harrison (Editor) - Kegan Paul, Trench, Trubner & CO. Ltd - 1902 - p70
- Jesus in Asia By R. S. Sugirtharajah – Havard University press – 2018 – P-67,68
- The life of Sir Ponnambalam Ramanathan, Volume 1, M. Vythilingam, Ramanathan Commemoration Society, 1971
- Ibid
நன்றி : காக்கைச் சிறகினிலே - யூன் 2019
+ comments + 2 comments
Interesting information. Thank you for sharing this.
சேர் பொன். ராமநாதன் அவர்களின் அறிவாற்றல் வல்லமை காரணமாகவே ஆங்கிலேயே புத்திஜீவிகள் மத்தியில் மிகுந்த மதிப்பு காணப்பட்டது . அதை பயன்படுத்தி இந்து மதத் தத்துவங்களை நோக்கி ஆங்கிலேயர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனால் அவர்மீதான எல்லா நம்பிக்கைகளையும் அவர் சர்வசன வாக்குரிமையை எடுத்ததன் மூலம் இழந்துவிட்டார்....
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...