Headlines News :
முகப்பு » » பெருந்தோட்ட சேவைக்கு கற்றவர்களின் உள்வருகை அவசியம் - அருள்கார்க்கி

பெருந்தோட்ட சேவைக்கு கற்றவர்களின் உள்வருகை அவசியம் - அருள்கார்க்கி


பெருந்தோட்ட வரலாற்றில் தொழிலாளர்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட நம்மவர்கள் கல்வியிலும், தொழில் தேர்ச்சியிலும் உயர்ந்து இன்று நாட்டின் அனைத்து தொழில் துறைகளிலும் தமது பங்களிப்பை வழங்குகின்றனர். அரச, தனியார் துறைகளில் மட்டுமின்றி கட்டமைக்கப்படாத தொழில் துறைகள் அனைத்திலும் மலையகத்தை அடிப்படையாகக் கொண்டவர்களின் பங்களிப்புக் காணப்படுகின்றது. கூலிகளாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட எம்மவர்கள் இன்று கல்வியிலும் குறிப்பிடத்தக்க இலக்குகளை அடைந்து உள்ளனர். இவை ஒருப்புறம் இருக்க மலையக நகரங்களும், நாட்டின் முக்கிய வர்த்தக கேந்திரங்களும் தினக்கூலிகளாக எம்மவர்களின் உழைப்பை தினம் தினம் அனுபவிக்கின்றன. ஒழுங்கமைக்கப்படாத வர்த்தக நிலையங்களிலும் சுயாதீன சேவை வழங்குனர்களாகவும் மலையக இளைஞர், யுவதிகள் காணப்படுகின்றனர். கொழும்பு நகரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டால் மலையக இளைஞர்களால் தான் வர்த்தக செயற்பாடுகள் தங்கியிருக்கின்றன. 

இவ்வாறு உதிரிகளாக ஆங்காங்கே உழைக்கும் எம்மவர்களின் எதிர்காலம் சரியாக திட்டமிடப்படாமல் சிதைவடைகின்றது. ஓய்வூதியமோ அல்லது வேறெந்த உரிமைகளோ சலுகைகளோ இன்றி இவர்கள் முதலாளிமார்களுக்கு உழைத்துக் கொடுக்கின்றனர். நகர்ப்புற வர்த்தக நிலையங்களில் வேலை செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு எதுவித தொழில் உத்தரவாதமும் இல்லை. எனவே இவர்கள் நிலையில்லாத முறையில் சில மாதங்களில் புதிய இடங்களை நாடிச் செல்கின்றனர். 

இருப்பிடத்துக்கும், உணவுக்கும் அதிக பணத்தை செலவழிப்பது, கேளிக்கைகளுக்காக வீண்விரயம் செய்வது, சேமிப்பு இன்றி பணத்தை விரயமாக்குவது போன்ற வழிமுறைகளால் இவர்களின் இருப்பு தொடர்கின்றது. பாடசாலையிலிருந்து இடைவிலகியர்களும்,  சாதாரண தரம்இ உயர்தரம் சித்தியடைந்தவர்களும் இவ்வாறு இடர்பாடுகளை அனுபவிக்கின்றனர். கல்வி தகைமைக்கேற்ற தொழில் இன்மை, தொழில் தேர்ச்சிக்கு ஏற்ற ஊதிய உயர்வுகள் வழங்கப்படாமை, காப்புறுதி முதலிய சலுகைகள் இன்மை, மற்றும் உழைப்புச் சுரண்டல் ஆகிய விடங்களை இவர்கள் அறிந்திருந்தாலும், அதற்கான தீர்வுகள் இன்று தலைமுறை தலைமுறையாக ஊதியம் செய்கின்றமை கவனிக்கத்தக்கது. 

கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களில் சிலர் தொழில் புரிந்தாலும் அவர்கள் சொற்ப அளவானவர்களே என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.  பெருந்தோட்ட தொழில்துறை எனப்படுவது நிறுவனமயப்பட்டது. கட்டமைப்பு ரீதியான நிர்வாகத்தைக் கொண்டது. எம்மவர்கள்; வெறுமனே தொழிலாளர்களாக மட்டுமன்றி சேவையாளர்களாகவும் இத்தொழில்துறையில் உள்ள வெற்றிடங்களை நிர்ப்ப வேண்டும். ஆரம்பக் காலங்களில் பெருந்தோட்ட சேவையாளர்களாக பெரும்பான்மை இனத்தவர்களே காணப்பட்டனர். இன்றளவும் கூட அவர்களின் ஆதிக்கம் மலையக தோட்டங்களில் காணப்படுகின்றது. 

சாரதி, வெளிக்கள உத்தியோகத்தர், அலுவலக பணியாளர்கள், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள், பொறுப்பாளர்கள், குடும்பநல உத்தியோகத்தர்;, ஆரம்ப வைத்திய அதிகாரி (நுஆயு) சிறுவர் நிலைய பொறுப்பாளர்கள் மற்றும் இதர சேவைகளுக்கென இன்றும் பெரும்பாலான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. படித்த இளைஞர், யுகதிகள் மத்தியில் காணப்படும் புறக்கணிப்பும், பற்றின்மையும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. எனவே தொழில் நிமித்தம் பெரும்பான்மை இனத்தவர்கள் பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கின்றனர். 

தொழில் நிமித்தம் தோட்டங்களில் தமது குடியிருப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இவர்கள் பின்னர் தம்மை நிலம் சார்ந்து ஸ்தீரப்படுத்திக் கொள்கின்றனர். அதிகமான காலம் இவர்கள் தமது தொழிலை தொடர்வதற்கு நிர்வாகங்களின் உதவியும் கிடைக்கின்றது. அதேப்போல் தோட்டங்களில் உள்ள வளங்களை இவர்கள் சுரண்டி தமது தனிப்பட்ட தேவைகளை பூர்த்திச் செய்துக்கொள்கின்றனர். சேவைக்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்படும் விடுதிகளை நிர்வாகிகளின் உதவியுடன் தமக்கு சொந்தாக்கிக் கொள்கின்றனர். 

விவசாயம் செய்தல், கால்நடைகளை வளர்த்தல், வியாபார நடவடிக்கைகள் என்று இவர்கள் தம்மை தோட்டங்களில் இன்றியமையாத சக்திகளாக நிலைநிறுத்திக் கொள்கின்றனர். இவ்வாறான காரணிகளால் எம் நிலம் அன்னியமாக்கப்படுவதுடன் இனச்செறிவும் சிதறடிக்கப்படுகின்றது. படித்த எம்மவர்கள் இவ்வாறான சமூக சிக்கல்களை இனம்காண வேண்டும். தோட்டங்கள் எனப்படுவது வெறுமனே தொழில் களமாக அன்றி இனத்தின் இருப்புக்கான நிலமாக பார்க்கப்பட வேண்டும். அனைத்து மட்டத்திலும் எமது இருப்பு உறுதிச்செய்யப்பட வேண்டும். 

பெருந்தோட்ட சேவையாளர்களாக படித்த இளைஞர், யுவதிகள் இணைந்துக்கொள்ள வேண்டும். தோட்டங்களில் உள்ள சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை எம்மவர்களே அனுபவிக்க வேண்டும். கௌரவக்குறைவாக பெருந்தோட்டத்துறையை நோக்குவதும், உதாசீனப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக மலையக தோட்டங்களில் மலிவாகக்கிடைக்கும் நிலம், நீர், பசளைகள், விறகு போன்றவற்றை பயன்படுத்தி பொருளாதார நகர்வுகளை மேற்கொள்ளலாம். கல்வியை மாற்று முயற்சிகளுக்கும் சமூக அபிவிருத்திக்கும் பிரயோசனமாக கையாளலாம். 

அதேப்போல் பெருந்தோட்ட சேவையாளர்களாக எம்மவர்களே இருக்கும் சந்தர்ப்பத்தில் நிலத்துடன் கூடிய பிணைப்பு ஸ்தீரமாவதுடன் சனச்செறிவும் சிதைவடையாமல் காணப்படும். இதன் மூலம் அரசியல் ரீதியாக முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக மலையக மக்களை அடையாளப்படுத்தலாம். எம்மவர்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயரும் சந்தர்ப்பங்களால் இன விகிதாசாரமும், வரப்பிரசாதங்களும் கேள்விக்கு உள்ளாகின்றமையை நாம் உணர வேண்டும். 

சாதாரண தரம் கூட சித்தியடையாத பெரும்பான்மை இன சேவையாளர்கள் இன்று அனேகர் பெருந்தோட்ட காரியாலயங்களில் கடமை புரிகின்றனர். எம்மக்களின் தேவைகளை உணராமல் நிர்வாகங்களின் விசுவாசிகளாக மக்களை சுரண்டும் பணியை கச்சிதமாக செய்கின்றனர். எனவே படித்த எம்மவர்கள் இவ்வாறான இடங்களில் அமரும் போது அது எம்மக்களுக்கான வரப்பிரசாதமாக அமையும். சிவில் சமூகமும்இ தொழிற்சங்கங்களும் இவ்வாறான விடயங்களை பேசுப்பொருளாக்க வேண்டும். இலங்கையின் இனவாத அரசியலுக்கு ஈடுக்கொடுக்கக்கூடிய தந்திரமான நகர்வுகளை கையாள்வதும் கட்டாயமானதாகும். 

நகர்ப்புறங்களை நாடிச்சென்று உழைத்து மீண்டும் அதே நிலையில் திரும்பி வருவதும் நாடோடிகளாக நகர்ப்புறங்களில் வாடகை வீடுகளில் குடியிருப்பதற்கு சொந்த நிலத்தில்  இருப்பை உறுதிப்படுத்துவது சிறந்தது அல்லவா? எனவே கற்ற மலையக சமூகமாக நாம் முன்செல்ல வேண்டுமாயின் அனைத்து மட்டத்திலும் நிலத்துடன் சார்ந்து எமது இருப்பை ஸ்தீரப்படுத்திக்கொள்ள வேண்டும். நிலமும் மொழியுமே எமது அடிப்படைகள். 

நன்றி - சூரியகாந்தி 26.12.2018
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates