Headlines News :
முகப்பு » , , , , , » கெப்டன் ரிபைரோ : போர்த்துக்கேய - யாழ்ப்பாண வீழ்ச்சியின் சாட்சியம் - என்.சரவணன்

கெப்டன் ரிபைரோ : போர்த்துக்கேய - யாழ்ப்பாண வீழ்ச்சியின் சாட்சியம் - என்.சரவணன்


இலங்கை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச்சென்ற காலனித்துவகால மேற்கத்தேயவர்களில் ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டேவி, ஜோன் டொயிலி, சோவர்ஸ்,ஹுக் நெவில், டர்னர், கல்வின், ரிவர்ஸ், லொவி, ஹர்ஷோத், பால்தேயு போன்றவர்கள் வரிசையில் கெப்டன் ஜொவாவோ ரிபைரோவுக்கும் (Captain Joao Ribeiro 1622-1693) முக்கிய இடம் உண்டு. மேற்குறிப்பிட்டவர்களில் ரிபைரோ மிகவும் முதன்மையான, பழமையானவரும் கூட. இலங்கையின் வரலாற்றுப் பாட நூல்களிலும் “வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்” என்கிற பட்டியலில் இடம்பெற்றிருப்பவர். இலங்கையில் இரண்டாம் இராஜசிங்கனின் காலகட்ட போர்க்காலத்தில் போர்த்துக்கேய கப்டனாக இருந்தவர். இராணுவச் சேவையில் நாற்பது ஆண்டுகாலம் பணிபுரிந்த ரிபைரோ இலங்கையில் 1640-1658 வரையான 18 ஆண்டுகாலம் அதாவது 1658இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்வரை இருந்தார்.

தனது இறுதிக் காலத்தில் அவர் தனது நாற்பது ஆண்டுகால அனுபவத்தின் பின்னர் 1685 இல் “இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல்” (Fatalidade Histórica da Ilha de Ceilão) என்கிற தலைப்பில் போர்த்துகீச மொழியில் எழுதினார். 

இந்த நூலை அவர் அன்றைய போர்த்துகல் அரசர் இரண்டாம் டொம் பெற்றோவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.  

இலங்கையின் வரலாற்றை கற்பவர்களின் மூல நூல்களின் வரிசையில் உள்ளது இந்த நூல். மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த நூலில் வரைபடங்களை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். கண்டி நகரம், கொழும்பு துறைமுகம், இலங்கையின் முழுமையான வரைபடங்களை வரைந்து அப்புத்தகத்தில் இணைத்திருக்கிறார்.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த ஆண்டு 1505. ஒன்றரை நூற்றாண்டு கால கரையோரப் பகுதிகளை ஆட்சிசெய்து வந்த அவர்கள் படிப்படியாக ஒல்லாந்தரிடம் தமது ஆட்சியைப் பறிகொடுத்தனர். ரிபைரோ தனது 18வது வயதில் இந்தியாவுக்குச் சென்ற போர்த்துகேய படையில் சாதாரண சிப்பாயாக 1640 மார்ச் மாதம் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் செப்ரம்பர் 19ஆம் திகதி தென்னிந்தியாவில் கோவாவில் வந்திறங்கினார். அங்கிருந்து அவர் 400 சிப்பாய்களுடன் நீர்கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் நீர்கொழும்பைக் கைப்பற்றுவதற்கான சமர் நடந்துகொண்டிருந்த காலம். அதே ஆண்டு நீர்கொழும்பை ஒல்லாந்தரிடம் இழந்தது போர்த்துக்கேய தரப்பு. அதிலிருந்து அடுத்த 18 ஆண்டுகள் ரிபைரோவின் வாழ்க்கை இலங்கையில் தான் அமைந்தது. தொடர்ச்சியாக பல்வேறு சமர்களில் ஈடுபட்டார் ரிபைரோ. ஒருபுறம் இரண்டாம் ராஜசிங்கனின் படைகளுடனான போர்; மறுபுறம் ஒல்லாந்தருடனான போர். இப்படி பல போர்களில் ரிபைரோ கலந்துகொண்டு பல தடவைகள் படுகாயங்களுக்கு உள்ளானார். சாதாரண சார்ஜன்ட் நிலையிலிருந்து அவர் கெப்டன் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார். அதிலிருந்து அவர் கெப்டன் ரிபைரோ என்று தான் அழைக்கப்பட்டார்.

போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரிடம் இலங்கை பறிபோன நிலைமாறுகாலத்தின் காலக்கண்ணாடி என்றும் நேரடி சாட்சியம் என்றும் நாம் ரிபைரோவைக் கொள்ளலாம். எனவே அவர் எழுதிய நூல் முக்கிய ஆதார நூல். ரிபைரோ நாட்டை விட்டு வெளியேறிய சில வருடங்களில் தான் ரொபர்ட் நொக்ஸ் கைது செய்யப்பட்டார். ரொபர்ட் நொக்ஸ் எழுதிய நூலுக்கும் ரிபைரோவின் நூலுக்கும் இடையில் உள்ள பெரும்பாலான ஒற்றுமைகளால் இந்த நூல்களை முக்கிய வரலாற்று ஆதாரங்களாகப் பயன்படுத்துவது வழக்கம். போர்த்துகேய, ஒல்லாந்து கால வரலாற்றை ஆராய்பவர்கள் தவறவிடக்கூடாத மூன்று அக்காலத்து நூலாசிரியர்கள் கேப்டர் ரிபைரோ, பிலிப்பு பால்டேயு (Phillipus Baldaeus), ரொபர்ட் நொக்ஸ்.
சிங்கள வரலாற்றாசிரியர்கள் ரிபைரோவைத் தவிர மற்ற இருவரையும் கொண்டாடுவதைக் காண முடியும். பால்டேயு, ரொபர்ட் நொக்ஸ் ஆகிய இருவரின் நூல்களும் சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு பல பதிப்புகளைக் கண்டுவிட்டபோதும் ரிபைரோவின் நூல் இதுவரை சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டதில்லை. ரிபைரோவின் பணிக்காலம் அதிகமாக யாழ்ப்பாணத்தில் இருந்ததால் வடக்கில் செல்வாக்கு செலுத்திய தமிழ் இராஜ்ஜியங்கள் குறித்த பதிவுகளை அவர் செய்திருக்கிறார். மற்ற இருவரும் அதிகமாக கண்டி இராஜ்ஜியம் குறித்தும் சிங்களவர்கள் குறித்துமே அதிகமாக பதிவு செய்திருப்பது அப்படி சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்படாதற்கு காரணமாக இருக்கலாம்.
ரிபைரோவின் நூல் குறித்து ஆராயத் தொடங்கியபோது கண்டெடுத்த முக்கிய சில விடயங்களை வரலாற்றை ஆய்பவர்களுக்கு வெளிபடுத்த தோணிற்று.

ஆனால் அது ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டாக அச்சேறாமலேயே இருந்தது. மூல மொழியான போர்த்துக்கேய மொழியில் வெளிவருவதற்கு முன்னரே 1701இல் இந்த நூல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு (Histoire de l'isle de Ceylan, ecrite par le capitaine Jean Ribeyro) பாரிசில் வெளியானது. 1836இல் தான் முதன் முறையாக போர்த்துக்கேய மொழியில் அது நூலாக வெளிவந்தது. பிரெஞ்சு மொழியிலிருந்து இலங்கை அரச சேவையில் பணிபுரிந்த ஜோர்ஜ் லீ எம்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட பிரதி MDCCCXLVII ஆம் ஆண்டு (1847) கொழும்பில் வெளியானது. 1890இல் ரோயல்  ஆசிய கழகம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியிடப்பட்ட சஞ்சிகையில் Captain Joao Ribeiro என்கிற கட்டுரையில் அவர் அதில் உள்ள கயமைகளை வெளியிட்டார் டொனால்ட் பெர்குசன். பிரெஞ்சுப் பிரதியானது மூல நூலை திரிபுபடுத்தி நாசப்படுத்தப்பட்ட நூல் என்பதை போட்டு உடைத்தவர் டொனால்ட் பெர்குசன்.

பீரிஸ் (P.E. Pieris) மொழிபெயர்த்த மூல நூலில் இருந்து மொழிபெயர்த்த ஆங்கிலப் பதிப்பு “Ribeiro’s History of Ceilao” 1909 தான் வெளிவந்தது. அதன் பின்னர் 1948 இலும் அது “The Historic Tragedy of the Island of Ceilāo” என்கிற இன்னொரு தலைப்பில் கொழும்பில் மீளவும் பதிப்பிடப்பட்டது. அந்த நூலிலும் மூல நூலின் சிக்கல்கள் போதுமான அளவு அவிழ்க்கப்படாததால் C.R.Boxer இது பற்றி ஆராய்வதற்காக ரிபைரோவின் ஊருக்கு பயணித்தார். இந்த விபரங்களையும் சுவீகரித்துக்கொண்டு  1955 ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான  ரோயல்  ஆசிய கழக சஞ்சிகையில் சீ.ஆர்.பொக்சர் (C.R.Boxer) எழுதிய “கெப்டன் ஜாவோ ரிபைரோவும் இலங்கையின் வரலாறும்” (Captain João Ribeiro and his History of Ceylon: 1622-1693) என்கிற விரிவான கட்டுரையும் கட்டுரையும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் வரலாற்றாய்வாளர்கள் பலர் இந்த குழப்பங்களை சில சமயங்களில் அறியாத நிலையில் பிரெஞ்சு மொழி பதிப்பையும், அதன் மொழிபெயர்ப்பான “History of Ceylon presented by captain John Ribeyro to the King of Portugal, in 1685, translated from the Portuguese, by the Abbe Le Grand” நூலைக் கையாண்டு வருவதைக் காண முடிகிறது. தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு என்பது இறுதியாக பீரிஸ் (P.E. Pieris) வெளியிட்ட பிரதி தான். அந்தப் பிரதி கூட பல பதிப்புக்களைக் கடந்துவிட்டது. பீரிஸ் இலங்கையின் முக்கியமாக கவனிக்கக்கூடிய வரலாற்றாசியர். இந்த மொழிபெயர்க்கு முன்னரே அவர் 1920ஆம் ஆண்டே போர்த்துகேயர் காலத்து இலங்கையைப் பற்றிய ஆய்வு நூலை (Ceylon and the Portuguese 1505-1658) வெளியிட்டிருக்கிறார்.

உள்ளடக்கத்தில் சில...
இந்த நூலில் ரிபைரோ எழுதிய பல குறிப்புகள் ஆய்வுகளுக்கு மிகுந்த பயனுள்ளது.

கொழும்பு கோட்டை உருவான கதை, கொழும்பின் உருவாக்கம் பற்றி அறிவதென்றால் ரிபைரோவின் குறிப்புகளை கட்டாயம் அறிதல் அவசியம். கொழும்பு கோட்டையை கட்டுவிக்க அக்காலப்பகுதியில் வேடுவர்களின் உழைப்பும் பெறப்பட்டதாக குறிப்பிடுவதுடன் யாழ்ப்பாணப் பட்டினத்தின் கீழ் செறிவான வனக்காடுகளாக இருந்த வன்னி, திருகோணமலைப் பகுதியையும் அதன் கடற்பகுதிகளையும் வேடுவர்களின் சாம்ராஜ்ஜியமென்கிறார். விலங்குகளின் தோல்களை அணிந்திருந்த அவர்கள் போர்த்துக்கேயர்களின் நிறத்துக்கு சமானமாக காணப்பட்டார்களென்றும், வேட்டையாடப்படும் விலங்குகளை தேனில் துவைத்து உண்பவர்களென்றும், ஒரே இடத்தில் ஆறு மாதத்துக்கு மேல் தங்கியிருப்பதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.  

போர்த்துக்கேயரின் பிடியில் இருந்த யாழ்ப்பாணத்தை மீட்க 1629 ஆம் ஆண்டு அத்தபத்து முதலியார் தலைமையிலான 5000 பேரைக் கொண்ட சிறப்புப்படையணி சமரிட்டு விடுவித்தது. பின்னர் போர்த்துக்கேயர் பத்தாயிரம் படையினருடன் சென்று யாழ்ப்பாணத்தை  மீண்டும் கைப்பற்றி அத்தபத்துவின் தலையை வெட்டி யாழ்ப்பாணத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று காட்சிப்படுத்திய கதையை அறிந்திருப்போம். 13 நாட்களில் ஐயாயிரம் பேரை பலிகொடுத்த அந்தப் சமர் குறித்த ஆரம்பத் தகவல்கள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் போர்த்துகேய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த அந்த சமர் அன்றைய “முள்ளிவாய்க்கால் சமர்” என்றே குறிப்பிடவேண்டும். அங்கு நிகழ்ந்த கொடூரகரமான அழிவுகளை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

முதன் முதலாகப் போர்த்துக்கேயர்கள் இலங்கையில் கால் பதித்த பொழுது தென்புலத்தில் இயங்கிய சிங்கள இராச்சியமாகிய கோட்டை இராச்சியத்திற்கு நிகராக வடபுலத்தில் யாழ்ப்பாண இராச்சியமும், மாந்தோட்டைச் சிற்றரசும், வன்னிமைகளும், கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய சிற்றரசுகளும் இயங்கியமையும் பதிவு செய்திருக்கிறார்.

1638-1640 காலப்பகுதியில் இலங்கையின் கரையோரப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போர்த்துகேயரின் படைகளுக்குப் பொறுப்பாக இருந்த கெப்டன் ஜெனரல் அந்தோனியோ மஸ்கரஞ்ஞஸ் (Dom Antonio Mascarenhas) போர்த்துகேய படையில் உள்ள அத்தனை சிப்பாய்களும் புகைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாகக் அவரது இந்த நூலில் குறிப்பிடுகிறார்.   சின்னம்மை போன்ற ஒரு குறிப்பிட்ட வகை நோய்க்கு நிவாரணமாக புகையிலை இருந்ததாகவும் யுத்தகாலங்களில் புகையிலையின் விலை அதிகரித்ததாகவும் இந்தக் காலப்பகுதியில் இருந்துதான் இலங்கையில் புகையிலைச் செய்கை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை தொடர்பாக வெளிவந்த பல நூல்களில் இலங்கையையும், இலங்கைக்குள் இருந்த பிரதேசங்களையும் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொற்கள் ஒன்றுக்கு ஒன்று வேறானவை. இந்த நூலில் அன்றைய ceylonஐ Ceilao என்று பயன்படுத்துகிறார். மொழிபெயர்ப்பாளர் பின்னர் அதனை ceylon என்றே மாற்றிவிடுகிறார்.
  • ரோமானியர்கள் - Serendivis,
  • அரேபியர்கள்  - Serandib
  • பாரசீகத்தினர் - Serendip
  • லத்தீனில் - Seelan
  • போர்த்துக்கேயர் - Ceilão
  • ஸ்பானியர்கள் - Ceilán
  • பிரெஞ்சில் - Selon
  • டச்சில் - Zeilan, Ceilan, Seylon
  • ஆங்கிலேயர்கள் - Ceylon

என்றெல்லாம் அழைத்தார்கள். இதைவிட வேறு பல சொற்களாலும் அழைத்திருக்கிறார்கள். மேற்படி நூலில் கண்டியை  candia என்றும், சிங்களவர்களை Chingalas என்றும், யாழ்ப்பாணத்தை  Jafanapatao அதுமட்டுமல்ல யாழ்ப்பாணம், திருகோணமலையில் வாழ்ந்த தமிழர்களை Bedas என்று அழைக்கிறார். அன்றைய காலப்பகுதியில் வெளியான நூற்றுகணக்கான வேறு நூல்களில் தமிழர்களை மலபார் இனத்தவர் என்றே குறிப்பிட்டிருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். இதே காலப்பகுதியில் நம் நாட்டவர்களின் வரையறுக்கப்பட்ட மிகச் சில குறிப்புகள் கூட பணயோலைகளிலும், செப்பேடுகளிலும் தான் எழுதப்பட்டுவந்திருக்கின்றன. அந்த வகையில் நமது வரலாற்றை அறிய வரலாற்றாசிரியர்கள் எல்லோரும் இத்தகைய நூல்களின் குறிப்புகளில் இருந்து தான் குறிப்புகளை எடுத்து ஆராய வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அவர்கள் தரும் ஊர் பெயர்கள் பலவற்றை கட்டுடைத்துத் தான் (crack) அறியவேண்டியிருக்கிறது.

ரிபைரோவின் நூலில் பயன்படுத்தப்பட்டப்பட்டிருக்கும் பதவிகளைக் குறிக்கும் சில அடைமொழிகளை சகல மொழிபெயர்ப்புகளிலும் காணமுடிகிறது. இந்தக் கட்டுரைக்காக சகல மொழிபெயர்ப்பு பிரதிகளையும் கண்டெடுக்கமுடிந்தபோதும் மூல நூலான போர்த்துகேய நூலை பெற முடியவில்லை. அந்தவகையில் இந்த பதவிகளைக் குறிக்கும் அடைமொழி மூல நூலில் இருந்ததா என்று அறியமுடியவில்லை. ஆகவே இந்த விளக்கங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகளா என்று அறிய முடியவில்லை. ஆனால் இந்த அடைமொழிகள் பிற்காலங்களில் எந்தெந்த அர்த்தங்களில் அறியப்பட்டிருக்கின்றன என்பதையும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
  • Appoohaamy – அப்புஹாமி - ஜெனரல் தர அதிகாரி
  • Dessave  - திசாவ - மாவட்ட அதிகாரி
  • Modiliar – முதலியார் - கேர்னல் தர அதிகாரி
  • Arachy – ஆராச்சி - கெப்டன் தர அதிகாரி
  • Lascarin – லஸ்கறின்- உள்ளூர் சிப்பாய்
  • Topaz – டொபாஸ் - கறுப்பினத்தவர்
  • Adigar – அதிகார் - நீதிபதி
  • Bandigaralla – பண்டிகறல்ல - நீதிமன்ற பொறுப்பாளர்
  • Mareillero – மொறைலேரோ- தீர்ப்பின் நடுவர்
  • Changaar - சங்கார் - மதகுரு
  • Atapata – அதபத்த - மாவட்ட அதிகாரியின் பிரதான காவலதிகாரி
  • Bandanezes - Soldiers from Banda – பண்டாவின் சிப்பாய்கள்


ரிபைரோவை சகலரும் ஒரு வரலாற்றாசிரியராகவே குறிப்பதை ஏராளமான ஆய்வுகளில் காணலாம். இந்தக் கட்டுரைக்கான தேடுதல்களின் போது ரிபைரோவின் பெயரை பல நூல்களிலும் ஆய்வுகளிலும் வெவ்வேறு பெயர்களுடன் இருப்பதைக் காண முடிந்தது. இது ஆய்வாளர்களுக்கு பல குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு Jean Ribeyro, John Ribeyro, João Ribeiro போன்ற குழப்பங்களைக் காணலாம்.

1639இல் திருகோணமலையையும், 1640இல் நீர்கொழும்பு காலியையும், 1655இல் களுத்துறையையும், 1656இல் கொழும்பையும் 1658இல் இறுதியாக மன்னாரையும், யாழ்ப்பாணப் பட்டினத்தையும் போர்த்துக்கேயர்கள் ஒல்லாந்தர்களிடம் இழந்தார்கள். கொழும்பைக் கைப்பற்றுவதற்காக ஒல்லாந்தர் நடத்திய இறுதிச்சண்டையில் ரிபைரோ கிரேனேட் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் எஞ்சிய படையினருடன் பின்வாங்கி கடல் மார்க்கமாக காயப்பட்ட படையினருடன் தென்னிந்திய கோவாவில் நிலைகொண்டிருந்த முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். காயங்கள் ஆறியதும் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். போர்த்துகேயரிடம் இறுதியாக எஞ்சியிருந்த யாழ்ப்பாணத்தைத் தக்கவைப்பதற்காக நடந்த இறுதிச் சண்டையில் மோசமாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன போர்த்துகேய படையினர். போர்த்துகேய படைகள் கைதுக்குள்ளான போது காயப்பட்டிருந்த ரிபைரோவும் கைதியானார். அங்கிருந்து அன்றைய டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகம் இயங்கிவந்த பட்டவியாவுக்கு (இன்றைய இந்தோனேசியாவிலுள்ள ஜகார்த்தா) கைதியாக அனுப்பட்டார். ஒரு வருடத்தின் பின்னர் ஒல்லாந்துக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு 1660இல் சொந்த நாடான போர்த்துக்கலை அடைந்தார்.

போர்த்துக்கலின் அண்டை நாடான ஸ்பெயினுடனான தொடர் போரில் பல சமர்களில் தலைமை தாங்கினார். ரிபைரோவின் நீண்ட கால இராணுவச் சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு போர்த்துகேய அரசு பிரபுப் பட்டம் வழங்கியது. தனது இறுதிக் காலத்தில் மிகுந்த சமயப் பற்றுள்ளவராகளாக விளங்கிய ரிபைரோ 1693ம் ஆண்டு காலம் ஆனார். குறிப்பட்ட காலத்து இலங்கையின் வரலாற்றை மீட்க நமக்கெல்லாம் ரிபைரோ தந்துவிட்டு போன தகவல்கள் இன்றும் அவரின் பெயரைச் சொல்லி நிற்கின்றன.

கட்டுரைக்காக பயன்பட்ட நூல்கள்:
  • An Historical, Political, and Statistical Account of Ceylon and Its Dependencies, Volume 2, Charles Pridham, 1849 – London
  • Ceylon and the Cingalese their history, government and religion, the antiquities, institutions, produce, revenue and capabilities of the Island - vol .1 - Sir Henry, Charles
  • Ribeiro’s History of Ceilao - By P.E. Pieris - The Colombo Apothecaries Co. Ltd - 1909
  • The Historic Tragedy of the Island of Ceilāo - By P.E. Pieris - Colombo 1948
  • Ceylon and the Portuguese, 1505 - P. E Pieris, Tellippalai – 1920
  • CONCISE MAHAVAMSA, HISTORY OF BUDDHISM IN SRI LANKA, FIRST EDITION, Ruwan Rajapakse, P.E. – 2003
  • Captain João Ribeiro and His History of Ceylon, 1622-1693, C. R. Boxer The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland.
  • Jayawickrama, S.. (1998). An historical relation of the Island Ceylon : Knox and the 'writing that conquers'. (Thesis). by Jayawickrama, Sarojini - University of Hong Kong, Pokfulam, Hong Kong SAR. – 1998
  • "Robert  Knox in the Kandyan kingdom" - 1660-1679" By H. A. I. Goonetileke - A Bio-Bibliographical CommentaryTHE LANKA JOURNAL HUMANITIES VOLUME I – 1975
  • CAPTAIN JOAO RIBEIRO : HIS WORKS ON CEYLON, AND THE FRENCH TRANSLATION THERE OF BY THE, ABBE LE GRAND. By DONALD FERGUSON, Esq. (Read July 26, 1888.)
  • Caste in modern Ceylon - The Sinhalese system in transition - Rutgers University Press - By Bryce Ryan – 1953
  • CEYLON AT THE CENSUS OF 1911, BEING THE REVIEW OF THE RESULTS OF THE CENSUS OF 1911 By E.B.Denham – 1912
  • 10ஆம் ஆண்டு - வரலாற்றுப் பாடப்புத்தகம் – இலங்கைக் கல்வித் திணைக்களம்.
  • KANDY FIGHTS THE PORTUGUESE - (A MILITARY IIlSTORY OF KANDYAN RESISTANCE) By C. GASTON PERERA - Vijitha Yapa Publications - Sri lanka – 2007
  • Ceylon and the Portuguese 1505-1658 – By P, E. PIERIS – American Ceylon mission Press – 1920
  • Ceylon the Portuguese Era – Vol I, II – By Paul E.Pieris – Tisara Prakasakayo Ltd – 1913
  • THE PRINCE VIJAYA PALA OF CEYLON 1634 - 1654 - P.E.Pieris - Colombo – 1928
  • OUTLINES OF CEYLON HISTORY By DONALD OBEYESEKERE - The "Times of Ceylon" Colombo – 1911
  • CORRESPONDENCE BETWEEN RAJA SINHA II. AND THE DUTCH By Donald Ferguson - Journal of the Ceylon Branch of the Roayal Asiatic Society - 1903 – 1905


Share this post :

+ comments + 1 comments

11:47 PM

பயனுள்ள பதிவு.தொடர் தேடலுமு விவாதமும் கோருபவை.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates