ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்கள் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்புகள் என்பது அருகிவரும் நிதர்சனமாகும். நுவரெலியா மாவட்டத்தை மாத்திரம் குறிப்பிட்டு இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இருப்பை மட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரதிநிதித்துவ அரசியலுக்கு சாத்தியமாகாத தமிழர் நிலங்கள் எம் கையிலிருந்து பறிபோகின்றன. ஊவாவின் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளும் மொனராகலை மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்களும் தற்சமயம் பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. ஆக்கிரமிப்புகள், திட்டமிட்ட அரச குடியேற்றங்கள், தொழில் சார்ந்த இடப்பெயர்வுகள் என்பன மூலம் மொனராகலை மாவட்ட தமிழர்களின் இனப்பரம்பல் சிதைக்கப்படுகின்றது.
இலங்கை புள்ளிவிபர திணைக்களத்தின் சனத்தொகை மதிப்பீட்டு ஆய்வுகளின் படி (2012) மொனராகலை மாவட்ட இந்திய வம்சாவளி தமிழர்களின் சனத்தொகை 4590 ஆக அமைந்துள்ளது. இது மொத்த இந்திய வம்சாவளியினரில் 0.5% சதவீதமாகும். எனினும் இதற்கு இடைப்பட்ட கடந்த ஏழு (7) வருடங்களில் இத்தொகை கணிசமான அளவு வீழ்ச்சிப்போக்கையே கொண்டிருக்கும் என்பது நிச்சயமானதாகும்.
மொனராகலை மாவட்டத்தின் பெரும்பாலான பெருந்தோட்டங்கள் இறப்பர் நிலங்களாகும். இங்கு பணிப்புரியும் எம்மவர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் தொடர்பாக கனதியான ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இறப்பர் தொழிலாளர்களின் வேதனம், மனிதஉரிமை, தொழில், கல்வி, சுகாதாரம், தொழிற்சங்க அங்கத்துவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு மலையக அமைப்பும் தேசிய ரீதியான அதிர்வுகளை ஏற்படுத்தப்படவில்லை. காலங்காலமாக இறப்பர் தொழிலாளர்களாகவும், கரும்பு சேனைகளிலும் மொனராகலை தமிழர்களின் வாழ்வு சிறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
எதுவித உரிமைகளும் இன்றி அரசியல் அனாதைகளாக வாழும் இவர்களின் வாக்குகள் மட்டும் பெரும்பான்மை இனத்தின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. இதன் பிரதிபலனாக இவர்களுக்கான விஷேட ஒதுக்கீடுகள் என்று எவையும் வழங்கப்படவில்லை. வீதிக்கட்டமைப்பு, நகர அபிவிருத்தி, பாரியளவான தொழிற்சாலை கட்டமைப்புகள் என்று இம்மக்களின் அன்றாட வாழ்வில் நேரடி தொடர்பில்லாத அபிவிருத்திகளே இங்கு இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை.
பெல்வத்தை சீனித்தொழிற்சாலைக்கு தேவையான கரும்புத்தோட்டங்களில் அன்றாட கூலிகளுக்காக பணிபுரியும் இவர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும் இல்லை. அதேப்போல் தொழிற்சாலையில் பல்வேறு விபத்துகள் இடம்பெற்று உடல் உறுப்புகளை இழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் அதற்கான காப்புறுதி எவையும் கிடைக்கப்பெறவில்லை. கரும்பு சேனைகளில் தொழில்செய்யும் போதும் பல்வேறு விலங்குகளால் ஆபத்தை எதிர்நோக்கிய சம்பவங்களும் ஏராளம் உண்டு.
இம்மாவட்ட மக்கள்; 1978, 1983 ஜீலை கலவரங்களின்போது ஸ்தீரமான பொருளாதாரத்துடன் இருந்ததாக அறியமுடிகிறது. எனினும் இவர்களின் சொத்துக்கள் கலவரத்தின் போது இனவாதிகளால் சூறையாடப்பட்டன. குறிப்பாக கால்நடைகள், வீடுகள், விளைநிலங்கள் என்பன திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இதன் காரணமாக பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும் இவர்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.
உறுதியான சிவில் கட்டமைப்போ அரசியல் பின்;புலமோ இன்றி உதிரிகளாக சிதறி தமது இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர். இதன்காரணமாக கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற பொதுவசதிகள் இன்றளவும் தன்னிறைவு அடையவில்லை. அரசியல் பிரதிநிதிகள் இன்றி பலமான குரலாக இவர்களால் தமது இருப்பு குறித்து உரத்து ஒலிக்க முடிவதில்லை. பதுளை மாவட்டத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மொனராகலைக்கு பதுளை அரசியல் கட்சிகளாலும், தொழிற்சங்கங்களாலும் கொடுக்க முடியாமைக்;கு சுயநல அரசியலே பிரதான காரணமாகும்.
மாவட்ட ரீதியில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்தியவம்சாவளித் தமிழர்கள் பரவி வாழ்ந்தாழும் சில குறிப்பிட்டப் பிரதேசங்களில் அடர்த்தியான சனச்செறிவைக் கொண்டுள்ளமையை அவதானிக்க முடியும். குறிப்பாக பாராவில, கும்புக்கனை, மரகலை, புதுக்காடு, மீனாச்சிவத்த, சின்ன பெரியாறு, சின்ன பாலாறு (முப்பனவெளி), நர்மன்டி (புத்தள), சிரிகல மேற்பிரிவு, சிரிகல கீழ்பிரிவு, வெலியாய, குமாரவத்த, குமாரதொல, அலியாவத்த, ஏழேக்கர், தலாவ, மதுருகெட்டிய, பொல்கஸ்யாய (தேங்காய்மலை), வெள்ளச்சிகடை, வைகும்பர, கமேவெல, மாகொடயாய, கந்தசேன, தென்னகும்புர, தேவத்துர, நாமண்டிய, கதிர்காமம், நூறேக்கர், உலந்தாவ, பன்சலவத்த, பிபிலை, படல்கும்புற, சிங்காரவத்தை மற்றும் நக்கல ஆகிய பிரதேசங்களில் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் ஓரளவு அடர்த்தியாக வாழ்கின்றனர். இப்பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும்போது குறைந்தது 15000 மக்கள் தொகையாவது மொனராகலையை நிரந்தர வதிவிடமாக கொண்டிருக்க வேண்டும்.
வாக்காளர்களாக தம்மைப்பதிவுச் செய்துக்கொண்டோர் மாத்திரமே அரச புள்ளிவிபரத் தரவுகளில் வரமுடியும். இனப்பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்தோர், தமது அடையாளத்தை மாற்றிக்கொண்டோர், பெரும்பான்மை இனத்தை தழுவுதல் போன்றவை சனத்தொகை இழப்பு ஏற்படுவதற்கு ஏதுவான காரணங்களாக அமைந்துள்ளன.
மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி இனத்தின் இருப்பை ஸ்தீரமாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியம். குறிப்பாக அண்மையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டினூடாக கும்புக்கனை தோட்டத்திற்கான வீடமைப்பு திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலம் இம்மாவட்ட மக்களின் வீட்டுரிமைகளையும் காணியுரிமைகளையும் நிறுவனமயப்படுத்தி முன்கொண்டுச் செல்லலாம். அதேப்போல் அவர்களை தொழிற்சங்க ரீதியாக ஒன்று சேர்ப்பதன் மூலம் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கலாம்.
அரசியல் தொழிற்சங்க கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு சிவில் ரீதியாக இனத்தை ஐக்கிப்படுத்துவதற்கு ஏற்ற சமூக வேலைத்திட்டங்கள் அவசியம். கல்வி, சுகாதாரம், வாக்காளர் நடத்தை என்பவற்றை தீர்மானிப்பதில் விகிதாசார ஒதுக்கீடுகளை பேரம்பேசி பெற்றுக்கொடுப்பதற்கான சமயோகித அரசியல் பிரதிநிதித்துவம் அவசியம்.
அதிகமான இழப்புகளையும், அடக்குமுறையையும், சந்தித்த மொனராகலை மாவட்டத்தமிழர்களின் எதிர்காலத்தை இனரீதியாக அபிவிருத்திச் செய்வதற்கு கற்ற சமூகம் முன்னிற்க வேண்டும். உதாரணமாக மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்விசார் சமூகம் ஒன்றிணைந்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதற்கு மாறாக மொனராகலை மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட கற்ற சமூகத்தினர் அண்மைக்காலமாக வெளியிடங்களுக்கு சொந்த முன்னேற்றம் கருதி இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இது சமூகத்துக்கு ஆற்றும் பிரதியுபகாரம் அல்ல. அங்கு தோன்றியோரே அந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும். அதற்கு அர்ப்பணிப்பும், வெளித்தொடர்புகளும், தீர்க்கமான சமுதாய அறிவும் அவசியம். காரணம் இவர்களும்; நுவரெலியா கட்சிகளின் சந்தாதாரர்கள்.
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...