அப்புஹாமி என்கிற பதவிப்பெயர் கண்டி இராஜ்ஜியத்தில் தான் உருவானது. அன்றைய கண்டி அரசரின் தனிப்பட்ட செயலாளரைப் போல அவரின் நேரடிக் கடமைகளை மேற்கொண்டவர்களை “துக்கன்னாறால” என்பார்கள். இன்று அந்தப் பதம்; அரசியலமைப்பில் “குறைகேள் அதிகாரி”க்கு (Ombudsman) பயன்படுத்தப்படுகிறது. கண்டி அரசாட்சியில் இவரை “அப்புஹாமி” என்றே அழைத்தார்கள். கண்டி இராஜ்ஜியத்தில் அன்று இருந்த உயர்குல நிலப்புரபுத்துவ பின்னணியை உடையவர்களே இந்தப் பதவியை வகித்தார்கள். அவர்களைத் தான் சாதாரண சிவில் மக்களால் “மாத்தையா” என்றும், “நிலமே” என்றும் கூட அழைக்கப்பட்டார்கள்.
அரசனின் அதி நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரையே இந்தப் பதவியில் வைத்திருப்பார். அரசரின் புதையல்களையும் விலைமதிப்பு மிக்க ஆபரணங்களையும் வைத்திருக்கும் களஞ்சியம் இவரது பொறுப்பிலேயே இருந்தன. அதுமட்டுமன்றி குறிப்பாக அரச மாளிகையின் பாதுகாப்பு, காவலரன்கள் என்கிற முக்கிய மூன்று பணிகளும் இவரது பொறுப்பில் இருந்தன.
அரசரின் தனிப்பட்ட செயலாளருக்கு மாத்திரமல்ல மேலும் பல முக்கிய பாதுகாப்பு விடயங்கோடு சம்பந்தப்பட்டவர்களும், மன்னரின் நேரடி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்களும் அப்புஹாமி என்றே அழைக்கப்பட்டார்கள். ராஜாதி ராஜசிங்கனின் ஆட்சியின் போது 42 பேர் அப்புஹாமி பதவிகளில் ஏக காலத்தில் இருந்திருக்கிறார்கள். கீர்த்திஸ்ரீ ராஜசிங்கனின் காலத்தில் 160 பேர் இருந்திருக்கிறார்கள். ஸ்ரீ விஜய ராஜசிங்கனின் ஆட்சியில் 170 பெரும் முதலாம் இராஜசிங்கனின் காலத்தில் 81 பெரும், இறுதி அரசனான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியின் போது 48 பேரும் இருந்திருக்கிறார்கள்.
மன்னர் தங்கியிருந்த அரண்மனை, அரச கடமைகளை மேற்கொள்ளும் கட்டிடம் என்பவற்றின் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட விசேட படையைச் சேர்ந்தவர்கள். காவல் கடமைகளில் இருக்கும் சாதாரண படை சிப்பாய்கள் இவர்களின் கட்டளையின் கீழ் இயங்கியிருக்கிறார்கள். மன்னருக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய சத்தங்கள் வராமல் பார்த்துக்கொள்வது, மன்னர் கூப்பிட்டவுடன் ஓடிவந்து கட்டளையை ஏற்றுக்கொண்டு செய்துமுடிப்பதும் “துக்கன்னாறால” என்கிற இந்த அப்புஹாமிமாரின் கடமை. இவர்கள் சிப்பாய்களின் உடையில் இருப்பதில்லை. பிரபுக்களைப் போன்ற எடுப்புடன் தான் ஆடைகளை அணிந்திருப்பார்.
இவர்களுக்கு தலைமை வகிக்கும் ஒருவராக முகாந்திரம் என்கிற ஒருவர் இருப்பார். நாளாந்த விடயங்களை தெரிவிப்பதற்கு ஒரு செயலாளர் இருப்பார்.
கிட்டத்தட்ட அரசனுக்காக தன்னை அர்ப்பணிக்கத் துணிந்தவர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்.
மன்னர் இரண்டாம் இராஜசிங்கனை நில்லம்பே நுவர என்கிற இடத்தில் வைத்து அம்பன்வல றால என்பவரால் ஒரு கொலைச்சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர் தங்கியிருந்த மாளிகைக்குள் இரகசியமாகப் புகுந்து படுக்கையில் வைத்தே கொலைசெய்வது என்பது திட்டம். படுக்கையில் மன்னருக்குப் பதிலாக படுக்கையில் இருந்து அலுவிஹாரே வணிகசேகர முதியான்சே பரம்பரையச் சேர்ந்த ஒரு “துக்கன்னாறால” உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றிய கதையுண்டு. மன்னர் அந்த இடைவெளியில் ஹன்குரங்கெத்த என்கிற இடத்துக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
48 “துக்கன்னாறால”மாரை பாதுகாப்புக்கு வைத்திருந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு சிங்களவரைக் கூட அந்தக் கடமையில் வைத்திருக்கவில்லை. தமிழ் - வடுக இனத்தவரைத் தான் தனது பாதுகாப்புக்கு வைத்திருந்தார். சிங்களவர்களின் பாதுகாப்பில் அவருக்கு தனிப்பட நம்பிக்கை இருக்கவில்லை. அதை மெய்ப்பிக்கும் வகையில் பிலிமத்தலாவவின் தலைமையில் பெரும் சதிக்கு அவர் முகம்கொடுத்தார். அந்த சதி முறியடிக்கப்பட்டதும் கூட அப்புஹாமிமார்களால் தான். அந்த சதி முதலில் முறியடிக்கப்பட்டதுடன் பிலிமத்தலாவையை தண்டிக்கவில்லை. இரண்டாந்தடவை பிலிமத்தலாவ மீண்டும் அதே சதி முயற்சி மேற்கொண்டபோது அவருக்கு மன்னர் மரண தண்டனை அளித்தார். மீண்டும் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனை கொலை செய்வதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட பலவத்தனறால, ஜா முகாந்திரம் ஆகிய இருவரையும் சூட்சுமமாக பிடித்தவர்களும் “துக்கன்னாறால”மார் தான். ஆக இவர்கள் தான் துணிச்சலான நம்பகமான மெய்ப்பாதுகாவலர்களாகவும் அரசனுக்கு இருந்திருக்கிறார்கள்.
நாளாந்த காவலுக்காக நான்கு வேளை நேரங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். தினசரி காண்டாரத்தை ஒலிக்கச் செய்வதும் இவர்களின் கடமை அந்த காண்டாரம் நான்கு மைல் சுற்றுவட்டத்துக்கு கேட்டிருக்கிறது என்கிறார்கள். இந்த காண்டார ஓசையைக் கொண்டு நேரத்தை அறிந்துகொண்டு கடமையாற்றும் வழக்கத்தை பலர் கொண்டிருந்தார்கள். மன்னர் வெளியில் செல்வது அரிது. அவ்வப்போது அரசர் மல்வத்து – அஸ்கிரி தலைமை பிக்குமாரை சந்திக்கச் செல்லும் வேளைகளில் இந்த இந்த “துக்கன்னாறால” மாரும் மெய்ப்பாதுகாப்பாளர்களாக அரசனைச் சூழ செல்வார்கள்.
ஆயுதக் களஞ்சியத்தைப் பாதுகாப்பதும் இவர்களின் கடமை. மன்னரின் ஆயுதங்கள் மற்றவற்றில் இருந்து வித்தியாசமானவை. அவற்றை தூசுபடியாமல், துருப்பிடிக்காமல் பாதுகாப்பதும், ராஜதந்திர கடமைகளுக்கு செல்லும் வேளைகளில் அரசருக்கு அவற்றை உரிய முறையில் சேர்ப்பதும் அவர்களின் கடமை.
இந்த “துக்கன்னறால”மார் வேறு அதிகாரிகளுக்கோ மந்திரிகளுக்கோ கட்டுப்பட்டவர்கள் இல்லை. நேரடியாக மன்னரின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள். அரச உற்சவங்களின் போது அரசி, மந்திரிமார், அதிகாரம்மார் ஆகியோரையும் குறுக்கிட்டு முன்னே செல்ல இவர்களால் முடியும். பல சந்தர்ப்பங்களில் தமது சொத்துக்களுக்கான வரிவிலக்கையும் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். மன்னரின் பாத்திரத்துக்கு உள்ளான அப்புஹாமிமார் பல சலுகைகளையும் உதவிகளையும் பெற்றிருப்பதை பல்வேறு பதிவுகள் மெய்ப்பித்திருக்கின்றன. இரண்டாம் இராஜசிங்கன் ஒரு “துக்கன்னாறால”வுக்கு ஒரு கிராமத்தை எழுதிக் கொடுத்திருக்கிறார். கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஒரு விசுவாசமான “துக்கன்னாறால”வுக்கு அவர் உயிருடன் இருக்கும்வரை நெல், தானியங்களை இலவசமாக கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.
கண்டி இராஜ்ஜியத்தில் இந்த “துக்கன்னாறால”மாருக்கு இன்னொரு பெயராகவே அப்புஹாமி புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் பிற்காலத்தில் கரையோரச் சிங்களவர்கள் மத்தியில் இருந்த உயர்சாதி கொவிகம நிலப்பிரபுத்துவ சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் அப்புஹாமி என்கிற கௌரவப் பெயரை காலப்போக்கில் சுவீகரித்துக்கொண்டார்கள். இந்தப் பெயரின் சிறப்பைப் பற்றி இன்னும் கூறுவதென்றால் மன்னர் முதலாம் விமலதர்மசூரியன் கத்தோலிக்க மதத்தைத் தழுவி தனது பெயரை “தொன் யுவான் அப்புஹாமி” என்று தான் தனக்கு பெயரை சூட்டிக்கொண்டார். எனவே இது ஒரு உயர்சாதிக்குரிய, உயர் குழாமினருக்கு உரிய மேட்டுக்குடி கௌரவப் பெயராக காலப்போக்கில் இருப்புகொண்டது.
சிங்களவர்கள் மத்தியில் “அப்புஹாமி, ராலஹாமி, மாத்தையா, முதலாளி, பாசுன்னே” போன்றவை உயர்சாதி/மேட்டுக்குடி ஆண்களுக்கும் “ஹாமினே” என்று உயர்சாதி/மேட்டுக்குடி பெண்ணுக்கும் பயன்படுத்துவது நெடுங்கால பாரம்பரியமாக இருந்துவருகிறது. இன்று அது சாதி, குலம் என்பவற்றைத் தாண்டி வர்க்க உயர்நிலையினருக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் பயன்படுத்தப்பட்டுவருவதைக் காணலாம். ராலஹாமி என்பது அதிகமாக பொலிஸ் உத்தியோகத்தர்களை விளிக்க இன்றும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...