Headlines News :
முகப்பு » , , , » “பண்டா விடுவித்த நாய்” - என்.சரவணன்

“பண்டா விடுவித்த நாய்” - என்.சரவணன்

நீதிமன்ற அவதூறு வழக்கில் 19 ஆண்டுகால சிறைத்தண்டனை (6 வருடங்களில் முடியக் கூடிய வகையில்) பெற்று கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு எட்டு மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 23ஆம் திகதி மாலை வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் பல மணி நேரமாக வெய்யிலில் வரவேற்க காத்திருந்த நிலையில் ஞானசார தேரர் வேறு வழியால் இத்தபானே தம்மாலங்கார தேரரின் வாகனத்தில் எவருக்கும் தெரியாமல் வெளியேறினார்.

கடந்த மாதம் வெசாக் தினத்தையொட்டி  மே 18 அன்று 762 கைதிகள் ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். சிறு குற்றங்களுக்கு தண்டனை பெற்ற கைதிகள் ஒரே நாளில் இத்தனை பேர் விடுவிக்கப்பட்டது சிறைச்சாலை வரலாற்றில் இதுவே முதற்தடவை.

வெசாக் தினத்துக்கு முன்னர் ஞானசாரரை விடுவிக்கும்படி சிங்கள பௌத்த தரப்பில் இருந்து தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஞானசார தேரரை மே 4 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து விட்டு வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் (முன்னாள் பௌத்த விவகார அமைச்சர்) விஜேதாச ராஜபக்ச “எதிர்வரும் வெசாக் தினத்துக்கு முன்னர் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுதலை செய்தாக வேண்டும்.” என்றார்.

அவரை விடுவிக்கக்கோரி இந்த 8 மாதங்களுக்குள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் கூட நடத்தப்பட்டிருக்கின்றன ஆனால் ஞானசாரை அன்றே விடுவிக்காமல் அன்றைய தினம் ஞானசாரருடன் சிறையில் நிகழ்ந்த 45 நிமிட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவரை விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஐ.எஸ். தீவிரவாதத்தைப் பற்றியல்ல கதைக்கப்பட்டிருக்கிறது. மாறாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஞானசாரர் எந்தத் தரப்பின் பக்கம் இருக்க வேண்டும் என்பது பற்றியே பேசப்பட்டிருக்கிறது.

சிறிசேனவின் யுக்தி
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கட்சி ரீதியில் பிளவுபட்டிருந்த சிங்கள பௌத்தர்களை ஐக்கியப்படுத்தியிருக்கிறது. இதன் எதிரொலி எதிர்வரும் தேர்தல்களில் தெரியவரும். சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவு கொடுப்போருக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்கிற சேதி தற்போதைய கள நிலை உறுதிசெய்துகொண்டிருக்கிறது. ஞானசாரரின் விடுதலை அந்த வாய்ப்புகளை பலப்படுத்தியுள்ளது. சிறிசேனவின் மன்னிப்பு ஒரு அரசியல் தீர்மானம் தான். அரசியல் வியூகம் தான். ஈஸ்டர் தாக்குதல்கள் ஜனாதிபதியின் மன்னிப்பை எதிர்க்கும் வல்லமையை யாருக்கும் வழங்கவில்லை. அந்த துணிச்சலை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கிறது. இத்தனைக்கும் 2015க்குப்பின்னர் ஞானசாரரால் அசிங்கமான திட்டல்களுக்கு உள்ளானவர் ஜனாதிபதி சிறிசேன.

நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை ஜனாதிபதி தனது அதிகாரத்தின் பேரில் விடுவிக்கிறார் என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நீதியை இந்த அரசு உறுதிசெய்யப்போகிறது. நூற்றுக்கணக்கான வழக்குகளில் இருந்து தப்பி. நீதிமன்ற அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஞானசாரர். நீதிமன்றத்தின் இறைமையில், கௌரவத்தில் கை வைத்திருக்கிறார் ஜனாதிபதி. சஹ்ரான் போன்றவர்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் ஞானசாரர். அதுபோல முஸ்லிம்களுக்கு எதிரான சமீபத்தேய வன்முறைகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அத்திரவாரமிட்டவர் ஞானசாரர். இப்படி நெருக்கடி நேரத்தில் அவரை விடுவிப்பதன் உள்நோக்கம் என்ன?

குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டால் கூட நிபந்தனைகள் உண்டு. ஆனால் குற்றவாளி ஒருவர் ஜனாதிபதி சலுகையுடன் நேரடியாக தப்பவைக்கப்படுவது அராஜக செயற்பாட்டுக்கு உத்தரவாதமளிக்கும் செயல். 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் "ஜனாதிபதி மன்னிப்பு" தொடர்பான அதிகாரம் என்பது நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் நிகழ வேண்டியது என்று பிரபல சட்ட நிபுணர் ஜே.சி.வெலிஅமுன குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த அரசியலமைப்பு மீறலை எதிர்த்து வழக்கு தொடுக்கும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை.

இந்த விடுதலையை எதிர்த்து விமர்சித்திருந்தார் சந்தியா எக்னேலிகொட. அவர் தொடுத்திருந்த வழக்குக்கு ஆஜாராக வந்திருந்த போது தான் ஞானசாரர் நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வெளியிட்டிருந்தார். “இப்படி ஞானசாரர் நீதிமன்றத்தையே மிரட்டி விட்டு விடுதலையடைய முடியுமென்றால் நீதிமன்றத்திடம் நீதி கோரி வரும் சாதாரணர்களுக்கு என்ன பாதுகாப்பு” என்கிறார் சந்தியா.

அதிகரித்துள்ள ஆதரவு
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முன்னரை விட அதிகளவு வரவேற்பு ஞானசாரருக்கு கிடைத்துள்ளது. தான் கூறியவை எல்லாமே நிகழ்ந்துவிட்டது என்கிற பிரச்சாரம் இலகுவாக எடுபட்டிருக்கிறது. அவரின் விடுதலையை எதிர்த்து எந்த அரசியல் சக்திகளோ, ஏன்: அவரை எதிர்த்து வந்த சிவில் அமைப்புகள் கூட ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, ஊர்வலத்தைக், கூட்டத்தை நடத்த இயலவில்லை. அவரின் விடுதலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. 

அவரை எதிர்க்காமலிருக்கும் கூட்டு மனநிலை உருவாகுமளவுக்கு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னான இலங்கையின் அரசியல் சமூகச் சூழல் உருவாகியுள்ளது. உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்  ஒரு தீர்க்கதரிசியாக ஆக்கப்பட்டுள்ளார். சிங்கள பேரினவாத அமைப்புகள் அவரை முன்னரை விட அதிகமாக கொண்டாடத் தொடங்கியுள்ளார்கள். பலவீனமுற்றிருந்த இனவாத அமைப்புகளுக்கு புதுத்தெம்பு பாய்ச்சப்பட்டிருக்கிறது. ஞானசாரர் சிறையிலிருந்து வெளியேறப் போகும் அந்த நாள் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு வெளியில் வரவேற்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கானோர் ஞானசாரருக்கு இருக்கும் பலத்தைக் காட்டியிருந்தது. பல பிரதேசங்களில் அவரின் விடுதலையைக் கொண்டாடும் முகமாக வெடி கொழுத்தி பால் சாறு பரிமாறப்பட்டதை செய்திகளில் காட்டினார்கள்.

ஈஸ்டர் தாக்குதலின் பின் அதிக புகழ் அவருக்கே உரித்தாக்கப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளிடம் பெரும் மரியாதை உருவாகியிருக்கிறது. விடுதலையாகி அடுத்த நாளே அவரை அழைத்து விருந்துகள் கொடுக்கின்றனர். பிரதான சிங்கள ஊடகங்கள் அனைத்துமே அவரின் செய்திகளுக்கும், அவர் புகழ் பாடும் கருத்துகளுக்கும், கட்டுரைகளுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்து வெளிவிடுகின்றன.

ஏனைய வழக்குகளிலும் விடுதலை?
ஞானசாரர் ஏனைய வழக்குகளில் இருந்து கூட விடுவிக்கப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 2008ஆம் ஆண்டு தலங்கம – அரலிய உயன என்கிற பிரதேசத்தில் “கல்வாரி” தேவாலயத்துக்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்து அங்குள்ளவற்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஞானசாரர் உட்பட 13 பேர் மீது வழக்கொன்று இருந்தது. அந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்ததால் சட்ட மா அதிபரால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி சிறிசேனவால் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட புதிய சட்டமா அதிபரால் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு மே 30 ஆம் திகதியன்று கொழும்பு உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து ஞானசாரரையும் 13 பேரையும் விடுவித்தது.

ஞானசாரர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் தான் முதலில் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். போது பல சேனா உள்ளிட்ட பௌத்த இயக்கங்களால் கருகிய காலத்தில் சேதப்படுத்தப்பட்ட தேவாலயங்கள் பற்றிய ஒரு பட்டியலைக் கூட ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது.

ஞானசாரரின் மீதான பரிவும், சலுகையும், வாய்ப்பும், அதிகாரமும், இன்று அரச இயந்திரங்களாலும், தனியார் நிறுவனங்களாலும், சிவில் அமைப்புகளாலும் வழங்கப்பட்டிருக்கும் போக்கு நல்ல சகுனமல்ல.

இத்தகைய  போக்கின் விளைவு என்னவென்றார் ஞானசாரர் முன்னரை விட வீரியத்துடன் இயங்க வைத்திருக்கிறது. ஆனால் ஞானசாரர் விடுதலையானவுடன் ஊடகங்களுக்கு  சொன்னது என்ன?

“இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பவற்றைப் பற்றி அப்போதே மேடைகளிலும், கூட்டங்களிலும் சத்தமாக எடுத்துச் சொன்னோம். அதற்காக பல துன்பங்களையும் அனுபவித்துவிட்டோம். நாங்கள் எச்சரித்தவை அனைத்தும் இப்போது நிரூபனமாகியிருக்கின்றன. இனி அடிப்படைவாதத்தை தோற்கடிக்க நாங்கள் பொறுமையுடனும், தூரநோக்குடனும் செயலாற்ற வேண்டியிருக்கிறது. நான் களைத்துப் போய்விட்டேன். இதன் பின்னர் அமைதியாக தியானம், ஆன்மீகம் என்பவற்றில் தான் ஈடுபடுவேன். இந்த நாட்டுக்காக நாங்கள் செய்தது போதும். நாட்டுக்காக உயிரைக் கொடுத்து எதுவும் செய்யலாம் ஆனால் முதலில் எதை செய்வதற்கும் நாடென்று ஒன்று இருக்க வேண்டும்.” என்கிறார்.

“சலகுன” நேர்காணல்
பலரும் நினைத்தார்கள் ஞானசாரர் சில நிபந்தனையில் வந்திருக்கிறார் எனவே தான் இனி இயங்க மாட்டேன் என்கிற கருத்துப்பட கூறியிருக்கிறார் என்று. ஆனால் அதன் பின்னர் வேகவேகமாக ஊடக நேர்காணல்கள், அறிக்கைகள், எல்லாம் பழையபடி காண முடிந்தது. அப்படிப்பட்ட நேர்காணலில் முக்கியமானது  27.05.2019 ஹிரு “சலகுன” நிகழ்ச்சியில் ஞானசார தேரருடன் நள்ளிரவில் நிகழ்ந்த உரையாடல். அது  2 மணித்தியாலங்களும் 11 நிமிடங்களும் நிகழ்ந்தன. துமிந்த டீ சில்வாவுக்கும் ஜனாதிபதி மன்னிப்பை வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை உள்ள நிலையில் சிறிசேனவின் எந்த கோரிக்கையும் ஏற்க தயாராக உள்ளது ஹிரு. ஹிரு தொலைகாட்சி மகிந்த ஆதரவு தொலைகாட்சி என்கிற நிலையில் மகிந்தவின் எதிர்ப்பின் மத்தியில் தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஞானசாரருக்கு ஹிரு தொலைக்காட்சியை விட பிரபலமாக இருக்கும் தெரண தொலைக்காட்சியில் தில்கா நடத்தும் “360” என்கிற நிகழ்ச்சியில் ஞானசாரரரை உரையாட வைத்திருக்க முடியும். ஆனால் ஏற்கெனவே அந்த நிகழ்ச்சியில் ஞானசாரரை அழைத்து குடிபோதையில் வாகனம் ஒட்டியது பற்றியெல்லாம் கேள்வி கேட்டு துளைத்தவர். எனவே தான் ஞானசாரரை நேர்காண உரிய நிகழ்ச்சியாக “சலகுன” நிகழ்ச்சி தெரிவு செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் 29 அன்று ரிசாத் பதியுதீனுடன் நிகழ்ந்த“சலகுன” நிகழ்ச்சி பெரும் சர்ச்சையில் போய் முடிந்தது. ஒரு கட்டத்தில் “இந்த சேனல் போதைவஸ்து வியாபாரம் செய்கிறது” என்றெல்லாம் ரிசாத் பதியுதீன் கத்தும் நிலைக்கு கொண்டு சென்றார்கள் நடத்துனர்கள். ரிசாத் பதியுதீனை அதிகம் ஆத்திரம் கொள்ளச் செய்த விடயம் நடத்துனர்கள் அவரிடம் கேள்வி கேட்டுவிட்டு அதற்கு பதில் சொல்லவிடாமல் தொடர்ந்து மாறி மாறி அடுத்ததவர் கேள்வி கேட்டு திணறடித்து அவரின் முழு பதிலையும் வழங்க சந்தர்ப்பம் அளிக்காதது தான். மிகக் கேவலமாக வகையில் ஊடக அறமற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியதாக சமூக அறிஞர்கள் பலரும் குற்றம் சாட்டினார்கள்.

ஆனால் ஞானசாரரின் இந்தப் பேட்டியில் அவரைக் குறுக்கிடாமல் முழுமையாக அவரின் உளறலையும், மிரட்டலையும், வெறுப்பு கக்கும் கருத்துக்களையும் பேச இடமளித்தார்கள். ஞானசாரர் இதோ ஆதாரம் என்று காட்டிய பல ஆவணங்களையிட்டு எந்தக் குறுக்குக் கேள்வியையும் கேட்கவில்லை.

“துருக்கியிடமிருந்து 40 மில்லியன் பணம் இந்த நாட்டுக்குள் ஏன் வந்தது? இவர்களின் சித்தாந்தத்தின் மீதான எதிர்ப்பை எதிர்த்து இயங்குகின்ற வானொலி, தொலைகாட்சி, ஊடகவியலாளர்களை சரி கட்டுவதற்காகவே இந்த பணம் வந்து சேர்ந்தது. என்னிடம் ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

துருக்கி இதனை கடுமையான தொனியில் மறுத்து “ஆதாரமற்ற அவதூறு” ( ‘The embassy of republic of Turkey wishes to place on record that the allegations made by  Ven Gnanasara are  utterly false and baseless’) என்று அறிக்கை வெளியிட்டது.

அதுபோல சவூதி புலனாய்வுப் பிரிவின் மீதும் குற்றங்களைச் சுமத்தினார். இவை ராஜதந்திர சிக்கலை ஏற்படுத்த வல்லவை.

நான் தருகிறேன் தீர்ப்பு!
இந்த நிகழ்ச்சியில் அவர் தொடங்கும் போதே 
நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மா சம்புத்தஸ்ஸ!
அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரமாகட்டும். என்று தொடங்குகிறார். இதற்கு முன்னர் அவர் மட்டுமல்ல வேறெந்த பௌத்த பிக்குமாரும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ” என்று விளித்ததைக் கண்டதில்லை.

இந்தப் பேட்டியில் இதற்கு முன்னர் அவர் கூறியவை வெளியான பத்திரிகைகளைக் கொண்டு வந்து அவை அனைத்தும் இன்று நிரூபணமாகியிருக்கிறது என்று வரிசையாக வாசித்து காட்டினார்.

எனக்கு பணம் இருந்திருந்தால் பெரிய வழக்கறிஞர்களைக் கொண்டு இதனை முகம் கொடுத்திருந்திருக்க முடியும். எனக்கு எதிராக ஒரு வழக்கல்ல பல வழக்குகள் உள்ளன. நண்பர்களையும், எதிரிகளையும் இந்த சிறைக்காலத்தில் அடையாளம் கண்டுகொண்டேன்.

நீங்கள் தியானம், ஆன்மிகம் என்பவற்றோடு நிற்கப்போவதாக அறிவித்திருந்தீர்களே என்கிற கேள்விக்கு 
“...உண்மை தான் நான் விரக்தியுற்று இருந்தேன். எனவே தான் இவற்றிலிருந்து ஒதுங்குவதாக மகாநாயக்க தேரரிடம் அறிவித்தேன். ஆனால் அவரை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது எனது பேச்சைக் கேட்டிருந்த இளைஞர்கள் பலர் வந்து கதறி அழுது புரண்டு “ஹாமதுருவே! உங்களைப் பார்த்ததும் எங்கள் தந்தை வீட்டுக்கு வந்தது போல மகிழ்ச்சி. இதைக் கைவிடாதீர்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் செய்ய வேண்டியது நிறைய உண்டு என்று வேண்டினார்கள். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு உத்வேகம் வந்தது. எப்படியோ எனது உயிர் அச்சுறுத்தலில் தான் இருக்கிறது. நாங்கள் உயிரை அர்ப்பணித்துத் தான் பிக்குவாக ஆனோம். எமது லட்சியத்துக்காக இந்தப் பணிகளை செய்து முடிப்போம் என்று முடிவெடுத்தேன்....
....தற்போதைய ஜனாதிபதி தவறென்றால் தவறு என்று நடவடிக்கை எடுக்கக் கூடியவர். தன்னை ஜனாதிபதியாக ஆக்கிய அந்த பிரதமருக்கு எதிராக என்ன செய்தார் என்று நாம் கண்டோம் அல்லவா? மகிந்தவுக்கு கூட அந்தளவு துணிச்சல் இருந்திருக்காது. ஆளுமை வேண்டும். அது இவரிடம் இருக்கிறது. பிழையானவர்களை விமர்சித்தார். வண்ணத்துப் பூச்சுகள் என்றார். நான் எனது தாயாரையும் அருகில் வைத்துக் கொண்டு ஒன்றைச் சொன்னேன். ஜனாதிபதி அவர்களே இந்த மன்னிப்பால் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடிய வகையில் பலரும் குற்றம் சுமத்துவார்கள். ஆனால் நான் உங்கள் பெயருக்கு கௌரவம் எற்படக்கூடியவகையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைத் தேடித் தருவேன் என்றேன்....”
இந்தியாவின் நரேந்திர மோடியின் வழிமுறையை ஆதர்சமாகக் கொள்ளுங்கள். என்கிறார். அதன் உள்ளர்த்தம் மோடி இந்துத்துவத்தின் பேரால் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான முஸ்லிம் எதிர்ப்பு வழிமுறைகளை இங்கும் பின்பற்றுங்கள் என்பது தான்.
“...இவர்களால் சரியாக தீர்க்க முடியாமல் போனால் நாங்கள் அதனை கையிலெடுக்க வேண்டி வரும். நாங்கள் அரசர்களாக ஆகவேண்டியதில்லை. அதற்கு தேவையான மார்க்கங்களை எங்களால் உருவாக்க இயலும்....” என்கிறார் ஞானசாரர்.
உண்மை தான் ஞானசார தேரர், போதுபல சேனா இயக்கம் என்பவை அதிகாரத்தை இலக்கு வைத்த அமைப்புகள் அல்ல. ஆனால் பேரினவாத சித்தாந்தந்த நிகழ்ச்சிநிரலை சதா உருவாக்கிக்கொண்டும், அதை நிரல்படுத்திக்கொண்டும், இருப்பவை. அந்த நிகழ்ச்சிநிரலை சிவில் தளத்தில் இயக்குபவை. அது போல அரச அதிகாரத்தை தமது நிகழ்ச்சிநிரலின் கீழ் கட்டுப்படுத்த எத்தனிப்பவை.


இந்தப் பேட்டியில் அவர் அதிகளவு நேரம் இஸ்லாமிய சித்தாந்தம், வஹாபிசம், ஜிகாத், அல்டக்கியா போன்றவை எப்படி முஸ்லிம்கள் மத்தியில் இயங்குகின்றன. பிரதான அமைப்புகள் எவை அவற்றுக்கு ஆதரவு கொடுக்கும் அரசியல்வாதிகள், இவற்றுக்காக அரபு நாடுகளில் இருந்து வந்து சேரும் பணம் என்பவை குறித்துத் தான் பேசுகிறார். இக்கட்டுரையின் அளவைக் கருத்திற்கொண்டு விரிவாக பேட்டியில் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேச இயலாது.

இன ஒடுக்கலின் நவ வடிவம்
இப்போதெல்லாம் ஒரு கலவரத்தை நடத்தக் கூடிய அளவுக்கு அரசு தயாராக இல்லை. இனவாதமும் தயாராக இல்லை. 83க்குப் பின்னர் பேரினவாதம் பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. இனியும் அப்படி நடந்தால் அதன் நட்டம் தமக்குத் தான் என்பதை அறிந்து வைத்திருக்கிறது. ஆகவே தான் அதன் செயல்வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. இனி நேரடியாக தாக்காது., பௌதீக ரீதியான அழிவுகளை நேரடியாகத் தராது. அது இப்போது நிருவனமயப்பட்டுள்ளது. நின்று நிதானமாக அதன் ஒடுக்குமுறையையும், இன அழிப்பையும், இனச்சுத்திகரிப்பையும் நுணுக்கமாக செய்யும் கட்டமைப்பை வளர்த்து வைத்திருக்கிறது. நிறுவனமயப்பட்ட கட்டமைப்புக்கு சித்தாந்த பின்புலத்தையும், நிகழ்ச்சிநிரல் தயாரிப்பையும் விநியோகிக்கும் பணியை செய்ய பொதுபலசேனா போன்ற அமைப்புகள் காலத்துக்கு காலம் வந்து மேற்கொள்ளும். ஞானசாரர் வினைத்திறனும், வீரியமும் உள்ள சமகால பேரினவாதத் தலைமை.

“பஞ்சசீலத்தை காக்காத பிக்குமாரின் குண்டியில் தார் அடிக்க வேண்டும்” என்று ஒரு முறை சேர் ஜோன் கொத்தலாவல கூறினார். அதுபோல சோமராம என்கிற பிக்குவால் பிரதமர் பண்டாரநாயக்க கொல்லப்பட்ட வேளை “நான் கட்டி வைத்த நாய்களை பண்டா அவிழ்த்துவிட்டார். இறுதியில் பண்டாவைக் குதறியது அந்த நாய் தான்” என்றார்.

இன்று சட்டத்தால் கட்டிவைக்கப்பட்ட ஒருவரை சுதந்திரமாக விடுவித்ததன் விளைவை இந்த நாடு இனி அனுபவிக்கப் போகிறது.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates