இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக் கொள்ளப்படுவது 1883ஆம் ஆண்டு நடந்த கொட்டாஞ்சேனைக் கலவரத்தைத் தான். அது போல இலங்கையின் முதலாவது இனக்கலவரமாகக் கொள்ளப்படுவது 1915 கண்டிக் கலவரத்தைத் தான். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது இனக்கலவரமாகக் அறியப்படுவது 1939இல் நாவலப்பிட்டியில் தொடங்கியக் கலவரத்தைத் தான்.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி என்பது தமிழர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை விட பழமையானது என்று நாம் கருதமுடியும். அதன் நீட்சியை தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இடைக்காலத்தில் தணிக்கச் செய்திருந்தது. அப்போராட்டமும் இரும்புக் கரம் கொண்டு இன அழிப்பை நடத்தி முடிக்கப்பட்டது. ஆக அது தணிக்க வைக்கப்பட்டதன் பின் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு தூசு தட்டி வெளியில் கிளப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நீண்டகாலமாக கோலோச்சிய தமிழர் – சிங்கள பிரச்சினை என்பது இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சினைதான். ஆக அதனை இனப் பிரச்சினையாகத் தான் வரையறுத்தோம். பௌத்த – இந்து பிரச்சினையாக தலைதூக்கவில்லை. மேலும் சிங்கள – தமிழ் இனங்களில் சிங்கள கத்தோலிக்கர்களும் இருந்தார்கள். தமிழ் கத்தோலிக்கர்களும் இருந்தார்கள். பௌத்த – இந்து முறுகல் என்பது பெரிதாக பேசுமளவுக்கு மேலெழுந்ததில்லை. பௌத்தர்கள் இந்து மதத்தை வழிபடும் மரபைக் கொண்டிருக்கிறார்கள். பௌத்த விகாரைகள் இந்து மதக் கடவுள்களை வணங்க தனியான ஏற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.
ஆனால் முஸ்லிம் சமூகத்துடனான சிங்கள பௌத்தர்களின் சமர் வெறுமனே இனத்துவ சண்டை அல்ல. இனத்தால் முஸ்லிம்களாகவும், மதத்தால் இஸ்லாமியர்களாகவும் இருக்கும் அச் சமூகத்துடனான முறுகல் என்பது இரண்டு வழியிலும் மோதலுக்கு உள்ளாபவை. முஸ்லிம்கள் இன ரீதியிலும் மத ரீதியிலும் சிங்கள பௌத்தர்களின் எதிர் தரப்பாகி விடுகிறார்கள். அதாவது முஸ்லிம்களுக்கு இது இரட்டிப்பு பிரச்சினை.
இலங்கையின் கலவரங்களை பட்டியலிடும்போது நாம் மறந்துவிட்ட ஒரு கலவரம் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது அது 1870 இல் மருதானையில் தொடங்கியது. சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் அது நிகழ்ந்தது. இந்தக் கலவரத்தையே இலங்கையின் முதலாவது கலவரமாகக் கொள்பவர்களும் உள்ளார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் இது இடம்பெறாவிட்டாலும் கொழும்பு, பாணந்துறை பகுதிகளில் இது தாக்குதல்களையும் பதட்டத்தத்தையும் சில காலம் தக்கவைத்திருந்திருக்கிறது.
மீனாட்சியின் காதல்
சிங்கள கத்தோலிக்க இளைஞருக்கும் மீனாட்சி எனப்படும் முஸ்லிம் பெண்ணுக்கும் இடையிலான காதலே இந்த பிரச்சினையின் மையம்.
14 வயதுடைய மீனாட்சியின் குடும்பம் முஸ்லிம் மதத்துக்கு மாறிய குடும்பம். மீனாட்சி ஒரு விதவைத் தாய். மொரட்டுவை கராவ சமூகத்தைச் சேர்ந்த 24 வயதுடைய செல்லஞ்சி அப்பு எனும் கத்தோலிக்க இளைஞன் மீனாட்சியின் வீட்டுக்கு வீட்டு தச்சுத் தொழிலுக்காக வந்திருந்தார். செல்லஞ்சி அப்பு மீனாட்சியுடன் காதல்கொண்டு கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். மீனாட்சியின் தாயார் தனது மகளை மீட்பதற்கு முஸ்லிம் சமூக பெரியவர்களை அணுகியிருக்கிறார். மீனாட்சியை மீட்டெடுத்து வருவதற்காக அவர்கள் தங்கியிருந்த மொரட்டுவ பிரதேசத்துக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கம்பு பொல்லுகளுடன் சென்றது.
அங்கு சென்ற அந்த கும்பலுக்கும் மொரட்டுவ பிரதேசத்து சிங்களவர்களுக்கும் இடையில் கலகம் மூண்டு இரு தரப்பிலும் பலர் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். மொரட்டுவக்கு போன முஸ்லிம் குழு காயங்களுடன் ஓடி தப்பித்து வந்துவிட்டது. வந்ததும் அவர்கள் மருதானை பள்ளிவாசலின் ஆலோசனையின்படி தமது பெண்ணை மீட்கச் சென்ற இடத்தில் தம்மை காயப்படுத்தியதாக பொலிசில் மீனாட்சியின் தாயார் சார்பில் முறைப்பாட்டை செய்தனர். அதன்படி ஆட்கடத்தல், கொள்ளையடித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற பிடியாணை விடுக்கப்பட்டது.
பொலிஸ் மா அதிபர் ஒரு பொலிஸ் குழுவை அனுப்பினார். செல்லஞ்சி அப்புவின் உறவினர்களையும், ஊரார்களையும் சந்தித்து எடுத்துச் சொல்லி அந்த சோடியை கைது செய்து கொழும்புக்கு கொண்டுவந்து மருதானை பொலிஸ் தலைமையகத்தில் தனித்தியாக தடுத்து வைத்தனர். மீனாட்சியின் தாயாரும் மாமனாரும் வந்து பார்த்தபோதும் அவர்களுடன் போக மறுத்துவிட்டார் மீனாட்சி. இவர்களின் மீது விசாரணையும் நீதிமன்றத்தில் பல நாட்கள் தொடர்ந்தது. ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்த மீனாட்சியின் தாயார் மீனாட்சியின் உண்மை வயதைத் தெரிவித்ததும் நீதிமன்றம் மீனாட்சியை விடுவித்தத்துடன் சுதந்திரமாக மீனாட்சி முடிவெடுக்க முடியும் என்று அறிவித்தது. முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 14வயது பெண்ணைத் திருமணம் முடித்தது சட்டபூர்வமானதே என்று தீர்ப்பளித்தது.
மருதானை கலகம்
இப்போது மருதானை பொலிஸ் நிலையத்துக்கு நேரெதிரில் உள்ள மருதானை சாஹிரா கல்லூரி தான் அப்போது மருதானை பள்ளிவாசலாக இருந்தது. சாஹிரா கல்லூரி 1892இல் தான் ஆரம்பிக்கப்பட்டது. 1867ஆம் ஆண்டு தான் இலங்கையின் பொலிஸ் தலைமையகம் மருதானை மருதானையில் உருவாக்கப்பட்டது.
நாள் 28.02.1870. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 200-300 பேர் மருதானை பொலிஸ் தலைமையகத்தின் வாசலில் மீனாட்சியை தம்மிடம் ஒப்படைப்பார்கள் என்று குவிந்தனர். அன்றைய பொலிஸ் மா அதிபர் ரொபர்ட் கெம்பல் (William Robert Campbell – இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபர்) வாசலுக்குச் சென்று சத்தமிட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் மேலும் அதிகரித்ததுடன் சத்தமும் கூடியது. அமைதியற்ற சூழல் அதிகரித்தது. மீண்டும் கெம்பல் வாசலுக்குச் சென்று இப்படிப்பட்ட சூழலில் பெண்ணை வெளியில் விட முடியாது என்பதை அறிவுறுத்தினார். இதனால் குழப்பமடைந்த கூட்டத்திலிருந்து கற்கள் சரமாரியாக வந்து விழுந்தன. அதில் பொலிஸ் மா அதிபரின் முகமும் காயத்துக்கு உள்ளானது. பல பொலிசார் இரத்தக் காயங்களுடன் அதனைக் கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். பொலிஸ் நிலையமும் சேதத்துக்கு உள்ளானது.
பொலிஸ் மா அதிபர் கலகத்தை அடக்குவதற்காக ஏராளமான பொலிசாருடன் கட்டுப்படுத்த முயற்சித்தும் கூட பல பொலிசார் காயங்களுக்கு உள்ளானார்கள். அதுபோல தாக்குதல் நடத்திய 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மீது கடும் தடியடிப் பிரயோகம் நடத்தி காயத்துக்குள்ளாக்கினர். இந்தத் தாக்குதலுக்கு அப்போதைய அரசாங்க சபை உறுப்பினராக இருந்த அப்துல் ரஹ்மானின் சகோதரர் அப்துல் அசீஸ் தலைமை தாங்கியிருப்பதை ரொபர்ட் கெம்பல் பதிவு செய்திருக்கிறார். அப்துல் அசீஸ் ஒரு கையில் கல்லும் மறு கையில் குர் ஆனும் தாங்கியபடி கலகத்தில் ஈடுபட்டார் என்று கெம்பல் அறிக்கையில் குறிப்பிட்டார்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி பொலிசார் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்தவற்றை சேதப்படுத்தினார்கள். அங்கு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பள்ளிவாசலும் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவப் படைப் பிரிவும் இறக்கப்பட்டது.
இதற்கிடையில் கெம்பல் 73வது படைப்பிரிவை அவசரமாக உதவிக்கு அழைத்தார். முஸ்லிம்களின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருந்தது. பெரும் கலவரமாக உருவாகக் கூடிய சாத்தியமிருந்ததால் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அன்றைய மகா முதலி டயஸ் முதலியார், அன்ரூ பெர்னாண்டோ முதலியார், சமாதான அதிகாரி கோமஸ் உள்ளிட்ட பிரமுகர்களும் ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கினார்கள். அருகில் குடியிருந்த மக்களும் கூடினர். பொலிசார் இந்த கலகத்தை அடக்க தடிகள், பொல்லுகள், வாள்களைக் கூட பயன்படுத்தியிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. 30 பேர் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானார்கள். அது போல பள்ளிவாசலில் இருந்த புனித குர் ஆன் சேதப்படுத்தப்பட்டதாக பொலிசாருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பினரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அது மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்ட போதும் அந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கலகத்தில் ஐரோப்பியர்
இந்த கலகம் குறித்த விசாரணை அறிக்கையை பொலிஸ் மா அதிபர் கெம்பல் 7.05.1870 அன்று காலனித்துவ செயலாருக்கு அனுப்பி வைத்தார். இந்த ரவுடிக் கும்பலின் உருவாக்கத்தின் பின்னால் ஐரோப்பிய தீய சக்திகளும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஐரோப்பிய முஸ்லிம்கள் காணப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜெர்மனைச் சேர்ந்த யூதர். ஏனைய ஒருவரும் தீயவர்கள். வயதான ஹோகன் என்பவர் இராணியின் (Majesty's XV Regiment) படையில் இருந்து பின்னர் இலங்கை பொலிசில் கான்ஸ்டபிளாக இணைந்துகொண்டு பின்னர் நீக்கப்பட்டவர். அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் முஸ்லிமாக மாறியிருக்கிறார்.
ஒருவர் முஸ்லிமாக மாறியிருந்த ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த ஜோன் மெக்டோனால்ட் என்கிற தடித்த இளைஞர். என்னைக் காயப்படுத்தியது இவர்கள் தான்.”
இந்தச் சம்பவத்தின் விளைவாகத் தான் இலங்கையில் முதல் தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அதே 1870ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கலகத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரதான பங்கு வகித்த இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபரான ரொபர்ட் கெம்பலின் பெயரை பொரல்லையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள பெரிய மைதானத்துக்கு சூட்டினார்கள். கெம்பல் பார்க் என்று இன்றும் அழைக்கப்படும் கொழும்பிலுள்ள பிரபலமான மைதானம் அது.
மரக்கல ஹட்டன
இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு முக்கிய நூல் 1891இல் “மரக்கல ஹட்டன” என்கிற பெயரில் ஒரு நூல் 72 கவிதைகளைக் கொண்டதாக செய்யுள் வடிவில் சிங்களத்தில் வெளியாகியிருக்கிறது. எழுதியவரின் பெயர் உறுதியாக கூற முடியாதபோதும் அதை வெளியிட்டது வீ.கரோலிஸ் அப்புஹாமி நிறுவனம் என்கிற குறிப்பு மட்டும் காணக்கிடைக்கிறது. சிங்கள பண்பாட்டு இலக்கியங்களை வரிசைப்படுத்தும்போது இந்த “மரக்கல ஹட்டன” என்கிற நூலும் அதில் ஒன்றாக முக்கியப்படுத்துவப்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் “மரக்கல ஹட்டன” என்கிற தலைப்பில் மீண்டும் நிமேஷ திவங்கர செனவிபால என்பவர் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்த நூலில் உள்ள விபரங்களை வேறு பல இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது பல தகவல் பிழைகளைக் காண முடிகிறது. அது மட்டுமன்றி மோசமான முஸ்லிம் வெறுப்புணர்ச்சியைக் கக்குவதாக அது காணப்படுகிறது. நிமேஷ எழுதியிருக்கும் ஏனைய நூல்களைப் பார்க்கும் போது அப்படி அவர் எழுதியிருப்பதில் ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு இடத்தில் இப்படி தொடங்குகிறது...
“தமிழ் சமூகத்தில் சாதிப் பிரச்சினையால் பீடிக்கப்பட்ட சக்கிலி சாதி என்கிற குறைந்த சாதியைச் சேர்ந்த தமிழர்கள் மத மாற்றம் செய்து கொண்டதன் மூலம் தான் இலங்கையின் முஸ்லிம் இனம் பெருக்கமடைந்தது” என்கிறார்.
இந்தக் கருத்தை ஏற்கனவே சேர் பொன் இராமநாதன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் இந்த இடத்தில் நினைவுகூறத் தக்கது. “இலங்கைச் சோனகர் இன வரலாறு” என்கிற தலைப்பில் 1888 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை அவர் ராஜரீக ஆசிய கழகம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியான சஞ்சிகையில் எழுதியிருந்தார். அதில் அவர்; ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருடனான ஒன்று கலப்பின் மூலமே முஸ்லிம் இனம் பெருகியதாக கூறிய கருத்து பெரும் சர்ச்சைகளுக்கும் விவாதத்துக்குள் உள்ளாகியிருந்தது. அதற்கு அப்போதைய ‘முஸ்லிம் காடியன்’ ஆசிரியர் ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ் ஒரு விரிவான பதிலை வெளியிட்டிருந்தார்.
இந்தக் கலகம் முஸ்லிம்களுக்கும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் இடையில் தொடங்கப்பட்டாலும் கூட பின்னர் பொலிசாருக்கும் முஸ்லிம் சமூகத்தவருக்குமாக பரிணமித்தது. கொலைகள் பதிவாகவில்லை ஆனால் பலரின் மீதான படுகாய சம்பவங்கள் பதிவானது. பொலிசாருடன் நடந்த மோதல்களால் வரலாற்று அரச ஆவணங்களிலும் இடம்பெற்றது. கவிதை வடிவில் சிங்கள இலக்கிய நூலாக பதிவானதால் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இலக்கிய வடிவமாக பதிவு பெற்றது. 1915ஆம் ஆண்டு கண்டியில் தொடங்கிய சிங்கள முஸ்லிம் கலவரம்; காலப்போக்கில் உண்மைகள் எப்படி திரிக்கப்பட்டு முஸ்லிம்களின் மீது பழி போடப்பட்டதோ அது போல இந்த கலகமும் பிற்காலத்தில் மேலும் திரிபுபடுத்தப்பட்டு முஸ்லிம் வெறுப்புக்கு பயன்பட்டது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...