தமிழ்நாட்டில் வாழும் மலையக அகதிகள், தேடல் ஆய்வில் என்னோடு ஒத்துழைப்பு தரும் அந்தனி மற்றும் பாலகிருஸ்ணன் |
இந்தக் கட்டடுரை மலையக மக்களின் ஒரு வரலாற்றுப் பக்கத்தை திருப்பிபார்க்கிறது. மலையக மக்கள் என அழைக்கப்படும் இந்த மக்கள் இந்திய வம்வசாவளியினர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களது பண்பாட்டு அடையாளம் இன்று ‘மலையக மக்களாக’ வியாபகம் பெற்றுள்ளது. இலங்கை மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் தொடர்ச்சியாக இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளான போது அவர்களுக்கு இரண்டு மாற்றுத்தெரிவுகள் இருந்தன.
1. 1964 செய்யப்பட்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவுக்கு திரும்புதல்
2. இலங்கைப் பூர்விகத்தமிழ் மக்கள் வாழும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சென்று குடியேறல்.
1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் அப்போதே 10 லட்சமாக இருந்த இந்திய வம்சாவளி மலையக மக்களை கூறுபோட்டது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை 5 லட்சம் அளவான இலங்கை வாழ் மலையக மக்கள் இந்திய தமிழகம் நோக்கி திரும்பினார்கள். அங்கே அவர்கள்இன்றும்; ‘தாயகம் திரும்பியோர்’ என தாமாகவும் ‘தமிழ் நாட்டின் சிலோன்காரர்கள்’ என பூர்விகத் தமிழ்நாட்டு மக்களாலும் அறியப்படுகிறார்கள்.
இலங்கையின் வடக்கு பகுதிக்கு குடியேறல், குறிப்பாக ‘வன்னி’ பெரு நிலப்பரப்பில் குடியேறல் என்பது 1970 களில் இடம்பெற்ற ஒரு போக்கு. மலையகத்தின் நுவரெலியா, கண்டி, பதுளை, களுத்துறை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து; வன்னிநோக்கி குடிபெயர்ந்தார்கள். உடல் உழைப்பை மட்டுமே நம்பி மலையகத் தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் வன்னி நிலப்பரப்பில் காடழிக்கவும், கமத்தொழில் தொழிலாளியாகவும் மட்டுமே பயன்பட்டார்கள். சிலர் வவுனியா, கிளிநொச்சி, மாங்குளம் போன்ற நகரங்களில் கடைச்சிப்பந்திகளாகவும் கைக்கூலி வேலை செய்பவர்களாகவும் மாறிப்போனார்கள். காடழித்த பிரதேசததில் ஒரு குடில், கமத்தொழில் பண்ணையில் அல்லது தனிப்பட்டவர்களிடம் கூலி வேலை என வாழ்ந்து வந்த, வாழ்ந்து வரும் இந்த மக்களை, கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் அதிகமாகவே பாதித்தது. வன்னியில் இருந்து அதிகளவு மக்கள் படகுகள் வழியாக தமிழ் நாட்டுக்குத் தப்பி சென்றார்கள்.
இவ்வாறு தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்று பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை அகதி மக்களிடத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி ‘2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 திகதி உள்ளபடி தமிழ் நாட்டில் உள்ள 117 அகதி முகாம்களில் 95219 இலங்கை அகதிகள்வசித்து வருவதாகவும், அவர்களுள் 28489 பேர்கள் நாடற்றவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சென்னைக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தாணியகர்’ சாட்சியமளித்துள்ளார். (மூலம்: *)
இந்தியாவில் அகதி முகாம்களில் வசிப்போர் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் எனில் அங்கே ‘நாடற்றவர்’ இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தனிநாடு கோரி போராட முன்வந்த இலங்கைப் பூர்விக தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற அந்தஸ்து பெற்றவர்கள். எனவே, தமிழ் நாட்டில் அகதிகளாக சென்றவர்களிடையே நாடற்றவர்களாகவும் அகதிகளாகவும் வாழும் 28489 பேர், 1970 மற்றும் 1980 களில் மலையகத்தில் இருந்து வன்னிக்கு குடிபெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெளிவு. மலையக மக்கள்தான் இலங்கை நாட்டில் குடியுரிமை பறிக்கப்பட்ட தமிழர்கள்.
இப்போது நிலைமையை சற்று கூர்ந்து அவதானித்தால், நூறு வருடங்களுக்கு முன்பு (ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில்) இந்தியாவில் இருந்து வந்த மக்கள் இந்திய பிரஜைகள் என்ற பெயரில் இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டு ‘தமிழ் நாட்டில் தாயகம் திரும்பியோர்’ ஆனார்கள். அதேநேரம் அதே அந்த ஒப்பந்தப்படி தமிழகம் செல்லாமல் மறவாழ்வு தேடி வன்னிக்கு சென்றோர் யுத்தத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி ‘தமிழ் நாட்டுக்கு தப்பியோடி அகதியானார்கள்’. ஒரு இந்திய வம்சாவளி இலங்கை மலையகத் தமிழன் இலங்கைப் பிரசையாகவும் இல்லாமல், இந்தியதமிழன் என சொல்லிக்கொண்டு இந்திய மண்ணில் நாடற்றவனாகவும் ‘அகதி’ பட்டத்துடன் வாழும் அவலம் இங்கே இடம்பெற்றுள்ளது.
சிவகாசி வெம்பக்கோட்டை அகதி முகாமில் அந்தனி குடும்பத்தாருடன் கட்டுரையாளர் |
அந்த அகதி மக்களில் ஒருவர்தான் எஸ்.ஆர்.அந்தனி. இலங்கையில், கொட்டகலை, பத்தன மவுன்ட்வேர்னன் தோட்டத்தில் கணக்குப்பிள்ளை வேலை செய்த அந்தனி ஓய்வு கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கையில் 1983ல் இன வன்முறையில் அகப்பட்டு குடும்பத்தோடு வன்னிக்கு குடிபெயர்ந்தவர். வன்னியில் இடம்றெ;ற கோரயுத்தத்தில் தனது உடமைகளை இழந்து 1990 களில் பிற்பகுதியில் படகுமூலம் தமிழ் நாட்டுக்கு தப்பியோடியவர். (இவரது ஒரு மகன் இப்போதும் இலங்கை மலையகத்தில் வாழ்ந்துவருகிறார்). தமிழ்நாட்டில், சிவகாசி நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை அகதி முகாமில் வாழ்ந்து வந்த ‘நாடற்ற’ இந்திய வம்சாவளி தமிழன்’ எஸ்.ஆர். அந்தனி. இதுபோல 28489 பேர் (அன்றைய அறிக்கையின்படி) இந்தியாவில் நாடற்றவனாக வாழும் இலங்கையின் இந்தியத் தமிழர்கள்.
எஸ்.ஆர். அந்தனி, எண்பது வயது கடந்தபோதும் தன் லட்சியத்தை விடவில்லை ‘இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி’ எனும் அமைப்பை தனது தலைமையில் உருவாக்கி தன்னோடு அகதியாக வாழ்ந்த பாலகிருஷ்ணன் எனும் தன் நண்பரை செயலாளராகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார். இவ்வாறு அகதி அமைப்புகளை உருவாக்கி தொண்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று அவலத்தை விற்றுபிழைக்கும் பல அமைப்புகள் அங்கு உண்டு. ஆனால், அந்தனி அய்யாவின் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். தான் மரணிப்பதற்கிடையில் ஒரு நாட்டின் பிரசையாக வாழ்ந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த லட்சியம். போராடினார். தனிமனிதனாக தன் குழுவோடு தமிழ்நாட்டின் பல தலைவர்களை சந்தித்தார். அவர்கள் கரைக்கு அப்பால் நடக்கும்; யுத்தத்திற்க தூபம் போட்டு;ககொண்டு இருந்தார்களே தவிர தன் முன்னே வந்து நிற்கும் ‘நாடற்ற இந்திய தமிழனை’ கண்டுகொள்ள தயாராக இருக்கவில்லை. அந்தனி ஐயா மனம் தளரவில்லை. ‘நான் நாடற்றவன். ஆனால் எனக்கு இரண்டு நாட்டு அடையாளம் உண்டு. இந்தியாவில் எனது நாடற்றவர் நிலைபோக்க யாருமில்லை. நான் இலங்கை போய் இலங்கை இலங்கை பிரசையாகவேனும் அந்தஸ்து பெற்று வாழ்ந்து மடிகிறேன் என இலங்கை வந்தார்.
2008 ஆம் இலங்கை வந்த அந்தனி அய்யா பத்திரிகை காரியாலங்களுக்கும் சென்று தன்னுடைய நிலைமையை விளக்கினார். பத்திரிகைகளில் (தினக்குரல்) அவரது நேர்காணல்கள் வந்தன. அந்தனி அய்யா பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். அந்த வகையில் கட்டுரையாளரான என்னையும் சந்தத்தார். அந்த நாட்களில்; இலங்கைப் பாராளுமன்றத்தில் 11 மலையகத் தமிழ் பிரதிநிதிகள் இருந்தனர். கட்டுரையாளரின் ஆலோசனையின் பேரில் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த இராமலிங்கம் சந்திரசேகரிடம் சென்றார். ஏனைய மலையக அரசியல்வாதிகளிடம் சென்று அந்தனி அய்யா அரசியல் பகடைக் காயாக ஆகிவிடக்கூடாது என்பதற்கதான் இந்த எற்பாடு. திட்டமிடப்பட்டது போலவே காரியம் கை கூடியது. மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் பாராளுமன்ற குழு நியமனமானது.
ஏற்கனவே 2003 ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டம் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு விண்ணப்பித்தும் இந்தியா செல்லாமல் தங்கியிருந்த 84000 பேருக்கு பிரசாவுரிமை வழங்கியிருந்தது. இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்படி சட்டத்தை திருத்தி அந்தனி அய்யா உள்ளிட்ட அகதி மக்கள் 28;489 பேருக்கும (இப்போது 31000) இலங்கை பிரசாவுரிமை வழங்க ஏற்பாடு ஆனது.
அந்தனி - திலகர்- பாலகிருஸ்ணன் |
‘தமிழ் நாட்டில் இலங்கையர்களுக்கான அகதி முகாம்களில் உள்ள இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு இலங்கைப்பிரசாவுரிமை வழங்கும் பொருட்டு 2003 ஆம் அண்டின் 35 ம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கும் எனைய வசதிகளுக்கு ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக்குழு’ தனது பணிகளை முன்னெடுத்தது.
இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான தெரிவுக்குழு பல்வேற தரப்பினரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்தது. அந்தப்பட்டில் இங்கே:
1. பி.எம். அம்சா (சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்)
2. டபிள்யு.வீ.நிசங்க (இந்திய வம்சாவளி ஆட்களைப் பதிவு செய்வதற்கான பிரதி ஆணையாளர் - குடிவரவு குடியகல்வு திணைக்களம் )
3. ஏ.சி.எம் ராசிக் - (செயலாளர், மீள்கடியமர்த்துகை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு)
4. ஐ.எ.ஹமீட் (தவிசாளர் - ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் பதிவு செய்யும் அதிகார சபை (சுநிpயை)
5. திருமதி.திரிஸ் பெரேரா - (சட்டவரைஞர்)
6. ஏ.ஜி.தர்மதாச, (ஆணையாளர் நாயகம், அட்பதிவுத் திணைக்களம்)
7. ஈ.எம்.குணசேகர (பதிவாளர் நாயகம், பதிவாளர் திணைக்களம்)
8. திருமதி. எலிசபேத் ரென் (சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலர்- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்தானிகர் ஆலயம்
9. செல்வி. சூரியகுமாரி (தலைவர் - அகதிகளுக்கான புனர்வாழவளிப்பு நிறுவனம்)
10. திரு.எஸ.ஆர்.அந்தனி, (தலைவர், இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி)
இந்தப்பட்டியலில் வரும் முதல் 9 சாட்சியாளர்களும் அதிகாரிகள். பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவோர். இறுதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணியின் தலைவர் திரு.எஸ.ஆர்.அந்தனி, நாடற்ற இந்திய தமிழன். அவரின் முயற்சியினால் இலங்கைப் பாராளுமன்ற குழு அறையிலே தனது மக்களின் அவலத்தை எடுத்துச் சொல்லிய வரலாற்றுத் தலைவன்.
இவரது வருகையின் பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்கள் தமிழகம் சென்று ஆய்வுகளைச் செய்தது. இறுதியில், 2008.09.23 அன்றும் 2009.01.08 ஆம் திகதியும் திருத்தங்களுடனான இரண்டு சட்ட மூலங்கள் அங்கீகரிக்கப்பட்டது.
‘தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழும் எந்தவொரு நரும் அவர் இலங்கையில் 1964ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக வசித்த இந்திய வம்சாவளியினராகப்பதை நிருபிப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக்கூடிவயராக இருப்பின் இச்சட்ட மூலங்களை சபாநாயகர் சான்றுபடுத்திய 2009.02.18 ஆம் திகதியில் இருந்து அவர் இலங்கைப் பிரசை என்ற அந்தஸ்தை தானாகவே பெற்றுக்கொள்வார்.’குடியிருப்பாளராக இருந்ததற்கான ஆதாரம்’ மிகவும் சாதாரணமான ஒன்றாக இருக்க வேண்டுமெனம் கருத்தினை குழு கொண்டுள்ளது. மேலும் அதற்காக சத்தியக்கடதாசியினை கூட ஏற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இணங்கியுள்ளனர். இச்சட்டங்கள் இயற்றப்பட்டதை தொடர்ந்து இந்திய வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை பிரச்சினை இனிமேலும் எழாது’ (*)
என குழு தனது இடைக்கால அறிக்கையிலே தெளிவாகக் குறிப்பிட்டது.
‘Grant of Citizenship to person of Indian origin (amendment) act No.5 of 2009
சட்டம் உருவானது. இப்போதும், இந்திய அகதி முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழன் நாற்றவர் இல்லை. அதற்கு அத்திவாரம் இட்டவர் அந்தனி அய்யா.
இலக்கை நிறைவ செய்துகொண்டு இந்தியா திரும்ப வெண்டும். இங்கே தன் ஒரு மகனோடு தங்கியிருந்த அந்தனி அய்யா நன்றி சொல்ல மீண்டும் வந்தார். ‘இலங்கை வரும் ஆர்வத்தில் அவசர அனுமதிப்பத்திரத்தில் Emergency Pass) வந்துவிட்டேன். இப்போது திரும்பிப்போக வழியில்லை. கடவுச்சீட்டு எடுக்க வேண்டும். அதற்கு பிறப்பு சான்றிதழ் இல்லை’ நீங்கள்;தான் உதவ வேண்டும்’ என வேண்டிநின்றார்.
இருபதெட்டாயிரம் தன் உறவுகளுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுக்க முன்வந்த அந்த பெருமகன் அந்தனி அய்யா ‘இலங்கை பிறப்புசான்றிதழை யுத்தத்தில் தொலைத்துவிட்ட நிலையில் எவ்வாறு இந்தியா திரும்பினார் என்பதை இன்னுமொரு கட்டுரையில் பார்க்கலாம்.
‘Grant of Citizenship to person of Indian origin (amendment) act No.6 of 2009
எனும் சட்டம் எஸ்.ஆர் அந்தனி எனம் மலையகம் பெற்ற மைந்தனின் அறுவடை என்பதை நாம் அறிந்துகொள்வோம். அதே நேரம் ஒரு நிமிடம் அந்தனி அய்யாவுக்காய் அஞ்சலி செய்வோம். கடந்த சனி (11-07-2015) எஸ்.ஆர். அந்தனி சிவகாசி, வேம்பக்கோட்டை அகதி முகாமில் ‘நாடற்றவனாக அடைக்கலம் தேடிச் சென்று இலங்கைப் பிரசையாக வாழ்ந்து தனது எண்பதாவது வயதில் காலமாகியுள்ளார்.’. மலையகம் மறந்தவிடக்கக் கூடாத இலட்சிய மனிதர் எஸ்.ஆர்.அந்தனி.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அந்தனி ஐயாவுக்கு துணையாக இருந்த பாலகிருஸ்ணன் அவர்கள் மறைவு செய்திகேட்டு அந்தனி அய்;யாவுக்கு ஆறுதல் சொல்ல முடிந்தது. தன் பெறாமகனாக நேசித்த அந்தனி அய்யாவுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தவே முடிந்தது!
* இடைக்;கால அறிக்கை - பாராளுமன்ற தெரிவுக்குழு 2009 ஜூன் 24 அச்சிடப்பட்டது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...