தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கண்டி, பதுளை மாவட்டங்களும் பிரதான மாவட்டங்களாக உள்ளன. இங்கு கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருந்தும் கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் தமிழ் மக்கள் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவை நாட வேண்டிய நிலையில் உள்ளார்கள். எனவே, இம்முறையாவது சிந்தித்துச் செயற்பட்டால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கண்டி மாவட்டத்தில் கலகெதர, ஹரிஸ்பத்துவ, பாத்ததும்பர, உடதும்பர, தெல்தெனிய, குண்டசாலை, ஹேவாஹெட்ட, செங்கடகல, மஹநுவர, யட்டிநுவர, உடுநுவர, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய 13 தேர்தல் தொகுதிகள் உள்ளன. மொத்தமாக 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். இங்கு 2013 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பின் அடிப்படையில் 10 இலட்சத்து 49 ஆயிரத்து 160 வாக்காளர்கள் உள்ளார்கள். கண்டி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம், வரை இருந்த தமிழ் வாக்காளர் தொகை இம்முறை சுமார் ஒரு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2010 பொதுத் தேர்தலில்
கண்டி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 3 இலட்சத்து 33 ஆயிரத்து 819 வாக்குகள் கிடைத்திருந்தன. 8 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 798 வாக்குகளும் 4 உறுப்பினர்களும் கிடைத்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் மனோ கணேசன், எஸ். இராஜரட்ணம் ஆகிய தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தார்கள், இவர்களில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் 23 ஆயிரத்து 33 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். எஸ்.இராஜரட்னம் 18 ஆயிரத்து 967 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும், தமிழ் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகக் கூடிய வாய்ப்புக் கிட்டவில்லை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட்டு எஸ். இராஜரட்ணம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார். இ.தொ.கா. விலிருந்து விலகிச் சென்ற அவர் சிறிது காலம் மலையக மக்கள் முன்னணியில் இருந்தார். அதன் பிறகு அமரர் சந்திரசேகரனின் காலத்தில் மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட எஸ். இராஜரட்ணம் இரண்டாவது முறையாகவும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2015 பொதுத் தேர்தலில்
இம்முறை நடைபெறும் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் .கட்சியின் சார்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமார் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார்.
மேலும், கண்டி மாவட்டத்தில் இ.தொ.கா. தனித்துப் போட்டியிடுகின்றது. முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் எஸ். அருள்சாமி தலைமையில் 15 தமிழ் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருவராவது தெரிவு செய்யப்படுவாரா?
கண்டி மாவட்டத்தில் இதுவரை காலமும் ஒரேயொரு தமிழ் உறுப்பினர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகளில் காணக் கூடியதாக உள்ளது. எனினும், இம்முறை அந்த உறுப்பினர் தொகை இரண்டாக அதிகரிக்குமா அல்லது ஒருவரையும் தெரிவு செய்து கொள்ள முடியாமற் போய்விடுமா என்ற அச்சம் தலைதூக்கியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இ.தொ.கா. தனித்துப் போட்டியிடுவதால் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விகிதாசார தேர்தல் முறை என்பதால் குறைந்த வாக்குகளை எடுத்தாலும் ஒருவர் தெரிவாகக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடும் வேலுகுமார் மத்திய மாகாண சபைத் தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் எத்தகைய செல்வாக்கு இருக்கின்றது என்பதை இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டும்.
எது எப்படியோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் உறுப்பினர்கள் தெரிவானால் அதைவிட மகிழ்ச்சிகரமான விடயம் அரசியல் ரீதியில் இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். அது தமிழ் வாக்காளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
பதுளை மாவட்டத்தில்
பதுளை மாவட்டத்தில் 9 தேர்தல் தொகுதிகள் உள்ளன. அவை மஹியங்கனை, வியலுவ, பசறை, ஹாலி–எல, ஊவா பரணகம, வெலிமடை, பண்டாரவளை, அப்புத்தளை, பதுளை ஆகியவையாகும். பதுளை மாவட்டத்தில் இம்முறை 6 இலட்சத்து 20 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தமிழ் வாக்குகளும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பதுளை மாவட்டத்தில் மொத்தமாக 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
2010 இல் பதுளை மாவட்டத்தில்
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 இலட்சத்து 3 ஆயிரத்து 689 வாக்குகளோடு 6 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 886 வாக்குகளோடு 2 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள்..
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடிவேல் சுரேஷ், வீ.சென்னன், எஸ்.சந்திரமோகன் ஆகி யோர் போட்டியிட்டிருந்தார்கள். இவர்களில் வடிவேல் சுரேஷ் 27,695 விருப்பு வாக்குகளையும், வீ.சென்னன் 7,587 விருப்பு வாக்குகளையும், எஸ். சந்திரமோகன் 6,181 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே. வேலாயுதம் 25,056 விருப்பு வாக்குகளையும், எம்.சச்சிதானந்தன் 22,277 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள். எனினும், இரண்டு கட்சிகளிலிருந்தும் தமிழ் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகவில்லை. மேலும், மலையக மக்கள் முன்னணி தனித்து நின்று ஏ.அரவிந்தகுமார் தலைமையில் அதன் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. இந்தக் கட்சிக்கு பதுளை மாவட்டத்தில் 11,481 வாக்குகள் மாத்திரம் கிடைத்திருந்தன.
பதுளை மாவட்டத்தில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் 2010ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்படாத நிலையில், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து ஊவா மாகாண முதலமைச்சரான பின்னர் அவருக்குப் பதிலாக கே. வேலாயுதம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரானார்.
2015 பாராளுமன்றத் தேர்தலில்
2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஏ.அரவிந்தகுமார் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், எம். சச்சிதானந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள். கடந்த 2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டிருந்த வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வசம் இருந்த ஊவா மாகாண சபை ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கை மாறியதன் விளைவாக மாகாண அமைச்சராக நியமனம் பெற்றுக்கொண்டார்.
எனவே, வடிவேல் சுரேஷ் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றார். இவர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி பிரதி அமைச்சராகவும் இருந்துள்ளார். மற்றுமொரு வேட்பாளரான எம். சச்சிதானந்தனும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவி வகித்தவராவார். இம்முறை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் தேசியப் பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, கண்டி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது போல, பதுளை மாவட்டத்திலும் இ.தொ.கா. தனித்து அதன் “சேவல்” சின்னத்தில் போட்டியிடுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஜெகதீஸ்வரன், கே. மாரிமுத்து ஆகியோரோடு பல தேர்தல்களைச் சந்தித்த எஸ். கனகரத்தினம் போட்டியிடுகின்றார். மேலும் ஊடகத் துறையில் நன்கு அறியப்பட்ட வி. தேவராஜ் உட்பட மொத்தமாக 11 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
பதுளை மாவட்டத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் சென்னன், சச்சிதானந்தன் ஆகிய இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். இறுதியாக வடிவேல் சுரேஷ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். கடந்த தேர்தலில் ஒருவரும் தெரிவாகவில்லை.
பதுளை மாவட்டத்திலும் தனித்து நின்று ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ள வேண்டும என்ற நோக்கத்தில் இ.தொ.கா. களமிறங்கியுள்ளது. இங்கு இ.தொ.கா. வேட்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் போட்டிக்கு மத்தியில் இரண்டு தரப்பிலிருந்தும் தலா ஒரு உறுப்பினராவது தெரிவாக வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். இங்கு தமிழ் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளிலும், சுயேச்சைக் குழுக்களிலும் பெருமளவில் போட்டியிடுவதால் வாக்குகள் பல கூறுகளாகப் பிரிந்து செல்லக் கூடிய ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனினும், சமூக அக்கறையும், உணர்வும் இருந்தால் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை நிச்சயமாக தக்க வைத்துக் கொள்ளமுடியும்
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...