Headlines News :
முகப்பு » » 200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில்

200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில்


இந்த உலகத்தில் எத்தனையோ வகையான தொழில்கள் இருக்கின்றன. எல்லாத்தொழிலுக்கும் புரோமோஷன் என்ற அம்சம் உள்ளது. ஆனால் இருநூறு வருடங்களாக பதவி உயர்வே இல்லாத ஒரு தொழில் என்றால் அது நிச்சியமாக கொழுந்து பறித்தல் தொழில் தான், ஏனெனில் அன்று காடுகளை அழித்து தேயிலை கன்றுகளை நட்டது இராமசாமி என்றால் கொழுந்து பறித்தது காமாட்சி. இன்று வரை காமாட்சியின் கொள்ளுப்பேரப்பிள்ளையும் கொழுந்து பறித்துக்கொண்டிருக்க அன்று கன்றுகளை நட்ட இராமசாமியின் வம்சம் இன்று வரை கவ்வாத்து வெட்டிக்கொண்டிருக்கிறது. அப்படியானால் இந்த உலகில் புரொமோஷன் இல்லாத தொழில் இது தானே? 

புரோமோஷனுக்கு தடை யார்?
இன்று எந்த தொழிலை எடுத்துக்கொண்டாலும் வெட்டு குத்துகளுக்கு பஞ்சமேயில்லை. காயம் உண்டாக்காமல் இரத்தம் வராமல் ஒருவரை வெட்டுவது எப்படி என்றால் நம்மவர்களுக்கு பேராசிரியர் பட்டங்கள் கொடுக்க வேண்டும். ஆனாலும் இந்த தேயிலை தொழிற்றுறையை பொறுத்தவரை தொழிலாளர்களுக்கு எமனாகவும் எதிரிகளாகவும் இருப்பது தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள் , அரசியல்கட்சிகள் ,அரசியல்வாதிகள் இவர்களா? இல்லை முதலாவது பிரதான காரணம் தொழிலாளர்களே தான். தேயிலை இருக்கும் வரை இந்த தொழிலாளர் வர்க்கம் இருக்கும் அதன் மூலம் பணம் பார்க்கலாம் கடன் கொடுக்கலாம் என்ற நம்பிக்கை உலக வங்கியிலிருந்து உள்ளூர் வங்கி வரை உள்ளது. இன்று தேயிலை பறித்தல் செயன்முறையின் நவீன தொழில்நுட்பத்தை காட்டி அதை தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்து இதோ புரொமோஷன் கொடுத்து விட்டோம் என மார்தட்டிக்கொள்கின்றன சில நிர்வாகங்கள் வேறு என்னென்ன வழிகளில் இந்த மக்களுக்கு புரொமோஷன்கள் கிடைத்துள்ளன ?
இது வரை கிடைத்தவை
ஆரம்பத்தில் வெள்ளைக்காரர்கள் கம்பளியும் சாக்கும் கொடுத்தார்கள். குடியிருக்க லயன்களும் வழங்கினார்கள் ஒன்றும் இல்லாத இந்த வர்க்கத்திற்கு அது முதல் புரொமோஷன். பின்பு தொழிற்சங்கங்கள் லயத்தின் கூரைகள் ஒழுகுவதையும் தொழிலாளர் பிள்ளைகளின் மூக்கு ஒழுகுவதையும் மேடையில் பேசி எமது உரிமைகளை பெற வேண்டுமானால் அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என வாயில் எச்சில் ஒழுக பேசினார்கள். தமிழகத்தில் தீப்பொறி ஆறுகம் என ஒரு பேச்சாளர் இருந்தாரே ? அவர் பேசத்தொடங்கினால் அனல் பறக்குமாம். அதையொற்றி பேசப்போய் ஒரு சிலர் மைக்கை எச்சிலால் நிறைத்தார்கள்.

ஆனால் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. மாறாக இந்த மக்களின் வாக்குகளை வாங்கிக்கொண்டு எம்.பி, பிரதி அமைச்சர்,அமைச்சர்,அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் என்ற புரொமோஷன்களை படிப்படியாக அவர்கள் மட்டும் பெற்றுக்கொண்டார்கள்.. ஒழுகும் லயன்களுக்கு கூரையும் இல்லை தொழிலாளர் பிள்ளைகளின் மூக்குகளுக்கு துணித்துண்டும் இல்லை.ஆனால் சந்தா என்ற பெயரில் ஒரு ஒப்பந்த பிச்சைக்கு சம்மதம் வாங்கப்படுகிறது.

கல்வி புரொமோஷன் 
அடுத்ததாக கல்விபுரட்சி ஒன்றின் மூலமாகவே இந்த சமூகம் மீட்சி பெறும் என கட்டிடங்களை கட்டிக்கொண்டே போனார்கள். பலருக்கு டீச்சர்ஸ் என்ற புரொமோஷன் இந்த சமூகத்திலிருந்து கிடைத்தது. ஆனால் அவர்களையும் மேலே படிக்கவிடாது பார்த்துக்கொண்டார்கள். அப்படியும் படித்து பட்டம் பெற்றவர்களை தமது கட்சி அரசியலில் இணைத்துக்கொண்டார்கள். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் எவருக்கும் போகமுடியாது போயிற்று. ஆங்கிலேயர் காலத்து பாடசாலை கட்டிடங்களை வைத்துக்கொண்டு தேசிய பாடசாலை, மலையக பல்கலைக்கழகம் என பேசி ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் கொமடி பீஸ் ஆனார்கள்.

வீடு புரொமோஷன்
தொழிலாளர்களுக்கு லயன் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுத்தர வேண்டும் என ஒரு சிலர் வீறுகொண்டெழுந்து இனி எவரும் லயம் என உச்சரிக்கக்கூடாது என உத்தரவு போட்டார்கள். தொழிலாளர் குடியிருப்பு என அழைக்க வேண்டுமாம். அதற்கு ஏற்றாற்போல் “ குடி” இருப்புக்காக பாடசாலைகள், வீடுகளுக்குப்பதிலாக பல பார்கள் திறக்கப்பட்டன. லயம் என சொல்லக்கூடாது அல்லவா தோட்டத்தலைவர்மார் எங்களது வீடு நீண்ட பங்களா ஆனால் கூரை மட்டும் ஒழுகும் என பெருமையாக பேச ஆரம்பித்தார்கள் , பேச வைத்தார்கள். மாடி வீடு கட்டித்தருவோம் என முழங்கியவர்கள் மலசலக்கூடங்களை வௌிப்புறமாக அதற்குப்பக்கத்திலேயே வரிசையாக கட்டி வைத்தார்கள். இரவு நேரத்தில் அவசரமாக மாடியிலிருந்து படிகட்டு வழியாக இறங்கி கதவைத்திறந்து வருவதற்கு கஷ்டப்பட்ட ஒரு சில தொழிலாளர்கள் கதவை தாழ்ப்பாள் போடாமல் கீழ் அறையிலேயே வாழ ஆரம்பித்தனர்.

காணி புரொமோஷன்
பல காலமாக பேசிக்கொண்டிருந்த காணி விடயம் தற்போது இவர்களின் தேர்தல் புரொமோஷனுக்காக டீட் என்ற பெயரில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏதோ கொடுத்தார்கள் வாங்கிக்கொண்டிருக்கிறோம் என்ற ஆறுதல் மட்டுமே தொழிலாளர்களுக்கு. ஏழு பேர்ச் மட்டும்தான் உங்களுக்கு நீங்கள் பாவிக்கும் மிகுதி நிலத்தை கொடுப்பீர்களா என்று கேட்டால் திரு திரு. ஒரு சில இடங்களில் காணிக்கு மட்டும் பதவி உயர்வு கிடைத்துள்ளது. எப்படி? இங்கு வீடு கட்டப்படும் என போர்ட் மாட்டப்பட்டு சில கற்களும் ஊன்றி வைக்கப்பட்டுள்ளன. காடு மண்டியிருந்த காணிக்கு போர்ட் புரொமோஷன்.

ஊதிய புரொமோஷன்
இவை எல்லாவற்றையும் விட தொழிலாளர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல உதவும் ஊதிய விவகாரம் இருக்கின்றதே….இவர்களின் சம்பளத்தை யார் யாரோ தீர்மானிக்கின்றார்கள். ஏதாவதொரு தொகையை பேசி முடித்தால் பேசியவர்களுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஒரேடியாக போனஸ் தொகை கிடைக்கும் வரை பேச்சுகள் தொடர்கின்றன. எல்லா தொழில்களுக்கும் வருடம் ஒரு முறை இன்கிரிமண்ட் வழங்கப்படுகிறது, ஆனால் தோட்டத்தொழிலாளர்களுக்கோ இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அடிப்படை சம்பளத்தை கூட்டுவதற்கே போராட்டம் தான்.

சங்கு ஊதி வேலைக்குச்செல்லும் சமூகம்
காலையில் பெரட்டுக்களத்திற்கு நேரத்திற்குச்செல்ல வேண்டும் என சங்கு ஊதி தொழிலாளர்களை எழுப்பும் பழக்கம் இன்றும் சில தோட்டப்பகுதிகளில் உள்ளது. அதுவும் சற்று தாமதமாக சென்றால் அன்றைய வேலைக்கு சங்கு ஊதப்பட்டு விடும்.180 வருடங்களாக இவர்களின் வாழ்க்கைக்கு சங்கு ஊதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது என்ற சொல்லலாமா? இதையும் சுட்டிக்காட்டினால் அந்த வேலைக்கும் புரொமோஷன் கொடுத்து விடுகிறோம் என்று கூறி காரை நிப்பாட்டி காலையில் ஹோர்ன் அடித்து தொழிலாளர்களை எழுப்புவார்களோ தெரியவில்லை.

சொந்தங்கள்
இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கு சொந்தங்களாக பாம்பு,அட்டை,குளவிகள் ,பூச்சிகள், சிறுத்தைகள் ,பன்றிகள் மட்டுமே உறவாடிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் காலங்களில் இந்த அனைத்து உயிரினங்களின் குணங்களையும் கொண்டு இயங்கும் நபர்கள் சொந்தம் கொண்டாட வருவார்கள். ஆக இந்த மக்களின் நிலை இப்படி இருக்கும் போது இவர்களுக்கு வாழ்க்கையில் புரொமோஷன் என்றால் அது உழைத்து களைத்து மண்ணுக்கு உரமாகிய பின்பு கிடைக்கும் சொர்க்கம் சேர் கைலாசம் சேர் தானோ?

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates