நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கி வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டு வருட சம்பள கூட்டு உடன்படிக்கை காலாவதியான நாளிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுத் தருவதாகக் கூறிய 1000 ரூபா சம்பள உயர்விற்காகத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.
உண்மையில், சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் நாள் ஒன்றுக்கு பெற்றுத் தரப்படும் என அறிவித்தது. இது முதலாளிமானர் சம்மேளனம் உடனடியாக இணங்கக் கூடிய சம்பள உயர்வாக இல்லாவிடினும் ஏனைய மலையக .தொழிற்சங்கங்களும் இ.தொ.கா. வின் இத்தீர்மானத்தை வரவேற்று அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்
கடந்த காலங்களில் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் எதிர்ப்பும், விமர்சனங்களும் கிளம்புவது வழமையாக இருந்தாலும் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக அனைத்தும் வரவேற்பை தெரிவித்திருந்தனர்
இதன் காரணமாக, தான் ஏதோ ஒரு நோக்கத்திற்காக முன்வைத்த 1000 ரூபா சம்பள உயர்வை இ.தொ. கா. எப்படியாயினும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பவை நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்திருந்தது
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் வாரத்தில் 3 நாட்கள் வேலை வழங்குவதாகவும் அதற்காக நாள் ஒன்றுக்கு 550 ரூபா வழங்குவதாகவும், ஏனைய நாட்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு ஒரு கிலோ கிராமிற்கு 40 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அறிவித்தது இதனை ஏற்கமறுத்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மெதுவாகப் பணியில் ஈடுபடுமாறு கோரின.
தோட்டத் தொழிலாளர்களும் மெல்லப் பணி செய்யும் போராட்டத்தை, 11 நாட்களாக முன்னெடுத்த நிலையில், தொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாட்டினை எட்டாமல் தோல்வி கண்டது. மெதுவாக வேலை செய்யும் போராட்டம் இடம்பெற்ற போது தோட்ட நிர்வாகங்கள் தேயிலை தொழிற்சாலைகளையும், காரியாலயங்களை மூடியும் தமது கடமை மேற்பார்வை உத்தியோகத்தர்களை பணியிலிருந்து இடைநிறுத்தியும் இருந்தன.
இந்நாட்களில் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்கவில்லை. அவற்றை தொழிலாளாகள் தேயிலை தொழிற்சாலைகளுக்கு முன்பாக வைத்துவிட்டு வந்தனர் அவை அழுகி பழுதடைந்தமை காரணமாக தோட்ட நிர்வாகங்கள் இந் நாட்களில் பாரிய நட்டத்தை எதிர்நோக்கின என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த 15 ஆம் திகதி தொழிலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் நடைமுறையில் உள்ள அடிப்படை சம்பளத்துடன் 60 ரூபாவை அதிகரித்து புதிய அடிப்படைச் சம்பளமாக 50 ரூபாவையும் இதர கொடுப்பனவுகள் 500ரூபாவையும் ஏனைய சகாய கொடுப்பனவுகளை சேர்த்து 660 ரூபாவை வழங்க முன்வந்தது இதை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததுடன் சம்பளப் பேச்சுவார்த்தையும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மெதுவாகப் பணி செய்த நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தேர்தலின் பின்னரே வழங்கப்படுமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார் முதலாளிமார் சம்மேளனம், சம்பள கூட்டு உடன் படிக்கையின் படி மாதத்தில் 75 வீதமான நாட்கள் முழு நேர வேலை செய்திருந்தால் மாத்திரமே 700 ரூபா சம்பளத்தை வழங்க முடியுமென கூறி மெதுவாக வேலை செய்த நாட்களுக்கு கொடுப்பனவை வழங்காமல் கையை விரித்துள்ளது.
தேர்தல் காலமாக இருப்பதால் குறித்த சம்பள பிரச்சினையை முன்வைத்து தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ளதையும் கடந்த சில நாட்களாக அனைத்து தரப்பினரும் வெளியிடும் ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்தி நிற்கிள்றன.
தமது ஆதரவு தொழிற்சங்கங்கள் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து வருகின்ற தோட்டத்தொழிலாளர்கள், சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாட்டையும் எட்டாத நிலையில் மீண்டும் வழமையான கடமைக்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர் தமது பணிப்போராட்டம் மூலம் நல்ல தீர்வு கிட்டுமென எதிர்பார்த்த அவர்களுக்கு இது பாரிய பின்னடைவாகும். மன வேதனையுடனும் விரக்தியுடனுமே அவர்கள் மீண்டும் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
முதலாளிமார் சம்மேளனம் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதில்லை என்ற தீர்மானத்தில் மிக உறுதியாக உள்ளது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களான இ.தொ.க. மற்றும் இலங்கை தேசிய தோட்டதொழிலாளர் சங்கம் என்பவை தமக்கிடையே முரண்பாடுகளுடன் கூடிய கருத்துக்களை சம்பள உயர்வு விடயத்தில் கொண்டுள்ளன.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...