Headlines News :
முகப்பு » » சம்பள உயர்வு; தேர்தல்வரை காத்திருக்க வேண்டுமா ?

சம்பள உயர்வு; தேர்தல்வரை காத்திருக்க வேண்டுமா ?


தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரே தீர்வொன்று வழங்கப்படுமென்று தெரிய வருகின்றது. தேர்தலின் பின்னர் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தேர்தலுக்காக இழுத்தடிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

ஏற்கனவே இடம்பெற்ற நான்கு சுற்றுப்பேச்சு வார்த்தைகளில் சம்பள உயர்வு தொடர்பாக இணக்கம் காணப்படாத நிலையில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற மற்றுமொரு பேச்சுவார்த்தை தொழிலமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

சம்பள உயர்வு தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தை இழுத்தடிப்பு தொழிலாளரிடையே பலத்த சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மட்டுமன்றி தற்போது வருமான இழப்பையும் தொழில் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் நாட் சம்பளத்தை பெறுபவர்களாக இருப்பதால் வேலை செய்யாத அல்லது மெதுவாகப் பணி செய்யும் நாட்களுக்கு சம்பளத்தை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது.

புதனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் முதலாளிமார் சம்மேளனம் ஏற்கனவே முன்வைத்திருந்த உற்பத்தித்திறன் அடிப்படையிலான சம்பள முறையையே வலியுறுத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இ.தொ.கா. சார்பில் அதன் தலைவர் முத்து சிவலிங்கம், பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், சிரேஷ்ட உபதலைவர் மாரிமுத்து ஆகியோரும், இ.தே.தோ.தொ. சங்கத்தின் சார்பில் இதன் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம், பி. இராஜதுரை, பி. விஜயகுமாரன ஆகியோரும் பெருந்தோட்டக்கூட்டுக்கமிட்டி சார்பில் எஸ். ராமநாதன், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பாக கனிஷ்க வீரசிங்க, தலைவர் சுனில் போலியத்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதனன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை பி.ப. 2.00 மணி வரை தொடர்ந்த போதும் பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் காணப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான கூட்டு ஒப்பந்தத்துக்குப் பதிலாக ஏப்ரல் மாதத்தில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் தாமதம் செய்யாமல் உடனுக்குடன் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் இம்முறை இதுவரை செய்து கொள்ளப்படவில்லை.இதனால் தொழிலாளருக்கே பல வழிகளிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள திட்டத்தின்படி வாரத்தில் முதல் மூன்று நாட்களுக்கு (திங்கள், செவ்வாய், புதன்) அடிப்படை சம்பளமாக (15கி.கி. கொழுந்துக்கு) 550 ரூபா வழங்கப்படும். ஏனைய தினங்களில் பறிக்கப்படும் கொழுந்துக்கு கி.கி. ஒன்றுக்கு 40 ரூபா என்ற அடிப்படையிலும் கொடுப்பனவு வழங்கப்படும். இந்தத்திட்டத்தையே முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்திருந்தது.

ஆனால் தோட்டத்தொழிலாளருக்கு நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கையை முன்வைத்தது. இந்த 1000 ரூபா சம்பளக்கோரிக்கையை இ.தொ.கா. முன்வைத்த போது ஏனைய மலையக தொழிற்சங்கங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இ.தொ.கா. தன்னிச்சையாகவே இது தொடர்பில் முடிவெடுத்ததாகவும் ஏனைய கட்சிகளுடன் இது பற்றி ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் நழுவல் போக்கை கடைப்பிடித்தன. அது மட்டுமின்றி 1000 ரூபா சம்பள உயர்வு வாங்கிக் கொடுக்காவிட்டால் இ.தொ.கா. விற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன.

எனினும் பின்னர் 1000 ரூபா கோரிக்கைக்கு சார்பாகவே கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இதனிடையே ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் நள்ளிரவில் இ.தொ.கா. நடத்திய சத்தியாக்கிரகமும் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்திய சத்தியாக்கிரக போராட்டமும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையிலே கடந்த புதனன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப்பேச்சு வார்த்தையின்போது தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குமாறு தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இதுவரை நிராகரித்து வந்த முதலாளிமார் சம்மேளனம் தனது புதிய சம்பளத்திட்டத்தை கைவிட்டு, நாளொன்றுக்கு மொத்த சம்பளமாக 700 ரூபாவை வழங்க முன்வந்தது. எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அதனை நிராகரித்து விட்டன.

அத்துடன் தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கையின் படி 1000 ரூபாவையே பெற்றுத்தர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தன. ஆனால் 700 ரூபாவிற்குமேல் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்ற ரீதியில் முதலாளிமார் சம்மேளனமும் பிடிவாதப்போக்கை கடைப்பிடித்தது.

இதன் காரணமாக பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகளின்றி முடிவுக்கு வந்தது.
இதனையடுத்தே தேர்தல் நிறைவடைந்தும் இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் ஒன்றுக்கு வருவதென்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

பெருந்தோட்டக்கம்பனிகள் தற்போதைய சூழ் நிலையில் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக கம்பனிகளுக்கு நட்டம் ஏற்படுவதாகவும் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது இன்றைய நிலையில் சாத்தியமில்லை எனவும் தெரிவித்ததுடன் 700 ரூபாவை மொத்த சம்பளமாக வழங்க முடியும் என்று கம்பனிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக முதலாளிமார் சம்மேளனம் முன்னர் முன்வைத்த பிரேரணையை சில திருத்தங்களுடன் மீண்டும் முன்வைத்த போதிலும் அதனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதேவேளை கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வரும் மெதுவான பணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் மெதுவான பணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாது என்றும் வருடாந்தம் வழங்கப்படுகின்ற விடுமுறை ஊக்குவிப்பு பணத்தில் இந்த நாட்களை இணைத்துக்கொள்வதாகவும் கம்பனிகள் தெரிவித்துள்ளன. எனினும் தொழிற்சங்கங்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

1000 ரூபா சம்பள அதிகரிப்பை பிரதானமாக வைத்து முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் முதலாளிமார் சம்மேளனத்துடன் நான்கு தடவைகளிலும் தோல்வியிலேயே முடிந்தன.

இந்நிலையில் பெருந்தோட்டங்களை நிருவகிக்கும் 22 கம்பனிகளுடனான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதில் முடிவு காணப்படாததால் புதனன்று கம்பனிகளின் பிரதானிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளன பிரதானிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையாக இடம்பெற்றது.

அடுத்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறுமென்று அறிவிக்கப்படாத நிலையில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. வாரத்தில் முதல் மூன்று தினங்களுக்கு 550ரூபா அடிப்படை சம்பளமாகவும் ஏனைய தினங்களில் பறிக்கப்படும் கொழுந்து 40 ரூபா என்ற அடிப்படையில் வழங்குவதாக அறிவித்திருந்த கம்பனிகள் இறுதியில் 700 ரூபாவை சம்பளமாக கொடுக்க முன்வந்தமை ஒரு திருப்பம்தான். எனினும் இந்தத்தொகை போதாது 1000 ரூபாவே வழங்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் உறுதியாக நிற்கின்றன.
தொழிற்சங்கங்கள் குறிப்பாக இ.தொ.கா. அறிவித்தபடி 1000 ரூபா சம்பளத்தைப்பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்த தொழிற்சங்கத்துக்கு உண்டு. தேர்தல் வாக்களிப்புக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நல்லதொரு சம்பள உயர்வைப்பெற்றுக்கொடுக்கா விட்டால் அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நிராகரித்துவிட முடியாது.

இது மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அமைப்புக்கள் அனைத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தல் முடியும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாக தீர்வினைப்பெற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியமாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates