ஹட்டனில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட அதிபர் - ஆசிரியர்கள் வாண்மைத்துவ விருத்திக்கான செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்ட சீடா செயற்திட்ட இணைப்பாளர் வீ. விஜயானந்தன் அவர்கள் தமது உரையில்
‘‘ஆசிரியர் தொழிற்சங்கங்கள் என்றவகையில் வெறுமனே ஆசிரியர்கள் நலன்சார்ந்த அம்சங்களில் மாத்திரம் கவனம் கொள்ளாது பின்தங்கிய சமூகங்களில் மாணவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தியிருப்பது இலங்கை கல்விச் சம்மேளனத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். ஆசிரியர் அதிபர் பரீட்சையை எதிர்நோக்கியிருக்கின்ற இன்றைய நாளில் அவர்களை பரீட்சைக்கு தயார்படுத்துவது மாத்திரமன்று ஆசிரியர் - அதிபர் வாண்மைத்துவ அபிவிருத்தி தொடர்பில் கவனம் எடுத்திருத்தல் முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டிய விடயமாகும். பின்தங்கிய சமூகங்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்துவரும் முதன்மையான தொழிற்சங்கமாக நான் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தை காண்கின்றேன். அவர்களின் பணித் தொடர வாழ்த்துகின்றேன்.” எனக் குறிப்பிட்டார்.
திரு. லெனின் மதிவானம் தமது தலைமை உரையில்:
'பின்தங்கிய சமூகத்தின் கல்வி அபிவிருத்தியை இலக்காக கொண்டு தோற்றம் பெற்ற இந்த அமைப்பு காத்திரமான சில முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது. இந்த அமைப்பில் இணைந்துள்ள பல தோழர்கள் நீண்ட காலமாக ஆசிரியர் தொழிற்சங்களிலும் ஏனைய பண்பாட்டு இயக்கங்களிலும் நேர்மையுடனும் திராணியுடனும் செயற்பட்டவர்கள். நம்பிக்கைக்குரிய பல புதிய இளைஞர்களும் இந்த தளத்தில் இருந்து செயற்படுவதற்காக எம்மோடு இணைந்துள்ளனர்.எல்லாக் காலங்களிலும் பொருந்தக் கூடிய பரிபூர்வமான ஸ்தாபன வடிவம் என்று ஒன்றில்லை. உலகில் தோற்றம் கொண்ட விடுதலை இயக்கங்களின் நிலைமைகளும் இந்த மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. எனவே எமது அமைப்பை இன்று முன்னேறிய நிலையில் சக்திமிக்க அமைப்பாக்குவதற்கான செயற்பாட்டு வடிவங்கள் குறித்து நாம் இன்னும் பரந்துபட்ட கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும்.
புதிய சவால்களை எதிர்நோக்க கூடிய இன்றைய சூழலில், அதனை புறப்பாட்டை சரியான திசையில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆசிரியர் சார்ந்த தொழிற்சங்க அமைப்பு ஒன்று உண்டா என்ற கேள்வியும் எழுகின்றது. நாம் திறந்த மனதோடு கூடி விவாதித்து ஜனநாயகத் தன்மை கொண்ட முடிவுகளையே முன்வைக்க முனைகின்றோம். ஜனநாயகம் மறுக்கப்பட்ட அமைப்பு எப்படி எதேச்சதிகாரத்திற்கு போகின்றது என்பதையும் அவ்வம்சம் எப்படி முற்றிலும் கீழ்படிந்த ஆளுமையற்ற சங்க உறுப்பினர்களை உருவாக்குகின்றது என்பதனையும் கடந்த கால அனுபங்கள் எமக்கு புதிய படிப்பினை அமைந்திருக்கின்றன.
அந்தவகையில் பரந்துபட்ட வெகுசன அமைப்பாக இவ்வமைப்பு முன்னேறிச் செல்கிறது என்ற வகையில் இதற்கு தலைமை தாங்குவது . நம்பிக்கை தருவதாக உள்ளது‘ என்றார்.
இந்நிகழ்வில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்னன் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் தொழிலதிபர் ஹரிசன் சில்வா ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். நடேசன், ஓய்வு நிலை பிரதிப் பரீட்சை ஆணையாளர் திரு. ஜி. போல் அந்தனி, வேல்ட் விஷன் நிறுவன பணிப்பாளர் நோயல் சில்வஸ்டர், சமூக ஆர்வலர் பிறைச்சூடி ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் ஜெ. சற்குருநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சென்ற வருடம் அகில இலங்கை ரிதியான தமிழ் தினப்போட்டியில்- கதைக் கூறல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி ஆர். கௌசல்யா பாராட்டப்பட்டார். அத்துடன் அந்த மாணவிக்கான உதவி நன்கொடையை லயன்ஸ் கிளப் சார்பில் இளம் தொழில் அதிபர் சுப்பிரமணியம் ஏனஸ்ட் போல் வழங்கி வைத்தார். நிகழ்ச்சிகளை சம்மேளனத்தின் உறுப்பினர் ஜோன் ஜெலுசன் தொகுத்து வழங்கினார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...