Headlines News :
முகப்பு » » கேகாலையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் - கேகாலை கல்கி

கேகாலையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் - கேகாலை கல்கி


நாட்டின் அரசியல் களநிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மலையக தமிழ் பிரதிநிதித்துவம் தொடர்பாக குறிப்பாக கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதிகள் உருவாக்கப்படல் வேண்டும் என்ற வலுவான கருத்துக்கள், ஆக்கங்கள் ஊடகங்களில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கேகாலையிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுசெய்யக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

இரத்தினபுரி மாவட்டத்தில் சுமார் 60,000 தமிழ் வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் ஒரு இலட்சம் வரையிலான தமிழ் வாக்காளர்களும் இருந்தும் இவ்விரு மாவட்டங்களிலும் தமிழ்ப் பிரதிநிதிகளை கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்ய முடியாமல் உள்ளமை வருந்தத்தக்கதாகும். இந்தநிலை இனியும் தொடரக்கூடாது. இதற்கான தடைகள் குறித்து ஆராய்வதுடன், இம்முறை எப்படியாவது தமிழ் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தவேண்டும் என்று வலுவான கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேகாலை மாவட்டத்திலும் பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவம் உருவாக்கப்படல் வேண்டியதன் அவசியமும், தேவைபாடும் எழுந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். இன்று கேகாலையில் ஒட்டுமொத்த தமிழர் வாக்குகள் 40,000 அளவில் உள்ளன. இவ்வாக்குகள் சரியாக பிரயோகிக்கின்றபொழுது கேகாலையிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தினை ஏற்படுத்த முடியும்.

கேகாலை மாவட்டத்தினை பொறுத்தவரை எட்டாக்கனியாக இருந்த சப்ரகமுவ மாகாணத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவம் கடந்த தேர்தலில் உறுதிச்செய்யப்பட்டமை கேகாலை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தினையும், சக்தியினையும் ஏற்படுத்தியிருந்தது. இது கேகாலை தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் விழிப்புணர்வு பெறத்தொடங்கிவிட்டனர் என்பதற்கான சமிக்ஞையாகவும் அமைந்திருந்தது. தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதற்கு மலையக தமிழ் கட்சிகளின் கூட்டணியும், தமிழ் பிரதிநிதித்துவத்தின் தேவையையும் அவசியத்தையும் உணர்த்திய சிவில் சமூகங்கள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பும் தமிழ் மக்களின் ஒருமித்த தமிழுணர்வும் முக்கிய பங்காக அமைந்தது எனலாம்.

இம்மாவட்டத்தில் உள்ள தெரணியகலை, எட்டியாந்தோட்டை, ருவன்வெல்லை, கலிகமுவ, அரநாயக்க, தெடிகம, கேகாலை, ரம்புக்கன, மாவனல்லை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இதில் அதிக தோட்டப்புறங்களை உள்ளடக்கியதும் தமிழர் செறிந்து வாழும் தொகுதிகளாக முறையே எட்டியாந்தோட்டை, தெரணியகலை, ருவன்வெல்லை ஆகிய தொகுதிகள் காணப்படுகின்றன. கடந்த மாகாண சபைத் தேர்தலில் மலையக கூட்டணி 8,971 வாக்குகளைப் பெற்று ஒரு உறுப்பினரை பெற்றிருந்தது.

இந்த வாக்குகள் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் பெற்ற தமிழர் வாக்கோடு ஒப்பிடுகையில் குறைவான வாக்களிப்பேயாகும். காரணம் 2008ஆம் ஆண்டு இ.தொ.கா. சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டிருந்த நிலையில் பெரும்பான்மை கட்சிகளான ஐ.ம.சு.முன்னணியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் தமிழ் உறுப்பினர்கள் போட்டியிட்டிருந்தனர். இதில் இ.தொ.கா 5,000 வாக்குகளையும் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்ட தமிழ் உறுப்பினர் 2,800 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தற்போதைய இ.தொ.கா மாகாணசபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் 10,194 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இந்த வாக்குகளை மொத்தமாக பார்க்கின்ற பொழுது 2008 மாகாண சபை தேர்தலில் கிட்டத்தட்ட 18,000 வாக்குகள் தமிழ் மக்களால் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அத்தேர்தலில் அப்போது யாரும் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்படவில்லை. ஆனால், அண்ணாமலை பாஸ்கரன் பெற்ற 10,194 வாக்குகளைவிட குறைந்த வாக்குகளை பெற்ற (அதாவது 9,500 வாக்குகளை பெற்ற) சிறிய கட்சியில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இதிலிருந்து ஒரு விடயம் உணரப்பட்டது. கேகாலையில் உள்ள தமிழ் வாக்குகளின் அடிப்படையில் பெரும்பான்மைக் கட்சியில் போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை பெறமுடியாது என்பதாகும்.

அதன் அடிப்படையிலே கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த மாகாண சபை தேர்தலில் கேகாலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக மலையக கட்சிகள் ஒன்றிணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டன. அதன் பிரகாரமாக வெற்றியும் கிடைத்தது. ஆனால், தமிழர் வாக்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஸ்கரன் 10,194 வாக்குகளை பெற்றார். ஆனால் 2012இல் 4802 விருப்பு வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார். 2008ஐ ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவரின் மிகுதி வாக்குகள் அதாவது 5,392 வாக்குகள் மாறாமல் ஐக்கிய தேசிய கட்சிக்கே அளிக்கப்பட்டிருக்கின்றன என ஊகிக்கலாம். அந்நிலையில், அம்முறை ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு தமிழ் வேட்பாளரும் களமிறங்கியிருந்தார். அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் 1200 மாத்திரமே. எனவே மிகுதி வாக்குகள் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கே அளிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆக, இத்தகைய சூழ்நிலையில் தமிழர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படவேண்டும் என்றால் தேர்தலின்போது தமிழ் உறுப்பினர்கள் சிறுபான்மைக் கட்சியில் போட்டியிட்டால் மாத்திரமே அதனை உறுதிச்செய்யமுடியும் என்பது தெளிவாகிறது. பெரும்பான்மை கட்சியில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் வாக்குகள் பெரும்பான்மை அரசியல்வாதிக்கே சாதகமாக அமைந்து, பெரும்பான்மையினரே பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேகாலையில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இறுதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பெற்ற மொத்த விருப்பு வாக்குகள் 39,000 ஆகும். எனவே, 40,000 அளவிலான தமிழ் வாக்குகளைக் கொண்ட கேகாலையில் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிச்செய்யக்கூடிய சாத்தியப்பாடு இருக்கின்றமை தெளிவாகின்றது.

அவ்வாறு தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் கடந்த மாகாண சபைத் தேர்தலைப்போன்றே இம் முறையும் மலையக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் அப்பிரதிநிதித்துவத்தினை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த 40,000 வாக்குகளில் தனித்துப் போட்டியிடுகின்றபோது அண்ணளவாக 20,000 வாக்குகள் பெறின் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியும். இந்த வாக்குகளைப் பெறுவதற்கு 2012ஐப் போன்று கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும்.

இன்று மலையகத்தில், தொ.தே.ச., ம.ம.மு., ஜ.ம.மு. என்பன தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற தனி அமைப்பை ஏற்படுத்தி செயற்பட்டுக்கொண்டிருப்பதால் கேகாலையில் இ.தொ.கா.வுடன் இணைந்த கூட்டணி சாத்தியப்பாடு இல்லாமல் போனது. இதனால் இ.தொ.கா. மட்டும் கேகாலையில் தனித்து போட்டியிடவேண்டிய நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், கேகாலை மாவட்டத்தினை பொறுத்தவரை எது எப்படியாக இருந்தாலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கட்டாயமானதாகவும் தேவைப்பாடாகவும் அமைகிறது. இன்றைய சூழ்நிலையில் மலையக அபிவிருத்தி பணியில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக சப்ரகமுவ மாகாண தமிழ் மக்கள் காணப்படுகின்றனர் என அடிக்கடி பத்திரிகைகளில் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்திற்கு அபிவிருத்தி போய்ச்சேரவேண்டுமென்றால் அது மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே போய் சேருகின்றது. கேகாலையில் பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் இன்று அபிவிருத்திற்காக ஏங்கி நிற்கின்றனர். அமைச்சரவையில் ஒதுக்கப்படுகின்ற அபிவிருத்திக்கான நிதி கடந்த காலங்களில் கேகாலை பெருந்தோட்ட பகுதிக்கு செல்லவில்லை என்பது உண்மையாகும்.

கேகாலையில் கடந்த அரசாங்கத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்களும், இரு பிரதி அமைச்சர்களும் இருந்தனர்.

ஆனாலும் இந்த இரு அமைச்சர்களினதும் வேலைத்திட்டங்கள் தோட்டப்புறங்களைச் சென்றடையவில்லை. இந்நிலையில்தான் தோட்டப்புறங்களுக்கான அபிவிருத்திக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவை அதிகமாகும். மாகாண சபை தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட இ.தொ.கா உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் அவரது சக்திக்கு ஏற்றவகையில் அவருக்கு ஒதுக்கப்படுகின்ற மாகாண சபை நிதி மூலம் தோட்டப்பகுதிகளுக்கு சிறிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றார்.

இருப்பினும், இது போதுமானதல்ல. மாகாண சபையில் ஒரு தமிழரையும், பாராளுமன்றத்தில் ஒரு தமிழரையும் பிரதிநிதிகளாக இருக்கச் செய்வதன்மூலம் கேகாலை தமிழரின் நலனும், பாதுகாப்பும் உறுதிச்செய்யப்படுவதோடு, பெருந்தோட்டப் பகுதியை அபிவிருத்திக் காணச்செய்யவும் முடியும்.

எனவே, முதலில் பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை பெறுவதென்றால் கேகாலை தமிழ் மக்கள் மத்தியில் ஒருமித்த தமிழ் உணர்வும், சிந்தனையும் உருவாகவேண்டும். இந்நிலை யில், மாகாண சபையில் வெற்றிப்பெற்ற அண்ணாமலை பாஸ்கரன் தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாக இம்முறை பாராளுமன்றத்தில் இ.தொ.கா.வின் சேவல் சின்னத்தில் தலைமை வேட்பாளராக போட்டி யிடுகின்றார். இவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates