இலங்கையில் இப்போது இனங்களுக்கிடையே சக வாழ்விற்கான அடிப்படையை உணர்ந்துள்ள தலைமைத்துவம் அமைந்துள்ளதாகத் துணிந்து கூறலாம். இந்நிலையில் பல ஆண்டுகளாக இன மோதலில் சிக்குண்டு துயரங்களை அனுபவித்த மக்கள் இப்போது துணிந்து நின்று தமக்கான தலைவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அருமையான சந்தர்ப்பமாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஒரு களமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் காணப்படுகின்றது.
இன மோதல்களின்போது பெரும்பாலான தமிழர்கள் தமக்கான அரசியல் தலைமைத்துவத்தை தீர்மானிப்பதில் போதுமானளவு கரிசனையை செய்ய முடியாதவர்களாக காணப்பட்டனர். ஆனால் நிலைமை இப்போது மாற்றமடைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை தீர்க்கமாக செயற்படுத்தக் கூடிய பண்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பது காலத்தின் தேவையாகும்.
இப்போது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுவற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான நபர்கள் தமக்குத்தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் தாங்களே தீர்க்கதரிசனமிக்க தலைவர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர்.
இலங்கையில் தேர்தலில் வாக்குகளை கேட்கும் அரசியல் தலைவர்களை பின்வருமாறு வகுக்கலாம்.
1.நீண்ட காலம் மக்களுக்கு பல்வேறு வகையிலான சேவைகள் செய்து அத்தகைய சேவைகளால் பலன்பெற்ற மக்கள் விரும்பும் தலைவர்கள்.
2 . முதலில் எனக்கு தலைமை பதவியை தரவும்; பிறகு சேவை செய்கின்றேன் என்றவாறான தலைமைகள்.
3. தந்தை அரசியல் தலைவர் அதனால் மகனும் தலைவர்தான் என்று எண்ணும் தலைவர்கள். இதில் ஊர்க்காரர் என்ற வசைப்பாட்டிலும் தங்களை ஊரில் உள்ளவர்கள் மதிக்கிறார்கள் என்ற எண்ணமுள்ள தலைவர்களும் உள்ளடங்குகின்றனர்.
4. பத்திரிகை தொலைக்காட்சிகளில் கடமை புரிவதனால் அதனூடாக பிரபல்யமாகும் தமது பெயரை வைத்துக்கொண்டு தான் பிரபலமானவர். ஆகவே, நான் மக்களுக்கு தலைமை தாங்கலாம் என்ற எண்ணத்தில் வருகை தந்துள்ள தலைவர்கள்.
5. சட்டம், அரசியல் போன்ற துறைகளில் உயர்கல்வி தராதரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களும் சமூகம் பற்றிய போதுமான தூரநோக்கு உள்ள தலைவர்கள்.
மேலே வகைப்படுத்தப்பட்டது போல வேறுபட்ட பின்னணியில் தலைவர்கள் களம் இறங்கிய போதும் இறுதியில் மக்களின் தீர்மானமே நிதர்சனமாகும். இலங்கையில் இனமோதல்களின் போது இடம்பெற்ற மக்கள் தீர்ப்பு தொடர்ந்தும் நீடிக்கப் போவதில்லை.
மக்கள் தமக்கு சேவை செய்தவர்களை தலைவர்களாக கருதுவார்களா? அரசியல் குடும்பம் என்ற அந்தஸ்துக்கு மக்கள் தொடர்ந்தும் அங்கீகாரம் தருவார்களா? தொலைக்காட்சியும் பத்திரிகையிலும் தோன்றியவர்கள் பிரபல்யமானவர் என்ற வகையிலான அங்கீகாரத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கலாமா? அல்லது கற்று உயர் பட்டங்களை பெற்றவர்கள்தான் தமக்குத் தலைமை தாங்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்களா?
ஒரு கட்டத்தில் தமது பாதுகாப்பிற்காக வீர தீர மிக்க தலைவனை ஒரு அரசியல் பாதுகாவலன் என்றவாறும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் இப்போதைய நிைலவரங்கள் அப்படி அல்ல. தேவைகள் மாற்றம் அடைந்துவிட்டன. அதற்கு ஏற்பவே புதிய அரசியல் தலைமைத்துவம் உருவாகும்.
உதாரணத்திற்கு பெருந்தோட்ட மக்களின் இப்போதைய இக்கட்டான நிலையை பார்க்கும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான திட்டங்கள் உள்ள அரசியல் தலைமைகள் மக்களிடம் பெருமளவு செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் வேலை வழங்குவதையோ வருமானத்தை வழங்குவதையோ நிறுத்திவிட்டது போல தோன்றுகிறது. வாரத்தில் இரண்டு நாள் வேலைக்கு மட்டுமே சம்பளம் என்ற முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்படியான நிலையில் அங்கு வாழ்பவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை களத்திலுள்ள தலைவர்கள் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் மக்கள் தலைவர்கள் என்போர் யார்? மக்களில் இருந்து அவர்களில் வாழ்வாதாரத்திற்கு பணி செய்து அவர்களின் நன்மதிப்பைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும். இது ஒருவகை அயராத சேவை செய்து மக்கள் விரும்பிய தலைவர்களாகிறவர்கள்.
உலகில் பல உதாரணங்களை காணலாம். மோகன் தாஸ் காந்தி – மகாத்மா காந்தி என்றழைக்கப்படுவதற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து காட்டினார். அவர் மக்களுக்கு சேவை செய்கிறேன் என கூறியவர் அல்ல. அவர் இயல்பாகவே மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்தார். மக்களை திரட்டி விடுதலைக்காகப் போராடிய அவரிடம், அதிகார வெறி காணப்படவில்லை.
மக்கள் பிரதிநிதிகளிடம், மக்களின் தேவைகளை குறுங்கால ரீதியில் தீர்த்து வைப்பதற்கான ஏதாவது திட்டங்கள் வைத்துள்ளனரா? அத்துடன் , அவர்களிடம் நீண்டகால அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் உண்டா என்பது கேள்வியாக உள்ளது.
இங்கு தீர்க்கதரிசனமிக்க தலைவர்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது என்பது பற்றியும் மேலோட்டமாக பார்ப்பது வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். உதாரணமாக இந்திய தலைவர் ஜவஹர்லால் நேரு மிகவும் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தார். நேரு ஆசியாவின் குரலாகவும் ஆசியாவின் வழிகாட்டியாகவும் விளங்கினார்.
இந்து மதத்தின் பிறப்பிடமாக 80 வீதமான இந்துக்கள் வாழ்கின்ற நாட்டை மிகவும் தீர்க்க தரிசனத்துடன் இந்தியாவின் மதச்சார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தினார். இந்தியர்களும் இது மிகவும் பயனுள்ளவாறு சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன் இந்தியாவின் புகழ் சர்வதேச ரீதியில் வியாபிப்பதற்கு இது உதவியது.
நேரு தமது வாழ்நாளில் இந்திய சமூகத்திற்கு மட்டுமன்றி ஆசியாவின் நலன்களுக்காகவும் தீர்மானங்களை முன் வைப்பதில் தீர்க்கதரிசியாகக் காணப்பட்டார்.
இலங்கையைப் பொறுத்தவகையில் அரசியல் தலைவர்களில் டி.எஸ்.சேனநாயக்க, ஆர். பிரேமதாச போன்றவர்களின் செயற்பாடுகளும் நாட்டிற்கு நல்ல பலன்களை கொண்டு வந்துள்ளன. அமரர் டி.எஸ்.சேனநாயக்க நாட்டின் தேவையை கருதி விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் கல்லோயா நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தார். இதனால் இன்றளவும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டம் இலங்கையில் நெற்களஞ்சியமாக மாறியது. அங்கு ஆயிரக்கணக்கானோர் குடியேறினர். வருடம் மூன்று போகம் நெல் விளைவிக்கப்படுகின்றது. மக்கள் செறிவாக வாழ்கின்றனர். இங்கு ஏற்பட்ட வளர்ச்சியின் பெருமைகள் டி.எஸ்.சேனநாயக்கவை சென்றடைய வேண்டும்.
அதேபோல் இந்நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினை 'வீடு' என்பதை உணர்ந்து ஆர்.பிரேமதாச பத்து லட்சம் வீடமைப்புத் திட்டத்தை முன்வைத்தார்.
அவரது திட்டத்தில் 85 வீதம் பூர்த்தி செய்யப்பட்டது. கிராமத்தில் 94 வீதமானவர்கள் தமது வீடுகளின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். வீட்டுத்திட்டத்தை விஸ்தரிக்கப் போதுமான நிறுவனங்களையும் நிர்வாக அலுவலர்களையும் தம்மோடு சேர்த்துக் கொண்டு பணிபுரிந்தார்.
இவரது பணியை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை 'புகலிட' தினம் பரிந்துரை செய்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 10ஆம் திகதி உலக புகலிட தினமாக உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.
1987ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும், உலக புகலிடத்தின் நாயகனாக பிரேமதாசா காணப்படுகின்றார்.
இந்நிலையில் ஒரு பக்கம் தங்களை அரசியல் தலைவர்கள் என்று சொல்பவர்கள் மேற்கூறிய உதாரணங்களும் மற்றும் வேறு நாடுகளில் ஏற்பட்ட சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அவதானித்து மக்களின் குறைகளை போக்க தீர்க்கதரிசனமாக செயற்பட வேண்டும். அன்று மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவர்களின் நலன் காக்கும் பணிகளுக்கு பொருத்தமான திட்டங்கள் வகுக்க வேண்டும். மக்கள் இதில் விழிப்புடனேயே இருப்பர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...