Headlines News :
முகப்பு » » தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை - செழியன்

தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை - செழியன்


மலையகக் கட்சிகள் பொதுத்தேர்தல் பிரசாரப் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. எப்படியாவது வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பிரசாரப்பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இப்போதே சில கட்சிகள் வெற்றிபெறும் ஆசனங்களைப் பற்றி அறிவிக்கத் தொடங்கிவிட்டன. இது மட்டுமன்றி, எந்தெந்த அமைச்சுக்களை பெறவேண்டும், என்னென்ன திணைக்களங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டன.

தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சில கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளான ஐ.தே.க.மற்றும் ஐ.ம.சு.கூ. என்பவற்றுடன் இணைந்து போட்டியிடுவதுடன் தனித்து சொந்த சின்னத்திலும் போட்டியிடுகின்றன. தமது வெற்றி வாய்ப்புக்களை கணிப்பீடு செய்தே பிரதான கட்சிகளுடன் இணைந் தும் தனித்தும் போட்டியிடுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக (52%) வாழ்கின்றனர். அதேவேளை, மொத்த வாக்காளர்களில் சுமார் 75 வீதமானோர் தமிழர்களாவர். வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக இந்த நுவரெலியா மாவட்டம் காணப்படுகின்றது.

இம்முறை பொதுத்தேர்தலில் 5 இலட்சத்து 34 ஆயிரத்து 150 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலின் போது 7 ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இம்முறை தேர்தலில் 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப ஒரு உறுப்பினர் அதிகரிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் சகல கட்சிகளிலிருந்தும் மொத்தமாக 6 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டி ருந்த அதேவேளை, இரண்டு பெரும்பான்மையின உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். குறிப்பாக, மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் சிந்தித்து தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் காரணமாக 6 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வாக்களிப்பு ஏனைய மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலிலும் இரண்டு தமிழ் உறுப்பினர்கள் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட மக்களின் அரசியல் ரீதியான தெளிவு அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருப்பதால் 5 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு சாத்தியம் என்று கூறப்பட்ட அதேவேளை, ஏனைய மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டது.

அதாவது, நுவரெலியா மாவட்டத் தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து வந்தாலும் ஏனைய மாவட்ட தமிழ் மக்கள் பெரும்பான்மையின வாக்காளருக்கே வாக்களித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாவட்டங்களில் தமிழர் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்கள் அச்சம், சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த நிலைமை காணப்பட்டது என்பதை எவரும் இலகுவில் மறந்தவிட முடியாது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. தமிழ் வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றனர். எவ்வாறாயினும், தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்கின்றமை இன ரீதியான செயற்பாடு என்று கூறப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள், தேவைகள் என்பவற்றுக்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை, மாத்தளை, மாத்தறை மாவட்டங்களில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் இல்லாததால் அங்குள்ள தமிழ் மக்கள் படும்பாட்டை அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் புரியும்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் எந்த பெரும்பான்மை கட்சியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் நிலைமை காணப்படுகின்றது. அதேவேளை, ம.ம.மு.யின் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் தமது மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதான கட்சிகளுடன் தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஏனைய மாவட்டங்களில் இது சற்று கடினமானதாகவே காணப்படுகிறது.

கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் பிரதான கட்சிகளுடன் இணைந்து தமிழ் சிறுபான்மைக் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றன.

இந்த சிறுபான்மை கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை, தமது கட்சித் தலைவருக்கும் ஒரு (விருப்பு) வாக்கினை அளிக்குமாறு கேட்கின்றனர். கட்சித் தலைவர் பெரும்பான்மை இனத்தவராக இருந்தாலும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர். அது மட்டுமின்றி, பத்திரிகை விளம்பரங்களிலும், துண்டுப்பிரசுரங்களிலும் கூட இதனை வெளியிடுகின்றனர்.

குறித்த கட்சிகளின் தலைமைகளும் தமக்கு ஒரு வாக்கினை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், கூறப்படுகின்றது. இது எந்தளவு உண்மையானது என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு பிரதான கட்சியும் குறித்த மாவட்டங்களில் இரண்டு தமிழ் வேட்பாளர்களை மட்டுமே வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளமை இதற்காகவே என்றும் கூறப்படுகிறது.

தவிர, பிரதான கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடும் கட்சியின் தலைமைக்கு ஒரு வாக்கினை பெற்றுக்கொடுக்கும் போது அந்தத் தலைமை அதிக பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, குறித்த வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வீதத்தை பெறுகின்றனர். இதனால் சிலவேளைகளில் அவர்கள் தெரிவுசெய்யப்படாமல் போகும் நிலைமையும் ஏற்படுகின்றது.

குறைந்தளவு தமிழ் வேட்பாளர்கள் இருக்கும் ஒரு மாவட்டத்தில் பிரதான கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஒரு வேட்பாளர் சுமார் 40முதல் 50ஆயிரம் வரையான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் எல்லோரும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வது சிரமமான காரியமாகும்.

அதேவேளை, தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் 25 முதல் 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதனூடாக குறைந்த பட்சம் ஒரு உறுப்பினரையாவது தெரிவுசெய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இதுவே சில மாவட்டங்களில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருந்தும் ஒரு தமிழ் உறுப்பினரைக் கூட தெரிவு செய்து கொள்ள முடியாமைக்கான காரணமாகும்.

பதுளை மாவட்டத்தில் 1,25,000 வாக்காளர்கள் இருந்தும் அங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது தெரிவு செய்து கொள்ள முடியாமல் போனமைக்கு இது வும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.

கண்டி மாவட்டத்தில் சுமார் 1,30,000 தமிழ் வாக்காளர்கள் இருந்தும் அங்கும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்து கொள்ளமுடியாமலிருக்கிறது. இந்த நிலைமையே இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

எனவே, கட்சித் தலைமைகள் சிந்தித்து செயற்பட்டால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். அத்துடன் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.

வாக்காளர்கள் சிந்தித்து முறையாக வாக்களிக்கவில்லை என்று மக்களை குறைகூறுவதை விடுத்து தலைவர்கள் சிந்தித்து தீர்க்கத்தரிசனமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார் ப்பு.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates