அந்நிய தேசத்தின் வளங்களைத் தம்முடைய தேசத்துக்கு சுரண்டுவதற்காக ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட தமிழர்கள்தான் மலையகத் தமிழர்கள். இலங்கையின் வரலாற்றில் நீண்ட ‡ நெடிய தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட மலையக சமூகம், இந்த நாட்டில் 200 வருடங்களாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றதே. இதனைக் கேட்க உலகில் ஒரு நாதியில்லையா என எண்ணி மலையக சமூகத்தினர் ஏங்காத நாளில்லை.
அந்நிய தேசத்துக்குச் சென்று இத்தனையாண்டுகாலம் ஒரு சமூகம் அடிமையாக வாழ்கின்றது என்றால், அது எம் மலையகத் தமிழ் சமூகம் மாத்திரமே. உலகில் வேறெந்த மூலையிலும் இவ்வாறாக இரண்டு நூற்றாண்டுகாலம் எச்சமூகமும் அடிமையாக வாழவில்லை; வாழ்ந்ததுமில்லை என்பதுதான் உண்மை.
இத்தனையாண்டுகால அடிமை வாழ்விற்கு ஒரு விடிவு ‡ விமோசனம் கிடைக்காதா என எண்ணித் தினம்தினம் கோடையிலும், குளிரிலும், வாடையிலும் தேயிலைத் தோட்டங்களில் கண்ணீர் சிந்தி கண் துடைக்க நாதியற்று தீராத பெருவலியுடன் வாழும் எம் மலையக சமூகத்தின் அடிமை வாழ்வுக்கு இந்த தசாப்தத்திலாவது விடுதலை கிடைக்கவேண்டுமென்பதே ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களினதும் எதிர்பார்ப்பு.
ஈழ மண்ணில் சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மலையக மண்ணில் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து இன்றுவரை மலையகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் என்பது பந்தாடப்பட்டே வந்துள்ளன.1831 ஆம் ஆண்டு ஆங்கிலேயரினால் உருவாக்கப்பட்ட கோல் புருக் கமரன் அரசியல் சீர்திருத்தத்தில் ஒரு பிரதிநிதித்துவம் கூட மலையகத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன்பின்னர் கொண்டுவரப்பட்ட குரு மக்கலம் சீர்திருத்தத்திலும் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிங் சீர்திருத்தத்தில்தான் முதன்முதலில் மலையகத் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. மலையகத்தை சுரண்டிய ஆங்கிலேயர்கள் மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தாததை மலையக மண் எத்தனையாண்டுகள் ஆனாலும் மறக்கப்போவதில்லை.
ஆங்கிலேயரினால் மாத்திரமல்ல, இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் அதாவது, 1949 ஆம் ஆண்டு மலையக மக்களின் அடிப்படை குடியுரிமையும் சிங்களவர்களால் பறிக்கப்பட்டது. மலையகத் தமிழ் மக்களின் துன்பங்களைச் சொல்ல வரைவிலக்கணம் கூட இல்லாத அளவுக்கு அடிமை வாழ்க்கையை இந்த 200 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
மலையகப் பெருந்தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஈழத்தின் அரசியல் தந்தை செல்வநாயகம் போன்றோரின் தீராப் போராட்டத்தின் விளைவால் மலையக மக்களின் பிரஜாவுரிமை உறுதிப்படுத்தப்பட்டது. என்றாலும், இந்த நாட்டில் வாழ்ந்த பெருந்தொகையான மலையகத்தவர்கள் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பந்தாடப்பட்டனர்.
இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் பின்னர் இந்த நாட்டில் தம்முடைய உடைமைகள், சொத்துகள், நிலம் என அத்தனை வளங்களையும் இழந்து இந்தியாவுக்குத் திரும்பநேர்ந்தது. சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்துக்கெதிராகப் போராடிய பலபேர் அந்தக் காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டம் அது. 1983 ஆம் ஆண்டு மூண்ட இனக்கலவரத்தினால் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இடம்பெயர்ந்துகெண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தலைநகரிலும், நாட்டின் ஏனைய புறங்களிலும் மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். 1983 ஆம் ஆண்டு மலையக மக்களின் மனங்களில் பதிந்த அந்த ஆறாத வடுக்கள் இன்னமும் மாறவில்லை. அதற்கு இலங்கை அரசு மருந்து போட்டதுமில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.
உண்மையில் 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் உரிமைகளைக் கேட்ட அரசியல் தலைமைகள்போல் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த செளமியமூர்த்தி தொண்டமானை தவிர்த்து வேறு தலைமைகள் இருந்திருக்கவில்லை. இருந்தவர்களும் குரல்கொடுத்திருக்கவில்லை.
வரலாற்றில் மலையக அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய பெருந்தலைவர் என்றால் அவர் தொண்டமான் மாத்திரமே என்றுதான் சொல்லவேண்டும்.
மலையகத்தில் காலத்துக்குக் காலம் தோன்றிய அரசியல் தலைமைகள் தங்களுடைய சுயநலனை அடிப்படையாகக்கொண்டே செயற்பட்டு வந்துள்ளன. முதிர்ந்த அரசியல் தலைமைகளின் வினைத்திறனற்ற பிற்போக்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் வாழும் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளை இன்றுவரை பூர்த்திசெய்ய முடியாதுள்ளது. அத்துடன், இவர்கள் தூரநோக்கான சிந்தனையில் செயற்பட்டதாக வரலாறுமில்லை.வருங்காலத்ததில் செயற்படுவார்களா என்பதும் கேள்விக்குறியே.
மலையகத்தில் மாற்று அரசியலுக்கான தேவை எழுந்துள்ளது. இத்தனையாண்டுகள் ஆட்சி செய்தவர் மலையக மக்களின் வாழ்விலோ அல்லது அடிப்படை உரிமைகளிலோ பெரிதாக ஏதும் மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை. காலங்காலமாகத் தொழிற்சங்கங்கள் ரீதியாகவும், அரசியல் கட்சிகள் ரீதியாகவும் மலையக மக்களின் உரிமைகளை விலைபேசிய அரசியல் தலைமைகளை மாற்றவேண்டிய மாற்று அரசியல் தேவையே மலையக மண்ணில் எழுந்துள்ளது.
மலையக மண்ணில் வாழும் படித்த சமூகம் மலையகத்தை வழிநடத்த வேண்டிய காலம் தற்பொழுது கனிந்துள்ளது. தொழிற்சங்க ரீதியாகப் பிரிந்துகிடக்கும் மலையக மக்களை ஒன்றுதிரட்டவேண்டிய மிகப்பெரிய கடப்பாடு இன்று எமது படித்த மலையகத் தமிழ் சமூகத்திற்கு எழுந்துள்ளது.
மாந்தர் போற்றும் மலையக மண்ணின் தனித்துவம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. முதிர்ந்த அரசியல் தலைமைகள் சுயநலன் கருதி மீண்டும் மீண்டும் மலையகத்தில் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தி இளைய சமுதாயத்தினரிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும்.
ஜரோப்பிய நாடுகளில் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும்கூட இளைய தலைமுறை உருவெடுத்துள்ளது. இந்நிலைமை இலங்கையில் வர வேண்டும் என்பது அல்ல. மாறாக, மலையக மண்ணில் புத்துயிர் பெறவேண்டும்.
மஹிந்த ராஜபக் ஆட்சிக்காலத்தில் அவருடன் ஒட்டி உறவாடிய தலைமைகள் என்ன செய்தன? தற்பொழுது புதிய அரசில் அங்கம் வகிக்கும் தலைமைகள் ஓரளவு மக்கள் மத்தியில் தலைகாட்டினாலும் இவை கடந்த ஆட்சியில் அங்கம் வகித்தன என்பதையும் அன்று ஏதும் செய்யவில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது.
தொழிற்சங்கங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மலையகத் தமிழ் சமூகத்தை ஒன்றுதிரட்டி ஒரு மாற்று அரசியல் புரட்சியைக் கட்டியயழுப்பவேண்டிய காலகட்டத்தில் வாழும் மலையகத்தின் படித்த தமிழ் சமுதாயம் விழித்தெழவேண்டும். அப்போதுதான் மலையகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப அரசியலையும், சிங்கள அரசியல்வாதிகளுக்கு விலைபோகும் அரசியல் கலாசாரத்தையும் மாற்றமுடியும்.
7 பேச்சர்ஸ் காணி மாத்திரம்தான் அவர்களின் சொத்து என்ற மமதையை உடைத்தெறிய வேண்டும். 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையக மக்களின் எண்ணிலடங்காத பிரச்சினைகள் அவர்களின் வாழ்வில் தாண்டவம் ஆடுகின்றன.
கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையகத் தொழிலாளர்களை விலைபேசிவரும் தொழிற்சங்க வாதிகளுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் ஒரு மாற்றுத் திட்டத்தை அமைக்கவேண்டும். கலாசாரம், பண்பாடு, சாதி என்ற ரீதியில் கிடப்பாரற்றுக்கிடக்கும் மலையகத்தின் தனித்தவத்தை தற்போதுள்ள அரசியல் தலைமைகள் ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை.
புரட்சி என்பது ஒரு நாளில் தோற்றம் பெறுவது அல்ல. மாறாக, நாளுக்குநாள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுவதன் எதிரொலியாக எதிரொலிப்பதேயாகும். இதற்குத் தக்க உதாரணம், ஆங்கிலேயர்கள் உகளாவிய ரீதியில் ஆதிகம் செலுத்திய காலத்தில் அந்தந்த நாடுகளில் மக்கள் அவர்களுக்கெதிராக எழுச்சியடைந்த வரலாறுகள் என்பது உடன் தோற்றம் பெற்றது அல்ல. மாறாக, பல்வேறு காலகட்டங்களில் திணிக்கப்பட்ட போராட்ட உணர்வலைகளின் விளைவாகத் தோற்றம் பெற்றதே.
150 வருடங்களாக அடிமை வாழ்வை வாழ்ந்த மலையக மக்களை 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் அடிமைகளாக மாற்றினர். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொழிற்சங்க அடிமைகளாக மாற்றினர். மலையக மக்களை மாறி மாறி அடிமைகளாக நடத்தி வந்துள்ளனரே தவிர, அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஒருசில தலைமைகளே போராடியுள்ளன.
கடந்த ஜனவரி எட்டாம் திகதியுடன் சர்வாதிகார ஆட்சிக்கு விடைகொடுத்து இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி விட்டோம் என்பது வெறும் கனவு மாத்திரமே. ஆனால், இலங்கையில் இன்னமும் இனவாதம்தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. அத்துடன், மீண்டும் மஹிந்த ராஜபக் அதிகாரத்துக்கு வரத் துடிக்கின்றார். மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வரத்துடிப்பதைத் துடைத்தெறிய நினைப்பதுபோலவே நம் மலையகத் தமிழ்ச் சமூகமும் காலங்காலமாக மலையகத்தை ஆதிக்கம் செலுத்திவரும் ஒருசில குடும்ப அரசியலையும், பணம்படைத்தவர்களின் ஆதிக்கத்தையும், தொழிற்சங்க வாதிகளின் ஆதிக்கத்தையும் துடைத்தெறிய வேண்டும். அவர்களுக்கு விடைகொடுக்கும் வகையில் மலையக மண்வாசனையுள்ள இளைய தலைமுறையினர் அரசியல் களத்தில் குதிக்கவேண்டும். கண்டிப்பாக தொழிற்சங்க ரீதியிலும் சாதிய அடிப்படையிலும் பிரிந்துகிடக்கும் மலையக மக்களை மலையக மண்வாசனையுள்ள இளைய சமுதாயத்தின் மூலமே மாற்ற முடியும். எனவே, மாற்று அரசியல் ஒன்றே மலையகத்தின் இறுதித் தீர்வு.
65 வருடகாலமாக இனவாத ஆட்சியில் புரையோடிப்போய்க்கிடக்கும் சிங்கள ஆதிக்கத்திலிருந்து மலையகத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க மாயரும் புரட்சிக்கு இளைய தலைமுறையினர் மூலமே வித்திட முடியும். இதுவே இறுதித் தீர்வுமாகும்.
நன்றி - சுடரொளி - ஜூலை 08
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...