மலையக கலை இலக்கியம் பண்பாட்டு அமைப்புகள் பற்றி சமூக பொறுப்புணர்வுடன் தேடலை, ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர் மு. நித்தியானந்தன் அவர்கள். அண்மையில் அவரால் வெளியிடப்பட்ட நூலே ‘‘கூலித்தமிழ்”. மலையக தமிழ் மக்களின் மத்தியில் தோற்றம் பெற்ற ஆரம்ப கால எழுத்து முயற்சிகளை பற்றிய தேடலையும் - பதிவையும் அது குறித்த மதிப்பீடுகளையும் - விமர்சனங்களையும் முன்வைக்கின்றது இந்நூல்.
இலங்கையில் மலையகத் தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் காலூன்றத் தொடங்கி இன்று ஒன்றே முக்கால் நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றை கண்டுள்ளனர். தென்னிந்திய தமிழ் கிராமங்களில் பிரித்தானியர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வறுமை இம்மக்களின் வாழ்வை பல்வேறு விதமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாக்கிப் புலம்பெயர்வுக்கு நிர்ப்பந்தித்தது. அதன் நெருக்கடியில் தற்காலிகமான தீர்வை நாடி இலங்கை மத்திய பிரதேசத்தின் பெருந்தோட்ட உருவாக்கத்தில் உழைப்பதற்காக வந்தனர். இங்கு தயார்நிலையில் இருந்த உற்பத்தியில் அவர்கள் பங்கெடுக்கவில்லை. அவர்களே பெரும்பாலான மலையகப் பகுதிகளில் காடழித்து தோட்டங்களை உருவாக்கினர். ஓரளவு பணத்தைப் பெற்றுக்கொண்டு ஊர்திரும்ப வேண்டும் என்ற அவர்களது விருப்பம் நிராசையாகி, இங்கேயே வாழ்ந்தாக வேண்டும் என ஆன பின்னர் மலையகத்தை மனிதவாழிடமாக ஆக்குவதற்காக உயிரைக்கொடுத்து உழைத்தனர்.
அந்தவகையில் மலையக தமிழர்கள் ஒரு ஜீவ மரணப் போராட்டத்தின் ஊடாகவே தம் வாழ்வை - இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றுள்ளார்கள். தம்மை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதற்காக அவர்கள் நடத்திய போராட்டங்கள் விலை மதிப்பற்றவை. இந்நிலையில் அவர்களிடையே தோன்றிய ஆளுமைகள், அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் பற்றிய ஆய்வுகளும் அது குறித்த தேடல்களும் அவ்வப்போது வெளிவந்த போதிலும் அவை முழுமை பெற்றதாக அமைந்திருக்காமை துரதிஸ்டவசமானதொன்றாகும். இவ்வாறான சூழலில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு முயற்சிகள் கூட மொத்தப் பெரும் சாதனையாகவே அமைந்திருக்கின்றன. இவை எதிர்கால தேடலுக்கான அடிப்படையை வழங்கியிருக்கின்றன எனலாம்.
இந்நிலையில் மலையக சமூகத்தின் அடிப்படை அந்த மக்கள் குழுமத்தின் வாழ்க்கையமைப்பே ஆகும். இத்தகைய அமைப்புருவாக்கத் தனித்துவத்துக்கு அடிப்படையாகவுள்ள விசேடித்த வரலாற்றுக்காரணி, மொழி வேறுபாடுகள், மத - பண்பாட்டு வேறுபாடுகள், ஆகியனகொண்டு நோக்குகின்றபோது மலையக மக்கள் இலங்கை தமிழ்த்தேசிய இனத்திலிருந்து வேறுபட்ட நலன்களையும் பண்புகளையும் உடைய தனித்தேசிய இனத்தவராக உள்ளனர் என்பது தெளிவு. 1930களுக்கு முன் உள்ள மலையக வரலாறு குறித்து நோக்குவதற்கு மலையக நாட்டாரிலக்கியத்தைத் தவிர உதிரியான சான்றுகளே கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை திரு. மு. நித்தியானந்தன் இந்நூலில் தமது ஆய்வுக்காக எடுத்துக்காட்டுகின்ற சான்றுகளாகும். இந்நூலில் முக்கியமாய் இடம்பெறுவனவாக அமைவன, மலையக வரலாறு குறித்த தேடலுக்கு அவசியமான நூல்களாகும். குறித்த சமூகத்தினர் தமது உற்பத்தி திறன், உற்பத்தி உறவுகள் அதனடியாக தோன்றும் சமூகநிலைப்பாடுகள் பற்றியும் சிந்திக்க தொடங்குகின்ற போது வரலாற்றுணர்வு ஏற்படுகின்றது. அதாவது தம்மைத் தாமே ஒரு சமூக குழுவினராக - நிலையான குழுவினராக உணர்கின்ற போது தான் ஒரு வரலாறு தோன்றுகின்றது. மலையக சமூகம் இந்நியதிக்கு அந்நியப்பட்டதொன்றல்ல. இந்த பின்னணியில் மலையகத்திலிருந்து முகிழ்த்த நூல்கள் - ஆளுமைகள் - பங்களிப்புகள் குறித்தே இந்நூல் கவனம் செலுத்துகின்றது. அவற்றில் முக்கியமான சில விடயங்கள் குறித்து இங்கு உரையாடுவோம்.
மலையகத்தின் முதல் நூல் என அடையாளம் காட்டப்படுகின்ற கோப்பிக் கிருஷிக் கும்மி, ஆபிரஹாம் ஜோசப் எழுதிய “தமிழ் வழிகாட்டி”, ‘‘துரைத்தன அடக்குமுறையும் கூலித்தமிழும்”, ஆகிய நூல்கள் பற்றியும் மலையகத் தொழிலாளர்களின் அடக்கு முறைகளுக்கு எதிராக முதல் குரல் கொடுத்த பத்திரிகையாளர் கருதமுத்து தியாகராசர், மலையகத்தின் ஆரம்பகால நாவல்களான சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி, கண்ணனின் காதலி ஆகியன பற்றியும், மலையக இலக்கியத்தில் முகிழ்த்த பெண் படைப்பாளிகளில் ஒருவரான அஞ்சுகம் பற்றியும் இந்நூல் கவனம் செலுத்தியுள்ளது.
கோப்பிக் கிருஷிக் கும்மி, ஆபிரஹாம் ஜோசப் எழுதிய “தமிழ் வழிக்காட்டி”, ‘‘துரைத்தன அடக்குமுறையும் கூலித்தமிழும்” ஆகிய நூல்கள் பிரித்தானிய காலனித்துவம் தோற்றுவித்த அடக்கு முறைகளை நியாயப்படுத்தி தொழிலாளர்களை அடக்கியாள்வதற்காக ஒரு அடிவருடி மனோபாவத்துடன் வெளிவந்த நூல்களாகும். இந்நூல்களில் தொழிலாளர்கள் இழிநிலையில் காட்டப்படுகின்ற அதே சமயம் அவர்களுக்கு எதிராக துரைமார் மேற்கொண்ட கொடூரமான அடக்கு முறைகளையும் சுரண்டல்களையும் நியாயப்படுத்துகின்ற போக்கு வெளிப்பட்டுள்ளது. அந்நூல்கள் துரைமார்கள் தொழிலாளர்களை பற்றி அறிந்து கொள்ள உதவுவதுடன் அவர்களோடு உரையாடுவதற்கு அவசியப்பட்ட தமிழ்மொழிப் பிரயோகத்தை இலகுவாக வழங்குவதற்காகவுமே எழுதப்பட்டுள்ளன. அந்நூல்களை ஆய்வுக்குட்படுத்துகின்ற நூலாசிரியர் மலையக மக்களுக்கு எதிரான சுரண்டலையும் அடக்குமுறைகளையும் அவ்வக் காலத்தில் மலையக மக்கள் தொடர்பில் வெளிவந்த நூல்களின் துணையோடும் யதார்த்த சூழ்நிலை சார்ந்தும் வெளிப்படுத்துகின்றார்.
மலையகம் குறித்து எழுந்த எழுத்துக்கள் சுவாரசியமான பல உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியன. இலட்சிய நோக்குடைய ஒரு சிலரது விடாமுயற்சிகளையும், மௌனப் போராட்டங்களையும் எத்தனிப்புகளையும் அவர்கள் எதிர்கொண்ட முரண்பாடுகளையும் எடுத்துக்காட்டுகின்றன. சமூகத்திற்காக தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் உழைக்க முனைந்தவர்களின் செயற்பாடுகள் பலவும் மறதிப்பாழில் அழிந்து போகின்றன. சமூக உத்வேகத்தில் பணி புரியத் துணிந்தவர்களின் சாதனைகள் மற்றும் சோதனைகள் குறித்து, அவர்களுக்குப் பின்வருகின்றவர்கள்- அவர்களின் பாதையில் நடைபோட வேண்டும் என்று விரும்புவர்கள், தெரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். அத்தகைய சிலரின் முயற்சிகளை பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்தே பத்திரிகையாளர் கருதமுத்து தியாகராசர் பற்றிய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தோட்டத் துறைசார்ந்து மலையகத் தொழிலாளர்களின் மீதான அடக்குமுறைகள், அவற்றை நியாயப்படுத்தும் வகையில் எழுந்த சட்டங்கள் தொடர்பிலான கலகக்குரலை பத்திரிகையின் ஊடாக வெளிக் கொணர்ந்ததில் கருதமுத்து தியாகராசருக்கு முக்கிய இடமுண்டு.
இந்நூல் திரு.பால் எழுதிய சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி என்ற நாவலை அறிமுகம் செய்கின்ற அதேவேளை, மலையகத்திலே மகத்தான மாறுதல்களும் போராட்டங்களும் உருப்பெற்று வருகின்ற ஒரு காலகட்டத்தை வெளிப்படுத்திக் காட்டவும் முயல்கிறது. இத்தகைய பொதுப்போக்கிலிருந்து விலகி மலையக வாழ்விலிருந்து அந்நியப்பட்ட பண்புகளுடன் ஊடாடியவர்களும் காட்டப்படுகின்றார். அதே காலச் சூழலில் தோன்றிய கண்ணனின் காதலி என்ற நாவல் மலையக வாழ்வின் தாக்கத்தை எவ்வாறு உள்வாங்கியிருக்கின்றது என்பது கவனிப்புக்குரியது. அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சூழலில் தமது கடந்த கால மரபுகளை வளர்த்தெடுப்பதில் சமகால வாழ்க்கைச் சூழல், வர்க்க நலன்கள் முக்கியத்துவம் பெற்றவையாக காணப்படுகின்றன. கடந்த கால சான்றுகள் நிகழ்கால பயன்பாடுகள் கருதி பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பயன் மதிப்பு ஓர் இலக்கிய படைப்புக்கோ அல்லது ஒரு நூலுக்கோ இல்லாது போகின்ற போது அத்தகைய சான்று சமூகத்தின் வரலாற்று நினைவுகளில் மீள முடியாத ஆழத்துக்கு புதையுண்டு போய்விடும். சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி என்ற நாவல் இவ்வாறு தான் புதையுண்டு போயிருக்கும்.
அந்தநாவலைத் தொடர்ந்து அடுத்த இரண்டாண்டு இடைவெளிக்குள் வெளிவந்த நாவலான கண்ணனின் காதலி தென்னிந்தியத் தமிழ்க் கிராம பின்னணியையும் இலங்கை மலையகத்தின் பின்னணியையும் காட்டிநிற்கின்றது. தென்னிந்திய கிராமச் சூழலில் கண்ணன் என்கின்ற தலித் இளைஞனுக்கும் கண்ணம்மா என்ற உயர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சித்திரிக்கின்றது நாவல். தென்னிந்தியக் கிராமச் சூழல் என்பதே சாதியக் கட்டிறுக்கத்தின் வலுவை வெளிப்படுத்தும் வாழ் முறையுடையது என்பதை அறிவோம். மாறாக, இலங்கை மலையகத்தில் தென்னிந்திய சாதியக் கொடூரம் சற்றுத் தளர்ந்த நிலையில் வேறுபட்ட வாழ்முறைக்கான அமைப்பாக்கத்தைப் பெற்றுள்ளமை தெளிவு. தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் தமது உத்யோகத்தர்களாலும் இதர வர்க்கத்தினராலும் இழிவாக நோக்கப்பட்டதாலும் இம்மக்களின் பொருளாதார சுரண்டலும் அடக்கு முறைகளும் சமஅளவில் காணப்பட்டமையினாலும் தென்னிந்தியாவில் காணப்பட்டது போன்றதொரு சாதிய இறுக்கம் மலையகத்தில் காணப்படவில்லை. இந்த போக்கு நாவலில் சிறப்பாகவே காட்டப்படுகின்றது. மலையகச் சூழலில் நடைப்பெறும் கண்ணனுக்கும் கண்ணம்மாவின் அக்காவுக்கும் இடையிலான திருமணம், அவள் இறந்த பின் கண்ணம்மாவுடன் தமிழ்நாடு செல்கின்ற போது கண்ணம்மாவின் உறவினர்களுடன் ஏற்படுகின்ற முரண்கள், பின் கண்ணனின் சாதிப்பிரிவினரான தலித் மக்களின் வீடுகளுக்கு உயர்சாதியினர் தீ வைத்தல் முதலிய அம்சங்கள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
மேலும் நாவலில் வருகின்ற காந்திய இயக்கம் - மக்களின் பங்கேற்பு என்பவற்றோடு மலையகத்தில் ஏற்பட்டுவந்த அரசியல் மாற்றங்கள் பற்றிய பகுதிகளையும் நூலாசிரியர் நித்தியானந்தன் சுட்டிக்காட்டத் தவற வில்லை.
இவ்விடத்தில் மிக முக்கியமானதொரு விடயம் குறித்து கவனம் செலுத்தவேண்டியுள்ளது. மலையக தொழிலாளர்கள் தென்னிந்திய கிராம சூழலிலும் சரி, மலையக சூழலிலும் சரி அவர்கள் தாங்கவென்னாத துயரங்களை அனுபவித்துள்ளார்கள் என்பது உண்மை தான். ஆனால் அத்துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் அவர்கள் போர்குணம் மிக்கவர்களாக இருந்து வந்துள்ளனர் என்பதை வரலாறு புதிய படிப்பினையாக எமக்கு தருகின்றது. இந்நாவல் தோன்றிய காலத்தில் தான் கோ. நடேசய்யர் -மீனாட்சியம்மாள் தம்பதிகளின் அரசியல் பிரவேசமும் ஸ்தாபன ரீதியான முன்னெடுப்புகளும் இடம்பெறுகின்றன.
கோ.நடேசய்யர் தம்பதிகளின் சிந்தனைகள் செயற்பாடுகள் பற்றி மலையக ஆய்வாளர்களால் பலவாறாக விளக்கப்படுகின்றன. சிலர் அவரை இலக்கிய முன்னோடியாக மட்டுமே நிறுத்துகின்றனர். வேறு சிலர் சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த சிந்தனையாளராக கருதுகின்றனர். மற்றொரு பிரிவினர் வாழ்க்கை வரலாற்றுக்குள் அடக்கி விடுகின்றனர். முந்திய அவரது சிந்தனைகளின் அடிப்படையைக் காணாமல்- அதன் தொடர்ச்சியைக் காணாமல் பல்வேறு அறிவுத் துறைகளில் செயற்கையான பிரிவுகளை ஏற்படுத்துவதாகும். பிந்தையதோ குறுகிய நோக்குடையது. புகழ்ச்சி சார்ந்தது. முழுமைக் கோட்பாட்டுக்குள் கோ.நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளின் பார்வையையும், எதிர்காலத்துக்கு தேவையாக அவர்கள் கூறியிருப்பதையும் இருசாராருமே விட்டுவிடுகின்ற தவறு இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
கோ.நடேசய்யர் தம்பதிகள் அரசியல் அரங்கில் காலடி வைத்த காலத்தில் இலங்கையில் காணப்பட்ட அரசியல் போக்கை அடையாளம் காண்பது அவசியமாகும்.
சுதந்திரத்திற்கு பிந்திய இலங்கையில் வடக்கு-கிழக்கு சார்ந்த இலங்கை தமிழ் தேசியமானது ஏகாதிபத்திய சார்புடன் முகிழ்த்து வந்தது. தனிநபர் தவறுகளுக்கும் அப்பால் அதன் ஏகாதிபத்திய காட்டிக் கொடுப்பு குணாதிசயம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது என்பதை வரலாறு எண்பித்திருக்கின்றது. அதேசமயம் வடக்கு-கிழக்கில் வீறுடன் செயற்பட்ட கொம்யூனிஸ்ட்டுகள் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான மார்க்கத்தை வர்க்க போராட்ட நோக்கில் முன்னெடுத்திருந்தனர். அதேவேளை வளர்ந்து வந்துக் கொண்டிருந்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்திருக்க வேண்டும். இடதுசாரிகள் சிங்கள மக்களுடன் ஜக்கியப்படுதல் என்பதன் மறுபுறத்தில் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற அம்சத்தையும் முன்னெடுத்திருப்பார்களாயின் தமிழ் ஜனநாயக சக்திகளை வென்றெடுத்திருக்க முடியும். இந்த வரலாற்று இடைவெளியை இடதுசாரிகளும் விட்டிருந்தார்கள் என்பதை நேர்மை மிக்க இடதுசாரிகள் சுயவிமர்சனம் செய்கின்றனர். அதேசமயம் தமிழ் தேசியவாதிகள் சிலர் தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான பார்வையை கொண்டிருந்தனர். தமிழரசுக் கட்சியின் நோக்கும் செயற்பாடுகளும் இவ்விடத்தில் நினைவு கூற வேண்டியதொன்றாகும். அதேசமயம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை இவர்கள் நிராகரித்தனர். காலப்போக்கில் இவ்வமைப்பு பிற்போக்குவாதிகளின் கூடாரமாக மாறியதுடன் தன்போக்கிலிருந்து சிதைந்து சின்னாபின்னமாகியது.
இது இவ்வாறிருக்க சிங்கள இடதுசாரிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த அதேசமயம் தமிழ் தேசியத்தின் ஏகாதிபத்திய சார்பை உதாரணம் காட்டி தமிழினவொடுக்கு முறைக்கு எதிரான பார்வையை செயற்பாடுகளை முன் வைக்க தவறினர். ‘‘இவ்வாறு சிங்கள முற்போக்குச் சக்திகள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் வலுப்பெறும்போதே சிறு தேசிய இனங்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறை வளர்ந்து வருவதனைக் கண்டுகொள்ளாதிருப்பது அல்லது தம்மிடமே பேரினவாத நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது எனும் இரண்டக நிலை அதன் தொடக்கம் முதலாகவே இருந்து வந்த வரலாற்று நிர்ப்பந்தமாய் இருந்து விட்டது. சிங்கள ஆதிக்க - பிரபுத்துவ சக்தி ஏகாதிபத்திய நலனோடு கூட்டுச் சேர்ந்திருந்தபோது, அதற்கு எதிராகப் போராட வேண்டியிருந்த சிங்களத் தேசிய முதலாளி வர்க்கம் 1915 இல் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக்கலவரத்தை ஏற்படுத்தியிருந்தது, புதிதாக வரலாற்று அரங்கில் தோற்றம் பெற்ற சிங்கள வணிகர்கள் தமக்கான போட்டியாளர்களாக வரலாற்றுப் பாரம்பரியமிக்க முஸ்லீம் வணிகர்களை முகங்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறே முப்பதுகளில் சிங்களத் தொழிலாளர்கள் துறைமுகத் தொழிலாளர்களாய் நிறைந்திருந்த மலையாளிகளுக்கு எதிராக இனவாத உணர்வூட்டப்படும் நிலை இருந்தது. சுதந்திரம் சாத்தியமான கையோடு மலையகத் தொழிலாளர்களது குடியுரிமை பறிக்கப்பட்டபோது சிங்கள இடதுசாரிகள் உருப்படியாக எந்தப் போராட்டத்தையும் பேரினவாத அரசுக்கு எதிராக மேற்கொள்ளவில்லை (ந.இரவீந்திரன்.2012).
இவ்வாறானதோர் சூழலில் பேரினவாதத்தை அரசியல் தளத்தில் சரியாக அடையாளம் கண்டு அதற்கு எதிரான மலையக தொழிலாளர்களை அமைப்பாக்கம் செய்தவர் நடேசய்யர் - மீனாட்சியம்மாள் தம்பதிகளாவார். அத்தகைய போராட்டத்திற்கு சிங்கள முற்போக்கு சக்திகளையும் அணிதிரட்டுவதற்கான மிகத் தெளிவான பார்வையை முன் வைத்தவர்கள் இவர்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் தான் மலையக மக்களிடையே ஒரு உத்வேகத்தை ஊட்டியதுடன் அவர்களின் சமூக உருவாக்கத்திற்கான அடிப்படையை வழங்கியிருந்தது. நடேசய்யர் தம்பதிகள் தொடக்கி வைத்த இந்த செல்நெறியை பின் வந்த காலங்களில் வெளிப்பட்ட திரு. இளஞ்செழியன் போன்றவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் இடதுசாரிகள் அரசியல் தளத்திலும் பிரயோகித்தனர் என்ற போதிலும் அது முழுமையடைந்ததாக இல்லை.
நடேசய்யர் தம்பதிகளின் இந்த வீச்சு மலையகத்தில் மண்ணை நேசித்து சமூகமாற்றத்திற்காக நம்பிக்கையை தோற்றுவிக்க கூடிய ஒரு போக்கை தோற்றுவித்தது எனலாம். அவ்வாறே, இந்நிலைப்பாட்டிற்கு எதிராக தோன்றிய அரசியல் கலை இலக்கிய போக்குகள் இலங்கை மலையகத்தை இந்திய மாநிலத்தின் ஒரு பகுதியாக்கும் முனைப்பில் தோன்றிய இந்திய விஸ்தரிப்புவாதமாகும். இந்நிலையில் மலையகம் குறித்து வெளிவருகின்ற ஆய்வுகள் மலையகத்தின் வளமான திசையை நோக்கி நகர்த்தக் கூடியதாக அமைந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். மேற்குறிப்பிட்ட கண்ணனின் காதலி என்ற நாவலிலும் இந்த அம்சம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இக்காலம் பற்றிய ஆய்வுகளில் இவ்விடயம் முனைப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்நூலின் இறுதிக் கட்டுரையாக அஞ்சுகம் என்ற கணிகையர் பற்றிய வரலாறு. இந்துசமய வழக்கின் படி, தேவதாசி முறை என்ற வழக்கம் பன்நெடும் காலமாக இருந்து வந்திருக்கின்றது. தேவதாசி முறை என்ற அம்சம் குறிப்பிட்ட சாதி பெண்கள் பாலியல் ரீதியான - உழைப்பு ரீதியான சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் உட்படுவதற்கு ஏதுவாக அமைந்தது. இந்த வாழ்க்கை முறைக்குள் தோன்றியவர்களில் ஓரளவு வசதி படைத்த பெண்கள் சிலர் கல்வியறிவும் எழுத்தாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். அந்தவகையில் ஒரளவு வசதியும் வாய்ப்பும் பெற்ற வாழ்க்கைச் சூழலிலிருந்து வந்தவர் தான் அஞ்சுகம் என்ற கணிகையர். உருத்திர கணிகையர் மரபினை முற்று முழுதாக ஏற்றுக் கொண்ட அஞ்சுகம், ‘உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு‘ என்ற நூலை எழுதியுள்ளார். பொதுவாகவே தேவதாசியர்களால் எழுதப்பட்ட எழுத்துக்களை நோக்குகின்ற போது தேவதாசி வாழ்க்கை முறையை அழகுப்படுத்தியும் - சமரசப்படுத்தியும் காட்டுபவையாகவே அமைந்திருக்கின்றன. தம்மை ஆசைநாயகிகளாக வைத்திருந்த ஆடவர்களை புனிதப்படுத்திக் காட்டுகின்ற போக்கே இப்படைப்புகளில் முனைப்பு பெற்று காணப்படுகின்றது. அவ்வாடவர்களில் தங்கி வாழ்கின்ற நிலையும் சமூக பாதுகாப்பற்ற நிலையும் இவர்களின் எழுத்துக்களில் இந்த சமரசப் போக்கு முனைப்பு பெறுவதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்திருக்கலாம்.
இதற்கு மாறாக, பெண் விடுதலை சார்ந்த கருத்துக்களின் வளர்ச்சி, இயக்கங்களின் தோற்றம் - குறிப்பாக பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் என்பன கொண்டு வந்து சேர்த்த தாக்கங்கள் காரணமாக தேவதாசிகளின் வாழ்க்கை போக்குகளிலும் மாற்றங்கள் தோன்றத் தொடங்கின. இந்த பின்னணியில் கணிகையர் குலத்தில் தோன்றிய மூவாலூர் இராஜாமிர்தம்மையார், மணியம்மையார் முதலானோர் ஆளுமைமிக்க எழுத்தாளர்களாகவும் சமூக செயற்பாட்டாளர்களாகவும் திகழ்ந்துள்ளனர். இவர்களின் சிந்தனையிலும் எழுத்திலும் தேவதாசி முறையினடியாக தோன்றிய சுரண்டலை, ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பெண்ணிய இயக்கங்கள் சில இவ்வழுத்துக்களை பதிவாக்க முனைந்திருப்பதும் குறிப்பிடத்தக்தொன்றாகும். அவ்வாறே பிற்காலங்களில் வெளிவந்த எழுத்துக்களிலும் இவ்வாழ்வியல் அம்சங்கள் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, டானியலின் இருளின்கதிர்கள் என்ற குறு நாவல் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கி வைத்திருந்த பாலியல் தொழிலாளர்கள் பற்றி சிறப்பாக சித்திரிக்கின்றது.
அந்தவகையில் அஞ்சுகம் பற்றிய பதிவுகளை இந்நூல் வெளிக் கொணர்வது முக்கியமான அம்சமாகும். ஆனால் அஞ்சுகத்தை மலையகத்தின் முதல் பெண் ஆளுமையாக முன்னிறுத்துகின்ற போது அதன் பலவீனமான பக்கமே வெளிப்படுவதாக தோன்றுகின்றது. மலையக இலக்கியத்தில் முதல் பெண் கவிஞர், கணிகையர் குல வாழ்க்கையை வெளிப்படுத்தியவர் என்றவகையில் அஞ்சுகம் பற்றிய பதிவுகள் கவனத்திலெடுக்கப்பட வேண்டியது அவசியமானதொன்றாகும். அதே சமயம் சமூக முரண்களை சரியான திசையில் அடையாளம் கண்டு, அதற்கு எதிராக உழைக்கும் மக்களை ஸ்தாபனமயப்படுத்தியதில் மீனாட்சியம்மாள் முக்கியமானவர். அவர் தேசபக்தன் (08.02.1929) பத்திரிக்கையில் ‘ஸ்திரிகள் பக்கம்‘ என்ற பகுதியில் டாக்டர் முத்து லட்சுமி அம்மாள் பற்றி எழுதிய கட்டுரையில் தேவதாசி ஒழிப்பு முறையின் அவசியம் குறித்தும் எழுதியிருக்கின்றார். அதே பத்திரிகையில் பெண்ணுரிமை தொடர்பிலான கட்டுரைகளையும் ஒரு அநாதை பெண்ணின் உண்மைக் கதை (எழுத்தாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை) என்ற விவரணத்தையும் தொடராக வெளியிட்டிருக்கின்றார். அந்தவகையில் மலையகத்தில் மாத்திரமன்று முழு இலங்கையிலும் தோன்றிய சமூகமாற்றத்திற்கான முதல் பெண் குரலாக - ஆளுமையாக நாம் மீனாட்சியம்மாளையே கொள்ள வேண்டியிருக்கின்றது.
இந்நூலில் காணப்படுகின்ற பிறிதொரு முக்கிய அம்சம், மலையக இலக்கியத்தில் இன்று முளைவிட்டுள்ள மத்தியதர வர்க்க நலன்கள், அதனடியாகத் தோன்றும் சிந்தனைகள் யாவும் தனிநபர் வாதத்தை-கதாநாயக வாதத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் யார் பெரியவர் என்ற போட்டியில் எழுகின்ற முரண்பாடுகள் காரணமாக எழுத்தாளர்களையும் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்கின்ற அல்லது பிழையாக காட்ட முனைகின்ற குழுவாத இழுபறிநிலையும் தோன்றியிருக்கின்றன. ஒருவரின் மீது அனுதாபப்படுவது போலக் காட்டிக்கொண்டு குறித்த படைப்புகள் பற்றிய சந்தேகங்களை எழுப்பி விடுவதும் (சமுதாயம் சார்ந்த படைப்புகளை இல்லாதொழிப்பதற்காக என்.ஜி. ஓக்கள் கையாளும் உபாயமார்க்கமும் இதுவேயாகும்) இவர்களது முக்கிய தந்திரோபாயங்களில் ஒன்றாகும். சில தசாப்தங்களுக்கு முன்னர் புதுமைப்பித்தனின் படைப்புகள் பற்றியும் இத்தகைய சில்லறைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் புதுமைப்பித்தனின் கதைகள் யாவும் மாப்பஸானின் பிரதி என்ற குற்றச்சாட்டு முக்கியமானது. சிதம்பர ரகுநாதனின் '‘புதுமைப்பித்தன் விமர்சனமும் விசமத்தனங்களும்” என்ற வரலாற்று நூல் வெளிவந்த பின்னர் புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து தெளிவான பார்வை ஏற்படக் கூடியதாக இருந்தது.
இவ்வகையில் நோக்குகின்ற போது, மலையக வரலாற்றில் நித்தியானந்தனுடைய மறக்க முடியாத பங்களிப்பு, மலையகத்தின் ஆரம்ப கால நூல்கள் சிலவற்றினை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கு தளமாகவும் களமாகவும் அமைந்தவையாகும். மலையகத்தில் தோன்றியுள்ள சமகால நூல்கள் பலவற்றையே மறந்துவிடும் சாத்தியக்கூறுகள் மேலோங்கிய நிலையில் நித்தியானந்தன் மலையகத்தின் ஆரம்ப கால நூல்கள் சிவற்றை தேடி அவற்றை பதிவாக்கியுள்ளமை புதிய தலை முறையினர் மட்டுமல்லாது மூத்த தலைமுறையினர் கூட மலையக வரலாற்றை முழுமையாக கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறு மலையகத்தின் ஆரம்பகால எழுத்துக்களை மீட்டுருவாக்கம் செய்கின்ற போது, விமர்சன அபிராயங்களுக்கு அப்பால் போய், கருத்து நிலைப்பட அமைய வேண்டும் என்பதிலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடுக்காமல் அமைய வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டியுள்ளமை இந்நூலாசிரியன் தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். மலையக பண்பாட்டுத் துறையில் இத்தகைய பங்களிப்புகளை வழங்கியவர்களில் தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் முதலானோரின் பங்களிப்புகள் (தேசிய சுவடிகள் திணக்களத்தை பயன்படுத்தி மலையகம் சார்ந்த ஆவனங்களை பதிவாக்கியதில் சாரல் நாடன் முக்கியமானர். இலங்கையைப் பொறுத்தமட்டில் தே.சு.தி பயன்படுத்தியதில் முதன்மையானவர் சாரல் நாடன் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை) குறிப்பிடத்தக்கதாகும்.
மலையக வரலாற்றை ஆய்வு செய்வதற்கான தேவை முன்னரிலும் பார்க்க இன்று அதிகரித்தே வந்துள்ளது. வரலாறு எழுதும் முறையியலை இவ்வம்சம் பெரிதும் மாற்றியிருக்கின்றன. இதன் காரணமாக. மலையக வரலாற்றியலில் பல புதிய கேள்விகளும் தேடல்களும் வளர்ந்து வருகின்றன. இந்த சூழலில் மலையக மக்களின் வரலாறு குறித்த பன்முக உரையாடலை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. வர்க்கப் போராட்டத்துடன் தான் வரலாறு எழுதப்படுகின்றது என்பது மார்க்சிய அடிப்படைகளில் ஒன்றாகும்.
‘மார்க்சிய ஆய்வு முறை ஒரு சமூகத்தின் வரலாற்றை அந்த சமூகத்தின் ‘உண்மையான வாழ்வை‘ மறு உற்பத்தி செய்வது பற்றியதாகவே அணுகுகின்றது. அதிலிருந்து அதன் பண்பாட்டு வரலாறும் அமைகின்றது. ஒரு சமூகத்தின் உண்மையான வரலாறு அதன் பொருளுற்பத்தி மற்றும் பண்பாட்டு வரலாறு என இரண்டையும் கொண்டதுதான். பொருளுற்பத்தி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே பண்பாட்டு வரலாறு வளர்ச்சியடைகிறது. என்றாலும், பண்பாட்டு வரலாற்றுக்கான தனித்த சிறப்புகளும், செயல்பாடும் ஒரு சமூகத்தை இயக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சமூகத்தில் அவ்வப்போது மேலெழும் வேற்றுமைகள் துண்டுதுண்டானவையல்ல. அவற்றுக்கிடையே ஊடாடிவரும் ‘கருத்தியல் உண்மையை‘ அறிதல் ஒரு வரலாற்றாசிரியரின் கடமையாகும். இந்த கருத்தியல் உண்மை பொருளுற்பத்தி சார்ந்த பொருளாதார வாழ்விலிருந்தே பெறப்படுகிறது. அது உழைக்கும் வர்க்கங்களின் வாழ்நிலை பற்றியதாகும் (தேவ. பேரின்பன்.2011).
மலையக தமிழர் வரலாற்றை அறிவியல் பூர்வமாக சமூகவியல் நோக்கில் ஆராய்கின்ற இந்நூல் மார்க்சியம் சாராத அதேசமயம் மார்க்சியத்தை நிராகரிக்காத நிலையில் அதன் பார்வையை முன்வைக்கின்றது. மலையக மக்களின் வரலாற்றின் பெருமிதங்களை புனரமைத்துக் கொள்ளாமல் மக்களின் வரலாறாகவும் நீதிக்கான மனித குலத்தின் நெடும் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், கடந்த கால ஆய்வுகளை புனரமைத்துக் கொள்வதற்கான தொடக்கப் புள்ளியாக இந்நூல் அமைந்திருக்கின்றது. ஒருவகையில் வரலாறு குறித்த வளர்ச்சிக்கு இது ஓர் ஆரோக்கியமான பங்களிப்பாகும். “தற்காலத்தை புரிந்து கொள்ளும் திறவு கோலாக கடந்த காலத்தை அறிந்துகொள்ள வேண்டும். தற்காலப் பிரச்சனைகளின் வெளிச்சத்தில் கடந்த காலம் விளக்கப்படுகின்றபோது மகத்தான வரலாறு எழுதப்படுகின்றது என்பார் ஈ.எச். கார் (What is history?, E.H. Carr).
தற்காலச் சூழலில், அறிவியல் துறையின் வளர்ச்சி காரணமாகவும், கருத்தியல்களின் வளர்ச்சி காரணமாகவும் மலையக வரலாறு குறித்த தேடுதல்களினால் புதிய அத்தியாயம் தோன்றியுள்ளது. மலையக தமிழர் வரலாற்றை பிரதேசவாதத்துக்குள் அடக்காமல் சர்வதேச வரலாற்றோடு இணைத்து பார்க்கும் புதிய பார்வை உருவாகி வருகிறது. அது எழுப்பும் கேள்விகளுக்கும், தேடல்களுக்கும் மார்க்சிய அணுகுமுறையே ஆதாரமாக அமைகின்றது. இந்நூல் அத்தகைய பின்னணியில் - அணுகுமுறையில் மலையக வரலாறு எழுதப்படுவதற்கு துணையாக அமையும் என எதிர் பார்க்கலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...