Headlines News :
முகப்பு » » வெண்கட்டி: மாற்று உரையாடலுக்கான தளம் - புஸ்பகுமார்

வெண்கட்டி: மாற்று உரையாடலுக்கான தளம் - புஸ்பகுமார்

மனித சமூகத்தில் ஒவ்வாரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்பட்டுவருகின்ற தேவைகளுக்கும் மாற்றங்களுக்கும் அமைவாக அமைப்புகள் உருவாகின்றன. இவ்வாறு தோற்றம் கொண்ட அமைப்புகள் தமது அமைப்பு சார்ந்த உறுப்பினர்களிடையேயும், பொது மக்களிடமும் கருத்தியல் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வொருவகையான முறைமைகளையும் கருவிகளையும் தோற்றுவித்துக் கொள்கின்றன. சிறுபத்திரிகைகள் இந்த பின்னணியிலேயே தோற்றம் கொள்கின்றன. அந்தவகையில் “வெண்கட்டி” இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் என்ற அமைப்பு சார்ந்து வெளிவந்த பத்திரிகையாகும். இப்பத்திரிகையின் ஆசிரியர் திரு. எம்.எஸ். இங்கர்சால்.

காலத்தின் தேவைகளை கவனத்திலெடுத்து தோற்றம் கொண்டதே இலங்கை கல்விச் சமூக சம்மேளம் என்ற அமைப்பாகும். இதன் தோற்றம் மலையகத்தை தளமாகக் கொண்டு  இருப்பினும், காலத்தின் தேவைகளையும் செல்நெறியையும் ஒட்டி மலையகத்தின் எல்லையை தாண்டி முழு இலங்கைத் தழுவிய அமைப்பாக இது பிரவாகம் கொண்டுள்ளது. வெண்கட்டி  கல்வித் துறைச் சார்ந்த அமைப்பொன்றின் வெளியீடு என்ற வகையில் அதில் இடம் பெறுகின்ற பெரும்பாலான ஆக்கங்கள் கல்விப் புலம் சார்ந்த்தாகவே இருக்கின்றன.

இவ்விடத்தில் முக்கியமானதோர் விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கல்விச் சமூகத்தின் பிரத்திதித்துவத்தை மட்டும் வைத்துக் கொண்டு முழுமையான சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்பது சுவாரசியமான வினாதான். இருப்பினும் கல்விச் சமூகம் சார்ந்து, குறிப்பாக பின்தங்கிய சமூகத்தில் இருந்து பிறப்பெடுக்கின்ற முரண்பாடுகளும் அதனடியாக எழுகின்ற போராட்டங்களும் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. முக்கியமாக ஒவ்வாரு பண்பாட்டு அரசியல் போராட்டங்களும் சமூகத்தில் மற்றப் பிரிவினருடன் சேர்ந்து நடத்துகின்ற போராட்டங்களாகும். இத்தகைய முன்னெடுப்புகளுக்கான மானுட அறிவுத் தளத்தில்  மைய பகுதியின் ஒரு பன்முகப்பட்ட விவாத்த்திற்கான தேவையை இப்பத்திரிகை எந்தளவு சுமந்து வந்திருக்கின்றது என்பது குறித்து சிந்திக்க முனைவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

இப்பத்திரிகையில் இடம்பெறுகின்ற சில செய்திகள்(இவ்வமைப்பில் முக்கிய பொறுப்பேற்றுள்ளவர்களின் கருத்துக்கள்) முக்கிய கவனத்திற்குரியவையாகின்றன. 

சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் “புதிய சவால்களை எதிர்நோக்க கூடிய இன்றைய சூழலில், அதன் புறப்பாட்டை சரியான திசையில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆசிரியர் சார்ந்த தொழிற்சங்க அமைப்பு  ஒன்று உண்டா என்ற கேள்வியும் எழுகின்றது. நாம் திறந்த மனதோடு கூடி விவாதித்து ஜனநாயகத் தன்மை கொண்ட முடிவுகளையே முன்வைக்க முனைகின்றோம். ஜனநாயகம் மறுக்கப்பட்ட அமைப்பு எப்படி எதேச்சதிகாரத்திற்கு போகின்றது என்பதையும் அவ்வம்சம் எப்படி முற்றிலும் கீழ்படிந்த ஆளுமையற்ற சங்க உறுப்பினர்களை உருவாக்குகின்றது என்பதனையும் கடந்த கால அனுபங்கள் எமக்கு புதிய படிப்பினையாக அமைந்திருக்கின்றன”.

எனவும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கர மணிவண்ணன் “”தனிநபர்களின் தனித்துவங்களையும் வேறுப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்வது எமது இலக்காகும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்" எனவும், கல்விக் குழு தலைவர் திரு. எஸ். குமார் “”மக்களிடம் ஒரு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தேவைப்படும் கலாசார மாற்றத்தை கல்வித் துறையினூடாக ஏற்படுத்துவதற்கான மக்கள் பங்கேற்க கூடிய வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.ஒரு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் ஜனநாயக தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டுமானால் உறுப்பினர்கள் விவாதிப்பதற்கும், தங்களது கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதற்குமான திறந்த வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒருவகையில் இவ்வகையான செயலமர்வுகளின் ஊடாக இத்தகைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றோம். எமது இத்தகைய செயற்பாடுகள்  நாகரிகமிக்க சமுதாயத்தின் ஒரு பகுதி தேவையையாவது உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனபதை ஒரு துளி கர்வமும் இல்லாமல் பிரகடனப்படுத்திக் கொள்கின்றோம் ". எனவும் குறிப்பிடுகின்றனர்.  

இக்கருத்துக்களை சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகின்றபோது  கல்விச் சமூகத்தினரிடையே தோன்றிய அமைப்புகள் குறித்தும் அதன் தலைமைகள் குறித்தும் அதிருப்தி தோன்றியுள்ள அல்லது நம்பிக்கை இழந்துள்ள சூழலில், வெவ்வேறு ஆசிரிய தொழிற் சங்கங்களில் இயங்கியவர்களும் வெவ்வேறு அரசியல் பண்பாட்டு அமைப்புகளில் மற்றும் அமைப்பு சாராது இயங்கியவர்கள் மக்கள் நலனிலிருந்து அந்நியமுறாமல் பொது இலக்கொன்றிக்கான  ஒன்று சேரலே இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் என்ற அமைப்பு தோற்றத்திற்கான பின்னணி என்பதை அறிய முடிகின்றது. உறுப்பினர்களின் வேற்றுமைகளை மதிக்கின்ற அதே சமயம் ஒடுக்குமுறைகள், சுரண்டல், என்பவற்றிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை ஒரு ஸ்தாபனமாக ஒழுங்கமைக்கும் செயற்பாடாக இவ்வமைப்பு செயற்படுகின்றது என்பதை உணர முடிகின்றது. அந்தவகையில் வெகுசன தளத்தில் பரந்துபட்ட மக்கள் பிரிவினர் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வெளிகளை நோக்கிய பயணிப்பாகவும் இவ்வமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருப்பதனைக் காண முடிகிறது. தெளிவாக நோக்கின் பல்வேறுபட்ட ஜனநாயக முற்போக்கு சமூக சக்திகளின் தனித்தனிப் பண்புகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளல் என்பதே இதன் பொருளாகும். அந்தவகையில் பாரம்பரியமான கல்வி ஸ்தாபன முறைகளிலிருந்து சற்றே அந்நியப்பட்டு பரந்துபட்ட ஜனநாயகம் நோக்கிய அமைப்பாக இது கட்டியெழுப்ப படும் என நம்பிக்கை கொள்ள முடிகின்றது.


இதனை உறுதிபடுத்தும் வகையில் திரு. எம்.என். இங்கர்சால் எழுதியுள்ள “இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்: ஒரு மாற்று முகாம் உருவாக்கப்படுவதை நோக்கி” என்ற கட்டுரை அமைந்துள்ளது. இவ்விதழில் இடம் பெறுகின்ற காரல் மார்க்ஸின் கல்விச் சிந்தனைகள் என்ற கட்டுரை என்ற கட்டுரை முக்கியமானதொன்றாகும். காரல் மார்க்ஸின் கல்விச் சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற இக்கட்டுரை வர்க்க சமூகவமைப்பில் “சகலருக்கும் கல்வி”, “கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது” என தத்துவம் பேசினாலும் கூர்ந்து நோக்கின் வர்க்க வேறுபாடுகள் கல்விப் புலத்திலும் தாக்கம் செலுத்துவதைக் காணலாம். மனிதன் வாழ்வதற்கான உரிமைகளில கல்வி முக்கியமானதோர் கூறாகும். கல்வியுரிமையை மறுப்பது என்பதும் அடிப்படை உரிமை மீறலாகும். இவ்வகையில் நோக்குகின்றபோது கல்வியில் தொடர்ந்துக்  கொண்டிருக்கும் ஏற்றதாழ்வுகளை இனங்கண்டு மனித குலத்திற்கு பொதுவான நாகரிகமான கல்விச் சிந்தனையை முன் வைத்தவர் காரல் மார்க்ஸ். அவரது கல்விச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது அவசியமானதொன்றாகும்.

மேலும், பேராசிரியர் மா. சின்னத்தம்பியின் ”மாற்று திறானாளிகளுக்குரிய கல்வி தேவைகளும் வளர்ச்சியும்” என்ற கட்டுரையும், கலாநிதி த. கலாமணியின் ‘ “முதியவர்களின் உளநலம் பேசப்பட வேண்டிய பொருள்களுக்கான முகவுரை” என்ற கட்டுரையும் முக்கிய கவனிப்புக்குரியவைகளாகும். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு விளிம்பு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் குறித்தும் முதியோர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரைகள் வெளிபடுத்தியிருக்கின்றன. உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வருகின்ற தர்க்க ரீதியான சிந்தனைகளின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. கல்விப் புலத்தில் இத்தகைய மதிப்பீடுகள் ஆய்வுகள் விருத்தி பெற வேண்டியதன். அவசியத்தை இவை உணர்த்தி நிற்கின்றன.

அவ்வாறே, அன்பு ஜவஹார்ஷாவின் “புதிய ஆசிரியர்- அதிபர் சேவை பிரமாணக் குறிப்புகளும் பிரச்சனைகளும்” என்ற கட்டுரை ஆசிரியர் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புகள் பற்றிய அறிமுகத்துடன் அது தொடர்பில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விவாதிக்கின்றன. அதிபர் ஆசிரியர்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் மற்றும் அதனை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவர் தம் சேவை பிரமாணக் குறிப்பு பற்றிய தெளிவு அவசியமாகின்றன. இவ்விடயத்தை இக்கட்டுரை கவனத்திலெடுத்திருக்கின்றது  எனலாம். இனிவரும் காலங்களில் பெண்களின் படைப்புகளையும் அவர்கள் பற்றிய பிரச்சனைகளையும் உள்ளடக்கி வெண்கட்டி வெளிவருமாயின் அவ்விதழ் முழுமைப் பெற்றதாக இருக்கும் எனத் தோன்றுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹட்டனில் நடைப்பெற்ற கூலித்தமிழ் நூல் வெளியீட்டில் திரு. மு. நித்தியானந்தன் குறிப்பிட்டது போல ” கல்வித் துறைச் சார்ந்து விவாதிக்க வேண்டிய காத்திரமான சிந்தனைகளை வெண்கட்டி பத்திரிகை தன்னகத்தே கொண்டுள்ளது” என்ற கூற்று மிக பொருத்தமானதாகவே தெரிகின்றது.

தனிமனித தாக்குதல்களுக்கும் புலம்பல்களுக்கும் அப்பால் - தன் காலத்து வேடிக்கை மனிதர்களிலிருந்து அந்நியப்பட்டு புதிய மனிதனுக்கான , புதிய வாழ்க்கைக்கான, புதிய கலாசாரத்திற்கான பயனத்தில் வெண்கட்டியும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என நம்பலாம். இவ்விதழ் தொடர்ந்து வெளிவர வேண்டியது அவசியமானதாகும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates