Headlines News :
முகப்பு » , , , » சாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்

சாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்

இலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை.

அரசுகள் இயங்குவது மக்களின் மக்களின் வரியில் தான். அவரவர் கொண்டிருக்கும் வசதி, மேற்கொள்ளும் வணிகப் பணிகள், சொத்துக்கள், பெற்றுக் கொள்ளுகின்ற லாபம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு தனி நபரோ நிறுவனங்களோ அதற்கேற்ப திறையை செலுத்துவது என்பது பண்டைய காலத்தில் இருந்து வெவ்வேறு வடிவங்களில் இயங்கி வரும் ஒரு முறைமை தான்.

இலங்கைப் பொறுத்தளவில் கிறிஸ்துவுக்கு முன்னரான 3 ஆம் நூற்றாண்டிலிருந்த கல்வெட்டுப் பதிவுகள், விவசாய நோக்கங்களுக்கான நீர் நுகர்ச்சிக்காக செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் அதிகாரிகளினால் அரசாங்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட வரிகள் (“தகபதி” “போஜகபதி") தொடர்பான தகவல்களை விபரிக்கின்றன.

நகரத்திற்கு வழங்குவதற்காக தானியங்களை ஏற்றிவரும் வண்டில்களுக்கு நகரத்தின் நுழைவாயிலில் வைத்து வரி அறவிடப்பட்டதுடன் அத்தகைய வரி சேகரிப்புக்கள் பௌத்த துறவிகளுக்கு தானம் வழங்கும் மண்டபத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ரொபர்ட் நொக்ஸ்ஸின் நூலில் ஆண்டொன்றுக்கு மூன்று முறை வரி வசூலிக்கும் வழமை இருந்ததையும் அரசனின் திறைசேரிக்கு எவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறித்தும் விபரமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆச்சரியம் தரும் சில வரி முறைகளைப் பார்ப்போம்.

மஹா பத்த (மகா வரி)
கருவா உற்பத்தித் தொழில் இலங்கையில் சலாகம சாதியினரிடம் தான் ஆரம்பத்தில் இருந்தது. போர்த்துகேயர் இலங்கையை ஆக்கிரமித்ததும் அதனை தம் வசப்படுத்திக்கொண்டனர். வாசனைத் திரவியங்களை அவர்களின் நாட்டுக்கு கொண்டு செல்லவும், உபரியை சந்தையில் விற்கவும் இவ்வுற்பத்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அவர்கள் கருவா உற்பத்திக்கென தனியான வரியை அறிமுகப்படுத்தினார்கள். இந்தக் காலப்பகுதியில் கருவா செய்கையை தனியான ஒரு விவசாய உற்பத்தி நடவடிக்கையாக இருக்கவில்லை. காடுகளுக்குச் சென்று தான் கருவாவை சேகரித்து வருவார்கள். இந்த வரியின் மூலம் அதிகளவு கருவாவை தேடி தமக்கு எடுத்துவரச் செய்தார்கள். அதைத் தான் “மஹா பத்த” (Great tax / மகா வரி) என்று அழைத்தார்கள். பணமாகவோ, அல்லது குறிப்பிட்ட தொகை கருவாவை வரியாக செலுத்தினார்கள். இதற்காக முதலி, விதானை போன்றோர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள்.

போர்த்துகேயர் போய் ஒல்லாந்தர் வந்ததும் அவர்கள் மேலதிகமாக பல வரி முறைகளை அறிமுகப்படுத்தினார்கள். காணி வரி, சாவு வரி, மீன்பிடி வரி, தென்னை வரி, இஸ்தோப்பு வரி, செருப்பு வரி, போன்ற வரிகளை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஆங்கிலேயர்களும் அதனை அப்படியே தொடர்ந்தார்கள். அதேவேளை 1848 இல் அன்றைய தேசாதிபதி டொரிங்டன் மேலதிகமாக “உடல் வரி”, “நாய் வரி”, “சாவு வரி”, “வீதி வரி”, பீடி வரி”, “தோணி வரி”, “கடை வரி”, “கறத்தை வரி” போன்ற வரிகளை புதிதாக அறிமுகப்படுத்தினார்.

உடல் வரி
ஆண் சிறுவர்கள் வளர்ந்ததும் அவர்கள் மூன்று சிலிங்குகளை “உடல் வரி”யாக (எங்க பத்த) செலுத்தும் உத்தரவை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அவ்வாறு வரி செலுத்த இயலாதவர்கள் வெள்ளையர்களால் போடப்பட்டுக்கொண்டிருந்த புதிய வீதி வேலைகளில் வருடத்தில் 6 நாட்கள் கடும் உடலுழைப்பைக் கொடுக்க வேண்டும். இதுவே இன்னொரு வடிவத்தில் நிகழ்ந்தது. வீதிகளை செய்வதற்கு தமது உடல் உழைப்பை இனாமாக வழங்காதவர்கள் இந்த “உடல்வரி” யை செலுத்த வேண்டும். 1848 ஆம் ஆண்டு நிகழ்ந்த வரலாற்றில் முக்கிய கிளர்ச்சிகளில் ஒன்றாக அறியப்பட்ட “மாத்தளை” கிளர்ச்சிக்கான உடனடிக் காரணங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. இந்தக் கிளர்ச்சியில் தான் “வீர புரன் அப்பு” போன்றோர் அக்கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியதாக வரலாற்றில் பதிவு பெறுகிறார்கள். கோப்பி பயிர்ச்செய்கையில் ஆங்கிலேயர் கண்ட நட்டம் இத்தகைய வரிகளுக்கு உடனடிக் காரணமாக இருந்தது.
சாவு வரி
ஒருவர் இறந்து போனதன் பின்னர் அவர் உயிருடன் இருக்கும்போது பயன்படுத்திய சொத்துக்களுக்கும், சேமிப்புக்கும் சேர்த்து குறிப்பிட்ட அளவு வரியை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இறந்தபின்னர் விதிக்கப்படும் வரியென்பதால் இதனை “மறால வரி”. இதனை தமிழில் சாவு வரி / மரண வரி என்று விளங்கிக்கொள்ளலாம். தனியானதொரு உத்தியோகத்தர் “மறாலைரோஸ்” (Maraleiros) இவ் வரிச் சேகரிப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தார். இத்தகைய வரிமுறை கண்டி இராச்சியத்திலும் இருந்ததாக ரொபர்ட் நொக்ஸின் குறிப்புகளில் உள்ளன. (1) அரசனுக்கு ஐந்து “சக்கராவோ”வை சாவுவரியாக வழங்கும்வரை பிரேதத்தை தகனம் செய்வதற்கான அனுமதி (Cremation licence) கிடையாது. கோட்டை ராஜ்ஜியத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றியபோது “சாவு வரி” முறையில் திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள்.

குறிப்பாக பிலிப்பே தி ஒலிவேரா (Phelipe de Oliveyra) போர்த்துக்கேய தளபதியாக இருந்த காலத்தில் ஒரு விதிவிலக்கைக் கொண்டுவந்தார். (2)  அதாவது இறந்து போனவரின் வாரிசுகள் நான்கு மாதங்களுக்குள் ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவினால் அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. மத மாற்றத்தை ஊக்குவிப்பதற்காக அவர்கள் இப்படி செய்தார்கள். (3) இதனை இன்னொரு வகையில் விளக்குவதாயின் சுதேசிகள் மீது மட்டுமே காலனித்துவ காலத்தில் இந்த வரி திணிக்கப்பட்டது. அதாவது கத்தோலிக்கர்கள் அல்லாதவர்கள் இந்த வரிக்கு இலக்கானார்கள். வரியைக் கட்டு அல்லது கிரிஸ்தவனாகு என்கிற நிர்ப்பந்தமே இதன் உள்ளடக்கம். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் இத்தகைய மத மாற்றத்தால் பல சலுகைகளை பெற்றிருக்கிறார்கள். (4)  இந்த சலுகையால் பலர் மதமாற்றம் செய்திருக்கிறார்கள்.

பல சந்தர்பங்களில் பலர் தமது பொக்கிசங்களையும், விலையுயர்ந்தவற்றையும் புதைத்து மறைத்து வைத்திருக்கிறார்கள், சில சந்தர்ப்பங்களில் தமது வாரிசுகளுக்குக் கூட தெரியாதபடி மறைத்துவைத்திருக்கிறார்கள். (5)

யாழ்ப்பாணத்திலும் இந்த “மறால வரி” நடமுறையிலிருந்ததாகவும் இறந்தபின் அசையும் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டியிருந்தைப் பற்றியும் கொட்ரிங்டன் (H.W.Codrington) எழுதிய “இலங்கை பற்றிய சிறு வரலாறு” என்கிற நூலில் விபரிக்கிறார். (6)

சாவு வரி (maralla) பற்றிய விபரமான விளக்கம் 1685 இல் வெளியான கெப்டன் ஜொவாவோ ரிபைரோவின் “இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் நாடகம்” (Fatalidade Histórica da Ilha de Ceilão) என்கிற நூலில் தனியொரு அத்தியாயமாக காணபடுகிறது. ஆனால் ரிபைரோவின் நூலின் படி இதற்கென நியமிக்கப்பட்ட “மறாலைரோஸ்” எனப்படுகிற உத்தியோகத்தர் கிராமங்களில் வேறு பல வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்திருக்கிறார். ரிபைரோ ஓரிடத்தில் இப்படி விளக்குகிறார்.

அவர்கள் மிகவும் உயர்ந்தபட்ச குற்றமாகக் கருதியது என்னவென்றால், ஒரு உயர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவருடன் உடல் உடலுறவு கொண்டாரெனில் அது வழக்குக்கு வந்து விடுகிறது. திருமணமானவளாக இருக்கும் பட்சத்தில் கணவனாலும் தந்தை மற்றும் சகோதர்களாலும் கடுமையாக எதிர்கொள்ளப்படுவாள் இது அவர்களின் குடும்பத்தின் கௌரவத்தைப் பாதிக்கும் மிகப்பெரிய சோக நிகழ்வாக இருந்தது. இக்குற்றம் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அவளைக் கொல்ல முடியும். சாட்சியங்கள் இல்லாதுவிடின் அப்படி தான் செய்யவில்லையென “மறாலைரோஸ்” முன்னால் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும். இதில் உள்ள கொடுமை என்னவென்றால் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பதும் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் பொறுப்பு. அவள் ஒத்துக்கொள்ளும்பட்சத்தில் அவளின் கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் விட்டெடுக்க வேண்டும். அல்லது சூடான இரும்புக் கம்பியை பிடித்து தூக்கவேண்டும். அல்லது சத்தியப்பிரமாணத்தை சொல்லி முடிக்கும் வரை அதைப் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும். சத்தியப்பிரமாணத்தில்...
“என் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நான் செய்திருந்தால் இந்த நெருப்பு என்னைக் கொல்லட்டும், அல்லது  என் குற்றமற்றதன்மையையும் என் வாழ்க்கையின் தூய்மையையும் கடவுள் நிரூபிக்கட்டும். " என்று கூற வேண்டும்.
சத்தியப்பிரமானத்தின் பின்னர் வீட்டுக்கு தகப்பனுடனோ அல்லது கணவனுடனோ சென்றுவிடலாம் ஒரு நாளுக்குப் பின் அந்த கை பெரிய காயங்களை உருவாக்காமல் இருந்தால் அவளின் தூய்மையும், குற்றமற்ற தன்மையும் நிரூபிக்கப்பட்டதன அடையாளமாக அவர்களின் உறவினர்கள் கருதிக்கொள்வார்கள். ஒருவேளை மறுதலையாக விளைவு ஏற்பட்டால், மரணதண்டனைக்கு உள்ளாக நேரிடும். (7)

ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அவரின் அயலவருக்கு விதிக்கப்பட்டுகின்ற வரியாகவும் சில இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. அயலவரின் சுகதுக்கங்களை சரியாக கவனிக்காததால் வந்த சாவு என்பதால் அந்த அயலவருக்கு வதிக்கப்பட்ட வரி இது என்கிற இன்னொரு விளக்கமும் கூறப்படுவதுண்டு.

டொயிலி தனது நாட்குறிப்பில் 1813ஆம் ஆண்டு “சாவு வரியை” விரிவுபடுத்தியமைக்கு எதிராக எஹெலபொல குரல்கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். (8)

மீன்பிடி வரி
மீன் பிடி மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும்.

தென்னை வரி
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வைத்திருக்கும் தென்னை மரங்களில் ஒன்றுக்கு 6 வெள்ளிகள் வீதம் வரி. இந்த வரியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்தோப்பு வரி
தான் வாழும் வீட்டின் கூரைக்கு ஓடு மாற்றுவதாயிருந்தாலும், சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பதாயிருந்தாலும் கிராமத் தலைவரின் அனுமதி பெற வேண்டியிருந்த காலமது. அந்த நபர் ஒரு விறாந்தை (இஸ்தோப்பு) ஒன்றை நீடிப்பதாக இருந்தால் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அல்லது அந்த விறாந்தை உடைக்கப்படும். இந்தக் காலப்பகுதியில் அப்படியான விறாந்தைகளைக் கொண்டிருந்தவர்கள் வசதி படைத்தவர்களே. எனவே அவர்களிடம் இருந்து பணம் பிடுங்குவதற்கான உத்தியாக இருந்திருக்கலாம்.

செருப்பு வரி
காலனித்துவ வெள்ளை இனத்தவர்களும், அரச பிரதானிகளும் மாத்திரமே காலணிகளை பயன்படுத்தி வந்த அந்தக் காலத்தில், சாமானியர்களும் செருப்பை கொள்வனவு செய்யக் கூடிய வகையில் சந்தையில்  கிடைத்தன. செருப்பை அணிவது மேனிலையின் அடையாளமாக இருந்ததால் செருப்பின் மீதான ஆர்வம் ஆரம்பமான காலமது. இதனைப் புரிந்துகொண்ட ஆங்கிலேயர் செருப்பு பயன்படுத்துபவர்களுக்கான வரியை அறிமுகப்படுத்தினார்கள்.

வீதிவரி
தமது வீட்டுக்கு அருகில் உள்ள புதிய பாதையைப் பயன்படுத்துவதற்கான வரி. அப்படி தனிப் பாதைகளை அமைத்துக்கொள்வதை கௌரவமாகக் கருதிய காலம் ஒன்று இருந்ததல்லவா. அதற்கு வரி.

நாய் வரி
வீட்டுச் செல்லப் பிராணியாக நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கான வரியை செலுத்தாவிட்டால் நாயை நீரில் மூழ்கடித்துக் கொள்ளும் குரூரமான நடைமுறை இருந்திருக்கிறது.

வரி முறையை எதிர்த்து நடந்த 1848கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய முக்கிய தலைவர் “வீர புரன் அப்பு”. அவனின் பெயரிலேயே ஒரு சிங்களத் திரைப்படம் 1978இல் வெளிவந்தது. அதில் வெளிவந்த ஒரு பாட்டில்
“நாய்க்குட்டிக்கேன் வரி...
முலையிலுள்ள சொற்பப் பாலுக்கும்
வரி கட்டும் காலம் வருமோ...”
என்றிருக்கும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைமுறையிலிருந்த நெல் வரியானது 1882 இல் தான் நீக்கப்பட்டது.

“முலையை வெட்டியெறிந்த நாங்கிலி”
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் திருவிதாங்கூர் இராஜ்யத்தில் வாழ்ந்த ‘நாங்கிலி’ என்கிற முப்பது வயதுடைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என முடிவெடுத்துக்கொண்டாள். திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.

தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.

தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பக அளவுக்கு தகுந்தாற்போல் அந்த வரி அறவிடப்பட்டது. நாங்கிலியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.

‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியைச் சென்றார். நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.

ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை அருகில் ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள். வரியை வசூலிக்க வந்த பார்வத்தியார் அதிர்ச்சியடைந்தார். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது. மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை மிகவும் குரூரமாக வெளிப்பட்டது. அவ்வரி தடை செய்யப்பட்டது.

பேரரசுகள் சிற்றரசுகளிடம் இருந்து வரிகளை வசூலிப்பதும் அந்த சிற்றரசுகள் அடுத்தடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் மீது வரியைத் திணிப்பதுமாக இறுதியில் சாதாரண மக்கள் மீது வந்து விழும் பேரிடியாக இந்த வரி வந்து விழுந்து விடுகின்றன. அடிமட்ட மக்களிடம் அந்த வரி பாயும்போது மிகவும் குரூரமாக பிரயோகிப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் மக்கள் மீது சுமத்தப்பட்ட அநீதியான வரி முறைகள் தன்னியல்பாக நீக்கப்பட்டதில்லை. அவை உழைக்கும் மக்களின் பலத்த எதிர்ப்புகளாலும், போராட்டங்களாலுமே இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றன. அரசுகள் வரிகளிலேயே தங்கியிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் நவீன உலகில் வரிகள் என்பது முதலாளித்துவ வர்க்கத்தை திருப்திபடுத்தும் வரி முறைகளே. உழைக்கும் மக்களின் மீதான அரசே மேற்கொள்ளும் மறைமுக சுரண்டலுக்கு இன்னொரு பெயர் வரி.

உசாத்துணை:
  1. P.E. PIERIS - Ceylon and the Portuguese 1505-1658 –– American Ceylon mission Press – 1920
  2. P. E. Pieris - CEYLON THE PORTUGUESE ERA BEING A History of the Island for the Period 1505-1658 - Tisara Prakasakayo Ltd - 1983
  3. LORNA DEWARAJA - THE MUSLIMS OF SRI LANKA ONE THOUSAND YEARS OF ETHNIC HARMONY 900 – 1915 - THE LANKA ISLAMIC FOUNDATION - 1994
  4. MICHAEL ROBERTS - CASTE CONFLICT AND ELITE FORMATION - The Rise of a Karava Elite in Sri Lanka, 150~1931CAMBRIDGE UNIVERSITY PRESS - 1982
  5. FERNAO DE QUEYROZ - THE TEMPORAL AND SPIRITUAL CONQUEST OF CEYLON - TRANSLATED BY S.G. PERERA- IN THREE VOLUMES Vol. I Book 1-2 - ASIAN EDUCATIONAL SERVICES 1992
  6. H. W. CODRINGTON- A SHORT HISTORY OF CEYLON - MACMILLAN AND CO. LIMITED - 1926
  7. The Historic Tragedy of the Island of Ceilāo - By P.E. Pieris - Colombo 1948
  8. Diary of MR.John D'oyly - COLOMBO APOTHECARIES CO., LTD. PRINTERS. - 1917

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates