பேராசிரியர் மு.சின்னத்தம்பி |
பேராசிரியர் மு.சின்னத்தம்பியின் திடீர் மறைவு கல்வி சமூகத்திற்கு மாத்திரமின்றி முழு மலையக சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பான நிகழ்வாகும். பேராசிரியர் சின்னத்தம்பி 1940ஆம் ஆண்டில் கண்டி ரங்கலையில் பிறந்து பின்னர் தலவாக்கலை கல்கந்தையில் வாழ்ந்து தமது ஆரம்பக் கல்வியை தலவாக்கலை சிரேஷ்ட கல்லூரியில் கற்றார். பின்னர் பல்கலைக்கழக புதுமுக வகுப்பை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் தொடர்ந்தார். அங்கிருந்து 1960ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். 1965ஆம் ஆண்டு பொருளாதாரதுறையில் சிறப்புபட்டத்தை பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்ற தொடங்கினார். 1993 ஆம் ஆண்டு பேராசிரியராக பதவி உயர்வு பெற்று 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மலையகத்தை சார்ந்த முதலாவது பேராசிரியர் பதவியை அலங்கரித்த பெருமை இவருக்குண்டு.
1960களில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் கற்பிக்க தீர்மானிக்கப்பட்டவேளை, உரிய விரிவுரையாளர்கள் இல்லாமை பிரதான ஒரு பிரச்சினையாக காணப்பட்டது. 1965 ஆம் ஆண்டளவில் பொருளியல் துறையில் தமிழிலே விரிவுரையாற்றுவதற்கு பேராசிரியர்கள் ஏ.ஜே.வில்சன் (அரசியல்) எஸ்.ராஜரட்ணம் (பொருளாதார வரலாறு) என். பாலகிருஸ்ணன் (வங்கியியல்) அமிர்அலி (பொருளாதார வரலாறு) எம். கிருஷ்ணமூர்த்தி (கணக்கியல்) போன்றோர் காணப்பட்டனர். 1966 இல் பாலகிருஷ்ணன் வெளிநாடு சென்றமையினால் வங்கியியல் கற்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவரே உதவி விரிவுரையாளர் சின்னத்தம்பி ஆவார். இது இளம் உதவி விரிவுரையாளருக்கு ஒரு சவால் மிக்க பணியாகும். இரண்டு வருடங்கள் (1967/1968) வங்கியியல் பாடத்தை பிரதானமாக பயின்றவர்களுக்கு விரிவுரையாற்றி அக்கற்கை நெறியை முழுமையாக்கிய பெருமை மறைந்த பேராசிரியருக்கு உண்டு.
பின்னர் 1969 ஆம் ஆண்டு தன்னுடைய உயர் கல்விக்காக இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று எம்.ஏ பட்டத்தை பெற்றுக் கொண்டார். இவர் தன்னுடைய பணிகளை பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் பொருளாதாரம், சமூகம் குறித்த பல்வேறு ஆய்வு முயற்சிகளிலும் பயன்படுத்தினார்.
மலையகத்தில் இயங்கி வருகின்ற பல அரச சார்பற்ற நிறுவனங்களோடு இணைந்து இவ்வாய்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இத்துறை சார்ந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
இவரிடம் பொருளாதாரம் கற்ற பல நூறு மாணவர்களில் நானும் ஒருவன். 1968 /1969 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்துறையை சிறப்பு பாடமாக பயின்ற எனக்கு “பணமும் வங்கியலும்” என்ற பாடத்தில் விரிவுரையாற்றினார். நான் தொடர்பு கொண்டிருந்த உதயம் நிறுவனம் 1993 இல் வெளியிட்ட இலங்கை மலையக தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும் என்ற ஆய்வு நூலை தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியோடு இணைந்து வெளியிடுவதில் பாரிய பங்களிப்பினை செய்தார்.
அமரர். இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் முதலாவது நினைவுப் பேருரையை “பெருந்தோட்டத்துறை தமிழ் இளைஞர் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் 2000 ஆம் ஆண்டு நிகழ்த்திய பெருமை இவருக்குண்டு. இவருடைய சமூக ஈடுபாடு மிக ஆழமானதும் தொடர்ச்சியானதுமாகும். அவர் மலையக அரசியல் தலைமைகளுக்கு மலையக தோட்ட தொழிலாளர்களின் அபிவிருத்தி மற்றும் சம்பளம் போன்ற பிரச்சினைகளில் தொடர்ச்சியான ஆலோசனை வழங்கி வந்துள்ளார். தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டு பத்தாண்டு திட்ட தயாரிப்பில் தொழில் கல்வி சம்பந்தமான குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு காத்திரமான பங்களிப்பை செய்தார். 2009 ஆம் ஆண்டு இந்த பத்தாண்டு திட்டத்தை நடைமுறையாக்குவதற்கான வழி தேசப்படம் உருவாக்குவதற்கு ஆலோசகராக என்னோடு இணைந்து செயற்பட்டார். பின்னர் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஐந்தாண்டு திட்ட தயாரிப்பில் பணிக்குழுவில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை நல்கினார்.
மலையகப் பல்கலைக்கழகம் என்ற கருத்து பல சிந்தனை குழாம்களில் பேசப்பட்டது. மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிந்தனைகுழாமிலே இது பிரதானமாக பேசப்பட்டது. பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழு ஒன்றிலே இது இறுதிவடிவம் பெற்றுள்ளது. இந்த செயன்முறையில் முக்கியமான பங்கினை வகித்தவர் பேராசிரியர் சின்னத்தம்பி என்பது பதிவுசெய்யப்படவேண்டிய ஒன்றாகும். இவருடனான எனக்கிருந்த தொடர்பு என்னுடைய பல்கலைக்கழக மாணவர் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஆசிரியர், மாணவர் தொடர்புக்கு மேலதிகமாக ஒரு நண்பனாக, என்னுடைய ஆலோசகராக பல்வேறு நடவடிக்கைகளில் இருந்து வந்துள்ளார்.
இவர் எழுதி வெளியிட்ட அபிவிருத்தி போக்குகள் என்ற நூலிற்கு முன்னுரை எழுத சொல்லி என்னைக் கௌரவித்தார். ஒரு ஆசிரியரால் மாணவன் கௌரவிக்கப்படுவது ஒரு பெரிய பேறாகும். தேயிலையின் செழுமையும் தொழிலாளர்களின் ஏழ்மையும் என்ற அவரது ஆய்வு நூலிற்காக 2015 ஆம் ஆண்டில் சாகித்ய விருது இவருக்கு கிடைத்தமை இவருடைய ஆளுமையை மெருகேற்றியது. அபிவிருத்தி போக்குகள் என்ற பொருளாதார கட்டுரைகளின் தொகுப்பு நூலும் குறிப்பிடத்தக்கது.
ஜோசப்பைன் கொறிரா என்ற தனது மாணவியை காதல் திருமணம் செய்த இவருக்கு இரண்டு மகன்களும் மூன்று பேரப்பிள்ளைகளும் உள்ளனர். தன்னுடைய ஓய்வு காலத்தில் இவர் தனது பேரப்பிள்ளைகளோடு நேரத்தை செலவழிப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார்.
தொடர்ச்சியாக என்னோடு தொடர்பில் இருந்த இவர், எந்நேரமும் தன்னுடைய எழுத்து முயற்சிகள் பற்றியும் நூல் வெளியிடுதல் பற்றியும் கலந்துரையாடுவார்.
தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அதிகளவு கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர் தன்னுடைய கட்டுரைகளின் தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இவ்வேளையில் கடந்த ஜுன் மாதம் 28ஆம் திகதி கொழும்பிலே தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை சம்பந்தமான கருத்தரங்கிலே இவரோடு கலந்துரையாடிய எனக்கு, இவரை ஜூலை மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கொழும்பு வைத்தியசாலையில் நோயாளராகப் பார்த்த அதிர்ச்சி நீங்கும் முன் அவரது மறைவுசெய்தி பேரதிர்ச்சியை தந்துள்ளது. எந்தவித பதவி, புகழ் போன்றவற்றிற்கும் ஆசைப்படாமல் தன்னுடைய புத்திஜீவித பணியை தொடர்ந்து ஆற்றி இறுதிவரை மலையக அபிவிருத்தி பற்றி சிந்தித்த பேராசான், தன்னுடைய சிந்தனையை நிறுத்திக்கொண்டமை இந்த சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும். அவரை இழந்து நிற்கும் என்னுடைய சக பல்கலைக்கழக மாணவியும் அவருடைய துணைவியாருமான ஜோசப்பைனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் அவரிடம் கற்ற மாணவர்கள் சார்பான ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...