கட்சி அரசியல் செயற்பாடுகளே மலையக கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல அதிபர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். பலர் பழிவாங்கப்பட்டுள்ளார்கள்.
தற்போதும் கூட மலையக கல்வி நிகழ்வுகளில் அரசியல் செல்வாக்கு காணப்படுகின்றது என ஓய்வு நிலை பேராசிரியர் த. தனராஜ் தெரிவித்தார். ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு மட்டுமே அரசியல் பயன்பட வேண்டுமே தவிர ஒரு சமூகத்தை மட்டம் தட்டுவதற்கும், அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் பயன்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மலையகத்தின் சமகால அரசியல் ,பொருளாதார ,கல்வி நிலைமைகள் பற்றி அவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு,
கேள்வி: மலையகத்திலுள்ள முக்கிய கல்வியியலாளர்கள் என்ற வகையில் மலையகத்தின் தற்போதைய கல்வி வளர்ச்சி எவ்வாறுள்ளது?
பதில்: மலையகத்தின் கல்வி வளர்ச்சியை ஒரு வரலாற்று ரீதியாக பார்ப்பது முக்கியமானதாகும். தற்போதைய நிலையில் மலையகத்தின் கல்வி நிலைமை சார்பளவில் உயர்வடைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு முதன் முறையாக மலையகத்தை சேர்ந்த 50 பேருக்கு மாணவ ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இது வரலாற்று சம்பவம். இன்று மலையகத்தில் 12 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக இருக்கின்றனர். இவர்கள் நியாயமான பட்டதாரிகளாவர். மலையகத்தில் ஓரிரு பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்திலும் மலையகத்தை சேர்ந்தவர்களே அதிபர்களாக இருக்கின்றனர்.
இதேவேளை 50 வருட காலத்தில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மலையக கல்வி வளர்ச்சியடைந்துள்ளது என சொல்ல முடியாது. ஆனால் ஒப்பீட்டு அளவிலேயே மலையக கல்வி நியாயமான வளர்ச்சியை கண்டுள்ளது.
கேள்வி: அண்மைக்காலமாக மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றதே?
பதில்: மலையகத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என அண்மைக்காலமாக பேசப்படவில்லை. கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக பேராசிரியர் சந்திரசேகரன் மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக கட்டுரை ஒன்றை வீரகேசரி பத்திரிகையின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் பின்னர் நானும் பல ஊடகவியலாளர்களும் இவ்விடயம் தொடர்பாக கட்டுரைகளை எழுதியிருந்தோம். இதனைத் தொடர்ந்து பேராசிரியர்களான சின்னத்தம்பி, மூக்கையா, கலாநிதி சந்திரபோஸ் மற்றும் மொழிவரதன் போன்றோர் மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதினார்கள்.
இதேவேளை, மலையக பல்கலைக்கழகம் என்பது பொருத்தமான ஒரு சொற்பிரயோகம் அல்ல. ஏற்கனவே இந்நாட்டில் 14 தேசிய பல்கலைக்கழகங்கள் இருந்தன. திறந்த பல்கலைக் கழகத்தையும் இணைத்துக்கொண்டால் 15 ஆகும். மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தற்போது தேசிய பல்கலைக்கழகமாக ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக நாட்டில் 16 தேசிய பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்நிலையிலேயே 17 ஆவது தேசிய பல்கலைக்கழகமாக மலையகத்திற்கான பல்கலைக்கழகம் கோரப்படுகின்றது. மலையகத்துக்கான பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நாம் முதலில் கைவிட வேண்டும். மலையகம் என்பது ஒரு பிரதேசம் மாத்திரம் அல்ல. அதுவொரு கலாசார அடையாளம். ஆனால் மலையக மக்களுக்காக மாத்திரம் பல்கலைக்கழகம் உருவாக்க முடியாது.
குறிப்பாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால் அதுவொரு தேசிய பல்கலைக்கழகமாகும். அங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவினத்தவர்களும் கல்வி கற்கின்றனர்.
ஆனாலும் முஸ்லிம் மக்களின் கலாசார மேம்பாடு, சமூக மேம்பாட்டின் அடித்தளமாகவும் முஸ்லிம் சமூகத்தின் உந்து விசையாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் செயற்படுவதை யாரும் மறுக்க முடியாது.
இதன் அடிப்படையிலேயே மலையகத்திலும் தேசிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். அதாவது புதிதாக உருவாக்கப்படவுள்ள பல்கலைக்கழகம் மலையக மக்களின் கலாசாரம், மலையக மக்களின் வரலாறு, அம் மக்களின் பொருளாதார மேம்பாடு போன்ற விடயங்களில் ஆழமாக செயற்படுத்த கூடியதாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகம் மலையகத்தில் அமையப்பெற உள்ளதால் அம் மக்களின் மேம்பாட்டிற்கான உந்து விசையாக அது இருக்கலாம்.
மலையகத்தில் பல்கலைக்கழகத்தின் தேவை தொடர்பாக ஒரு ஆய்வை செய்து அதுதொடர்பான ஆவணங்களை அமைச்சர் மனோ கணேசனிடம் கையளித்தோம். அவரும் பல நடவடிக்கைகளை எடுத்தார். கடந்த 12 வருடங்களாக மலையகத்திற்கான பல்கலைக்கழகம் ஒரு பேசுப்பொருளாக மாத்திரமே இருந்து வருகின்றது.
கேள்வி: மலையகத்திற்காக உருவாக்கப்பட்ட தேசிய கல்வியற் கல்லூரியே இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றதே?
பதில்: தேசிய கல்வியற் கல்லூரி ஊடாக நூற்றுக்கணக்கானவர்கள் மாணவ ஆசிரியர்களாக உருவாகி இருக்கின்றார்கள். அதன் பங்களிப்பை குறை கூறமுடியாது. இந்த கல்வியற் கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாக காணப்படுகின்றனர்.
ஆனால் அங்கு பெரும்பான்மை மொழியை அடிப்படையாக கொண்ட நிர்வாக சேவையே காணப்படுகின்றது. பீடாதிபதிகள் சிங்களவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் பல பிரச்சினைகள் பதிவாகி வருகின்றன.
இதன் அடிப்படையில் அந்த கல்வியற் கல்லூரி முக்கியமற்றது என்றும் தேவையற்றது எனவும் கூறி விடமுடியாது. அதில் உள்ள குறைபாடுகளை களைந்து கல்லூரியை மேம்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
ஆனால் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியுடன் மலையகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தை தொடர்புபடுத்த வேண்டிய தேவை கிடையாது. வரலாற்று ரீதியாக பார்க்கும் போது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மலையக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.. மேலும் தொழிலாளியின் பிள்ளை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் போது அவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளை முகம் கொடுக்கின்றார்கள். சில மாணவர்கள் பகுதிநேரமாக தொழில் செய்து கொண்டும் படிக்கும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் தனது படிப்பில் கூடுதல் அவதானம் செலுத்த முடியாமல் போகின்றது. மேலும் பல்கலைக்கழகத்தில் இவர்களால் திறமை சித்தி பெறமுடியாத நிலையும் ஏற்படுகின்றது. ஆனால் மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் போது அந்த மாணவர்கள் இலகுவாக சென்று கல்வி கற்கும் நிலைமை உருவாகும்.
கேள்வி: மலையகத்தில் தேசிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டாலும் அந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மலையக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படும் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாட்டில் அண்மையில் உருவான எந்த பல்கலைக்கழகமும் முழுமையான பல்கலைக்கழகமான உருவாக்கப்படவில்லை. குறிப்பாக யாழ். பல்கலைக்கழகம் பரமேஸ்வரா கல்லூரியின் ஒரு வளாகமாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதேபோன்று தான் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் வந்தாறுமுல்லை மகாவித்தியாலயத்தின் ஒரு வளாகமாக ஆரம்பிக்கப்பட்டது. பிற்காலத்திலேயே இவை தேசிய பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெற்றன. எடுத்த எடுப்பில் ஒரு இடத்தில் முழுமையான பல்கலைக்கழகத்தை அமைக்க முடியாது.
மேலும் மலையகத்திலும் முதலாவதாக பேராதெனிய பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக அட்டன் அல்லது வேறுஒரு பகுதியில் வளாகத்தை ஆரம்பிக்கலாம். இவ்வாறு ஆரம்பிக்கப்படும் வளாகத்தில் கலைப்பீடம், வர்த்தகம் தொடர்பாக கற்கைநெறிகளை முதலில் ஆரம்பிக்கலாம். இவற்றை கற்பிக்க கூடியவர்கள் மலையகத்தில் நிறைய பேர் இருக்கின்றார்கள். இந்த நடவடிக்கையானது பிற்காலத்தில் மலையகத்தில் தேசிய பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு ஒரு அதடித்தளமாக காணப்படும். இங்கு மாணவரின் தொகை போதுமானதாக இருக்கின்றதா என்பது முக்கியத்துவம் இல்லை. பல்கலைக்கழகம் உருவான பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கும். இந்த விடயத்தில் சமூக, அரசியல், கட்சி வேற்றுமையின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
கேள்வி : மலையக மாணவர்களிடையே பல்கலைக்கழக அனுமயை அதிகரிப்பதற்கான திட்டமிடல்கள் எவ்வாறானதாக இருக்க வேண்டும்?
பதில்: மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் அதிமாக உள்வாங்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு பாடசாலையின் ஆசிரியர்களும்,அதிபர்களுடன் அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும். மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கும் போது மலையக மாணவர்களுக்கு விசேட அனுமதி வழங்கலாம். பெரும்பான்மையின மாணவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும் போது 30 வருடங்கள் பின்தங்கிய எமது மலையக மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான கோரிக்கைகளை எமது அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்வைக்க வேண்டும். ஆனாலும் இவர்கள் மலையக மக்களின் நன்மை கருதி தொழிற்சங்க அரசியல் பிரச்சினைக்கு அப்பால் நின்று செயற்படுவார்களா என்ற சந்தேகமும் இருக்கின்றது.
கேள்வி: மலையக கல்வி வளர்ச்சியில் அரசியல் குறுக்கீடுகள் எந்த வகையில் உள்ளன?
பதில்: மலையகத்தில் பல அதிபர்கள் அரசியல் செல்வாக்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். பல அதிபர்கள் அரசியல் செல்வாக்குடன் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் தலையீடு என்பது மலையகத்தில் பாரதூரமான விடயமாகும். அதாவது பின்தங்கிய மலையக சமூகத்தில் அரசியல் தலையீடு என்பது ஒரு சமூகத்தை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் மலையகத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இது பரிதாபமான நிலையாகும். பாடசாலை வைபவங்களில் கூட அரசியல் கட்சிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
கேள்வி: ஊவா மாகாணத்தில் இயங்கிவரும் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் அண்மையில் தேசிய ரீதியில் பல சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. உண்மையில் இந்த பல்கலைக்கழகம் மலையக சமூகத்துக்கு ஏற்புடையதா?
பதில்: அல் முஸ்தபா பல்கலைக்கழகம் தொடர்பில் பெரிய வரலாறு உள்ளது. இது பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் சங்கம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல் முஸ்தபா பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இதன் அரசியல் பின்னணி பற்றி தெரியாது. ஆனால் 520 மாணவர்களில் 30 மாணவர்களே முஸ்லிம் மாணவர்களாவர். 3 வருடங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தவர்களாகியிருப்பார்கள். இதுவொரு நல்ல விடயமாக இருந்திருக்கும்.
ஆனால் இங்கு அரபு மொழி படிப்பிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் 32 துறைசார் பாடங்கள் காணப்படுகின்றன. அதில் இரண்டு பிரிவுகளே குர்ஆன் மற்றும் அரபு. இவை மேலதிக பாடங்களாகவே கருதப்படுகின்றன. இவற்றில் சித்தியடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. குர்ஆனையும் அரபியையும் கற்றுக்கொள்வதால் யாரும் தீவிரவாதிகளாக மாறிவிட மாட்டார்கள்.
இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினையின் பின்னர் குர்ஆன் மற்றும் அரபு கற்பிக்கக் கூடாது என உத்தியோகபூர்வ கடிதம் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னரும் அந்த மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு தடை விதிக்கக் கூடாது. இன்னும் இரண்டு வருடங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டதாரிகளாகப் போகின்றார்கள். இது அந்த மாணவர்களின் வாழ்க்கை பிரச்சினையாகும்.
கேள்வி: பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை பற்றி ?
பதில்: மலையக பெருந்தோட்ட சமூகத்தில் மிக முக்கிய பிரச்சினையாக இந்த சம்பளப் பிரச்சினை காணப்படுகின்றது. ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை மிக நெடுங்காலமாக இருந்து வருகின்றது. அரசியல் ரீதியான முரண்பாடு மற்றும் தொழிற்சங்க போட்டி காரணமாக இந்த சிரிய தொகையை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்த கூட்டு ஒப்பந்தம் தற்போது தேவை தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர்கள் ஒன்றாக கூடி ஒரு நாள் முழுதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் இந்த கோரிக்கை தோல்வியே கண்டது. தமது சமூகத்துக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து போராடி இருந்து இந்த சம்பள கோரிக்கையை வென்றிருக்கலாம். வருமானமின்றி அம் மக்கள் எவ்வாறு தமது பிள்ளைகளை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும். எவ்வாறு சமூக நகர் நோக்கி செல்ல முடியும். இதற்கு முட்டுக் கட்டையாக அவர்களது பொருளாதாரம் காணப்படுகின்றது. இந்த அரசியல்வாதிகள் மலையக சமூகத்தை பலவீனமாக்கியுள்ளார்கள். இந்த அரசியல் வாதிகளின் அவர்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காக ஒன்றுபட்டு செயற்பட்டேயாக வேண்டும்.
கேள்வி : எதிர்வரும் தேர்தல்களில் மலையக மக்களின் பங்கு எவ்வாறானதாக இருக்குமென நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள்?
பதில்: இன்று மலையகத்தின் விழிப்புணர்வு அரசியல் ரீதியாகவும் அதிகரிக்கும் என்றால் மலையக சமூகமும் ஏனைய சமூகங்களை போன்று முன்னேறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. மலையகத்தில் உள்ள தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இவர்களை ஒன்றுபடுத்தக் கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கட்சி, இன பேதமின்றி இவ்வாறு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டால் எதிர்கால தேர்தலை தீர்மானிக்கும் சக்திகளாக நாம் இருக்க முடியும்.
இதேவேளை மலையக மக்களின் நன்மை கருதி நடைமுறையில் சாத்தியப்படக் கூடிய கோரிக்கைகளை அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும் என்பதும் முக்கிய விடயமாகும்.
நேர்காணல் : செ. லோகேஸ்வரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...