Headlines News :

“பறங்கி மகாப் போர்” - என்.சரவணன்

சிங்கள போரிலக்கியங்களில் பிரபலமான காவியம் “பறங்கி மஹா ஹட்டன” (பறங்கி மகாப்போர்). அத்தகைய போரிலக்கியங்களில் துட்டகைமுனு காவியம் (எல்லாளனுடனான போர்), நாகானந்த சமர், கெப்பட்டிபொல போராட்டம், என்கிற போரிலக்கியங்களை சிங்கள மேடை நாடக பாரம்பரியத்தில் ஒன்றாகக் கொண்டாடும் வரிசையில் “பறங்கி ஹட்டன”வைப் பற்றிய நாடகமும் முக்கியமானது. இந்தக் கட்டுரை பறங்கிப் போரைப் பற்றியதல்ல “பறங்கி மகாப் போரைப்” பற்றியது.

சீத்தாவக்கவை ஆட்சிசெய்த முதலாம் இராஜசிங்கன் கண்டியைக் கைப்பற்றுவதற்கு கண்டி ராஜ்ஜியத்தின் பிரதானியாக இருந்த வீரசுந்தர பண்டார உதவினான். சிறிதுகாலத்தில் அவர்கள் இருவருக்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் வீரசுந்தர பண்டாரவை ராஜசிங்கன் கொலை செய்தான். வீரசுந்தரபண்டாரவின் மகன் கோணப்பு பண்டார பாதுகாப்பு கருதி போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தான். கோணப்பு பண்டார என்கிற பெயரை தொன் ஜுவான் என்று மாற்றிக்கொண்டு கத்தோலிக்க மதத்தைத் தழுவினான். 

முதலாம் ராஜசிங்கனின் ஆட்சியில் பிரதானிகள் அதிருப்தியுற்ற காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமது பாதுகாப்பில் இருந்த முன்னாள் கண்டிய மன்னரான கரலியத்த பண்டாரவின் மருமகனான தொன் பிலிப்பை அரசனாக்கினர் போர்த்துகேயர். அவனது பாதுகாப்புக்காக கோணப்பு பண்டார எனப்படும் தொன் ஜுவானையும் மலைநாட்டிருக்கு அனுப்பினர். தொன் பிலிப்பும் சிறிது காலத்தில் மரணமானான். அவனின் இளம் வயது மகனை மன்னனாக்கி பொம்மை ஆட்சியொன்றை ஏற்படுத்த போர்த்துகேயர் முயற்சி செய்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தொன் ஜுவான் போர்த்துக்கேயருக்கு எதிராக செயற்பட்டதுடன் மீண்டும் பௌத்த மதத்தையும் தழுவிக் கொண்டான். 1592 ஆம் ஆண்டு “முதலாம் விமலதர்மசூரிய” எனும் பெயரில் கண்டிக்கு மன்னனாக ஆனான்.
முதலாம் விமலதர்ம சூரியன் ஒல்லாந்து கடற்படைத் தளபதியான Joris van Spilbergen உடன் கருவா வர்த்தகத்துக்கான சாத்தியங்கள் குறித்து உரையாடிய சந்தப்பம்.
போர்த்துகேயர் தமக்கு சார்பான ஒரு அரசை அமைத்துக்கொள்ளும் முயற்சி இதனால் தடைபட்டுப் போனது. மேலும் முன்னாள் மன்னர் கரலியத்த பண்டாரவின் மகளான தோனா கத்தரினாவை (குசுமாசன தேவி) மனமுடித்ததன் மூலம் “செங்கடகல” என்று அன்று அழைக்கப்பட்ட கண்டி இராஜ்ஜியத்துக்கு சட்டபூர்வமான மன்னனானான் விமலதர்மசூரிய. 12 வருடங்கள் தான் ஆண்டான். அந்த ஆட்சி காலத்துக்குள் அவன் ஆக்கிரமிப்புப் போரை நடத்தவில்லை. அதேவேளை கண்டியை சீத்தாவக்க அரசனான ராஜசிங்கனிடம் இருந்தும், போர்த்துக்கேயரிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள நடத்திய போர்கள் இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடத்தை பெறுபவை.

1593இல் சீத்தாவக்க ராஜசிங்கன் மீண்டும் கண்டியின் மீது போர் தொடுத்தபோது விமலதர்மசூரியனின் உக்கிரமான எதிர்த்தாக்குதலால் தோல்வியுற்ற ராஜசிங்கன் மீண்டும் பின்வாங்கிச் சென்றுகொண்டிருந்த போது காலில் குத்திய முள்ளொன்றால் ஏற்பட்ட காயத்தால் மரணமானான்.

ராஜசிங்கனின் மரணத்தைத் தொடர்ந்து கண்டியைக் கைப்பற்றும் முயற்சியில் போர்த்துகேயர் களமிறங்கினர். அவர்கள் தந்துரே எனும் இடத்தில் விமலதர்மசூரியனின் படையால் எதிர்கொண்ட கடும் தாக்குதலினால் கடும் இழப்பை சந்தித்து தோல்வியடைந்தனர். இந்த சமர் “தந்துரே ஹட்டன” என்று பிரபலமான சமராக வரலாற்றிலக்கியங்களில் அறியப்படுகிறது.

இரு போர்க்கலைஞர்கள்
இலங்கையின் வரலாற்றில் சிறந்த போர் நிபுணத்துவமுடைய அரசனாக முதலாம் விஜயசூரியனை குறிப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக காலனித்துவ கால இலங்கையின் முதற் தரம் மிக்க போர்க் கலைஞனாக குறிப்பிடப்படுவதும் அவரைத்தான்.

அதுபோல காலனித்துவ கால சிறந்த போர்க்கலைஞனாக கெப்டன் ஜெனரல் தொன் ஜெரோனிமோ த அசவேதோ (Dom Jerónimo de Azevedo) வைக் குறிப்பிடுவதும் வழக்கம்.

இலங்கையின் அதிர்ஷ்டமோ துரதிருஷ்டமோ இவர்கள் இருவரும் ஏக காலத்தினராக இருந்துவிட்டார்கள். அசவேதோ இலங்கையின் முதலாவது போர்த்துகேய கவர்னர் ஜெனரலாக 1594 இல் பொறுப்பேற்றது தொடக்கம் மன்னர் விமலதர்மசூரிய மரணிக்கும் வரையிலான காலப்பகுதி வரை இருவருமாக இலங்கையை தமது யுத்தகளமாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள். கண்டி ராஜ்ஜியத்தின் மாத்திரமல்ல இலங்கையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்ற போராக இது அமைந்தது. இதனால் “பறங்கி மஹா ஹட்டன” (பறங்கி மகாப்போர்) என்று சிங்கள வரலாற்று இலக்கியங்களில் அழைக்கப்படுகிறது.

24.12.1594 இல் அசவேதோ போர்த்துக்கேய ஆட்சியின் கவர்னராக பதவியேற்ற வேளை மன்னர் விமலதர்மசூரிய அரசகட்டிலேறி இரண்டு வருடங்கள் மட்டும் தான் ஆகியிருந்தது. கண்டி ராஜ்ஜியத்தின் மீதான போர்த்துக்கேய ஆக்கிரமிப்பை பல உயிரிழப்புகளுடன் முறியடித்து தோற்கடித்த பெருமையுடன் விமலதர்மசூரிய அப்போது திகழ்ந்ததால் போர்த்துக்கேயருக்கு சிம்ம சொப்பனமாக ஆகியிருந்தவர்.

அசவேதோவின் ஆட்சி ஆரம்பிக்கும் போதே மிகவும் முக்கியமான இரண்டு கிளர்ச்சிகளை எதிர்கொள்கிறார். ஒன்று அக்கரகனே அப்புஹாமி தலைமையிலானது, மற்றொன்று டொமின்கொஸ் கொறையா எனப்படும் எதிரில்லே றால என்பவர் தலைமையிலான சமர். அக்கரகனேயின் போராட்டம் குறிப்பிடுமளவுக்கு அத்தனை மூர்க்கமாக இல்லாதுவிட்டாலும் எதிரில்லே றாலவின் தலைமையிலான சமர் எந்தளவு மூர்க்கமானது என்றால் ஒரு கட்டத்தில் போர்த்துக்கேயர் கொழும்பைத் துறந்துவிட்டு அகன்றுவிடலாமா என்று சிந்திக்குமளவுக்கு அந்த சமர் முக்கியம் கொண்டதாக இருந்தது. ஆனால் இலங்கையின் வரலாற்றில் அதிகளவு பேசப்படாத ஒரு சமர் அது.
எவ்வாறிருந்த போதும் அசவேதோ 1596க்குள்  இந்த இரண்டு சமர்களையும் முறியடித்து தனது பெயரை பதிக்கிறார். இதே காலப்பகுதியில் ஹத் கோரளை (குருநாகல் பிரதேசம்), ஹத்தற கோறளை (கேகாலை பிரதேசம்) ஆகிய பிரதேசங்களை போர்த்துகேயரும், கண்டிய ராஜ்ஜியமும் துண்டாடி தமது ஆட்சியை செலுத்தி வந்தன. மக்களின் செல்வாக்கு கண்டி அரசாட்சியின் பக்கமே இருந்தாலும் கண்டியப் படைகளுக்கு இந்தப் இரதேசங்களில் நிரந்தர பலம் இருக்கவில்லை. போர்த்துக்கேயரின் கையோங்கும் போது போர்த்துக்கேயரைச் சார்ந்தும் போர்த்துக்கேயரின் பலம் குன்றும்போது கண்டி அரசைச் சார்ந்தும் மக்களின் ஆதரவு சாய்ந்துகொண்டிருந்தது.

அசவேதொவுக்கு இந்த விளையாட்டு பிடிக்கவில்லை. இலங்கையின் மீதான போர்த்துக்கேயரின் பூரண செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதாயின் முதற் கட்டத்தில் ஹத் கோறளை, ஹதர கோறளை ஆகிய இரு பிரதேசங்களையும் கொண்டுவரவேண்டும் என்று கருதினார். இதன் விளைவாகத் தோன்றியது தான் பறங்கி மகாப் போர்.

முதலாம் கட்டம்
தனது போர் உபாயமாக ஹதர கோறளை, ஹத் கோறளை பகுதிகளில் ஏராளமான காவல் அரண்களை அமைக்கிறான் அசவேதோ. குறிப்பாக அதிக கிளர்ச்சிக்கார கிராமங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தமக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்காக இந்த நிலையங்களைப் பயன்படுத்துகிறான். போர்த்துக்கேய படைகளையும் லெஸ்கரின்களையும் (*) இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்துகிறான். இந்தப் படைகளின் மூலம் மிகவும் அடக்குமுறைகளை ஏவி மக்கள் மத்தியில் ஒரு பீதியை உருவாக்கி நிலைநாட்டுகிறான்.

அசவேதொவின் இந்த திட்டத்தை சரியாக இனங்காண்கிறான் விமலதர்மசூரிய. மலையகப் பகுதிகளைக் கைப்பற்றும் திட்டத்தின் உபாயமாக முதலில் அதன் வாசல்களான அடிப்பகுதிகளை தந்திரோபாய ரீதியில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அசவேதோ எத்தனிப்பதை கவனிக்கிறான். எனவே மலைநாட்டுப் பகுதியைக் கைப்பற்றுமுன் தானே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கீழ்நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றும் போரைத் தொடக்குகிறான்.

அசவேதோ காவலரண்கள் பலவற்றை நிறுவதன் மூலம் அகலக் கால்வைத்து ஆக்கிரமித்துவிடலாம் என்கிற தந்திரோபாயத்துடன் நகர்ந்துகொண்டிருந்தான்.

ஆனால் விமலதர்மசூரிய பெரும் படையெடுப்பை நடத்தாமல் போர்த்துகேய நிலைகளை ஆங்காங்கு திடீர் அதிரடித் தாக்குதல்களை நடத்தி அவற்றை அழிக்கும் உபாயத்தைக் கையாள்கிறான். போர்த்துகேய இராணுவம் அவர்களைத் தேடி வரும்போது மீண்டும் பின்வாங்கி ஓடித் தப்பிக்கும் கெரில்லா பாணியிலான வழிமுறையைக் கைகொள்கிறான். அப்படி பின்வாங்குகிற கண்டியப் படைகள் வேறு இடத்தில் இன்னொரு திடீர் தாக்குதலை நடத்தி அழித்துவிட்டு அடுத்த இடத்துக்கு தப்பிச் சென்றுவிடும். எங்கும் நிலைகொள்வதில்லை. இந்த தாக்குதல்கள் அசவேதொவை நிலை தடுமாற வைக்கிறது. எதிரியின் போர் உபாயம் தான்  என்ன என்பதை அறியாது குழப்பத்திற்குள் தள்ளப்படுகிறான். தனது போர் உபாயமாக அடுத்ததாக எதனைக் கையாள்வது என்று சிந்திக்கத் தள்ளப்படுகிறான்.
கெப்டன் ஜெனரல் தொன் ஜெரோனிமோ த அசவேதோ (Dom Jerónimo de Azevedo)
கண்டியப் படைகளின் இந்தத் தாக்குதல்கள் ஊவா, சப்பிரகமுவா, மாத்தறை, ஹத் கோறளை, ஹதர கோறளை போன்ற பிரதேசங்களுக்கு விரிவாகின்றன. எனவே போர்த்துகேய படையோ படையெடுப்பு சமரை நடத்த தயாராக்கொண்டிருக்க கண்டியப் படைகளின் இத்தகைய தாக்குதல்களினால் தற்காப்புத் தாக்குதல்களுக்குள் தங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அசவேதோவின் திட்டமும் நம்பிக்கையும் குலைந்துவிடுகிறது. கண்டி ராஜ்ஜியம் என்பது கைப்பற்ற இயலாத ஒன்று என்கிற முடிவுக்கு வந்து சேருகிறான். “காவலரண்” போர்த்திட்ட உபாயம் தோல்வியடைந்துவிட்டதையும் விமலதர்மசூரிய வெற்றிபெற்றுவிட்டத்தையும் உணர்கிறான்.

இரண்டாம் கட்டம்
அதேவேளை அசவேதோ ஒரு உபாயத்தில் மாத்திரம் தங்கியிருப்பவன் அல்லன். தான் தவறவிட்ட இடத்தை சரிசெய்ய வேறொரு உபாயத்தை திட்டமிடுகிறான். போர்த்துகேய படைகளுக்கு இருந்த பெரும் பிரச்சினையே ஆளணி பற்றாக்குறை தான். அசவேதோவின் படையில் இருந்த போர்த்துகேயர்களின் மொத்த எண்ணிக்கையே 900 மட்டுமே. மற்றவர்கள் எல்லோரும் உள்நாட்டவர் தான். அத்தனை பெரும்படையை வைத்திருக்கும் அளவுக்கு போதுமான வளம் இருக்கவில்லை. அதுவே அவர்களின் பலவீனமாக இருந்தது. இருந்த படைகளைக் கொண்டு குறிப்பிட்ட காவல் அரண்களுக்கு பகிர்ந்து விட்டதால் கண்டியப் படைகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. 

இரண்டாவது பலவீனம்; தமது பிரதான தலைமையக கோட்டையாக திகழ்ந்த கொழும்பில் இருந்த படையினர்  தொலைவான இடங்களுக்கு அனுப்பப்பட்டதால் அத்தகைய தூரம் பாதுகாப்பு ஸ்திரத்தன்மைக்கு பாதகமாக இருந்தது. இதனால் கொழும்பு தலைமையகம் பலவீனமாக இருந்தது.

மூன்றாவது பலவீனம்; கண்டியப் படைகள் தாக்கிவிட்டு திரும்பிச் சென்ற வழித்தடங்களைக் கண்டறிய முடியாமல் இருந்தது.

இந்த பலவீனங்களையே அசவேதோ ஆராய்கிறான்.

இதன் விளைவாக அவன் முதல் அடி எடுத்துவைக்கும் போது கொழும்பில் இருந்த இராணுவத் தலைமையகத்தை “மெனிக்கடவர”வுக்கு நகர்த்துகிறான். “மெனிக்கடவர” என்பது தற்போதைய கேகாலை மாவட்டம். கரையோரத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. ஒரு வகையில் கண்டிக்கும் கொழும்புக்கு இடைநடுவில் இருக்கிறது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் கொழும்பு கோட்டை தாக்குதலுக்கு இலக்காக நேரிட்டால் கோவாவிலிருந்து கடல் மார்க்கமாக உதவி பெற முடியாமலும் போகலாம்.  எனவே அசவேதோ இந்த நிலைமையைப் புரிந்துகொண்டு “மெனிக்கடவர”வில் பலமான போர்த்துகேய கோட்டையொன்றைக் கட்டினான். அதைக் கட்டியபின் தான் அசவேதோ அடுத்த நடவடிக்கையை எடுத்தான். 

கண்டியப் படைகள் வந்துபோன பாதைகளை அடையாளம் காண முடியாதிருந்ததால் முதலில் அவர்கள் கீழ்நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் பணியை ஆரம்பித்தான். குறிப்பாக மலைநாட்டிலிருந்து கீழ்நாட்டிற்கு வருவதற்கு அப்போது பிரதான மூன்று பாதைகள் பயன்படுத்தப்பட்டன. பலன மார்க்கம், கலகெதர மார்க்கம், இந்தல்கஸ்கின்ன ஆகியவையே அந்த மூன்று வழிகள். இந்த மூன்று பாதைகளை மறிக்கும் வகையில் அங்கே அரண்கள் அமைக்கப்பட்டன. முன்னர் அமைக்கப்பட்டிருந்த காவல் அரண்களைப் போன்றவை அல்ல இவை. அதை விட அதிக ஆளணியுடனும், ஆயுதங்களுடனும், பாதுகாப்புடனும் உறுதியாக அவை அமைக்கப்பட்டன. 

அது மற்றுமன்றி பலன கொத்தளத்தைப் பாதுகாக்கும் வகையில் அதற்கு முன்னால் அட்டாபிட்டிய, எத்காலேதொட்ட, தமுனுகஸ்ஹின்ன, ஹத்தலிஸ்பன்ன ஆகிய இடங்களிலும் கலகெதர அரணை எதிர்கொள்ளும் முன் அலவ்வ, மொட்டப்புலிய ஆகிய இடங்களிலும், இந்தல்கஸ்கின்னவை நெருங்கும் முன் எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் காவலரண்கள், நிலையங்கள் என்பவற்றையும் அமைத்தான் அசவேதோ. 
1655 இல் வரையப்பட்ட கொழும்பு கோட்டை (Dutch-East-India-Company)
இந்த உபாயங்களை விமலதர்மசூரிய அறிந்தே வைத்திருந்தான். இந்த அரண்கள் அமைத்துக்கொண்டிருக்கும் போதே விமலதர்மசூரியனின் படைகள் அடிக்கடி தாக்கி இடையூறு செய்துகொண்டிருந்தன. கோட்டையையும் கூட இத்தகைய தாக்குதல்களின் மத்தியில் தான் அசவேதோ கட்டிமுடித்தான்.

ஆனால் முன்னர் போல போர்த்துக்கேயப் படையரண்களில் சிறிய குழுக்களாக இருக்கவில்லை என்பதால் சற்று பலமாகவே இருந்தார்கள். எனவே கோட்டையை கட்டிமுடிக்கும் வேலையை கண்டியப் படைகளால் முழுமையாக தடுத்து நிறுத்தமுடியவில்லை. அசவேதோவின் திட்டப்படி விமலதர்மசூரியனின் மலைநாட்டு வழிகளுக்கு இடையூறு செய்ய முடிந்தது.

ஆகவே இந்த இரண்டாம் கட்ட முயற்சியில் அசவேதோ வெற்றிகரமாக முன்னேறியிருப்பதை விமதர்மசூரிய இனங்கண்டுகொண்டான். இனிமேலும் சக்திமிக்கபோர்த்துக்கேய கோட்டையைத் தாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டால் தமது படை பேரிழப்பை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதால் வேறொரு தந்திரத்தைக் கையாண்டான். அதாவது தானும் ஒரு முன்னரங்கப் பாதுகாப்புக் கோட்டையைக் கட்டுவதே அந்தத் திட்டம்.

அசவேதோ கண்டி மீது ஒரு சமரைத் தொடக்குவதாக இருந்தால் குறைந்த தூரத்தைக் கொண்ட “பலன” பாதையில் தான் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை ஊகித்தான். அந்தப் பாதையே தனது உபாய வழியாக ஆக்கிக்கொள்கிறான். அதன்படி பலன, இஹல கோட்டே என்கிற பகுதிகளில் இரு கொத்தளங்களையும், புத்தஸ்ஸகொட எனும் இடத்தில் இன்னொரு முன்னரங்க முகாம் ஒன்றையும் அமைத்தான். அதேவேளை இவற்றைவிட விட பலமான பெரிய கோட்டையொன்றை கனேதென்ன என்கிற இடத்தில் அமைக்கிறான். கனேதென்ன என்பது கண்டியின் வாசல் என்றே கூறவேண்டும். அங்கிருந்து தான் கண்டி தொடங்குகிறது. இவற்றைவிட போர்த்துகேயர்களின் பாதுக்கப்பரண்களுக்கு நிகரான அரண்களை பல்வேறு இடங்களில் அமைக்கிறான்.

எவ்வாறிருந்தாலும் விமலதர்மசூரியனையும், மலைநாடும் போர்த்துகேயரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. எனவே ஒரு வகையில் இரண்டாம் கட்டத்தில் அசவேதோவுக்கு கணிசமான வெற்றியென்றே கூறவேண்டும்.
போர்த்துகேயர்களுடனான சண்டை பற்றி பால்தேயுவின் "A true and exact description of the most celebrated East-India coasts of Malabar and Coromandel; as also of the isle of Ceylon (1703)" நூலில் இருந்து எடுக்கப்பட்ட படம்
மூன்றாம் கட்டம்
இப்படி சுற்றிவளைத்து நிலைகொண்டுள்ள தனது படைகளை உறுதி செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் அசவேதோ ஹத் கோறளை, ஹதர கோறளை பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான சமரை ஆரம்பிக்கிறான். இம்முறை முன்னரைப் போன்ற பெரிய இடையூறுகள் இல்லாததால் அசவேதோ எளிமையாக தனது திட்டத்தில் வெற்றி பெறுகிறான்.

தொன் ஜெரோனிமோ த அசவேதோ என்கிற பெயர் இந்தக் காலகட்டத்தில் சிங்களவர்களைப் பொறுத்தளவில் பெயோன்ரைக் குறிப்பிடுவதற்கான இன்னொரு பெயராகக் கொண்டிருந்தார்கள். அந்தளவு இந்தப் பிரதேசங்களில் அசவேதோ ஆடிய வெறியாட்டம் கொடூரகரமானது.

தன்னால் அடையாளம் கண்ட கிளர்ச்சிகர கிராமங்களை முழுமையாக அழித்து நாசமாக்குகிறான். மக்கள் சர்வசாதரணமாக கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள், குழந்தைகள் பலரை வீசியெறிந்து கொல்கிறார்கள். கால்நடைகள் விலங்குகள் பல கொல்லப்பட்டு தேவையானவற்றை அவர்களின் உணவுக்கு பறித்துக்கொள்கிறார்கள். சில பிரதேசங்களில் அந்த தாவரங்களையும் அவர்கள் மிச்சம் வைக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கொடுமைகளை குரூரமாக ரசித்து ரசித்து செய்ததாக குறிப்புகளில் காண முடிகிறது.

1600 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பல சிங்கள கிராமங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் பலதையும் இழந்த நிலையில் தமது கிராமத் தலைவர்களை அழைத்துக்கொண்டு சென்று அசவேதோவை சந்தித்து இனிமேல் தாம் எந்தவித கிளர்ச்சிகளிலும் சம்பந்தப்படமாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு வருகிறார்கள். இத்தோடு இந்த மூன்றாம் கட்டமும் நிறைவுக்கு வருகிறது.

கீழ்நாட்டு பிரதேசங்களை அசவேதோ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டான். கண்டி ராஜ்ஜியம் இப்போது ஏறத்தாழ சுற்றிவளைக்கப்பட்ட நிலை. இனி கண்டி மீதான ஆக்கிரமிப்புக்கு நாள் குறிப்பது மட்டுமே பாக்கி.

நான்காம் கட்டம்
ஆனால் அசவேதோ அவசரப்படவில்லை. குழப்பமடையவில்லை ஒரு வருடத்துக்கும் மேல் அதற்கான திட்டமிடலை ஆசுவாசமாக மேற்கொள்கிறான். 1602ஆம் ஆண்டு போர்த்துகேய படைகள் “மெனிக்கடவர”விலிருந்து கண்டியை நோக்கி படைகளை நகர்த்தத் தொடங்குகிறான். அந்த நகர்வில் போருக்காக முன்னரங்க முகாம் ஒன்றை (forward base camp)  ஒன்றை அட்டாபிட்டியவில் அமைக்கிறான்.

இந்த இடத்தில் ஒன்றை நினைவிற்கொள்ளவேண்டும் கண்டியைக் கைப்பற்றுவதற்கான படை நகர்வுக்காக போர்த்துகேயர் பயன்படுத்திய பாதை இன்றைய கொழும்பு – கண்டி பிரதான வீதியை அல்ல. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் கொழும்பு-கண்டி ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிற பாதை தான் இந்த படையெடுப்பு நடந்த பாதை.

புதிதாக அமைக்கப்பட்ட அட்டாபிட்டிய முகாமிலிருந்து லெஸ்கரின் படைகளை அலுத்நுவரவை நோக்கிய படையெடுப்புக்கு ஆணையிடுகிற அதே வேளை நோய்வாய்ப்பட்டிருந்த படையினரையும், காயப்பட்டிருந்தவர்களையும் கொண்டு கோட்டைகளை பாதுகாக்க ஏற்பாடு செய்கிறான்.

போர்த்துகேய படைகள் அழுத்நுவர பிரதேசத்தை நெருங்கும்போது புத்தஸ்ஸகொடவுக்கு முன்னாள் இருக்கும் பாதுகாப்பு முன்னரணில் இருந்து எதிர்த்தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். அசவேதோ தனது பிரதான படையணியுடன் அழுத்நுவரவில் தங்கியிருந்து கெப்டன் மேஜர் செல்வதோர் பெரைரா த சில்வா மற்றும் லெஸ்கரின் தலைவரான சிமாவோ பிஞ்ஞோ ஆகியோரின் தலைமையிலான படையணிகள் இரண்டை முன்னரன் முகாமுக்கு இரு புறமாகவும் அனுப்பி தாக்குதல் தொடுத்து அதனைக் கைப்பற்றிவிடுகிறான்.

இதற்கிடையில் மன்னர் விமலதர்மசூரிய தனது படையினரை கேனேநெத்த கோட்டையை பாதுகாக்க திரட்டுகிறான்.  கனேதென்ன மூன்று புறமும் அடர்த்தியான கற் சுவர்களைக் கொண்டதும் இன்னொரு புறம் இயற்கையாகவே மலையால் சூழப்பட்ட கோட்டை. எனவே அவ்வளவு எளிதாக தாக்கி முன்னேற முடியாது. மேலும் போர்த்துக்கேயர் இந்த ஆக்கிரமிப்பில் தமது கனரக பீரங்கியை நகர்த்திக் கொண்டுவர முடியவில்லை எனவே பித்தளையினால் செய்யப்பட்ட இலகுரக பீரங்கியைத் தான் நகர்த்திக்கொண்டு வர முடிந்தது.

இருபது நாட்களாக அந்தக் கோட்டையை தாக்கிக்கொண்டே இருந்தாலும் அந்தக் கோட்டையை தகர்க்க முடியவில்லை. அதுபோல எதிர்த்தாக்குதலில் போர்த்துக்கேயருக்கு கடும் இழப்புகள் ஏற்படுகின்றன. போருக்கான விநியோகமும் தொடர்ந்து தேவைப்படுகிறது. போர் வீரர்கள் களைத்துப் போகிறார்கள். ஆனால் 1602 பெப்ரவரி 22ஆம் திகதி ஒரு ஆச்சரியமான  செய்தி வந்து சேருகிறது. கனேதென்ன கோட்டையைக் கைவிட்டுவிட்டு சிங்களப் படைகள் பின்வாங்கி சென்றுவிட்டன என்கிற செய்தி தான் அது.

இனி தடையின்றி பலன மார்க்கமாக படைகளை இலகுவாக நகர்த்திச் செல்லலாம். ஆனால் அசவேதோவுக்கு இருந்த குழப்பம் தீரவில்லை.  இருபது நாட்களாக தாக்குதலுக்கு வீழாத கோட்டையை சாதரணமாக கைவிட்டுவிட்டு ஏன் ஓடினார்கள்.

விமலதர்மசூரியனைப் பொறுத்தளவில் போர்த்துகேய படைகளின் பலத்தைக் குறைப்பதற்கும், லெஸ்கரின் படையினரின் மனோபலத்தை குன்றச் செய்வதுமான போத்தந்திரத்தைக் கையாள்வதே. அதேவேளை அதே பலன பாதையில் அவர்களை வரப்பண்ணுவது. அதே பலன பாதையில் செல்வதில் உள்ள ஆபத்தை அசவேதோ இனங்கண்டுகொள்கிறான். எனவே முதலில் கனேதென்ன கோட்டையில் இருந்தபடி இராணுவத்தை மீண்டும் அணிதிரட்டிச் சீர்செய்கிறான்.

இம்முறை அவன் இலங்கையில் போர்த்துக்கீசரின் வரலாற்றிலேயே அதிகப்படியான படையை அங்கே திரட்டுகிறான். இதற்காக அவனுக்கு தென்னிந்தியாவில் கோவாவில் இருந்தும் படைகள் வந்து சேருகின்றன. அதில் 1100 போர்த்துகீசர்கள், 300 இந்திய கிறிஸ்தவர்கள், 12,000 லெஸ்கரின் படையினர் அடங்குவார்கள். இத்தனைப் படையையும் திரட்டுவதற்கு அசவேதொவுக்கு 1602 நவம்பர் வரை காத்திருக்க நேரிடுகிறது.

மன்னரைக் கொல்ல சதி
இதற்கிடையில் ஒரு விசித்திரமான நிகழ்ச்சி நடக்கிறது. லெஸ்கரின் படையின் தலைவனான சிமாவோ பிஞ்ஞோவுக்கு மன்னர் விமலதர்மசூரியனிடம் இருந்து ஒரு இரகசிய செய்தி வருகிறது. அதில் அசவேதோவுக்கு எதிராக சதிசெய்து படையிலிருந்து ஒரு பகுதியுடன் கண்டியப் படையில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அது. ஆனால் சிமாவோ பிஞ்ஞோ அதனை அசவேதோவிடம் தெரிவித்துவிடுகிறான். அசவேதோ மன்னரை வீழ்த்த ஒரு தந்திரமான திட்டத்தைத் தீட்டுகிறான். மேலதிகமாக இது குறித்து உரையாடவென ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்படி மன்னரைக் கேட்கும்படி சிமாவோ பிஞ்ஞோவிடம் கூறுகிறான். அப்படி ஒரு இரகசிய சந்திப்புக்கு மன்னரை அழைத்து அங்கேயே தந்திரமாக மன்னரைக் கொன்று விட்டு கண்டியில் ஏற்படக்கூடிய பதட்டத்தைப் பயன்படுத்தி கண்டிக்குள் அதிரடியாகப் புகுந்து கைப்பற்றுவதே அசவேதோவின் திட்டம்.

திட்டமிட்டபடி அந்த சந்திப்பு ஏற்பாடாகிறது. ஆனால் மன்னரை கொல்வதற்காக அனுப்பப்பட்ட போர்த்துகேய கொலைஞர்களுக்கும் மன்னருக்கும் இடையில் அந்த சந்திப்பு நிகழவில்லை. மாறாக அவர்களை கண்டியப் படையின் முக்கியஸ்தர்களே சந்தித்தார்கள்.  சந்திப்புக்காக சென்ற போர்த்துகேய படையினர் அனைவரும் கண்டியப் படையால் கொல்லப்பட்டார்கள். விமலதர்மசூரிய தந்திரத்தில் அசவேதோவை விட ஒரு படி மேலேயே இருந்திருக்கிறான்.

1603 ஜனவரியில் போர்த்துகேய படையினர் கண்டியை நோக்கி முன்னேறுகின்றனர். பலன மார்க்கமாகவே முன்னேறிய அப்படையை கண்டியப் படைகள் முழு அளவில் தாக்குகிறார்கள். பலன, இஹல கோட்டே ஆகிய இரு கொத்தளங்களுக்குப் புறம்பாக மலைப் பகுதிகளில் பாதுகாப்பாக இருந்தபடி துப்பாக்கிகளாலும், சிறிய ரக பீரங்கிகளாலும் தாக்கி போர்த்துகேயரை நிலைகுலைய வைத்துக்கொண்டிருந்தார்கள். 
இன்றைய நிலையில் பலன கோட்டை

போர்த்துகேயர் முன்னேறும் ஒவ்வொரு அடியும் இரத்தத்தால் விலைகொடுக்க நேரிட்டது. மேஜர் செல்வதோர் பெரைரா த சில்வா தலைமையிலான படையை ஒரு மலையுச்சிக்கு அனுப்புகிறான் கண்டியப் படைகளின் சிறிய ரக பீரங்கிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கிவிடுகிறான். அடுத்ததாக சிமாவோ பிஞ்ஞோவின் தலைமையிலான ஒரு குழுவை விலங்குகள் போகும் பாதையில் அனுப்புகிறான் அவனும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கிவிடுகிறான்.

ஒரு மாதமாக நடந்த இந்த சமரின் இறுதியில் பலன கொத்தளம் தெரியக் கூடிய அளவுக்கு நெருங்க முடிந்தது. மூன்று நாட்களாக அக்கோட்டையை நோக்கி தமது பெல்கன் ரக பீரங்கிகளால் தொடர் தாக்குதளை நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதற்கு மேல் முன்னேற முடியாது என்று தெரிகிறது. ஆனால் பலன கொத்தளத்துக்குள் நுழைவதற்கான இரகசியப் பாதையை கண்டியைச் சேர்ந்தவன் ஒருவன் காட்டிகொடுத்துவிடுகிறான். அசவேதோவுக்கு இப்போது மெல்லிய தடை விலகுகிறது. செல்வதோர் பெரைரா தலைமையிலான ஒரு அணியை அனுப்புகிறான். அந்தத் தாக்குதலை எதிர்கொண்ட கண்டியப் படை பலன கொத்தளத்தைக் கைவிட்டு அடர்த்தியான காடு வழியாக விமலதர்மசூரியனும் படைகளும் பின்வாங்கிச் சென்றுவிடுகின்றன. ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட சமரால் இப்போது போர்த்துக்கேயர்கள் 1603 பெப்ரவரி 2ஆம் திகதி பலன கொத்தளம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.  போர்த்துக்கேயர் ஆனந்தமாக வெற்றிகளிப்பைக் கொண்டாடுகின்றனர். விமலதர்மசூரிய வந்து தாக்குமுன் அடுத்த படைநகர்வுக்கு தயார்படுத்தவேண்டும். 

இனி கண்டிக்கு இருபத்தைந்து கிலோமீட்டர் மட்டுமே. ஆனால் அசவேதோ மீண்டும் சந்தேகிக்கிறான் ஒரேயடியில் கண்டியப் படைகள் அங்கிருந்து மாயமானது எப்படி. 

மன்னர் விமலதர்மசூரிய எப்பேர்பட்ட போர்க்கலைஞன், அவனது போர்த்திறன் எவ்வளவு திறம்பட்டது என்பதை அதன் பின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வோடு உணரத் தொடங்குகிறான்.

அசவேதோவுக்கு திடீரென்று ஒரு செய்தி வந்து சேருகிறது. கண்டியப் படைகள் தமலபிட்டியவில் உள்ள போர்த்துகேயக் கோட்டையை கடுமையாக தாக்கி வருகிறார்கள் என்கிற செய்தி தான் அது. விமலதர்மசூரிய வேலையைக் காட்டிவிட்டான். உடனடியாக சிமாவோ பிஞ்ஞோ வின் லெஸ்கரின் படையை அங்கே அனுப்புகிறான்.

போர்த்துகேய படை இப்போது இரண்டாக பிரிக்கபட்டதும் விமலதர்மசூரிய தனது அடுத்த காயை நகர்த்துகிறான். எஞ்சியிருந்த லெஸ்கரின் படைக்கு தலைமை தாங்கிய காங்கர ஆராச்சி முதலி என்பவனின் தலைமையிலான படை கண்டியப் படையில் போய் சேர்ந்துகொண்டது. மன்னரின் ஒற்றர்படை பல நாட்களாக லெஸ்கரின் படையை சரிகட்ட வேலைபார்த்துக்கொண்டிருந்தது. இறுதியில் அதில் வெற்றியும் கண்டது. 

தமக்கு இரகசிய பாதையைக் காட்டியவன் மன்னரின் ஒற்றன் தான் என்பதை அசவேதோ உணரும்போது போர்த்துகேய படை தனிமைப்படுத்தப்பட்டு மலைகளைச் சூழ்ந்திருந்த கண்டியப் படையால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

விமலதர்மசூரிய தனது திறமையான போர்த்தந்திரத்தால் தன்னை வீழ்த்திவிட்டதை அசவேதோ உணர்ந்தான். இனி எஞ்சிய படையையும் பலிகொடுக்காமல் கொழும்புக்குத் திரும்புவது மட்டுமே அவனுக்கு இருந்த ஒரே தெரிவு. கண்டியப் படையை எதிர்கொண்டபடி இருக்கும்படி கெப்டன் அந்தோனியோ டி பிஞ்ஞோவின் கீழ் ஒரு படையணியை பலன கொத்தளத்தில் இருத்திவிட்டு பிரதான படையுடன் கனேதென்னவுக்கு பின்வாங்கினான் அசவேதோ. அதன் பின்னர் ஏனையோரும் கனேநேத்தவுக்கு பின்வாங்கி வந்து விட்டார்கள். கனேதென்னவில் சிமாவோ பிஞ்ஞோவை சந்திக்கிறான். முழு கீழ்நாட்டு பிரதேசத்திலும் உள்ள போர்த்துக்கேய நிலைகள் கிளர்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது என்கிற செய்தியை அவன் மூலம் அறிந்தான். போர்த்துகேயர் கொழும்பை நோக்கி முழுமையாக பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் அப்படி பின்வாங்கும்போது கடந்துசென்ற கிராமங்களில் எல்லாம் எதிர்ப்புகளையும் கிளர்ச்சிகளையும், கூடவே அங்காங்கு கண்டியப் படைகளின் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கனேதென்னவிலிருந்து, அழுத்நுவர, அங்கிருந்து அட்டாபிட்டிய, அங்கிருந்த மெனிக்கடவர என்று ஒவ்வொன்றாக கைவிட்டுவிட்டு பின்வாங்க வேண்டியேற்பட்டது.மெனிக்கடவர வந்து சேரும் போது நான்கு நாட்களாக உணவின்றி பட்டியினியில் வந்து சேர்ந்திருந்தார்கள்.

தொடர் தாக்குதலால் பின்னர் மெனிக்கடவர பெருங்கோட்டையையும் கைவிட்டு ருவன்வெல்ல, சீதாவக்க கடந்து ஹங்வெல்ல வந்தடைகிறார்கள். ஹங்வெல்லவில் தான் கண்டியப் படை அதிரடித் தாக்குதல்களை நிறுத்தியது. அதுவரை விரட்டியே வந்திருக்கிறார்கள். அசவேதொவின் கண்டியக் கனவு அத்தோடு கலைந்தது.

1603 இல் “பறங்கி மகா போர்” முடிவுக்கு வருகிறது. ஆனால் அதனை அனுபவிக்க மன்னர் விமலதர்மசூரிய நீண்டகாலம் உயிருடன் இருக்கவில்லை. அடுத்த ஆண்டே 1604இல் விமலதர்மசூரிய மரணமெய்தினான்.

“பறங்கி ஹட்டன” போர்க்காவியத்தை எழுதியவர் அலகியவத்த முகவெட்டி என்கிற சிங்களப் பண்டிதர். 1552இல் பிறந்த அவர் செவுல்சந்தேசய, குசஜாதக காவ்ய, சுபாஷிதய, நீதிசாரய, மஹா ஹட்டன, பறங்கி ஹட்டன, தஹாம் பொந்த தாவக்க, முனிகுண ரத்ன மாலய, துஷ்ஷீலவத போன்ற முக்கிய சிங்கள இலக்கிய நூல்களைத் தந்தவர். ஒருபுறம் காலனித்துவ கால காலனித்துவவாதிகள் தந்த வரலாற்று நூல்களின் தகவல்களை சரி பார்க்க இப்பேர்பட்ட இலக்கியவாதிகளின் படைப்புகள் தான் ஓரளவு உதவியிருக்கின்றன.

இலங்கையில் பௌத்த ஆட்சி கலைக்கப்பட்ட காலம் இது. வடக்கில் யாழ்ப்பான இராஜ்ஜியத்தில் புவிராச பண்டாரனின் சைவ சமய ஆட்சியை நடத்தி வந்த காலம்., சீத்தாவக்க, கண்டி ஆகிய ராஜ்ஜியங்களை ஆண்டுகொண்டிருந்த முதலாம் ராஜசிங்கனும் சிவ வழிபாட்டைக் கடைப்பிடித்து வந்த சமயம். கரையோரப் பிரதேசங்களில் போர்த்துக்கேயர்களினால் கிறிஸ்தவ ஆட்சியையும் நடத்தி வந்த காலம் அது. எனவே விமலதர்மசூரிய பௌத்தத்துக்கு மீண்டும் மாறி கண்டியை ஆண்டதை பௌத்த மீட்பு காலமாகவே வரலாற்று ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். பத்தரின் “தலதா” தாதுப் பல்லை மீட்டு கண்டியில் கொண்டு வைத்தது விமலதர்மசூரியன் தான். பௌத்த பிக்குமார்களை பர்மாவிலிருந்து அழைத்துவந்து இலங்கை பிக்குமார்களுக்கு உபசம்பத்தா தீட்சை கொடுத்து பௌத்தத்தை நிலைநாட்டியதும் இவனின் ஆட்சியில் தான். போர்த்துகேயர் இலங்கையில் இருந்து விரட்டப்பட்டு 12 ஆண்டுகளின் பின்னர் கத்தோலிக்க பாதிரியார் குவைறோஸ் எழுதிய “இலங்கையை ஆத்மீக லௌகீக துறையில் வெற்றி பெறல்” (The Temporal and Spiritual Conquest of Ceylon) என்கிற நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“தென் அமெரிக்காவிலும், ஆசியாவிலும் மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் போர்த்துகேயர் வசமாக்குவதற்காக செய்த செலவை விட இரட்டிப்பாக செலவு செய்தும் உயிர்களைக் கொடுத்தும் கூட இலங்கையை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. இத்தனை விலை கொடுத்தான் நாம் மேலும் சற்று அதிகம் கவனம் எடுத்திருந்தால் இலங்கையை நமதாக்கி இருந்திருக்கலாம் என்பதிள் எனக்கு சற்றும் ஐயமில்லை...”
அசவேதோ நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளை குவைறோஸ் உட்பட பல வரலாற்றாசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். சாதாரண கிராமத்தவர்களை பிடித்து வெட்டி முதலைகளுக்கு தீனியாக போட்டதும், பௌத்த விகாரைகள் பலவற்றை அழிதொழித்ததும் அடங்குகின்றன. பிற்காலத்தில் கோவாவில் செவையாற்றிகொண்டிருந்தபோது செய்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு அசவேதோ போர்த்துக்கலுக்கு திருப்பி அழைக்கப்பட்டான். அங்கு லிஸ்பன் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த போது சிறையிலேயே மாண்டான்.

விமலதர்மசூரிய போன்றோரின் போர்த்தந்திரமிக்கவர்களால் இவ்வாறு தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால் தென் அமெரிக்காவில் ஸ்பானியர்கள் நிகழ்த்திய இனச்சுத்திகரிப்பைப் போன்ற ஒன்று இலங்கையிலும் நிகழ்ந்திருக்கக் கூடும்.

பிற்குறிப்பு
(*லெஸ்கரின்” (Lascarins))போர்த்துகேய படைகளில் இணைந்த உள்நாட்டுப்படயினரையே “லெஸ்கரின்” (lascarins) என்று அழைத்தார்கள். தமிழில் சில இடங்களில் லசுக்காரின் என்கிற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. கத்தோலிக்க மதத்துக்கு மாறிய சிங்களவர்களாக  இருந்தார்கள். ஏறத்தாழ போர்த்துக்கேயர்களின் சமர்கள் அனைத்திலும் இவர்கள் போராடி மடிந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வப்போது அணிமாறி உள்நாட்டு அரசுகளுடனும் இணைந்திருக்கிறார்கள். 1ஆம் ராஜசிங்கனின் பிரதான படை “லெஸ்கரின்” படையாக போர்த்துக்கேய படையில் இணைக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. அப்படைக்கு தலைமை தாங்கிய அரிட்ட கீவெண்டு பெருமாள்  (Aritta Kivendu Perumal) தமிழகத்திலிருந்து வந்த தெலுங்கு நாயக்க வம்சத்து பின்னணியைச் சேர்ந்தவன். சீத்தாவக்க ராஜசிங்கனின் நம்பிக்கைக்குரிய பிரதான ஆலோசகராக இருந்த கீவெண்டு பெருமாள் ராஜசிங்கனின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி இழுபறியில் விளைவாக போர்த்துக்கேயருடன் இணைந்தான். கீவேண்டு பெருமாள் போர்த்துகேய படையையும் திரட்டிக்கொண்டு தனது தலைமையிலான லெஸ்கரின் படையுடன் சென்று சீத்தாவக்க மீது போர்தொடுத்து கைப்பற்றி சீத்தாக்க அரசு போர்த்துகேயர் வசம் போக வழிவகுத்தான். போர்த்துகேயரால் தான் ஜயவீர பண்டார என்கிற பெயர் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் லெஸ்கரின் என்கிற சொல்லை சிங்கள எழுத்துக்களில்  தேசத்துரோகிகளைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தினார்கள்.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு உதவிய சிங்களவர்களையும் குறிக்க பல கட்டுரைகளிலும், இலக்கியங்களிலும் “லெஸ்கரின்” என்கிற பெயரைக் குறித்து வந்திருக்கிறார்கள்.

உசாத்துணை:
  1. Gaston C. Perera  - Kandy Fights the Portuguese: A Military History of Kandyan Resistence - -2007
  2. Michael Roberts - නුවර යුගයේ සිංහල බව : 1590 දශකයේ සිට 1815 දක්වා -Publisher: Vijithayapa - Publishers – 2016
  3. Baldeaus, P. 1996 A true and exact description of the most celebrated East-India coasts of Malabar and Coromandel and also of the Isle of Ceylon – 1671
  4. P.E. PIERIS - Ceylon and the Portuguese 1505-1658 –– American Ceylon mission Press – 1920
  5. Queiroz, Fernao de 1930 - The Temporal and Spiritual Conquest of Ceylon, trans. by Fr. S. G. Perera, Colombo: Government Printer.
  6. Condensed from S. Arasaratnam's introduction to Francois Valentijn's Description of Ceylon, Hakluyt Society, London, 1978.
  7. Ribeiro’s History of Ceilao - By P.E. Pieris - The Colombo Apothecaries Co. Ltd – 1909
  8. "Robert  Knox in the Kandyan kingdom" - 1660-1679" By H. A. I. Goonetileke - A Bio-Bibliographical CommentaryTHE LANKA JOURNAL HUMANITIES VOLUME I – 1975
  9. P.E.Pieris - THE PRINCE VIJAYA PALA OF CEYLON 1634 - 1654 - Colombo – 1928
  10. பேராசிரியர் சே.கிருஷ்ணராஜா - இலங்கை வரலாறு – பாகம் II – (கி.பி.1505-கி.பி.1796 வரை), Pirainila Publication - 2005
நன்றி - காக்கைச் சிறகினிலே - ஓகஸ்ட் - 2019

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates