சாதிய அவமானங்களை இடையறாது எதிர்கொள்ளும் மனம் சாதியத்திலேயே நிலைகுத்தி நின்றுவிடுகிறது. பிறகு அது சாதியம் தனக்கிழைத்த கொடுமைகளின் அனுபவங்களைத் தொகுத்துக்கொண்டு, சாதியம் என்கிற முழுமையை புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, சமகாலத்தின் இயங்குநிலை ஆகியவற்றையெல்லாம் ஆய்ந்தறியாவிடினும் அது ஒழிக்கப்பட வேண்டியது என்கிற ஒரு முடிவுக்கு தனது சொந்த வாழ்வனுபவத்திலிருந்து வந்து சேர்கிறது. சாதியத்திலிருந்து விடுபடுவது எப்படி, எப்போது, யாரால் என்கிற கேள்விகளை தனக்குத்தானே எழுப்பிக்கொண்டு அவற்றுக்கு பதில் தேடுவதிலேயே அது தனது அறிவையும் ஆற்றலையும் இழந்து நிற்கிறது. அதனிமித்தம் அது தன்காலத்தின் வாழ்வை வாழாமல் தனித்தொதுங்கி எந்நேரமும் இறந்தகாலத்தின் பிரதிநிதி போல தன்னை தாழ்த்திக்கொள்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என் மீது சுமத்திய அழுக்குமூட்டைகளை இறக்கித் தொலையுங்கடா பாவிகளே என்று அது எழுப்பும் கூக்குரல் காலத்திற்குப் பொருந்தாத ஓலமாக பிறர் காதைக் குடைகிறது. காலமும் உலகமும் எவ்வளவுதான் மாறினாலும் இந்த ஒப்பாரியும் ஓலமும் ஓயவேயில்லை என்று தன்மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டுகள் எவ்வளவு அநீதியானவை என்று திருப்பிச் சொல்வதற்கும் முடியாத தீனக்குரலாக அது தேம்பிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்நூலிலுள்ள கட்டுரைகள் மற்றும் நேர்காணல் வழியே தோழர் சரவணன் உணர்த்துகிறார்.
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டு இன்று இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று அடையாளமிடப்பட்டுள்ளவர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் தீண்டப்படாதச் சாதியினர். இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பூர்வீகத் தமிழர் நலன் குறித்து ஆதியோடந்தமாக பலதையும் விவாதிக்கிற - தங்களது தொப்பூள்கொடி உறவுகளென சொந்தம் பாராட்டுகிற தமிழகத் தமிழர்கள், உண்மையில் தங்களில் ஒருபகுதியினராகிய இந்த இந்திய வம்சாவளித் தமிழர் நலன் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் இருப்பதற்கு இவர்களின் சாதியப் பின்பலம் பிரதான காரணியாக இருக்கிறது என்கிற மறுக்கவியலாத குற்றச்சாட்டை சரவணன் முன்வைக்கிறார். அதிலும் குறிப்பாக, இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒருபகுதியினராகிய அருந்ததியர்களின் வாழ்வியல் மீது நம் கவனத்தை குவிப்பதன் மூலம் இலங்கையிலும் புலம்பெயர் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திலும் இனம், தேசியம் என்பதான பேரடையாளங்களின் உள்ளுறையாக சாதியமே இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் போலல்லாமல் மலையகத்திற்கு அப்பால் நகரங்களை மையப்படுத்திய வாழ்க்கை அருந்ததியர்களுடையது. நகரங்களின் துப்புரவுப் பணிகளைச் சார்ந்து தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும்படியாக விடப்பட்ட இவர்கள் இந்த இரு நூற்றாண்டுக் காலத்தில் அடைந்துள்ள நிலையை கள அனுபவங்களில் இருந்தும் கருத்தியல் வெளிச்சத்திலிருந்தும் சரவணன் பேசியுள்ளார். சாதிசார்ந்த தொழில், தொழில்சார்ந்த இழிவு, இழிவு சார்ந்த சமூகப் புறக்கணிப்பு, சமூகப் புறக்கணிப்பால் ஆளுமைச்சிதைவு, உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர் பாதிப்புகள், சமகால வாழ்வை எட்டிப்பிடிப்பதில் உள்ள இடர்ப்பாடுகள், வாய்ப்புகளில் பாரபட்சம் என்று அவர் காட்டிச் செல்லும் அருந்ததியர் வாழ்வின் பொருட்டு தமிழ்ச்சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.
போரும் புலம்பெயர் வாழ்வும் சாதியத்தை சர்வதேசங்களுக்கும் கொண்டுசென்றுள்ள காலமிது. அங்கெல்லாம் ஒரு பன்மியக் கலாச்சாரத்திற்குள் பொருந்திக்கொள்வதற்கான எத்தனங்களை நடத்திக் கொண்டே சாதியம் என்கிற குறுகிய அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அந்தரங்கமாக தமிழர்கள் கையாளும் நுணுக்கங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சாதியின் வெளிப்பாட்டு வடிவங்களை மாற்றியுள்ளனவேயன்றி சாதியம் அழிந்துவிடவில்லை. உண்மையில் சாதியம் இப்படியாகத்தான் காலத்துக்கு காலம் தன்னை தகவமைத்துக்கொண்டு இன்றுவரையிலும் தாக்குப் பிடித்து நிற்கிறது. அதேவேளையில் சாதியத்தின் கொடூரத்திலிருந்து தப்பிக்கும் பல மார்க்கங்களை ஒடுக்கப்பட்ட சாதியினர் நடைமுறைக்கு உகந்த வகையில் தொடர்ந்து கையாண்டுவருவதையும் காணமுடிகிறது. சாதியடுக்கின் மேலேயுள்ளவர்களைப் போலச்செய்தல், மேல்நிலையாக்கம், நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் பெருந்தெய்வங்களின் அம்சமாக மாற்றிக் கொள்ளுதல், புரோகிதம் பூசனைகளில் பார்ப்பனீய வெள்ளாளீயச் சடங்குகளை மிகுதியாக்குதல் என இம்முயற்சி தொடர்கிறது. இப்படி இந்துமதத்துடன் மேலும் மேலும் ஐக்கியப்படுவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் சாதியப் புறக்கணிப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சி ஒருபுறமிருக்க, அண்டை அயலாராக இருக்கும் சிங்களவர்களில் கலந்து சுயத்தை அழித்துக்கொண்டு சாதியிலிருந்து தப்பிக்கும் முயற்சியும் நடக்கிறது. சாதியம் அருந்ததியர்களை வாழ்விடங்களிலிருந்தும் வாழ்வாதாரங்களிலிருந்தும் மட்டுமல்லாது சொந்த மொழியிலிருந்தும் இனத்திலிருந்தும்கூட விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மைகளை விவரிக்கின்றன இக்கட்டுரைகள்.
அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளில் மொழிப்பிரயோகத்தில் வாய்ப்புகளை பகிர்ந்துகொள்வதில் திருமண உறவுமுறைகளில் என்று ஒவ்வொன்றையும் தீர்மானிப்பதாய் இருக்கும் சாதியை அந்தந்த தளத்திற்கான ஆதாரங்களின் துணையோடு அம்பலப்படுத்துவதற்காக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவை. அதனாலேயே திரும்பத்திரும்ப சில விசயங்களைக் கூறுவதுபோல தென்பட்டாலும் அவ்விசயங்களை அவ்வாறாகவும் சொல்லித்தான் கடக்கவேண்டியுள்ளது என்பதை உணரமுடிகிறது. ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறையையும் திரும்பத்திரும்ப திணிக்கும்போது அவற்றை எதிர்க்கும் குரலும் திரும்பத்திரும்ப ஒலிப்பதுதானே இயல்பு? தோழர் சரவணனின் குரல் அத்தகையதே.
தோழமையுடன்,
ஆதவன் தீட்சண்யா
11.02.2019, ஒசூர்
+ comments + 1 comments
அருமையான உள்ள தெளிவான அணிந்துரை. நூலைத் தேடிப் பிடித்தேனும் வாசித்துவிட வேண்டும் என்கிற அதே வேளையில் சாதிய வேரின் பிடிப்பகலாத மண்ணாகவே மனித மனங்கள் நீடிக்கின்றன என்பதை வெகு நுட்பமாக பதிவு செய்கிறார் தோழர் ஆதவண். சாதிய வெளிப்பாட்டு விசயங்கள் மட்டுமே மாறியிருக்கிறது என்ற சுட்டல் சமூகத்திற்கான மாற்றம் இதுவல்ல என்று ஓங்கி அமைகிறது. நாம் வாசிக்க வேண்டியதும் உணர வேண்டியதும் இன்னும் ஏராளம் ஏராளம்.
நன்றி.
அய்.தமிழ்மணி.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...