பத்திரிகையாளரும் ஆய்வாளருமான என்.சரவணன் தற்போது நடந்துகொண்டிருக்கும் நோர்வே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குரூருட் தொகுதியில் போட்டியிடுகிறார். சர்வதேச அளவில் அறியப்பட்ட பசுமைக் கட்சியின் சார்பாக அவர் போட்டியிடுகிறார். சூழலியல் செயற்பாட்டாளரான சரவணன் எழுதிய “இலங்கையில் செம்பனையின் ஆபத்து” என்கிற தொடர் கட்டுரை தினக்குரலில் கடந்த ஆண்டு வெளிவந்தது; வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். தினக்குரலுக்காக அவர் அளித்த நேர்காணல் இது.
(ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த பேட்டி)
அங்கு தேர்தல் ஆரவாரங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது?
நோர்வேயில் தேர்தல்கள் மிகவும் அமைதியாக நடந்து முடிந்துவிடும். எங்கும் போஸ்டர்கள் இல்லை. பிரச்சாரக் கூட்டங்கள் இல்லை. சத்தங்கள் இல்லை. சண்டைகள் இல்லை. வேட்பாளர்களின் பந்தா இல்லை. தேர்தல் எப்போது தொடங்கியது எப்போது முடிகிறது, முடிந்தது என்பது கூட தெரியாதபடி முடிந்துவிடும். தேர்தல் முடிவுகள் அன்று மாத்திரம் அதுவும் கட்சியின் தீவிர அக்கறையாளர்கள் மாத்திரம் ஒன்றுகூடி ஆரவாரமாக இரவிரவாக கவனித்துக்கொண்டிருப்பார்கள். வழமைபோல கழிந்த அடுத்த நாளில் மக்கள் முடிவுகளை அறிந்துகொள்வார்கள். நமது நாட்டை விட நிறைய வித்தியாசங்கள் இங்கு.
உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?
இப்போது ஒஸ்லோ உள்ளூராட்சி சபைகளில் தொழிற்கட்சி, பசுமைக் கட்சி போன்றவற்றின் கூட்டே ஆட்சியில் உள்ளது. இனி வரப்போகும் ஆட்சியிலும் அதே கூட்டு தொடரப் போகிறது. இதனை சிகப்பு பச்சை கூட்டு என்று பிரபலமாக நோர்வே அரசியலில் கூறுவது வழக்கம். இதற்கு முன்னிருந்த நிலையை விட பசுமைக் கட்சி அதிகப்படியான மக்கள் ஆதரவை பெற்றுள்ளது என்று ஊடக கணிப்புகள் சொல்கின்றன. நான் எனக்கான தனிப்பட்ட பிரச்சாரம் எதையும் முன்னிலைப்படுத்தவில்லை. எனது வெற்றியை விட கட்சியின் வெற்றியும், பசுமை அரசியலின் வெற்றியும் தான் முக்கியம். தீமானங்களை நிறைவேற்றுகின்ற அதிகார மையங்களில் அழுத்தும்கொடுக்கக் கூடிய பலம் அதிகரித்தால் அதுவே போதும்.
தேசிய அரசியலோடு பார்க்கையில் உள்ளூராட்சி அரசியல் அதிகாரம் எந்தளவு வித்தியாசப்படுகிறது?
தேசிய அரசியலைப் பொறுத்தளவில் மோசமான வலதுசாரி, தேசியவாதக் கூட்டு தான் கடந்த இரண்டு தடவைகளும் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. முதலாளித்துவ கொள்கைகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எதிரானதாகவும், வெளிநாட்டவர்களின் உரிமைகளை நசுக்குகின்ற அரசாகத் தான் தற்போதைய அரசாங்கத்தைப் பார்க்க முடியும். இப்படியான சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டுக்கு என்ன நேரும் என்பதை தற்போது மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக அரச சேவைகளை வேகமாக தனியார்மயப்படுத்தி வருவதனால் மக்களின் சமூக நலன்கள் மோசமாக பாதித்துள்ளன.
அப்படியென்றால் எதிர்ப்பரசியலின் வீரியம் எப்படி இருக்கிறது?
அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் கொடுத்துவிட்டால் அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்கிற எண்ணப்பாங்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. மக்களின் விருப்பு வெறுப்புகளையும், அபிலாஷைகளையும் ஓர்மத்துடன் வெளிப்படுத்தும் மரபு இவர்களிடத்தில் இல்லை. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இங்கு இல்லை. பெரிய அளவிலான கோரிக்கைகளை மையப்படுத்தி எதிர்ப்பார்ப்பட்டம் நடந்தால் கூட அதில் பங்களிப்போரின் தொகை வெகு குறைவு. இதனால் இந்த எதிர்ப்பரசியல்; அதிகாரத் தரப்பால் அவ்வளவாக கண்டு கொள்ளப்படுவதில்லை. இடதுசாரிக் கட்சிகள் கூட சிறு குழுக்களாகவே எஞ்சியிருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் பொழுதுபோக்கு, சாகச ஒன்றுகூடலாக சுருங்கிவிடுவதையும் பார்த்து கவலைகொண்டிருக்கிறேன். தொழிற்சங்கங்கள் தனியார் கம்பனிகளைப் போல இயங்குகின்றன. OL எனப்படும் தொழிற்சங்கம் ஒரு ஏகபோக கம்பனியைப் போல வளர்ந்து தொழிலாளர்களின் நலன்களில் இருந்து அந்நியப்பட்டே இருக்கிறது. இலங்கை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவிட்டு நோர்வே போன்ற நாட்டில் அரசியலில் ஈடுபடுகையில் அரசியல் செயற்பாடுகளில் பாரிய வித்தியாசத்தை அவதானிக்க முடிகிறது.
தமிழர்களின் அரசியல் பங்குபற்றல் எப்படி இருக்கிறது?
ஒஸ்லோவில் மட்டும் இம்முறை வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறு தொகுதிகள் 6 தமிழர்கள் போட்டியிருகிறார்கள். தமிழர்களின் அரசியல் பங்குபற்றல் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று நோர்வேஜியர்கள் கருதுகிறார்கள். அதேவேளை வாக்களிப்பதில் வெளிநாட்டவர்களின் அதிகரிப்பு குறித்தும், வெளிநாட்டவர்களின் பங்குபற்றல் குறித்தும் நோர்வேஜியர்கள் அச்சம் கொள்வதையும் காணமுடிகிறது. குறிப்பாக வலதுசாரிகளிடம் இந்த அச்சத்தை அவதானிக்க முடிகிறது. வாக்களிப்பில் நோர்வேஜியர்களின் ஆர்வம் ஒரு புறம் குறைந்திருக்கிற நிலையில் வெளிநாட்டவர்களின் வாக்களிப்பு வீதம் கூடும் போது அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தம்மிடம் இருந்து கைநழுவிப் போவதையிட்டு நோர்வேஜியர்களிடம் விவாதங்கள் நடக்கின்றன. இங்கு வாழும் இலங்கையர்களின் இரண்டாவது சந்ததி எதிர்காலத்தில் இப்போதைய நிலைமையை விட அதிகமாக தேர்தலில் போட்டியிடுவதிலும், வாக்களிப்பதிலும் அக்கறை காட்டுவார்கள் என்று உணர முடிகிறது. இப்போதே அரசியல் அதிகாரத்துக்கான கல்வியில் தமது அடித்தளத்தை போடும் புதிய தலைமுறையினரைக் காண முடிகிறது.
பசுமை அரசியலைப் பற்றி சற்று விளக்குங்கள்.
முதலில் உலகம் என்கிற ஒன்று வாழ்வதற்கு மிச்சம் இருந்தால் தான் எஞ்சிய அனைத்தையும் பற்றி பேச முடியும். வெப்பம் வேகமாக அதிகரித்து வருகிறது, உலகின் காடுகளின் அளவு குறைந்து வருகிறது, சுத்தமாக சுவாசிக்கவும், சுத்தமாக அருந்தும் நீரும் வேகமாக குறைந்துவருகிறது. வேகமாக அழிந்து கொண்டிருக்கும் உலகைப் பற்றியோ. இப்போது நிகழும் ஆபத்தைப் பற்றியோ கண்டுகொள்ளாத உலகம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றைக் கொண்டுகொள்ளாதபடி நமது நாளாந்த கவனம் வேறு பக்கம் திசைதிருப்பப்பட்டிருக்கிறது. எதிர்கால உலகு குறித்த எந்த பிரக்ஞையும் அற்ற, அக்கறையற்ற உலகொன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை தம்மால் இயன்றளவு மாற்றத்துக்கு உள்ளாக்கவென உருவாக்கப்பட்டது பசுமைக் கட்சி. உலக அளவில் சுற்றுச் சூழல் விடயங்களில் தீவிரமாக செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது இது. “கிறீன் பார்ட்டி” என்று உலகளவில் பல நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் சர்வதேச கட்சி அது. ஒவ்வொரு நாட்டிலும் சுயாதீனமாகவும், தனித்துவமாகவும் இயங்கினாலும் கூட சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டது இக்கட்சி. தீர்மானங்கள் நிறைவேற்றும் அரசியல் அதிகார மையங்களில் இருந்தால் தான் சூழலியல் சார்ந்த முடிவுகளை எடுக்கின்ற அழுத்தக் குழுக்களாக இயங்கலாம் என்பதே இககட்சியின் அரசியல் நோக்கம். இலங்கைக்கு இப்படியானதொரு கட்சி அவசியம்.
நேர்காணல் - பவித்திரன்
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...