Headlines News :
முகப்பு » , , , , , , » இலங்கையுள் இன்னொரு சமூக வன்முறை பேராசிரியர் - வீ.அரசு

இலங்கையுள் இன்னொரு சமூக வன்முறை பேராசிரியர் - வீ.அரசு

என்.சரவணன் எழுதிய தலித்திய கட்டுரைகளின் தொகுப்பு "தலித்தின் குறிப்புகள்" என்கிற தலைப்பில் இப்போது நூலாக வெளியிட்டிருக்கிறது  "எழிலினி பதிப்பகம்". அந்த நூலில் பேராசிரியர் வீ.அரசு எழுதிய ஆய்வுரை இது. இதனை தற்போது வெளிவந்துள்ள "காக்கைச் சிறகினிலே" அந்த ஆய்வுரையின் முக்கியத்துவம் கருதி மீள் பிரசுரம் செய்திருக்கிறது.
குடியேற்றம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் அவலமாகவே அமைந்து விடுகிறது. சொத்து எனும் கருத்துநிலை உருவான காலம் முதல், சொத்துடையவர், சொத்து இல்லாதவர் எனும் சமூகப்பிரிவு, மனித சமூகத்தில் பல்வேறு பரிமாணங்களில் செயல்படுகிறது. சொத்து என்பதில் அந்த மனிதர்கள் வாழுமிடமே முதன்மையாக அமைகிறது. இயற்கையான நிலப்பகுதி குறிப்பிட்டப் பிரிவு மக்களுக்கு உரிமையானது இல்லை எனும் நிலை உருவாகும்போது, அம்மக்கள் மனரீதியில் அந்நியமாகி விடுகிறார்கள். தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக குடிபெயர்தலை மேற்கொள்கிறார்கள். இவ் வகையான நிலமற்றவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர்தாம்  பெரும் பான்மையினராக உள்ளனர். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை பள்ளர், பறையர், சக்கிலியர் மற்றும் பல்வேறு  சிறுகுழுவினர் பெரும்பகுதி நிலமற்றவர்கள். அவர்கள் குடிசை கட்டி வாழுமிடங்கள் அவர்களுக்குரியது இல்லை.

ஐரோப்பிய காலனியம் அதிகார சக்தியாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி காலம் முதல் உருவானது. இவர்களது ஆதிக்கம் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல்வேறு சிறுதீவுகளில் உருவானது. இவ்விடங்களில் ரப்பர், காப்பி, தேயிலை மற்றும் கரும்புத் தோட்டங்களை உருவாக்கிய ஐரோப்பிய காலனிய முதலாளிகள், அத்தோட்டங்களில் உழைப்பதற்கான மனித சக்திகளை அடிமைகளாகப் பெற்றனர். 1834இல் இங்கிலாந்து அரசால் கொண்டுவரப்பட்ட அடிமை ஒழிப்புச் சட்டம், மனித சக்திகளைப் பயன்படுத்துவதில் புதிய முறைகளை உருவாக்கிற்று. அடிமைகள் என்பதற்குப் பதிலாக ‘கூலிகள்’ இவர்களுக்குக் கிடைத்தார்கள். பெயர் மாற்றம் ஏற்பட்டதேயொழிய அடிப்படையான ஒடுக்குமுறைகளில் எவ்வகையான மாற்றமும் இல்லை. இந்த வகையில் தமிழகத்திலிருந்து இலங்கைத் தீவுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்குறித்த சாதியினரும், குறைந்த எண்ணிக்கையில் வேறு சாதியைச் சேர்ந்தவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இந்திய வம்சா வளியினர், மலையக மக்கள் எனும் பெயர்களில் அழைக்கப்பட்டனர். இவர்களது வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் மேற்கோள் உதவும்.

“தொழிலாளர்கள் பல்வேறு உடல் ரீதியான தண்டனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர், (Klass. 1961). உதாரணமாக மொறிசியஸில் 1867க்கும் 1872 க்குமிடையே 50 இந்தியத் தொழிலாளர்கள் கசையடியினால் மண்ணீரல் சிதறி மரணமடைந்ததாக ஒரு ஆணைக்குழு கூறுகின்றது (Thinker 1974). இந்தியப் பெருந்தோட்டங்களில் பல தொழிலாளர்கள் கசையடியினால் இறந்ததாகவும் இவ்வித குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் வெறுமனே தண்டப் பணம் செலுத்துவிதமாகவே இருந்ததாகவும் கூறப்படுகின்றது (Moldrich. 1986). மலேசியாவில் ஒரு தொழிலாளி மனிதக் கழிவை உண்ணுமாறு பலவந்தப் படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானன். அதனை விசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்று நோய்க் கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை என தீர்ப்புக் கூறினார்” (மு. சின்னத்தம்பி. 1997)

மேற்குறித்த கொடுமைகளைக் கூறும் எண்ணற்ற வாய்மொழி வழக்காறுகள் அண்மைக்காலங்களில் அச்சு வடிவம் பெற்றுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் குறித்த விரிவான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பான்மையினர் தலித் மக்கள் என்பதும், பதிவாகியுள்ளது. அதில் சிறிய அளவில் சக்கிலியர் என்று இழிவாக அழைக்கப்படும் அருந்ததியினர் சமூகத்தினரும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் மலையகச் சமூகத்தில் வாழுமிடம் சார்ந்து பெரிதாக அறியப்படவில்லை. பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் அவர்கள் உள்ளடங்கிப் போயினர். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து வருவிக்கப்பட்ட அருந்ததியினர் சமூகம் தொடர்பான உரையாடலை இந்த நூலில் நண்பர் சரவணன் முன்னெடுக்கிறார். இது இதுவரை பேசாப் பொருள். இதனை பேசுபொருளாக்குவதே `தலித்தியக்குறிப்புகள்` எனும் இவ்வாக்கத்தின் முதன்மையான உரையாடல். அவர் நிகழ்த்தியுள்ள உரையாடலைப் பின் கண்டவாறு தொகுத்துக் கொள்ள இயலும்.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நகரசுத்தித் தொழிலாளர்கள் எனும் பெயரில், இலங்கை முழுவதும் குடியேற்றப்பட்ட அருந்ததி சமூகத்தினர், எண்ணிக்கையில் குறைவானர்கள். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் குடியேற்றப்பட்டனர். இவர்களது வாழ்க்கை என்பது உதிரிப்பாட்டாளிகள் வாழ்க்கையைப் போல் அடையாளமற்றதாக அமைந்தது. இவ்வகையான வாழ்முறையில் அம்மக்கள் எதிர்கொண்ட கொடுமைகள் குறித்த உரையாடல் நிகழ்த்துவது அவசியம்.
  • சாதிய ஒடுக்குமுறையில், அடுக்கடுக்காக அமைந்துள்ள நிலையில், இவர்கள் அடிமட்டத்தின் அடுக்குகளுக்கு  கீழாகவே இருந்தனர். பஞ்சமவர் என்ற மக்களுக்கும் கீழாகவே அருந்ததியினர் கருதப்பட்டனர். இன்றும் நடைமுறையில் அந்நிலை பெரிதும் மாறியதாகக் கூறமுடியாது. குடியேற்றம் செய்யப்பட்ட வாழ்முறையில் இத்தன்மைகள் எவ்வாறெல்லாம் தொடர்ந்து கொண்டுள்ளன என்பதையும் விவாதப் பொருளாக்குவது அவசியம்.
  • சக்கிலியர்’ எனும் சொல் இழிசொல்லாகவே பொதுவெளியில் புழங்கப்படுகிறது. குறிப்பாக நவீன சமூக ஊடகங்கள், பண்டைய அகராதிகள் ஆகிய பிறவற்றில் இச்சொல் இடம்பெறுவது இழிநிலை சார்ந்த தன்மையதாகவே உள்ளது. இத்தன்மையின் உளவியல் கூறுகள் எத்தகையது என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.
  • அருந்ததியினர் சமூகம், அதன் வாழ்முறை சார்ந்து அகமணமுறைக்கே தள்ளப்படுவதும் அதன் மூலம் சாதித் தகர்ப்பு சாத்தியப்படாமல் போகிறது. வேறு எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் விட அருந்ததியினரிடத்தில் இத்தன்மை ஆழமானதாக இடம்பெற்றிருப்பது குறித்தப் பேச்சும் தேவைப்படுகிறது.
  • பண்பாட்டுத் தளத்தில் வாழிடம், மொழி இழப்பு, இன அடையாளம் இழப்பு, பண்பாட்டுச் சடங்குகள் இழப்பு மற்றும் மாற்றம் ஆகிய பிற இவ்வின மக்களை அடையாளமற்றவர்களாகக் கட்டமைக்கும் தன்மை குறித்தும் உரையாடும் தேவையுண்டு.
  • மலையகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தப் புரிதலும் நகரசுத்தித் தொழிலாளர்களாக வாழும் இவர்கள் வாழ்க்கையும் சந்திக்கும் மற்றும் வேறுபடும் புள்ளிகள் எவையெவை என்ற புரிதலும் தேவைப்படுகிறது.
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்களில், அருந்ததியினர் சமூகம் மட்டும் பல்வேறு கூறுகளில் தனித்திருப்பதைக் கண்கிறோம். இவர்கள் குறித்தப் பதிவுகள் பொதுவெளியில் ஏறக்குறைய இல்லை என்றே கூற முடியும். ஆங்கில நூல்களில் மிகக் குறைந்த பதிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. தமிழ் அறிஞர்கள் எனக் கருதும் பலரும் மலையகத் தமிழர் பற்றிய பதிவைச் செய்திருப்பதைக் காண்கிறோம். ஆனால் இவர்களைப் பற்றிய பதிவுகள் இல்லை. பொதுவெளியில் செயல்படும் அறிஞர்கள் கண்ணோட்டத்தில் இம்மக்கள் பற்றிய பதிவுகள் ஏன் இல்லை? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் சரவணன் இந்நூலில் குறிப்பிடும் கீழ்க்குறித்துள்ள பதிவின் மூலம், இம்மக்களைச் சமூகம் எதிர்க்கொண்ட வரலாற்றை அறிய முடிகிறது.
“நாடாளாவி பரந்துபட்ட உதிரிகளாக வாழ்ந்து வருவதால், தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் அரசியல் சக்திகளுக்கும் கூட இவர்கள் ஒரு வாக்கு வங்கி அல்ல. சாதியக் காரணங்களால் இவர்களை இணைக்கும் வகையிலான ஒரு அரசியல் இயக்கம்கூட இல்லை. எனவே எவருக்கும் வேண்டப்படாத சமூகம் இச்சமூகம்” (ப. 4). சொந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இவ்வகையான தன்மை எதார்த்தமாக உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1990ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கப் பட்டவர்கள், தனித்த அணிச்சேர்க்கைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் அதற்குப்பின் உருப்பெற்றுவரும் ஒடுக்கப்பட்டோர் அணிசேர்க்கை என்பது, அவர்களை அடையாளப்படுத்துவதாக அமைகிறது. இதனை எதிர்கொள்ளும் நடுத்தர சாதிகள், ஒடுக்குதல் என்பதை முதன்மைப்படுத்தாத சாதியக் கட்சிகளாக, தேர்தல் முறையால் தமிழகத்தில் வடிவம்பெற்றுள்ளது. தங்கள் உரிமைக்காக போராடும் உணர்வுத்தன்மை உருப்பெறுவதற்காக சமூகப்புறச்சூழல் இல்லாது வாழ்கின்றனர். இத்தன்மை குறித்த விரிவான பதிவுகளை சரவணன் இந்த நூலில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.

நிலையாக வாழ்வதில் வாழ்வதற்கு ஓரடி நிலம் கூட இல்லாதவர்கள் இம்மக்கள். சாதியக் கொடுமையின் உச்சத்தை நிலவுடைமைச் சமூகத்தினரால் அனுபவித்தவர்கள் இவர்கள். ஒவ்வொரு மணித்துளியும் கூனிக்குறுகி வாழும் மனநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். இவர்கள் குடியேற்றம் செய்யப்படும்போது, மேற்குறித்த தன்மைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். இலங்கையில் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் விடுதலை பெற முடியவில்லை. மாறாக பலமடங்கு கூடுதலான சாதியக் கொடுமைகள், நிறுவனமயமாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிகழ்த்தப்படுகின்றன. இவ்வகையான கொடுமை நிகழ்வது குறித்தப் பதிவும் கூட இல்லை. இவ்வகையில், இந்த நூல் குறிப்பிட்டுச் சொல்லும் பதிவாக அமைகிறது.

“நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம் என்றும், நமக்குக் கீழ் ஒருவரில்லை என்று உண்மையாய் நினைப்போமானால் நமக்கு மேலாக ஒருவன் இருக்கவே மாட்டான் என்றும் நாம் அவற்றைக் கவனியாமல் நமக்கு உதவி செய்பவர்களையும் பல வழிகளிலும் நன்மை செய்கிறவர்களையும் நம்மை பரிசுத்தமான காற்றை சுவாசிக்கும்படி செய்பவர்களையும் சாதுக்களையும் நமக்குக் கீழானவர்கள் என்று எண்ணின குற்றத்தின் கருமபலன், தத்துவத்தில் நம்மைவிட ஒருவிதத்திலும் மேலான யோக்கிரதை இல்லாதவர்களும் கீழ்மக்களும் நமது இரத்தத்தை உறிஞ்சி ஜீவனம் செய்ய வேண்டியவர்களும், நமக்கு மேலான ஜாதியாரென்றும் அவர்களை வணங்க வேண்டியது நமது மோட்சவதனமென்றும் நினைக்கும்படி செய்துவிட்டது. இக்குறைகள் நீங்கின நிலைதான் சமத்துவமென்றும், சமூக முன்னேற்றமென்பதும் என்பதாக நினைக்கிறேன். (பெரியார். குடியரசு. 10.1.1926)
பெரியார் குறிப்பிடும் நமக்குக் கீழ் ஒருவன், நமக்குமேல் ஒருவன் என்ற சாதிய மனநிலை, சாதிய இருப்புகளுக்கு அடிப்படையாக அமைகிறது. இதில் அருந்ததியினர் சமூகம் என்பது அவர்களுக்கு கீழே ஒருவருமில்லை. அவர்களே அடுக்கு நிலையில் கீழ்மட்டம். இதனால் இம்மக்கள் குறித்த சமூக மனநிலை என்பது அவர்களை முற்று முழுதாக தனிமைப்படுத்துகிறது. பிற சாதியான் ஒருவன் தனக்குக் கீழ் ஒருவன் இருப்பது குறித்த மனநிலையோடு இருக்கிறான். அப்படியான மனநிலை சாத்தியப்படாத மக்கள் கூட்டத்தின் உளவியல் குறித்து நாம் புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் அந்த மக்கள் நொறுங்கிப் போனவர்கள். நகர வளர்ச்சியில் இவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்கள் செய்யும் உழைப்பும்கூட மிகக் கேவலமான மதிப்பீட்டிற்குள்ளாகிறது. இவ்வகையான கொடுமை வேறு எந்தச் சாதிப் பிரிவினருக்கும் உண்டா? என்ற கேள்வி இங்கு முதன்மையாகிறது. இந்த நிலையில், இலங்கைத் தீவு முழுவதும் நகரங்களின் ஒதுக்கப்பட்ட இடங்களில் குடியிருப்பு அமைக்கப்பட்டு சேரியிலும் கீழான சேரி என்னும் மதிப்பீட்டில் அவர்கள் வாழுமிடம் அமைகிறது. அவ்விடங்களில் வாழ்வதிலிருந்து விடுதலை அடைய அவர்கள் விரும்புகிறார்கள். எதார்த்தத்தில் அது சாத்தியமில்லை. இத்தன்மைகள் குறித்த கள ஆய்வு சார்ந்த பல்வேறு தரவுகளை இந்நூலில் சரவணன் பதிவு செய்கின்றார். சனாதன வருணாசிரமத்தில் உருவான சாதியம், நிலவுடைமைப் பண்பாட்டில் வேரூன்றியது. ஆனால் நகரிய வளர்ச்சி சார்ந்த முதலாளித்துவ அமைப்பில், முன்னிருந்த நிலைகளை விட மேலும் மோசமான மதிப்பீடுகளும் வாழ்முறையும் அருந்ததியினர் மக்களுக்கு வாய்த்திருக்கும் கொடுமை, இலங்கையில் இன்றும் நடைமுறையில் இருப்பதைக் கண்டு நாம் வெட்கமடைய வேண்டும். அதற்கான உரிய பதிவுகளை இந்நூல் கொண்டிருக்கிறது.
கண்டி கண்டி எங்காதீங்க
கண்டி பேச்சு பேசாதீங்க
சாதிகெட்ட கண்டியிலே
சக்கிலியன் கங்காணி
(ஸி.வி. வேலுப்பிள்ளை: 1987. 24)
‘நாடற்றவர் கதை‘ எனும் சிறிய நூலில் இப்பாடல் வரிகள் சக்கிலியன் என்ற சொல் கங்காணியைத் திட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ள இழிசொல். மலையகத் தமிழர்களின் ஒடுக்குமுறையைப் பேசும் இந்நூலில்கூட ‘சக்கிலியன்‘ எனும் சொல் இழிவழக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், பொதுவெளியில் அச்சொல் புழக்கம் பற்றி நாம் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பிட்ட மனிதர்கள் கூட்டத்தை அடையாளப்படுத்தும் சொல் இழிசொல் என்பதன் மூலம், அம்மக்களையே இழிந்தவர்களாகக் கருதும் சமூக உளவியலைப் புரிந்து கொள்கிறோம். அந்த மக்கள் எந்த வகையில் இழிந்தவர்கள் என்பதற்கான மூல காரணங்கள் ஏதுமில்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீடு சார்ந்து அந்த சொல் அவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சமூக உளவியல் என்பது அம்மக்களை இழிந்தவர்களாகவே பதிவுசெய்கிறது. இத்தன்மை மிகப்பெரிய சமூக வன்முறை. இந்த வன்முறை அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் இந்த வன்முறை எவ்வாறெல்லாம் தொழிற்படுகிறது என்பதை சரவணன் மிகச் சிறப்பாக கணக்கீடு செய்து இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். பழைய அகராதிகள், சொலவடைகள் ஆகிய பிறவற்றில் இவ்வழக்காறு அங்கீகரிக்கப்பட்ட மனப்பாங்கில் பதிவாகியுள்ள சாதிவெறி குறித்தும் இந்நூல் விரிவான பதிவுகளைச் செய்திருப்பதைக் காண்கிறோம்.

இவ்வகையான சமூகவன்முறை மிக இயல்பாக நடைமுறையில் இருப்பதற்கு எதிரான கண்டனக்குரல் தேவை. ஆனால், எதார்த்தத்தில் அத்தன்மை பெரிதும் நடைமுறையில் இல்லை. சரவணன் போன்ற ஒருசில தோழர்கள் இதனைக் கவனப்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டுச் சூழலில் இவ்வகை நடைமுறை, பொதுவெளிப் பதிவுகளில் அதிகம் இடம்பெறுவதில்லை. பெரியார் உருவாக்கிய சமூகம் குறித்த பார்வையின் விளைவாக சாதிப் பெயர்களை இழிவுத்தொனியில் பயன்படுத்துவது பொது ஊடகங்களில் இடம்பெறுவது இல்லை. ஆனால் இலங்கையின் காட்சி ஊடகங்கள், பாராளுமன்ற உரைகள், செய்தித் தாட்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் சொல்லாட்சிகள் ஆகிய பிறவற்றில் சாதாரணமாக இடம்பெறுவதை சரவணன் கவனப்படுத்தியுளளார். இதன் மூலம் உதிரி மக்களாக இலங்கையில் வாழும் நகர சுத்தித் தொழிலாளர்களான அருந்ததியர்கள் குறித்த மதிப்பீடு பொதுவெளியில் எவ்வாறு உள்ளது என்பதை உணரமுடிகிறது. இந்த வன்முறைக்கு எதிராக என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியே எஞ்சுகிறது.

சாதி ஒழிப்புக்கு அடிப்படையான எடுகோளாக பல தரப்பிலும் ஏற்றுக்கொண்ட வாதம் அகமணமுறையை தடைசெய்ய வேண்டும் என்பதே. பெரியார் தொடக்கக்காலம் முதல் அகமணமுறைத் தடைச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்று பதிவுசெய்துள்ளார். அதற்காக அவர் சாதிமறுப்புத் திருமணங்களை நடத்துவதை தமது முதன்மையான வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தினார். தமிழகத்தில் உருவான சமூக நீதி இயக்கத்தில், சாதிமறுப்பு, சீர்திருத்த திருமணங்கள் நடந்துவருவதைக் காணமுடியும். அருந்ததி சமூகத்தினர், இவ்வகையான திருமணங்களை நிகழ்த்த இயலாத புறச்சூழலை இச்சமூகம் உருவாக்கியுள்ளது. அச்சமூகத்தில் உள்ள இளையோர் அவ்வகையான விருப்பம் கொண்டு நடைமுறைபடுத்த விரும்பினால்கூட, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள பிற சாதியினர் எவரும் முன்வருவதில்லை. இச்சாதி குறித்து சமூகம் உருவாக்கியுள்ள சமூக மனநிலை என்பது, அவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கிறது. தீண்டாமைக் கொடுமை சார்ந்து இச்சமூகத்தினர் பிற சாதியில் திருமணம் புரிந்து, சாதி ஒழிப்பிற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாத நிலை உருவாகியிருப்பது, பிற சாதிகளிலிருந்து இவர்களை வேறுபடுத்திப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தன்மை மிகப்பெரும் சமூக அவலம். அகமணமுறைக்குள் தான் அந்த சமூகம் செயல்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்குகிறது அவர்களது சாதிய அடையாளம். சாதி ஒழிப்பின் அடிப்படையே சாத்தியமில்லாமல் போவது என்பது, இச்சாதி குறித்த வெகுசன உளவியல் உருவாக்கும் கொடுமையான வன்முறை. இந்தக் கோணத்தில் இச்சிக்கலை இதுவரை நாம் அணுகியதில்லை. சரவணன் இத்தன்மையைக் கவனப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வாழும் அருந்ததி மக்கள் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் பேசி வருகின்றனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் தமிழக நிலப்பகுதிகளில், பல்மொழி சார்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். குறிப்பாக, திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகள் இந்தியாவின் தென் மாநிலங்களில் பரவலாக இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும். இந்த மக்கள் தெலுங்கு பேசுவதால் தெலுங்கு மக்கள் எனக்கருதும் அவலம் நிகழ்கிறது. அவர்கள் அந்த மொழியைப் பேசினாலும், சுமார் 800 ஆண்டுகள் அவர்கள் வாழும் நிலம் தமிழகமே. அவர்களுக்கு வேறு நிலம் இல்லை. இவ்கையான மக்கள் இலங்கைக்கு குடியேற்றம் செய்யப்படும் போது மொழி சார்ந்த அந்நியப்படுத்தல் அங்கு முன்னெடுக்கப்படுகிறது. அரசு ஆவணங்களில் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். மொழிசார்ந்த பண்பாட்டுப் புரிதலில் அவர்கள் தெலுங்கர்கள். இந்த முரண் இலங்கையில் உள்ள பூர்வீகத் தமிழர்கள், மலையினத் தமிழர்கள் ஆகியோரிடமிருந்து அந்நியப்படும் அவலம் அருந்ததியர் மக்களுக்கு உருவாகிறது. அவர்கள் அந்தரத்தில் தொங்குகிறார்கள். மொழி இல்லை; நிலம் இல்லை; பண்பாடு இல்லை; எவ்வகையான அடையாளமும் இல்லை. இதன் மூலம் அவர்கள் போராடும் சமூகக் குழுக்களாக வடிவம் பெறும் புறச்சூழலை இழக்கிறார்கள். இது ஆளும் வர்க்கத்திற்கு அவர்களை ஒடுக்குவதற்கான அரிய வாய்ப்பாக அமைகிறது. அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாளடைவில் மொழி இழந்து சிங்களவர்களாக தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள நாட்டார் சாமிகள் அப்புறப்படுத்தப்பட்டு பெருமதம் சார்ந்த கடவுள்கள் கோவில்களுக்குள் குடியேறுகிறார்கள். அவர்கள் மிக எளிதாக மதம் மாறுகிறார்கள். சாதிய இழிவை மதம் மாற்றம் மூலம் சரி செய்யலாம் என்ற கனவு நடைமுறையாகிறது. இவ்வகையான தன்மைகளை அம்மக்கள் செய்து கொள்ளும் தற்கொலை என்று சரவணன் வரையறை செய்கின்றார். ஆம்... பண்பாடு சார்ந்து, மொழிசார்ந்து, இனம் சார்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். இவ்வகையான தன்மை பிற சாதிக் குழுக்களில், ‘மேல்நிலை ஆக்கும்‘ எனும் பாங்கில் நிகழும்.  ஆனால் இவர்கள் தங்கள் நிலைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். இந்த இழப்பு வேறு எவருக்கும் பெரிதும் நிகழாத சமூக வன்முறை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் குடியேற்றம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சாதியைக் குறிக்கும் ஒரு நாட்டார் பாடல் இவ்வாறு அமைகிறது.
கள்ளனுக்கு பவர் இருக்கு
வெள்ளானுக்கு பணம் இருக்கு
கவுண்டனுக்கு செருக்கு இருக்கு
பள்ளனுக்கு பழி இருக்கு
பறையனுக்கு பாட்டு இருக்கு
சக்கிலியருக்கு சண்டையிருக்கு (2009: 90)
இந்தப் பாடல் மலையகத்தின் சாதி இருப்பினைப் பதிவு செய்கிறது. மலையகத்தில் குடியேற்றப்பட்ட அருந்ததி மக்கள் இழிவானவர்களாகவே கருதப்பட்டதைக் காண்கிறோம். அவர்கள் சண்டைக் கோழிகள். மனிதப் பண்பு இல்லாதவர்கள் என்பதைக் காண்கிறோம். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் அனைத்து நகரங்களிலும் குடியேற்றப்பட்ட நகரசுத்தித் தொழிலாளர்களாகிய அருந்ததி இனமக்கள், மேற்குறித்த இழிவு நிலையில் மேலும் இழிவானவர்களாகவே பதிவு செய்யப்பட்டனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டித் தரப்பட்ட வரிசை வீடுகள் மாட்டுத் தொழுவங்களைவிட மோசமானவை. அதேபோல் நகரங்களின் ஒதுக்குப் புறத்தில் அருந்ததியர்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் புறாக் கூடுகள். நகர் முழுதும் சுத்தம் செய்யும் அவர்கள், மிகவும் மோசமான சுற்றுச்சூழல் உள்ள சிறிய சிறிய வீடுகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். சுகாதாரக் கேடு மிகுதி. மிக நெருக்கமான மக்கள் தொகை. ஒரு வீட்டில் குறைந்தது பத்து பேருக்கு மேல் குடியமர்த்தம் செய்யப்பட்டனர். எதார்த்தத்தில் கொட்டகைகளில் அடைக்கப்பட்டனர். மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பொதுவெளியில் பதிவானது. ஆனால் நகரசுத்தித் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பொதுவெளியில், குறிப்பாகத் தமிழ் ஊடகங்களில் மிகமிகக் குறைவாகவே பதிவாகியது. அந்த வகையில் சரவணன் அவர்களின் இந்தப் பதிவு புதிய வெடிப்பு. என்னைப் போன்றவர்கள் இப்படியான ஒருவிடயம் இலங்கைக்குள் இருக்கிறது என்பதை அறிந்து துக்கமடைய வழிகண்டுள்ளது. இப்பதிவு அம்மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட என்றாவது ஒருநாள் உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இலங்கைத் தீவிற்குள் பேரினவாதக் கொடுமை சார்ந்து வடக்கு, கிழக்கு மற்றும் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் இனப்படுகொலையாக வடிவம் பெற்றது. போராறடிய இயக்கங்களையும் மக்களையும் அழித்தொழித்து பேரினவாத பாசிசம் தற்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் நாடற்ற மக்களாக மலையக மக்கள் இருக்கிறார்கள். சிறுபான்மை மதங்களும் இனங்களும் ஒடுக்கப்படுவதைக் காண்கிறோம்; ஆனால் இவற்றின் எதற்குள்ளும் அடையாளப்படுத்தப்படாத இலங்கைப் பெருநகரங்கள் அனைத்திலும் வாழும் நகரசுத்தித் தொழிலாளர்களான, தமிழ் வம்சாவளியான அருந்ததி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்முறையை தலித்திய அரசியல் புரிதலோடு இந்நூல் முன்வைக்கிறது.

நண்பர் சரவணன், இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது நேரடி அநுபவப் பகிர்வாகவே உள்ளன. சொந்த வாழ்க்கையை, எப்படியான அரசியல் சொல்லாடல்களில் பதிவு செய்வது என்பதற்கான ஆவணமாக இந்நூல் அமைகிறது. சுயசரிதை வடிவில் இந்த ஆக்கம் உள்ளது. பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூற்றாண்டாக இலங்கையில் வாழும் அருந்ததி இன சமூக மக்களின் வாழ்க்கைச் சாட்சியமாகவும் சரவணன் இருக்கிறார். இவரது இந்தப் பதிவுகள் சுயசரிதையாக மட்டும் அமையாது அந்த மக்களின் எதார்த்த வாழ்கை சார்ந்த ஆவணமாகவும் அமைகிறது.

தமிழகத்தில் நொறுக்கப்படும், ஒடுக்கப்படும் மக்களை தலித்துக்கள் என அடையாளப்படுத்தும் சொல்லாடல் 1980களில் உருவானது. 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு சார்ந்து, அவ்விதச் சொல்லாடல் சமூக இயக்கமாகவே வடிவம் பெற்றுள்ளது. இந்தியாவில் மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலச் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக தமிழகத்திலும் நடைபெற்றது. இதன் விளைவு தலித் எனும் பண்பாடு அடையாளம், விடுதலைக்காண அடையாளமாக இன்று கருதப்படுகிறது. கலை இலக்கியத் துறையில் தலித் அடையாளம் என்பது தமிழ்ச்சூழலில் நிலைபேறு கொண்டுள்ளது. அதுவொரு புறக்கணிக்க இயலாத சக்தியாகவும் பேசுபெருளாகவும் வடிவம் பெற்றுள்ளது.

நண்பர் சரவணன், இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது நேரடி அநுபவப் பகிர்வாகவே உள்ளன. சொந்த வாழ்க்கையை, எப்படியான அரசியல் சொல்லாடல்களில் பதிவு செய்வது என்பதற்கான ஆவணமாக இந்நூல் அமைகிறது. சுயசரிதை வடிவில் இந்த ஆக்கம் உள்ளது. பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூற்றாண்டாக இலங்கையில் வாழும் அருந்ததிய இன சமூக மக்களின் வாழ்க்கைச் சாட்சியமாகவும் சரவணன் இருக்கிறார். இவரது இந்தப் பதிவுகள் சுயசரிதையாக மட்டும் அமையாது அந்த மக்களின் எதார்த்த வாழ்க்கை சார்ந்த ஆவணமாகவும் அமைகிறது.

மேற்குறித்த தன்மை இலங்கைச் சூழலில் என்ன முறைமையில் புரிந்துகொள்ளப்படுகிறது? அதில் அருந்ததியினர் போன்ற மக்களை எவ்வாறு உள்வாங்குவது என்பது போன்ற உரையாடலை நண்பர் சரவணன் ‘சரிநிகர்‘ இதழ்களில் முன்னெடுத்தபோது, அதனை இலங்கையைச் சார்ந்த புலமைத்துவ சமூகம் அங்கீகரித்தது என்று சொல்லமுடியாது. நான் மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த புலமையாளர்கள்கூட, தமிழக நிகழ்வை இலங்கையில் இணைத்துப் பார்க்கவேண்டாம் என்ற தொனியில் பேசினார்கள். இலங்கையில் உள்ள தமிழ்ப் புலமைச் சமூகத்தினரோடு உரையாடல் நிகழ்த்தும் வாய்ப்பு அப்போதே எனக்குக் கிடைத்தது. இப்போது தொகுப்பாக சரவணன் அவர்களின் பதிவுகளை சுமார் இருபது ஆண்டுகள் கழிந்த இடைவெளியில் வாசிக்கும் போது, அறியப்படாது இருந்த ஒரு பக்கம், அருந்ததியர் வாழ் முறை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பெழுதிய தலித்திய குறிப்புகளையும் பின்னர் தான் தொடர்ந்து அத்துறை சார்ந்த எழுதிய கட்டுரைகளையும் இணைத்துள்ள இத்தொகுப்பு, இலங்கையில் பேசப்படாதிருந்த ஒரு பொருளை பேசுபொருளாக்கியுள்ளது. ‘சரிநிகர்‘ இதழில் பணிபுரிந்த நண்பர்கள் ஏறக்குறைய அனைவரையும் நான் அறிவேன். அவர்களின் அரசியல் புரிதல், சமூகத்திற்கு தங்களை அற்பணித்த வாழ்முறை ஆகியவை ஓரளவு எனக்குப் பரிச்சயமானவை. அந்தப் பின்புலத்திலிருந்து சரவணன் செய்த இந்த உழைப்பு, இன்றைக்கு திருப்பிப் பார்க்கும்போது, வரலாறு சரியாகவே பதிவாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறேன். இலங்கையில் வாழும் தமிழகத்திலிருந்து குடியேறியவர்களின் வரலாறு எழுதும்போது, அருந்ததியர் மக்களைப் பதிவு செய்யாமல் வரலாறு நிறைவுப் பெறாது. அந்தப் பணியைச் செய்துள்ள தோழர் சரவணன் அவர்களுக்கு எனது அன்பும் வணக்கங்களும் என்றும் உரியது.

அன்போடு
வீ. அரசு
‘கல்மரம்‘, பெருங்குடி
சென்னை-600096

சான்றாதார நூல்கள்
  1. 1984 - மோகன்ராஜ் க. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத் தனம். (மலையக மக்கள் வரலாறு) ஈழ ஆய்வு நிறுவனம், சென்னை 24.
  2. 1987 - வேலுப்பிள்ளை ஸி.வி. நாடற்றவர் கதை. ஐலண்ட் அறக்கட்டளை வெளியீடு, சென்னை-4
  3. 1995 - மார்க்ஸ் அ. குறிஞ்சி, ஏகலைவன், அதியமான், ஞானி, கருணா மனோகரன். தலித் அரசியல் அறிக்கையும் விவாதமும். விடியல் பதிப்பகம், கோவை.
  4. 1997 - மலர், மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு 1996-1997, ஆய்வுக் கட்டுரைகள். (பன்னிரன்டு ஆய்வுக் கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டவை).
  5. 2001 - மாற்கு அருந்ததியர் வாழும் வரலாறு. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.
  6. 2003 - ராஜ்கௌதமன், தலித்திய விமர்சனக் கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
  7. 2007 - மதிவண்ணன் ம. உள் ஒதுக்கீடு: சில பார்வைகள், கருப்புப்பிரதிகள். சென்னை -5.
  8. 2008 - இளங்கோவன், எழில். அருந்ததியினர் இயக்க வரலாறு. கலகம், சென்னை – 2.
  9. 2009 - Kalinga Tudor silva, P.P. Sivappragasam, Paramsothy Thanges. (Editors), International Dalit Solidarity Network, Copennhagen, Indian Institute of dalit Studies, Newdelhi, Kumaran Books, Colombo.
  10. 2012 - முத்துலிங்கம், பெ, (தொகுப்பு) பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், (மலையக முச்சந்தி இலக்கியத் தொகுப்பு), ஆவணப்பதிப்பு. கயல்கவின், சென்னை-41.
  11. 2014 – அம்பேத்கர். ஜாதியை அழித்தொழிக்கும் வழி. தலித்முரசு கருப்புப்பிரதிகள், டாக்டர் அம்பேத்கர் சமூக கல்வி பொருளாதார அறக்கட்டளை. முதற்பதிப்பு 2010, இரண்டாம் பதிப்பு 2014, சென்னை-34.

  12. 2014 - நித்தியானந்தன். மு, கூலித்தமிழ். க்ரியா, சென்னை 41.
  13. 2015 - கந்தையா மு.சி. சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், விடியல் பதிப்பகம், கோவை.
  14. 2018 - சுபகுணராஜன், வீ.எம்.எஸ். சாதியும்... நிலமும் காலனியமும் மூலதனமும்... கயில்கவின், சென்னை 41.
  15. 2018 - சுபகுணராஜன் வீ.எம்.எஸ். (தொகுப்பு), நமக்கு ஏன் இந்த இழிநிலை? ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார். கயில்கவின், சென்னை, 41.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates