Headlines News :
முகப்பு » , , » ஆதிக்க சாதி எதிர்ப்பார்ப்புகளுடன் கணக்குத் தீர்த்தல் - என்.சரவணன்

ஆதிக்க சாதி எதிர்ப்பார்ப்புகளுடன் கணக்குத் தீர்த்தல் - என்.சரவணன்

இந்தக் கட்டுரை லண்டனில் நிகழ்ந்த விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல் திருமாவளவனின் “அமைப்பாய்த் திரள்வோம்” நூல் வெளியீட்டு நிகழ்வுக்காக வெளியிடப்பட்ட சிறப்பு நூலுக்காக ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதிக்கொடுத்த கட்டுரை. ஆனால் அதில் முழுக் கட்டுரையும் வெளிவரவில்லை. என் அனுமதியின்றியே சில பகுதிகள் நீக்கப்பட்டு வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரையின் முழு வடிவம் தமிழகத்தில் இருந்து வெளிவரும் “வெள்ளைக் குதிரை” என்கிற தலித்திய சஞ்சிகையில் இப்போது வெளிவந்திருக்கிறது.
சாதியத்தின் உட்கிடக்கையே ஆதிக்கபடிநிலை சாதிகளின் மனவெதிர்ப்பார்ப்புகள் தான். அதில் தான் ஆதிக்க சாதியம் கோலோச்சுகிறது. அதில் தான் இருப்பு கொண்டுள்ளது. அதில் தான் சுகம் கண்டுகொண்டிருக்கிறது. அதில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

நிறுவனமயப்பட்ட இந்த சாதிய அமைப்புமுறையானது அது நடைமுறையில் தனது ஆதிக்கத்தனத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரயோகித்துவருவதை நாம் கண்டு - கடந்து – எதிர்கொண்டு வருகிறோம். அதேவேளை இன்றைய நவீன காலத்தில் இந்த சாதிய ஆதிக்கத்தின் வடிவமானது சூட்சுமமாகவும்,  இயங்கிவருவதே அதன் புதிய நுண்ணரசியல் வடிவம். அந்த செயல் வடிவம் அந்த ஆதிக்க சாதிகளின் சாதிய “எதிர்பார்ப்புகளால்” கட்டமைக்கப்படுகின்றன.

தனக்கு கீழ் இருக்கும் சாதி எப்படிப்பட்ட நடத்தைக் கொண்டிருக்கவேண்டும், கொண்டியங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் சற்று பிசிறு ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் ஆதிக்க மனநிலை இல்லை. அப்படி அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது வலிந்த வன்முறைகளால் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொண்ட காலத்தைக் எதிர்கொண்டு கடந்து வந்திருக்கிறோம். இன்றும் அதன் எச்சசொச்சங்களை வெவ்வேறு வடிவங்களில் எதிர்கொண்டபடி இருக்கிறோம்.

ஒருவர் என்ன பண்பாட்டுக் கூறுகளை கொண்டிருக்கவேண்டும்? என்ன நடத்தையைப் பின்பற்றவேண்டும்? எந்தளவு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்? எந்தளவு தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும்? எந்த கருத்தை வெளிப்படுத்தலாம்? அதை எந்த அளவுக்கு வெளிப்படுத்தலாம்? எந்த முறையில் வினயாற்றவேண்டும்? எந்த வடிவத்தில் வெளிப்படுத்தலாம்? மீறலின் எல்லை என்ன?  என அனைத்துமே ஆதிக்க சாதிய எதிர்பார்ப்பில் உள்ள பட்டியல் தான்.

இந்த ஆதிக்க மனவெதிர்ப்பார்ப்பு என்பது வெறுமனே ஆதிக்க சாதிகளுக்கு உரிய குணம் மட்டுமில்லை. இதை சகல ஆதிக்க வடிவங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். பெண்களின் மீதான ஆணாதிக்க எதிர்ப்பார்ப்பு, மூன்றாம் பாலினர் மீதான முதலாம் பாலினரின் எதிர்பார்ப்பு, வர்க்கத்தால் உயர்ந்தவர்கள் படிநிலையில் அடுத்துள்ள வர்க்கத்திடம் எதிர்பார்ப்பது, கருப்பு நிறத்தவர் மீதான வெள்ளை நிறத்தவரின் எதிர்பார்ப்பு, பெரும்பான்மை சமூகமொன்று சிறுபான்மை சமூகத்திடம் எதிர்ப்பார்ப்பது, நகர்ப்புறத்தில் உள்ளவர் கிராமப்புறத்தவரிடம் (அல்லது சேரிவாழ் மக்களிடம்) இருந்து எதிர்பார்ப்பது,  வயதில் கூடியவர் வயதில் குறைந்தவரிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, சுகதேகியொருவர் அங்கவீனரிடம் எதிர்பார்ப்பது என இப்படி இனம், பால், வர்க்கம், வயதுத்துவம், நிறம், பெரும்பான்மைத்துவம் என அடுக்கிக்கொண்டே போக முடியும். குறிப்பாக விளிம்புநிலையினரிடம் எதிர்பார்க்கப்படும் ஆதிக்கசக்திகளின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்வது அவர்களின் கடமையாக ஆதிக்க சக்திகள் எதிர்பார்க்கின்ற அதே வேளை; அவ்வெதிர்பார்ப்புகளை ஈடுசெய்வது தமது பொறுப்பாக அடக்கப்படும் சக்திகள் கருதும் போக்கும் இல்லாமலில்லை.

இந்த சமூகப் பிரிவினரில் மேற்குறிப்பிட்ட அடையாளங்களில் அதிகமான அடையாளங்களை ஒரு சேர இருப்பவர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாவர் என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை. உதாரணத்திற்கு வர்க்கம், இனம், பால், நிறம், சாதி, பிரதேசம், குறை வயது போன்ற அத்தனையும் ஒரு சேர இருப்பவர்கள் அதிக எதிர்பார்ப்புகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாவார் என்பதை நாம் உணர முடியும்.

இந்த எடுகோளின் அடிப்படையில் ஆதிக்க சாதி எதிர்பார்ப்புகளை நான் தனிப்பட்ட ரீதியில் மிகவும் நுணுக்கமாகவே அனுபவித்திருக்கிறேன். அவை நுணுக்கமானது என்பதை பகிரங்கமாக கூறக் கூடிய சமூகத்தில் நாம் வாழவில்லை. அப்படி சொன்னால் நிச்சயம் இலகுவாக கேலிக்குள்ளாவது நாமாகத் தான் இருக்க முடியும். ஒரு தலித்திய செயற்பாட்டாளனாக இதை வெளிப்படுத்த சரியான தளம் கிடைத்தால் மட்டும்தான் உண்டு. அந்த வகையில் இவ்விடயம் பேசுபொருளாக வேண்டிய ஒன்று. நான் இங்கு எதைச் சொல்ல வருகிறேன் என்பதை அத்தகைய எதிர்கொண்ட ஒடுக்கப்பட்டோரால் மாத்திரம் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கைச் சூழலில் நான் ஒரு தமிழனாக, “இந்து சமயத்தவனாக”, கருப்பனாக, சக்கிலியனாக, விளம்புநிலை வர்க்கத்தவனாக, சேரிவாழ் காரனாக இவ்வடையாளங்கள் எனக்கு பல அனுபவங்களைத் தந்தாலும், ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்ததன் பின் இவ்வடையாளங்கள் மறுவடிவம் பெற்றுவிட்டன, இங்கு சக தமிழ் சமூகத்துடன் உறவாடுகையில் மேற்படி அடையாளங்களில் சில தொடரவே செய்கின்றன அதேவேளை இந்த வெள்ளையின நாட்டில் நிறத்துவமும், அந்நியன் என்கிற அடையாளமும், மொழியும், கலாசாரமும் கூட நம்மை இரண்டாந்தர, மூன்றாந்தர நிலைக்கு தள்ளி அங்கும் ஆதிக்க மனவெதிர்பார்ப்புகளை புதிய வடிவத்தில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.

சில குறிப்பான அனுபவச் சம்பவங்களை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
0-0-0
இலங்கையில் இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளின் போது பெரும்பான்மை சிங்களத் தோழர்களுடன் அந்த இயக்கங்களில் பணியாற்றிய வேளைகளில் அவர்களின் அன்பும், அக்கறையும் அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் “தமிழ் தோழர்” என்பதால். ஆனால் பல இடங்களில் அவர்களின் எதிர்பார்ப்பு நான் ஒரு அதிக குரல் உயர்த்தாதவனாக, கடும் வாதங்களில் ஈடுபடாதவனாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததை பல இடங்களில் எதிர்கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் அறிமுகப்படுத்தும் இடங்களில் மிகவும் அடங்கிய, பணிவுள்ளவனாக இருந்துவிடவேண்டும். அப்படியிருந்தால் அங்கு எனது இருப்பு சாத்தியம். ஆக, அங்கெல்லாம் மிகவும் கவனமாக அரசியல் பேச சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அவர்களின் பச்சாதாபத்தின் எல்லை இனவெதிர்பார்ப்புடன் நின்றுவிடுவதை கவனித்திருக்கிறேன். இதைப் பொதுமைப்படுத்தவில்லை. ஆனால் இதே அனுபவத்தை நான் பணியாற்றிய பல சிங்கள சூழலிலும் எதிர்கொண்டிருக்கிறேன். இதைத் தான் ஆதிக்க சாதிய எதிர்பார்ப்புகளும் நினைவு படுத்துகின்றன.
0-0-0
எனது சிறு வயதில் ஒரு நிகழ்ந்த சம்பவம்:
எங்கள் தோட்டத்திற்குள் (கொழுப்பில் சேரிகளுக்கு மறுபெயர் தோட்டங்கள்) நுழையும்போது வாசலில் இருந்த ஒரே ஒரு பிராமண வீடொன்று இருந்தது. அங்கிருந்த அய்யர் கோயிலில் உடைக்கப்பட்ட தேங்காய்களைக் கொண்டுவந்து குறைந்த விலைக்கு விற்பார். அங்கு நாங்கள் தேங்காய் வாங்குவது வழக்கம். ஒரு முறை என்னை வழக்கம் போல அம்மா தேங்காய் வாங்க அனுப்பியிருந்தார். கதவு மூடப்பட்டிருந்தது. மூடியிருந்த வீட்டை

"அக்கா... அக்கா..."

எனத் தட்டிக் குரல்கொடுத்த போது, அந்த பிராமணர் வேகமாக வந்து கதவைத் திறந்து பளீரென்று எனது கன்னத்தில் அறைந்தார்.

"எவள்டா உனக்கு அக்கா...? உனக்கு நாங்கள் எப்ப சொந்தமானமடா நாயே...?"

என ஆத்திரத்துடன் கொதித்தார். நான் என் கன்னங்களை பிடித்தபடி அழுதுக்கொண்டே அவரைப் பார்த்தபடி நின்றேன். கதவை வேகமாக அடித்து மூடிவிட்டு அவர் உள்ளே சென்று விட்டார். நானும் திகைத்துப்போய் கண்ணீர் விட்டபடி வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவிடம் சொல்லி அழுதேன். அம்மாவுக்கு வந்த ஆத்திரத்தாள் அம்மாவால் என்ன செய்துவிட முடியும். கடந்துவிட்டோம். நான் அவர்களை எப்படி அழைக்கவேண்டும் / எப்படி அழைக்கக்கூடாது என்பது பற்றிய அவர்களின் எதிர்பார்ப்பை நான் மீறியதே என் குற்றம்.
0-0-0
முகநூலில் நிகழ்ந்த ஒரு அரசியல் உரையாடலின் போது ஒரு கட்டத்தில் ஒருவர் எனது வாதத்தை எதிர்கொள்ள முடியாமல் போனதும் அவர் என்னை அடுத்த நாள் காலையில் தொலைபேசியில் அழைத்து “சக்கிலியன்” என்று திட்டினார். அரசியல் ரீதியில் தனது தர்க்கம் தோற்றுப்போன நிலையில்; என்னைக் காயப்படுத்த சாதிய வசவு தான் அவருக்கு கிடைத்த பேராயுதம். (இத்தனைக்கும் திட்டியவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்.)  அதனை பொதுவெளியில் நான் வெளிப்படுத்தி கண்டித்தேன். எனக்காக எவரும் இருக்கவில்லை. தலித்தியம் பேசியோர் கூட ஒதுங்கியே இருந்தனர். அது மட்டுமன்றி சம்பந்தப்பட்ட நபர்; அவர் பணியாற்றிய அரச நிறுவனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து எனக்கு உதவுமாறு நான் கேட்டதாகவும், அதனை அவர் மறுத்ததால் நான் இப்படி குற்றம் சுமத்துவதாகவும் என் மீது அபாண்டமான அவதூறைப் பரப்பிவிட்டார். நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அவரின் நண்பர்களாக இருந்த எனது தோழர்களும் என்னோடு இருக்கவில்லை.
0-0-0
பத்து வருடங்களுக்கு முன்னர் என்னை “புலி எதிர்ப்பாளன்” என்கிற முத்திரையைக் குத்தி விடுதலைப் புலிகளின் முக்கிய ஆதரவாளர் ஒருவர் கிளாசால் தாக்கியதில் என் முகம் கடும் காயங்களுக்கு உள்ளானது. இடதுபுற காதுக்கு கீழுள்ள கன்னத்தில் 6 தையல்கள் இடுமளவுக்கு தோல் கிழிந்து தொங்கியிருந்தது. அந்த சம்பவத்தைக் கண்டித்து தோழர்கள் தமயந்தி, முரளி போன்றோர் பிரசுரமொன்றை வெளியிட்டார்கள். இந்த சம்பவத்துக்குப் பின்னால் இருந்த நுட்பமான சாதியத்தை அவர்கள் சாடினார்கள். குறிப்பாக எனக்காக குரல்கொடுக்க முன்வராத  ஒஸ்லோவில் இருந்த“முற்போக்கு” பேசிய தோழர்களின் சாதிய நுண்ணரசியலை அவர்கள் கண்டித்தார்கள்.

சம்பந்தப்பட்ட நான்; இந்த விடயத்தில் நேரடியாக சாதிய காரணங்களைச் சுட்டிக்காட்டத் தயக்கமிருந்தது. நான் அதைச் செய்திருந்தால் அது தற்சார்பு சாய்வைக்கொண்ட குற்றச்சாட்டாகப் பார்க்கப்பட்டிருக்கும்.
0-0-0
ஐரோப்பாவில் இலக்கிய சந்திப்புகள், பல கூட்டங்கள், மாநாடுகள் என்பவற்றுக்கு நான் அழைக்கப்பட்டால் சாதியம் குறித்தே அதிகம் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் சாதிய தலைப்பை நானே கேட்டுப்பெற்றிருக்கிறேன். 90களின் ஆரம்பத்திலிருந்து அரசியல், ஊடக, சமூக செயற்பாடுகளில் நான் ஈடுபட்டாலும் வேறு அரசியல் தலைப்புகளில் உரையாற்றுவதை விட சாதிய தலைப்பை தெரிவு செய்ததற்கு காரணம்; தலித்திய அரசியலைப் பேசுவதற்கான தளங்கள் மற்றும்படி கிடையாது. கிடைக்கின்ற தளங்களை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றும், பேசாப்பொருளை, பேச வேண்டிய பொருளை பேசியே ஆகவேண்டும் என்பதற்காகத் தான்.

இடையூறின்றி நமது விளக்கத்தை முழுமையாக ஒப்புவிக்க கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பங்கள் அவை. எனவே அக் கூட்டங்கள், கருத்தரங்குகளை நான் பயன்படுத்திக்கொள்வேன். 

சாதியத்தை விட்டால் எனக்கு வேறு பேசுவதற்கு ஒன்றும் தெரியாது என்கிற கேலிகளையும் தாண்டி சாதியத் தலைப்புகளில் தொடர்ந்தும் பேசியிருக்கிறேன்.

அதேவேளை இலங்கையில் நடக்கும் ஏனைய பிரச்சினைகளை குறிப்பாக இன ஒடுக்குமுறைக்கு எதிராக பேசியவேளைகளில் என்னை ஒரு தேசியவாதியாக குறுக்கும் செயலில் சக தோழர்கள் ஈடுபட்டார்கள். கேலி செய்தார்கள். அவர்களுக்கு என்று ஒரு அரசியல் பார்வையும், அரசியல் போக்கும் இருக்கும் போது அவர்களின் போக்கு குறித்து நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் ஏன் அந்த அரசியல் பார்வை என்று கேள்வி கேட்டதில்லை. ஆனால் அவர்களுக்கு என் மீது கேள்வி எழுவதன் பின்னால் உள்ள நுண்ணரசியலை புரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சி தேவைப்படவில்லை.

இத்தனைக்கும் “நமக்குள் அரசியல் ரீதியில் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அதை தள்ளிவைத்துவிட்டு நமக்குள் இருக்கும் பொது உடன்பாடுகளான “தலித் அரசியல்” விடயத்தில் ஒன்றாக இருப்போம் என்கிற உடன்பாட்டைக் கண்டிருக்கிறோம். அந்த உடன்பாட்டை நான் மீறியதில்லை. நான் அவர்கள் கொண்டிருந்த அரசியலுடன் முரண்பட்டு மோதச் சென்றதில்லை. ஆனால் அவர்கள் என்னைத் தொடர்ச்சியாக வம்பிலுத்த போது அவர்களின் சகிப்பின்மை எங்கிருந்து ஊற்றெடுக்கின்றது என்கிற கேள்வியே மீண்டும் மீண்டும் என்னுள் எழுந்தது.

சமீபகாலமாக இலங்கை அரசியல் – வரலாறு சார்ந்து நிறையவே எழுதிவருகிறேன். அவை இத்தகையவர்களின் ஆதிக்க மனவெதிர்ப்பார்ப்பை திருப்திபடுத்தவில்லையோ என்று தான் எனக்கு எண்ணத் தோன்றியது. சமூக வலைத்தளங்களில் நான் இடும் பதிவுகளின் கீழ் எனக்கு நெருக்கமானவர்களாக நான் நம்பியிருந்த  தோழர்கள் பகிரங்கமாக என்னை சீண்டுவதன் உள்ளார்த்தத்தை நான் உணர்ந்து கொண்டேன். நான் இடும் பதில்கள் அவர்களால் சகிக்க இயலவில்லை. என்னிடம் மட்டும் அந்த சகிப்பை அவர்கள் எதிர்பாத்தார்கள். அவர்கள் என்னிடம் எதிர்பார்க்கின்ற பணிவை நான் தரமுடியாது போவதை சகிக்க முடியாதவர்களாகவே என்னால் இனங்கான முடிந்தது. எனது கட்டுரைகளின் ஆழமும், சீற்றமும் எனது சாதிய அடையாளத்துக்கு தகுந்ததல்ல என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றே உணர முடிந்தது.

அந்த உரையாடலை பதிவு செய்தே வைத்திருக்கிறேன். பல தடவைகள் பார்த்து மீளுறுதிசெய்துகொண்டேன். 

மேற்படி நிகழ்வை இங்கு நான் விளக்குகையில் நான் நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தாத காரணம் இது “ஒரு” சாதாரண நிகழ்வு என்று என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. இது ஒரு எடுகோள் மட்டுமே. நம்மைச் சூழ இத்தகைய சகிப்பின்மைகளுக்குப் பின்னால் உள்ள சாதிய நுண்ணரசியலின் பன்முகப்பட்ட வடிவங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒற்றை நிகழ்வல்ல. ஒரு சமூகப் போக்கு.

இலங்கைப் பொறுத்தளவில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் தலித்துகளுக்கு இந்தியவம்சாவளி தலித்துகளும் படிநிலையில் அவர்களுக்கு கீழானவர்களாகவே கருதப்படுவதை இங்கு நான் பதிவு செய்தாகவேண்டும். இதை மறுப்பவர்களை நான் எதிர்கொள்ள விரும்புகிறேன். அதாவது மலையக தலித்துகள்; தலித்துகளிலும் தலித்துகள் தான்.

தலித்தியம் பற்றி பேசும்போதெல்லாம் சொந்த அனுபவங்களுக்கு ஊடாகத் தான் அதை சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் நமக்கு.

நாம் எந்த விதத்திலும் கொண்டாடப்படுபவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதில் ஆதிக்க தரப்பு விழிப்பாக இருக்கிறது, எதிர்க்கிறது, இயங்குகிறது. ஆனால் நம்மோடு தோழமை பாராட்டுபவர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள் என்றால் அதன் சூட்சுமத்தை கண்டறிய வேண்டியிருகிறது.

சென்ற வருடம் நான் எழுதிய “1915 : கண்டி கலவரம்” நூலுக்கு இலங்கையில் அரச சாகித்திய விருது கிடைத்தது. அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதல் கிடைக்கப்பெற்ற சாகித்திய விருது அது. அப்போதும் கூட அதை வரவேற்றவர்களின் எண்ணிக்கையை பத்துவிரல்களுக்குள் அடக்கிவிடலாம். போதாதற்கு ஏன் அரச விருதொன்றை நான் பெற்றேன் என்கிற வசவுக்கும் இன்னொரு பக்கம் ஆளாகினேன். நமக்கான அங்கீகாரத்தையும் வரவேற்பையும் நாம் மட்டுமே கொண்டாடும் அவல நிலை எல்லோருக்கும் நேர்வதில்லை என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை. சாகித்திய விருது என்பது என் மக்களுக்கு தேவைப்பட்டது. என் சமூகம் அதை தூக்கி வைத்து கொண்டாடியது. அவர்களின் களிப்பில் நான் கலந்தேன். அதற்கு மேல் எதுவும் இல்லை. சமூகத்தில் நமது எழுத்துக்கும், கடமைகளுக்கும் கிடைக்கும் வரவேற்பு என்பது நமது உழைப்பால் கிடைப்பவை. தப்பித்தவறி நமக்கு கிடைக்கும் அந்த சொற்ப சந்தோசத்தையும் கூட சகிக்க முடியாத சமூகத்தை நாளாந்தம் கவனிக்க முடிகிறது. மேலே சொன்னது போல் இதை பகிரங்கமாகக் கூறினால் அதை செருக்காகவும், சுயவிளம்பரமாகவும் குறுக்கிவிடும் ஆபத்து இருப்பதால் அமைதிகொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து ஆற்ற வேண்டிய சமூகக் கடமைகளுக்கு இந்த வகை குறுக்கல்கள் குந்தகமாக ஆகி விடக்கூடாது என்பதால் கண்ணும் கருத்துமாக இயங்க வேண்டிய நிலை.

இந்த நிலையில் தான் என்னுடைய தலித்தியக் கட்டுரைகளின் தொகுப்பான “தலித்தின் குறிப்புகள்” நூலை காலம் தாழ்த்தக்கூடாது என்று வெளிக்கொணர்ந்தேன். 90களில் சரிநிகரில் எழுதி வந்த “தலித்தியக் குறிப்புகள்” முதல் தடவையாக பத்திரிகையொன்றில் அருந்ததிய மக்களின் பிரச்சினைகளக் வெளிக்கொணர்ந்த தொடர் பத்தி அது. அதை வெளிக்கொணரும் படி இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக பலரும் கோரி வந்ததால் இடையில் அந்த இரண்டு தசாப்தத்துக்குள் எழுதப்பட்ட அருந்ததிய மக்கள் சார்ந்த கட்டுரைகளையும் இணைத்து அந் நூல் வெளிவந்தது. வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் நிலவுகின்ற சாதிப் பிரச்சினைகள் குறித்து வெளிவந்த முதல் நூல் இது. அது வெளிவந்து 8 மாதங்களாகி விட்டன. ஆனால் போதிய அளவு அது பற்றிய விபரங்களை அறியவைத்த போதும் இது வரை என்னிடம் ஒருவர் கூட நூலைக் கோரியதில்லை. அந்த நூலின் முக்கியத்துவம் குறித்து ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் அரசு போன்றோர் ஆழமாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் தலித்தியம் பேசும் சக்திகளாலோ, ஆதரவாளர்களோ கூட அதனை வரவேற்றதாக இல்லை. இதற்கு பின்னால் உள்ள காரணிகளை கூட்டிக் கழித்து அளவிடவே முடிகிறது. நமக்கு எட்டும் விடை அனைவருக்கும் எட்டுமா என்ன? எட்ட வேண்டுமா என்ன?

தலித்தின் குறிப்புகள் நூல் நிறைய சிக்கல்களுக்கும், சங்கடங்களுக்கும் மத்தியில் தான் வெளிக்கொணர்ந்திருக்கிறேன். அந்த நூல் வெளிவந்ததும் உலகிலேயே எனது நெருங்கிய நட்பான எனது சொந்தத் தங்கை தனது முதல் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டாள். “ஏதோ நாம் இனியாவது சாதியை மறைத்து வாழ்ந்து தப்பிப்போம் என்று மிகப் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் போது எல்லோரையும் இன்னார்தான் என்று காட்டிக்கொடுப்பதை அல்லவா இந்த நூல் செய்யப் போகிறது” என்று கதறினாள். “புதிய நட்புகள், புதிய உறவுகள் என ஒரு புதிய உலகம் உருவாகியிருக்கும் நிலையில் அவர்களிடம் போய் வலிந்து நான் யார் எனச் சொல்வது முறையா” என்பது தங்கையின் வாதம்.

தலித்தியம் பேசுவது என்பது அவ்வளவு இலகுவானதுமில்லை, இன்பமானதுமில்லை. உயர்த்தப்பட்டவர்கள் பேசும்போது அவர்களுக்கு ஒரு மதிப்பும் கிடைத்துவிடுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பேசும்போது அவர்களின் அடையாளம் வெளிப்பட்டு அவமானப் பார்வைக்கு உள்ளாக்கப்படுவிடுகிறார்கள். என்னை யார் என்று அறிந்ததும் என்னை ஒருபடி மேலே வைத்து எவரும் பார்க்கப்போவதில்லை. மாறாக என்னை ஒரு புழுவைப் போலத்தான் பார்க்கப் போகிறார்கள். அப்படித்தான் பார்த்து வந்திருக்கிறார்கள்.

தலித்தியம் பற்றி பேசுவதை நிறுத்தச் சொல்லி எனது குடும்பத்தினரும், உறவினர்களும், சில நண்பர்களும் கேட்டுக்கொண்டபோதெல்லாம் அதையும் மீறி மறுபுறம் அவமானங்களை எதிர்கொண்டபடி எனது அடையாளத்தை பெருமிதமாகக் கூறிக்கொண்டு நான் தலித்திய அரசியல் பேசியது அந்த பாவப்பட்ட மக்களுக்காகத்தான். நான் தலித்தியம் பேசுவதாலேயே என்னை விட்டு தூரம் விலகிய என் உறவினர்கள் உள்ளார்கள். நான் அவர்களின் உறவினர் என்று தெரிந்தால் அவர்களின் அடையாளம் அம்பலப்பட்டுவிடும் என்கிற பீதியை நான் உணர்ந்துகொள்கிறேன். அந்த நூல் இனி எஞ்சியிருக்கிற எத்தனை உறவுகளை என்னிடம் இருந்து பிடுங்கப் போகிறதோ தெரியாது. அனால் அம்மக்களுக்காக யாராவது தம்மை இலக்கத் துணியத் தான் வேண்டும். பெரியார் கூறியது போல "நான் அதை மேற்போட்டுக்கொண்டு" செய்யத் துணிந்திருக்கிறேன். எனது பின்னணியைத் தெரியாதவர்களுக்கும் என்னை தெரியப்படுத்துவதன் மூலம் நான் சுமக்கப்போகும் அவமானங்கள் எனது குழந்தைகளுக்கும் சேரப்போகிறதே என்கிற பீதி அவ்வப்போது தொற்றிக்கொள்ளவே செய்கிறது.

இந்தளவு தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே நமது தலித்திய அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. எனது பணிகளுக்குப் பின்னால் எந்த தலித்திய அமைப்போ, சக்தியோ நபர்களோ இன்றி தான் பயணித்து வந்திருக்கிறேன். இந்த தனிமைப்படுத்தல் தற்செயல் இல்லை என்பதை உணர உங்களுக்கு பெரிய ஆராய்ச்சி தேவைப்படப் போவதில்லை.

சாதி ஆணவக்காரர்களுக்கு சாதி எதிர்ப்பார்ப்புகள்; தமது சாதி மேனிலை உறுதிபடுத்துவதற்கான வழி மட்டுமே. ஆனால் எமக்கோ இது அன்றாட வாழ்க்கை. எமது எதிர்காலச் சந்ததியை விடுவிப்பதற்கான அவமானம் நிறைந்த போராட்டம். இந்த அவமானங்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். இந்த அவமானங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் நாங்கள் எங்களை விலைகொடுக்க எப்போதோ உறுதியெடுத்துக் கொண்டுதான் இந்தப்பணியில் இறங்கியிருக்கிறோம். இந்த வசவுகளுக்கும், ஏளனத்துக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எங்களைப் பலியாக்குவதாக என்றோ நாங்கள் உறுதியெடுத்துக்கொண்டுதான் இந்தப்பணியில் இறங்கியிருக்கிறோம். இந்தப்பணி எங்களுக்கு வசதியானது இல்லை தோழர்களே!.... 

ஆதிக்க சாதியினர் பெருமிதத்துடன் தமது சாதியைஅறிவித்துக்கொண்டு பணியாற்றுவதைப்போல அல்ல எங்கள் பணி. ஒடுக்கும் சாதியொன்று தன்னை அறிவித்துப் பணியாற்றுவதும், ஒடுக்கப்படும் சாதி தன்னை அறிவித்துப் பணியாற்றுவதும் ஒன்றுக்கொண்டு நேரெதிரான மிகப்பெரிய வேறுபாடு உடையவை. துருவமயமான சிக்கல் நிறைந்தவை.

நேர்மையான ஆதரவு சக்திகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் “என்னிடம் பச்சாதாபம் காட்டாதீர்கள்! கருணை காட்டாதீர்கள்! சிறுமையாக ஆக்காதீர்கள்! முக்கியமாக என்னிடம் இருந்து அப்பாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். நான் எப்படி என்னை வெளிப்படுத்தவேண்டும், என் அரசியல் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்கிற அவர்களின் எதிர்பார்ப்பே எமக்கு எதிரான மனநிலையை அவர்களிடம் உருவாக்கி விடுவதாகவே உணருகிறேன். சமூக நீதியை அதன் உள்ளார்த்தத்திலேயே இயங்க வழி விடுங்கள்.

(படம் : சாந்தன் - லண்டன்)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates