மகாவம்சத்தின் ஆறாம் தொகுதி கடந்த 16.08.2018 அன்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி வியஜதாச ராஜபக்சவினால் வெளியிடப்பட்டிருக்கிறது. பல பௌத்த பிக்குமார்களும், அரசியல் தலைவர்களும், சிங்கள பௌத்த கல்வியியலாளர்களும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உரையாற்றுகையில் இதுவரை கண்டெடுக்கப்பட்டு வரும் பல்வேறு தொல்பொருள் சான்றுகள் மகாவம்சத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டே வருகின்றன என்கிறார்.
அன்றைய தினம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச “மகாவம்ச விவகாரங்களைக் கவனிக்கவென தனியான நிறுவனத்தை அமைக்கப்போவதாக உறுதிமொழியளித்தார்.
கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் மகாவம்சத்தை உறுதிபடுத்திவருகிறதா அல்லது மகாவம்சத்தில் எழுதப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு நிறுவ முயற்சிக்கிறார்களா என்கிற கேள்வி நமக்குள் எழும். ஏனென்றால் இலங்கையின் இனப்பிரச்சினையில் மகாவம்சத்தின் வகிபாகம் அப்படி. மகாவம்சம் ஏராளமான புனைகதைகளையும், நம்பமுடியாத புரட்டுகளையும் கொண்டிருகிறது என்பதை பல்வேறு ஆய்வாளர்களும் உரியமுறையில் அம்பலப்படுத்தியே வந்திருக்கிறார்கள்.
விஜயனிலிருந்தே சிங்கள சமூகம் இலங்கையில் தோன்றியது என்று கூறுகிற மகாவசம்சத்தை ஏற்றுக்கொண்ட பலர் இன்று “இல்லை இல்லை விஜயனுக்கு முந்திய இராவணன் பரம்பரை நாங்கள். இராவணன் சிங்களவர்களின் தலைவர்” என்று இன்று நிறுவ முயற்சிப்பதையும் நாம் காண முடிகிறது. அதற்கான காரணங்களில் ஒன்று விஜயனின் வழித்தோன்றல் பற்றியது. உதாரணத்திற்கு விஜயனின் தந்தை சிங்கபாகு சிங்கத்துக்குப் பிறந்தவர் என்கிற கதையும், சிங்கள இனத்தின் தோற்றம் பற்றிய விபரங்களும். அடுத்தது “விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்த இராவணன் என்கிற பேரரசனின் வழித்தோன்றலே நாங்கள், நாமே மூத்த மண்ணின் மைந்தர்கள், மற்றவரெல்லாம் அந்நியர்” என்கிற கருத்துருவாக்கத்தை விதைப்பதற்கும் அது இன்று தேவைப்படுகிறது.
மகாவம்சத்தின் தோற்றம்
இலங்கையின் நவீன வரலாற்றாசிரியர்கள் கூட கணிசமான அளவிற்கு மகாவம்சத்தில் தங்கியிருக்கிறார்கள். இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை வரலாறு தொடர்பான வெகுஜன மட்டத்திலான உரையாடல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றுப் பாடங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வெகுஜன சொல்லாடல்களிலும் அரசியல் சொல்லாடல்களிலும் கூட மகாவம்சம் பாத்திரம் செலுத்துகிறது. மகாவம்சம் சித்திரிக்கும் இனவாத கருத்தேற்றப்பட்ட துட்டகைமுனுவின் கதையானது பாடசாலையில் பயன்படுத்தப்படும் சிங்கள மொழிப் பாட நூல்களிலும் பௌத்த சமய பாட நூல்களிலும் சிங்கள நாடக அரங்கிலும் ஜனரஞ்சக இலக்கியங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன.
சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த பலத்துக்கு துணையாக அது வைத்திருக்கும் முக்கிய ஆயுதம் தான் “மகாவம்சம்” என்கிற "புனித" சிங்கள வரலாற்று காவியம். எப்படி இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தும் ஆயுதமாக கற்பனாபூர்வமான புனைவுப் புனித காவியமான இராமாயணத்தை எவ்வாறு பயன்படுத்திவருகிறதோ, அது போல இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமது உண்மையான வரலாறு என்பது புனைவுக் காவியமான “மகாவம்சம்” தான் என்று நம்புகிறது. தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு பூடகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வரலாற்று ஆவணம் மகாவம்சம்.
கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் வழிவழியாக வாய்மொழியாக பேசப்பட்டு வந்த தகவல்கள் என்கிற போது அதன் நம்பகத் தன்மை எப்படி இருக்கும் என்பதை நாம் உணர முடியும்.
அதில் கூறப்படும் பல கதைகள் விஞ்ஞானத்துக்கு புறம்பான வரலாற்றுக் குளறுபடிகளைக் கொண்ட புனைகதைகள் என்பதை உணராலாம். அது மட்டுமன்றி ஆட்சிசெய்த அரசர்களின் வயது, ஆட்சி காலம் என்பன பல இடங்களில் நம்பத்தகுந்தவை அல்ல. அவை பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன.
எழுதிய மகாநாம தேரர் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட தீபவம்சம் என்கிற வரலாற்று நூலைத் தழுவியே தான் எழுதினாலும் கூட மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டுணர்ந்தே தான் எழுதியதாகவே மகாவம்சத்தில் குறிப்பிடுகிறார். மகாநாம தேரர் இருந்த காலத்தில் வரலாற்றை ஆய்வு ரீதியாக எழுதும் புலமையும் அவருக்கு இருக்கவில்லை, அதற்கான வசதிகளும் அன்று இருக்கவில்லை. இல்லையென்றால் சிங்கத்துக்குப் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சாரப்பட அவர் எழுதியிருக்கமாட்டார்.
இந்த பின்னணியில் வைத்தே மகாவம்சத்தை நாம் காணவேண்டியிருக்கிறது. இலங்கையின் சிங்கள பௌத்த பண்பாட்டு வரலாறு என்பது “மகாவம்ச” புனைவுகளால் கட்டப்பட்டது என்பதை எவரும் அறிவர்.
மொழியாக்கம்
கி.மு 543ம் ஆண்டு இந்தியாவிலிருந்து விஜயன் என்கிற இளவரசனின் வருகை தொடக்கம், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் காலம் வரையான பதிவுகளை மகாவம்ச மூல நூல் கொண்டிருக்கிறது.
மகாவம்சம் எழுதப்பட்டு 13 நூற்றாண்டுகளாக அது சிங்கள சாதாரண மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. மேலும் இன்று கூட மகாவம்சத்தின் முதல் ஆங்கில பிரதி பற்றி குறிப்பிடுகிற போது கெய்கரைத் (Wilhelm Ludwig Geiger) தான் குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் அதற்கு முன்னரே குறைபாடுகளுடனேனும் மொழியாக்கம் நடந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் (Sir Alexander Johnston) மகாவம்சத்தின் ஓலைச்சுவடிகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவுக்கு 1809 ஆம் ஆண்டு அனுப்பிவைத்தார். 1826 ஆம் ஆண்டு ஒரு தோராயமான மொழியாக்கம் லத்தீன் மொழியில் யூகேன் பூர்னோப் என்பவரால் (Eugène Burnouf ) வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பல குறிப்புகளுக்கு பிழையான விளக்கம் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு புத்தர் இலங்கையில் பிறந்தார் என்று கூட இருந்தது.
இலங்கையின் முதலாவது மதக் கலவரமான கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்த 1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA) என்பவரைக் கொண்டு மொழிபெயர்த்த பிரதியொன்றை அன்றைய ஆங்கிலேய அரசாங்கமே வெளியிட்டிருக்கிறது. அதில் அன்றைய தேசாதிபதி சேர் வில்லியம் ஹென்றி ஜோர்ஜின் ஆணையின் பேரில் வெளியிடப்பட்டதாக குறிப்பு காணப்படுகிறது.
இவற்றிலெல்லாம் மொழிபெயர்ப்பு குறைபாடுகள் இருந்த நிலையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிவில் சேவைத்துறையில் பணியாற்றியவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். முதலியார் விஜேசிங்கவுடன் சேர்ந்து மொழியாக்கத்தில் உதவியவர் தான் ஜோர்ஜ் டேர்னர். 1889இல் அது வெளிவந்த போது அன்றைய இலங்கை தேசாதிபதி ஆர்தர் ஹமில்டன் கோர்டன் (Arthur Hamilton Gordon) இன் ஒப்புதலுடன் வெளியிடுவதாக முதல் பிரதியில் மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது. அதிலும்
அந்த மொழிபெயர்ப்பிலும் போதாமை இருந்ததை சுட்டிக்காட்டித் தான் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. வில்ஹெய்ம் கெய்கர் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சரி பார்த்து வெளியிட்டார். கெய்கர் மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி சூளவம்சம் (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். இன்றும் கெய்கரின் மொழிபெயர்ப்பையே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பிரதியாக காண முடிகிறது. வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று ஆசிரியராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது.
மகாவம்சம் தொடர்ச்சியாக இலங்கையின் வரலாறாக எழுதப்படவேண்டும் என்கிற சிங்கள பௌத்தத் தரப்பின் வேண்டுகோளுக்கிணங்க அரசு உத்தியோகபூர்வமாகவே அந்த பணியை முன்னெடுக்க முடிவு செய்தது. அதன்படி மகாவம்சம் இன்றும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கான நிரந்தர அரசப் பணியகம் இயங்கிவருகிறது.
பேராசிரியர் சந்திர விக்கிரமகமகே திருத்திய "மகாவம்சம்" பதிப்பு 2016 ஜூன் மாதம் 14 அன்று பிரதமர் ரணிலிடம் ஒப்படைக்கும் வைபவத்தில் ரணில் கூறினார் "மகாவம்சம் இன்றேல் இந்தியாவுக்கும் வரலாறு இல்லை. இந்தியக் கொடியில் அசோக சக்கரமும் இருந்திருக்காது, அசோக சக்கரவர்த்தியை யார் என்று அவர்கள் அடையாளம் கண்டதே நமது மகாவம்சத் தகவல்களைக் கொண்டு தான்." என்றார். அன்றைய தினம் பிக்குமார்களை அழைத்து பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வை நடத்தியபோது மகாவசத்தின் பிந்திய அத்தனை தொகுதிகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்கான குழுவொன்றை ஏற்படுத்தும்படியும் அதற்கு நிதியொதுக்குவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இதுவரை மகாவம்சம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதைத் தேடிப்பார்த்ததும் இல்லை அதைச் செய்யச் சொல்லி கட்டளை இட்டதுமில்லை. அதில் அக்கறை காட்டியதுமில்லை.
அந்த பதிப்பானது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தகவல் பிழைகள் திருத்தபட்டதாகவும் அங்கு குறிப்பிடப்பட்டது. குறிப்பாக புதிய ஆராய்ச்சிகளின் படி “சிஹல தீப”, “சிஹலே” போன்ற பெயர்களில் இலங்கை அழைக்கப்பட்ட விடயங்களை சேர்க்கப்பட்டிருப்பது பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வப்போது மகாவம்சத்தை திருத்தும் (திரித்தும்) பணிகளும் கூட நிகழ்கிறது என்பதைத் தான் இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
இலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வுக்கு “மகாவம்ச மனநிலை” முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கிறது. அதனை விதைத்ததில் இலங்கையின் கல்வித்துறைக்கும் முக்கிய பாத்திரமுண்டு. மேற்படி கூட்டத்தில் வைத்து ரணிலைப் பாராட்டி பேராசிரியர் எஸ்.பீ.ஹெட்டிஆராச்சி இப்படி கூறினார்.
“மகாவம்சத்தைப் போற்றி பல இடங்களில் நீங்கள் கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை 2001 ஆம் ஆண்டு நீங்கள் மத்திய கலாசார நிதியத்துக்கு தலைவராக இருந்த போது தான் மகாவம்சத்தின் சிங்கள, பாளி பிரதிகள் உடனடியாக தயாரிக்கப்படவேண்டும் என்கிற யோசனையைச் செய்தீர்கள். இப்போது இதோ நம்மிடம் அவை இருக்கின்றன. 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வரலாற்றுப் பாடம் கல்வித்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் நீங்கள் 1983 இல் கல்வி அமைச்சராக இருந்தபோது மீண்டும் வரலாற்றுப் பாடத்திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தீர்கள். அப்போது ஒரு பத்திரிகை “இனத்துக்காக ரணில் எடுத்த தீர்மானம்” என்று தலைப்பிட்டது. இன்னொரு பத்திரிக்கை “சாவின் விளிம்பில் இருந்த வரலாறுக்கு உயிரளித்த ரணில்” என்று தலைப்பிட்டது. என்றார்.
ரணில் இனவாதமற்ற ஒரு தலைவர் என்கிற பொது அப்பிராயம் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த மகாவம்ச மனநிலையால் பீடிக்கப்பட்ட பலருக்கு அப்படி தாம் பீடிக்கப்பட்டதே தெரியாது இருப்பதும் அந்த நோயின் அறிகுறிகளில் ஒன்று தான். இல்லையென்றார் ரணில்; மகாவம்சத்துக்கும் இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கும் உள்ள உறவென்ன என்பதை அறிந்திருப்பார்.
புறமொதுக்கப்பட்ட தமிழர்கள்
மகாவம்சத்தின் மூலப் பிரதி தான் பல புனைவுகளைக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பின்னர் இதுவரை 6 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன என்பாத்து கவனிக்கத்தக்கது. 2010ஆம் ஆண்டு மகாவம்சத்தின் ஐந்தாவது தொகுதி (1956 - 1978) முடிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆறாவது தொகுதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் உத்தியோகபூர்வ வரலாறு இது தான் என்கிற அரச ஆவணமாகவும், புனித நூலாகவும் கூறப்படும் மகாவம்சம் இலங்கையின் ஓரினத்துக்கு மட்டுமே இன்றுவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். வலுக்கட்டாயமாக இலங்கைக்குள் இணைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்; தம்மைப் பற்றி “அரசு” எத்தகைய வரலாறைப் புரிந்து வைத்திருக்கிறது? என்ன வரலாற்றை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வந்திருக்கிறது என்பது பற்றி அறிய எந்த வாய்ப்புமில்லை. இன்று வரை தமிழ் மொழியாக்கம் பற்றி தமிழர் தரப்பில் இருந்து கூட எவரும் நிர்ப்பந்தித்ததாகவோ, கோரியதாகக் கூட தகவல்கள் இல்லை.
ஈழப்போராட்டம் பற்றி மகாவம்சம்?
மகாவம்சத்தை எழுதவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. அந்த குழுவில் அங்கம் வகிக்கும் 15 புலமையாளர்களைக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி தேடிப்பார்த்தபோது சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. ஏன் சிங்கள கத்தோலிக்கர்கள் கூட கிடையாது. இலங்கையில் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சிகாலங்களின் போது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, கலை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத நிலைமைகளை பதிவு செய்வது அந்தக் குழுவின் பணி.
இதைத் தவிர மகாவசத்தை “மஹாவம்ச கீதய” என்கிற தலைப்பில் செய்யுள் வடிவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரை 1815 வரையான காலப்பகுதி வரை பாளி, சிங்கள ஆகிய மொழிகளில் செய்யுளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான பணிகள் பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர என்பவரின் தலைமையில் தனியான குழு மேற்கொண்டு வருகிறது.
2015 ஜனவரி ரணில் – மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மகாவம்ச உருவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கலாசார விவகார திணைக்களம் தமது புதிய திட்டத்ததை பாராளுமன்றத்தில் சமர்பித்தது. அதில் மகாவம்ச உருவாக்கத்தை துரிதப்படுத்தும் பரிந்துரைகள் காணப்படுகின்றன. அதன் விளைவாகவே இப்போது 6வது தொகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.
இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் “இலங்கை அரசின்” உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள தற்போது வெளிவந்திருக்கும் 2010 வரையிலான மகாவம்சத்தின் 6வது தொகுதியை நாம் கவனத்துக்கு எடுப்பது அவசியம்.
சிங்கள பௌத்தர்களால் வரலாற்றைத் திரித்து, தமிழ் மக்களை புறமொதுக்கி, புனைவுகளை தொகுத்து சிங்கள மக்களுக்கு மட்டுமே ஊட்டிவரும் ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதம் தான் மகாவம்சம். அது இலங்கையில் இதுவரை ஏற்படுத்திய நாசம் போதும். இதற்கு மேல் தாங்காது. தமிழ் அரசியல் சக்திகள் இதற்கு உரிய முறையில் வினையாற்றுவது முக்கியம்.
இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.
நன்றி - தினக்குரல் - 1
- தொகுதி 1 - இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் எழுதப்பட்டது
- தொகுதி 2 - கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை
- தொகுதி 3 - 1815 முதல் 1936 வரை
- தொகுதி 4 - 1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை
- தொகுதி 5 - 1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை
- தொகுதி 6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை
- ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி (1978-1989)
- ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி (1989-1994)
- சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி (1994-2005)
- மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி (2005-2010)
நன்றி - தினக்குரல் - 2
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...