கடந்த வாரம் புகையிரதத் தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தின் போது பொதுமக்கள் அவர்களை அடித்து விரட்டினார்கள் என்கிற செய்தியை மிகவும் மகிழ்ச்சியாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்படி விரட்டியடித்தமையை மக்களின் போராட்டமாகவும் சித்திரித்திருந்தன. அதிகார வர்க்கத்துக்கு எதிராக நியாமான கோரிக்கைகளுடன் போராடும் போராட்டத்தை மக்கள் தமக்கான போராட்டத்தின் அங்கமாக எடுத்துக்கொள்ளாது; அறியாமையால் அதிகார வர்க்கத்தின் பக்கம் சார்ந்து இருந்த ஒரு சிறு சம்பவம் அது. தொழிற்சங்கப் போராட்டங்கள் சக தோழமை மக்களாலேயே காட்டிக்கொடுக்கப்படும் ஒரு நிலை வளர்ந்து வருவது சுயதற்கொலை நிகழ்வன்றி வேறென்ன.
சரியாக 65 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தில் ஓகஸ்ட் 12 அன்று இலங்கை மக்களால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் போராட்டத்தை இங்கு நினைவுக்கு கொண்டு வருவோம். அந்தப் போராட்டம் இரயில்வே தொழிலாளர்களும், அரசாங்க ஊழியர்களும், மாணவர்களும், விவசாயிகளும் பொது மக்களும் என சகலரும் இணைந்து நடத்திய போராட்டம். இன்று வரை “53’ மாபெரும் ஹர்த்தால்” என்றே வரலாற்றில் அழைக்கப்படுகிறது. அது புகட்டிய பாடத்தை நினைவுருத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அரிசி கவிழ்த்திய ஆட்சி
இலங்கையை உலுக்கிய ஹர்த்தால் அது. இலங்கையின் இடதுசாரி வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்லக்கூடிய மாபெரும் வெற்றியை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்த ஹர்த்தால் அது. அது மட்டுமன்றி அன்றயை ஹர்த்தால் என்பது இலங்கையின் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும், நாடிபிடித்தறியும் முக்கிய நிகழ்வாகவும், பாடமாகவும் அமைந்தது.
சுதந்திரம் கிடைத்து நான்கே வருடம் தான் ஆகியிருந்த மழலையாக இருந்தது இலங்கை. நேரடியாக அடக்கியாண்ட காலனித்துவம் போய் மறைமுகமாக இலங்கையை கட்டியாளும் நவகாலனித்துவ செல்வாக்குக்குள் சிக்கவைக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயன்றன.
சோல்பரி பிரபுவுடன் டட்லி சேனநாயக்க |
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நமது தேயிலை, இறப்பர் என்பவற்றுக்கு சர்வதேச சந்தையில் நியாயமான விலையைத் தர மறுத்தன. சர்வதேச சந்தையில் அரிசியின் விலையும் அதே காலத்தில் உயர்ந்தது. அரிசியை பிரதான உணவுக்கு பயன்படுத்தும் நம் நாடு சிக்கிக்கொண்டது. சிக்கவைக்கப்பட்டது.கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்த அரசு உலக நாடுகளிடம் கையேந்தி கடன்கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடன் வழங்கும் சர்வதேச நிறுவனங்களும், நாடுகளும் போட்ட நிபந்தனைகளுக்கு இலங்கை கட்டுப்பட நேர்ந்தது. புதிய தேர்தலையும் அவை நிர்ப்பந்தித்தன.
1952ஆம் ஆண்டு சேனநாயக்கவின் மறைவைத் தொடர்ந்து அந்த அனுதாபத்தின் காரணமாக அவரது மகன் டட்லி சேனநாயக்கா அந்தத் தேர்தலில் வெற்றியீட்டி பிரதமரானார். அப்போது நிதி அமைச்சராக ஆனவர் பிற்காலத்தில் இலங்கையில் அதிகாரத்துக்கு வந்ததுமே நாட்டை உலக வல்லரசுகளுக்கு சூறையாட திறந்தபொருளாதாரக் கொள்கையின் மூலம் வழிதிறந்துவிட்ட ஜே.ஆர். பிரதமர் டட்லி மக்களுக்கு இப்படி உறுதியளித்தார்.
“இந்த அரசாங்கம் இருக்கும்வரை அரிசி விலை 25 சதமாகத் தான் இருக்கும். உலக அரசி விலை எப்படி இருந்தாலும் இலங்கை மக்களை பட்டினி கிடக்க விடமாட்டோம். புதிய உணவுத்துறை அமைச்சர் (சேர் ஒலிவர் குணதிலக்க), உலகம் முழுவதுமிருந்து உணவை பெற்றுத்தருவார். அதற்கான நிதியை நமது னி அமைச்சர் (ஜே.ஆர்.ஜெயவர்தன) ஒழுங்கு செய்வார். உலக அளவில் நமக்கிருக்கும் நல்லுறவின் மூலம் நமது உணவுத்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் நமது மக்களுக்கு வரிச்சுமை எற்படாதவண்ணம் அவற்றை நிறைவுசெய்வார்கள்.” (ஐ.தே.க.வின் கட்சிப் பத்திரிகை “சியரட்ட” – 01-08.1952)
ஆனால் அரசாங்கம் அரிசி விலையை புதிய பட்ஜெட்டில் கூட்டுவதற்கான முடிவை எடுத்திருந்தது. பாராளுமன்ற பட்ஜெட் விவாதத்தில் அதனை நிறைவேற்றுவது தான் பாக்கி.பட்ஜெட் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே விலைகள் உயர்த்தப்பட்டன.
25 சதத்துக்கு இருந்த ஒரு கொத்து அரிசியின் விலையை ஒரேயடியாக 70 சதமாக உயர்த்தினார். அது மட்டுமன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டனபுரகையிரதக் கட்டணம், தபால் கட்டணம் என்பவற்றையும் அதிகரித்ததுடன் பள்ளிக்குழந்தைகளின் மதிய நேர உணவையும் ரத்துசெய்தது.
தன்னெழுச்சிக்குத் தலைமை
இந்த திடீர் சுமையை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. அலுபோமுல்ல என்கிற பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது எதிர்ப்பை வெளிக்காட்ட தலைமயிரை வெட்டி ஒரு பொதியில் வைத்து அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தார். பத்து பிள்ளைகளின் தந்தையான டி.அப்புஹாமி என்பவர் அரிசி விலைக்கு தனது எதிர்ப்பை வெளியிடுவதற்காக அசிட் குடித்து மரணமான செய்தி பத்திரிகையில் வெளியானது.
மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என்பவற்றில் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்துகொண்டிருந்தார்கள். யூலை மாதம் இந்த நிலை உக்கிரம் பெற்றது.
1953 - காலிமுகத் திடல் கூட்டம் - என்.எம்.பெரேரா உரை |
மக்களின் இந்த உணர்வுக்கு தலைமை கொடுக்க இடதுசாரி இயக்கங்கள் முன்வந்தன. தனித்தனியாக இது பற்றி தமது கட்சிக் கூட்டங்களில் கதைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒன்றிணையும் காலம் வந்தது. தொழிலாளர் வர்க்கத்தையும் ஒரு சேர திரட்டி மக்கள் போராட்டமாக முன்னெடுப்பது பற்றி சண்முகதாசன் தலைமையிலான (செயலாளராக இருந்தார்) இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் தொழிற்சங்கத் தலைவர்களைத் திரட்டி ஒரு கூட்டத்தை நடத்தியது. ஒரு ஹர்த்தாலை நடத்துவது பற்றி அச் சம்மேளனம் ஒரு முன்வைத்த பிரேரணையை லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), கொம்யூனிஸ்ட் கட்சி (CP), புரட்சிகர சமசமாஜக் கட்சி (VLSSP) ஆகிய மூன்று பிரதான இடதுசாரிக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. அரசாங்க விரோத ஜனநாயக சக்திகளையும் இணைப்பது பற்றிய முடிவும் எடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட முடிவுக்கு நடைமுறை வடிவம் கொடுக்கும் வகையில் அந்த கட்சிகள் இணைந்துஜூலை 19அன்று ஒரு மாபெரும் கூட்டத்தை கொழும்பு காலி முகத் திடலில் நடத்தப்பட்டது.
ஹர்த்தால் அறிவிப்பு
மலையகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் செல்வாக்கு காரணமாக நழுவியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக ரோஸ்மீட் பிளேசிலிருந்த பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு சண்முகதாசன் உள்ளிட்ட குழுவினர் சென்று உரையாடியபோது ஆதரவைத் தெரிவித்தபோதும் ஹர்த்தாலில் கலந்துகொள்ள சம்மதிக்கவில்லை. ஹர்த்தாலை மேற்கொள்வதற்காக அறைகூவல் மூன்று இடதுசாரிக் கட்சிகளும் கூட்டாக சேர்ந்து அரைகூவல் விடுத்தார்கள். அதற்கான பேரணிகளையும் முன்கூட்டியே நடத்தி ஒரே மேடையில் உரையாற்றினார்கள். ஹர்த்தாலை ஓகஸ்ட் 12ஆம் திகதி நடத்துவதாக பிரகடனப்படுத்தினார்கள். அரசாங்கம் இந்த ஹர்த்தால் அறிவிப்பால் பீதியுற்றது.
ஹர்த்தாலுக்கு முன் தயாரிப்பாக பல்முனை, பல்வடிவ திட்டங்கள் போடப்பட்டன. 20ஆம் திகதியன்று சகல தொழிற்சங்கங்களும், கட்சிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஹர்த்தாலுக்கான ஒரு ஒத்திகையாக 12,000 துறைமுகத் தொழிலாளர்களின் மூன்று மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை செய்து காட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. அதுவே தொழிலாளர்களின் முதல் தாக்குதலாக திட்டமிடப்பட்டது. அன்றைய தினமே இரத்மலான இரயில்வே தொழிற்சாலைத் தொழிலாளர்கள் 4000 பேர் இஞ்சினியர் காரியாலயத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அரிசி விலையேற்றத்துக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் வீடுகளை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமது கோரிக்கை அடங்கிய 60,000 பேரின் கையெழுத்து அறிக்கையை பிரதமரிடம் சேர்ப்பித்தனர்.
இவை எதற்கும் அரசாங்கம் செவி சாய்க்காத நிலையில் ஜூலை 23 அன்று சகல அமைப்புகளும் ஒன்று சேர்ந்து காலிமுகத் திடலில் மாபெரும் கூட்டமொன்றை நடத்தினார்கள். ஹர்த்தாலுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவு அளிக்க முன்வராத எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டமை அங்குள்ளவர்களுக்கு பெரும் பலமாக இருந்தது.
இதற்கிடையில் பாராளுமன்றத்தைச் சூழ நடத்திய ஆர்ப்பாட்டம் பொலிசாரால் அடக்குமுறையின் மூலம் நசுக்கப்பட்டது.
12ஆம் திகதி ஹர்த்தாலுக்கு நாட்டின் சகல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் இணைவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோதும் ஆஸ்பத்திரி, வைத்தியர்மார், தாதிமார், மருந்துவழங்குனர், நோயாளிகளுக்கு உணவு தயாரிப்பவர்கள் போன்ற விடயங்களில் ஈடுபடுவோரை ஹர்த்தாலில் இணைத்துக்கொள்ளக்கூடாது என்கிற முடிவையும் ஏகமானதாக எடுத்திருந்தனர்.
டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க (கொம்யூனிஸ்ட் கட்சி), லெஸ்லி குணவர்தன (நவலங்கா சமசமாஜ கட்சி), பிலிப் குணவர்தன (நவ லங்கா சமசமாஜக் கட்சி), கலாநிதி என்.எம்,பெரேரா (இலங்கை தொழிலாளர் சம்மேளனம்), பீட்டர் கெனமன் (இலங்கை தொழிலாளர் சங்க சம்மேளனம்), ஏ.ஈ.குணசிங்க (இலங்கை தொழிலாளர் சங்கம்), சீ.எச்.ஹிக்கடுவகே (அகில இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம்), பாலா தம்போ (இலங்கை வர்த்தக சேவகர் சங்கம்) ஆகியோர் தமது அமைப்புகளை முழுமையாக ஹர்த்தாலில் ஈடுபடுத்தினர். ஒன்றாக இயங்கினர்.
ஜே.ஆரால் வந்த வினை
ஓகஸ்ட் 07 அன்று ஜே.ஆர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பட்ஜெட் இரண்டாவது வாசிப்பின் பின் 23 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கம் ஹர்த்தாலை இரானுவகரம் கொண்டு முறியடிக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. அதுபோலவே 12ஆம் திகதி ஹர்த்தாலை நடத்துவது என்று முடிவு செய்திருந்தன ஹர்த்தால் ஏற்பாட்டு அமைப்புகள்.
11ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை கண்டியில் நடத்தினார்கள். போலீசாரைக் கொண்டு தாக்குதல் நடத்தி அது கலைக்கப்பட்டது. கொழும்பில் மக்கள் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தைத் தொடகினார்கள்.
அரசாங்கமும் அடக்குமறையை உடனடியாகவே ஆரம்பித்தது. வழமைபோல அனைத்தும் சகஜமாகவே இருக்கும் என்று 12ஆம் திகதி அரசாங்க ஏரிக்கரைப் பத்திரிகைகள் பெரிய எழுத்தில் தலைப்பிட்டன.
12ஆம் திகதி அதிகாலை ஹர்த்தால் தொடங்கியது. கருப்புக்கொடி உயர்த்தல், வேலைநிறுத்தம், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள் என நாடெங்கிலும் நடந்தன. நாடே ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது.
ஆரம்பத்தில் நேரடியாக ஆதரவு வழங்குவதை தவிர்த்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்னர் மலையகத் தோட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஹர்த்தாலில் ஈடுபடச்செய்தது.
தமிழரசுக்கட்சி ஆதரவு தெரிவித்து வடக்கில் பூரண ஒத்துழைப்பைக் கொடுத்தது. அங்கே கருப்புக்கொடி எங்கெங்கும் பறக்கவிடப்பட்டது. யூலை 18 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட ஊர்வலமும், கூட்டமும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இரயில் இரயில்கள் நிறுத்தப்பட்டு என்ஜினை இயக்கமுடியாதபடி எரிபொருளை வெளியேற்றினர். தண்டவாளங்களை கழற்றி போக்குவரத்தை நிறுத்தினர். கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் வெற்று வீதிகளில் கூடினர். அரசாங்கம் அன்றே மதியம் 12 மணிக்கு கலகச்சட்டத்தை பிறப்பித்தது.
கவர்னர் மாளிகை, அலரி மாளிகை, பாராளுமன்றம், பிரதான தபாலகம், தொலைதொடர்பு மத்திய நிலையம், லேக்ஹவுஸ் உள்ளிட்ட முக்கிய அரச மர்மஸ்தானங்கள் அடங்கிய கொழும்பு ஆத்திரமடைந்த மக்களால் சூழப்பட்டிருந்தது. தமக்கெதிரான பொய்ப்பிரசாரங்களைப் பரப்பிவந்த லேக்ஹவுஸ் நிறுவனம் ஊர்வலத்தின் போது கைப்பற்றப்படக்கூடும் என்று கூட நம்பப்பட்டது.
நடுக்கடலில் கூடிய அமைச்சரவை
ஹர்த்தால் உக்கிரமுற்று விபரீதங்கள் நிகழ்ந்துவிடும் என்று கருதிய அரசாங்கம் தமது அமைச்சரவைக் கூட்டத்தை அன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த எச்.எம்.எஸ்.நியுபவுன்ட்லேன்ட் (HMS Newfoundland) என்கிற பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான யுத்தக்கப்பலில் நடத்தியது. அங்கு வைத்துத் தான் அவசரகால சட்டமும் பிறப்பிக்கப்பட்டதுடன் இராணுவத்தை இறக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நடுக்கடலில் அரசாங்க அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்ட பிரித்தானிய கடற்படைப் போர்க்கப்பல் - HMS Newfoundland |
வீதிகளில் இதில் ஈடுபடுவோர் சுடப்படுவர் என்று அச்சுறுத்தியதுடன் மக்கள் கலைக்கப்பட்டார்கள். போலீசார் வெறித்தனமாக மக்களைத் தாக்கினார்கள். அன்று கலைய மறுத்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டார்கள். (அன்றைய டைம்ஸ் பத்திரிகை 21 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தது) மக்கள் சரணடையவில்லை. அஞ்சவுமில்லை. அரசு திணறியது. அடுத்த நாளும் ஹர்த்தால் நீடித்தது.
ஆனால் பீட்டர் கெனமன், பிலிப் குணவர்தன, என்.எம்.பெரேரா ஆகியோர் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். அதில் இப்படி இருந்தது
“...அனைவரும் சேர்ந்து 12ஆம் திகதி ஹர்த்தாலை வெற்றிகரமாக சாத்தியப்படுத்திய மக்களுக்கு நன்றி கூறுகிறோம். நமது சக்தியை மெய்ப்பித்திருக்கிறோம். அரசாங்கம் பீதியுற்று அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி அரசாட்சி தளம்பியதை வெளிப்படுத்தியிருக்கிறது. இனி பொலிசாரையும், அரசாங்கத்தையும் சீண்டாமல் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். முன்னர் அறிவித்திருந்த 24 மணிநேர ஹர்த்தால் இன்று அதிகாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இனி தாங்கள் தத்தமது அன்றாட வேலைகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்...”
ஹர்த்தால் முடிந்ததன் பின்னர் அதில் ஈடுபட்ட 500க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அதிகளவு விற்பனையான மவ்பிம, சிங்களே, சமசமாஜய போன்ற பத்திரிகைகளை விற்பனை செய்த இடங்களில் இருந்து இராணுவம் அவற்றை பறிமுதல் செய்தன. தணிக்கை அமுல்படுத்தப்பட்டது.
பதவியை இழந்த பிரதமர்
இலங்கையின் வரலாற்றில் வெற்றிபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம் இது. இந்தப் போராட்டத்தின் மூலம் அரிசியின் விலை பின்னர் 55சதமாகவும், பின்னர் 25 சதமாகவும் குறைக்கப்பட்டது. அதுமட்டுமன்றி பல முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியது. பிரதமர் டட்லி இந்த ஹர்த்தாலின் போது ஏற்பட்ட கொலைகள், படுகாயங்கள், சேதங்கள், இழப்புகள் என்பவற்றால் மனமுடைந்து போயிருந்தார். அதன் விளைவாக ஓகஸ்ட் 15ஆம் திகதி பதவி விலகினார்.
ஓகஸ்ட் 17இலிருந்து செப்டம்பர் முதலாம் திகதி வரை இந்த ஹர்த்தால் குறித்த வாத விவாதங்கள் உக்கிரம் பெற்றன. செப்டம்பர் முதலாம் திகதி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் உடன்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆளுநராக கடமையாற்றிய ஹெலன் ரோஸ் ஐ (ஆளுநர் சோல்பரி வெளிநாடு சென்றிருந்ததால் தற்காலிகமாக ஆளுனர் பதவி வகித்தவர் ரோஸ்) சந்தித்து அடுத்த பிரதமராக ஜே.ஆரின் பேரை பரிந்துரைத்த போதும் சோல்பரி வரும்வரை காத்திருக்க நேரிட்டது. செப்டம்பர் 10அன்று சோல்பரி இலங்கைக்கு திரும்பி பிரதமர் டட்லியை பதவி விலக வேண்டாம் என்றும் சற்று ஓயவெடுக்கும்படியும் ஆலோசனை வழங்கினார். ஒக்டோபர் 12ஆம் திகதி டட்லி பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்றார்.
சேர் ஜோன் கொத்தலாவல உடனடியாகவே ஜே.ஆரின் வரவுசெலவு திட்டத்தை ரத்து செய்ததுடன் ஜே.ஆரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து அகற்றி விவசாயத் துறை அமைச்சை ஒப்படைத்தார்.
"புதிய பிரதமர் ஜோன் கொத்தலாவல - டட்லி சேனநாயக்க இராஜினாமா புதிய அமைச்சரவை நாளை" ஏரிக்கரைப் பத்திரிகை - தினமின |
ஓகஸ்ட் 17ஆம் திகதி கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி ஆகியவற்றின் அச்சகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
ஓகஸ்ட் 31அன்று பாராளுமன்ற விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டட்லி சேனநாயக்க ஹர்த்தாலில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானோர் 8 பேர் என்றும் அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்.
இடதுசாரிகள் இழந்த சந்தர்ப்பம்
ஒரு நாள் ஹர்த்தாலை வாபஸ் பெற்றதாக இடதுசாரிக் கட்சிகள் அறிவித்த போதும் தன்னெழுச்சியடைந்திருந்த மக்கள் அதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தனர். மக்கள் போராடத் தயாராக இருந்தார்கள். போராட்ட ஓர்மம் சற்றும் குறையாது இருந்தார்கள். ஆனால் இடதுசாரிக் கட்சிகள் அந்த உணர்வுக்கு தலைமை கொடுக்க பின்வாங்கியது. இது ஒரு நாள் போராட்டம் என்றது. மக்கள் போராட்டத்தின் மூலம் அரசையே (அரசாங்கமல்ல) கவிழ்க்குமளவுக்கு சாதகமான சூழல் இடதுசாரிக் கட்சிகளுக்கு அன்று இருந்தது. புரட்சிகர கட்சிகளாக இயங்குவதற்குப் பதிலாக அவை அன்று சீர்திருத்தவாதக் கட்சிகளாக நடந்துகொண்டன என்கிற கடும் வரலாற்று விமர்சனத்துக்கு ஆளாகின அவை. “யூ.என்.பி விரோத சக்திகளின் புரட்சி நடவடிக்கையின் உச்சக்கட்டமாக அந்த ஹர்த்தால் இருந்தது” என்பார் தோழர் சண்முகதாசன்.
இந்த ஹர்த்தாலோடு இடதுசாரிக்கட்சிகளின் தொழிலாளர் வர்க்க வரலாற்றுப் பாத்திரம் முடிந்து விட்டதென்று கூறுவார்கள். இடதுசாரிக் கட்சிகள் பிளவுற்றிருந்த நிலையில் ஓரணியில் இயங்க கிடைத்த அற்புதமான சந்தர்ப்பம் அது. 1952 வரை இலங்கையின் இரண்டாவது பெரும் அரசியல் சக்தியாக திகந்த இடதுசாரிக் கட்சிகள் 1956 ஆகும் போது மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு சில வருடங்களிலேயே பண்டாரநாயக்கவின் சிங்கள- பௌத்த தேசியவாத கொள்கைகளை ஆதரித்து போட்டித்தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சியிலமர ஒத்துழைத்தது. அதையே; கட்சி தேய தேய தொடர்ந்தும் மேற்கொண்டு அழிந்து போயினர். இந்த ஹர்த்தால் தந்த பாடத்தின் விளைவாகத் தான் இடதுசாரி சிந்தனையையுடைய இளைஞர்கள் புரட்சிகர பாதையை நோக்கி தள்ளப்பட்டதும், அதன் நீட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றதும் என்பதை கவனிக்க வேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...