இக்கட்டுரை பல வருடங்களுக்கு முன்னர் சரிநிகர் பத்திரிகையில் என்.சரவணன் எழுதிய கட்டுரையின் விரிவாக்கம். அரங்கம் பத்திரிகையில் மூன்று வாரங்கள் இத்தொடர் வெளியாகும்.
தென்னாசியாவில் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. இந்த விபரங்களை பல தடவைகள் டொக்டர் சிரியாணி பஸ்நாயக்க போன்றோர் பகிரங்கமாக வெளியிட்டு வந்திருக்கிறார்கள். அவர் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இன்னமும் சிங்கள சமூகத்தில் தொடரும் கன்னிப் பரிசோதனை பற்றிய உண்மைகளை தனது ஆய்வுக் கட்டுயொன்றின் (Basnayake, Sriani. “Virginity – The Facts: The Hymen & Virginity” Lankalibrary Forum. 2007) மூலம் வெளிக்கொணர்ந்தார். அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே தி ஐலன்ட் பத்திரிகையில் “கன்னிப் பரிசோதனை – ஒரு இளம் பெண்ணின் கொடுங்கனவு” (Virginity test — The young woman’s nightmare) என்கிற கட்டுரையொன்றின் மூலம் இதே விடயத்தைப் பற்றி அவர் எழுதிய போது சிங்கள சூழலில் பெரும் விவாதமே ஏற்பட்டது. அப்போது அது பற்றிய பல விவாதங்கள் பத்திரிகைகளிலும் வெளியானது. அக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.
சிரியாணி பஸ்நாயக்க பெண்களின் பால்நிலை, சுகாதாரம், ஆரோக்கியம், பாலியல் விடயம் என்பவை தொடர்பில் பல ஆய்வுகளை செய்து நிபுணத்துவம் பெற்றவர். ஒரு பெண்ணியவாதியாகவும் அறியப்படுபவர். இலங்கை குடும்பத் திட்ட சங்கத்தின் (The Family Planning Association of Sri Lanka (FPA Sri Lanka) பிரதித் தலைவராகவும் இயங்கி வருகிறார். கன்னித்தன்மையை பரிசோதிப்பது சிங்கள சமூகத்தில் இன்னமும் நிலவுகிறது என்று அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இப்படி விளக்குகிறார்.
வியப்பூட்டும் தகவல்
“தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவுபுரியும் போது இரத்தம் வெளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரீதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.”
டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
”சமீபத்தில் தயயொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித்தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வது ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.
பெண்களின் மறு உற்பத்தி சுகாதாரம் பற்றிய தமது ஆய்வின்போது 32% வீதமானோர் கற்பு என்பது பற்றிய சரியான விளக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. நகர்ப்புற இளைஞர்களில் 44.2% வீதத்தினரும் கிராமப்புற இளைஞர்களில் 47.4% வீதமானோரும் “கன்னி கழியாதவர்களுக்கு” முதல் பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் என்று நம்பிக்கொண்டிருகின்றனர். என்கிறார் சிரியாணி.
முதல் பாலுறவின் போது கன்னித்திரை கிழிந்து இரத்தம் கசிந்தாகவேண்டும் என்கிற ஐதீகம் குறிப்பாக பல ஆண்களிடம் நிலவவே செய்கிறது. பெண்ணுக்கான கற்பின் அடையாளமாக கன்னித்திரை கிழிதலை கருதிவருவது குறித்து சிறியாணி குறிப்பிடுகையில் மருத்துவ விளக்கங்களின் படி கன்னித்திரை கிழியாமலும் கூட ஒரு பெண் கற்பந்தரிக்க முடியும் என்கிறார்.
சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர்.
யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல் (Living together), ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் அவர் காட்டத் தவறவில்லை.
சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.
இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை. இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக்கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.
கற்பொழுக்க சோதனை
சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொருத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தெரியாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.
இந்த வகையில் தான் "கற்பொழுக்கம் பற்றிய மதவழிப் புனைவுகள்" இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி என்பவற்றுகூடாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.
கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.
அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது.
இலங்கையை ஒத்த வகையிலான முதலிரவின் பின் வெள்ளைத்துணி “இரத்தப்” பரிசோதனை சீனாவிலும் சில குழுமங்களில் மத்தியில் இருந்திருப்பதை சில நூல்கள் விபரிக்கின்றன. அந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் விதத்தைப் பற்றி சீன தொலைக்காட்சி நாடகங்களும் பதிவு செய்துள்ளன. லின் ஜியாங் (Lin Jiang) என்கிற சீன எழுத்தாளர் இது பற்றி எழுதிய குறிப்பொன்றில் இரண்டு வினோதமான நம்பிக்கைகள் அவர்களிடத்தில் காணப்படுவதாக குறிப்பிடுகிறார்.
- பெண்கள் தமது “கற்பை” திருமண நாளில் தான் இலக்க வேண்டும் என்கிற பாரம்பரிய எதிர்ப்பார்ப்பு
- பெண்கள் எப்போது “கற்பை” இழக்கிறார்களோ அப்போது இரத்தம் சிந்தப்படும்
- சிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.
அடுத்தவாரம் கன்னித்தன்மை பரிசோதிக்கும் சிங்கள பாரம்பரிய சடங்கு பற்றி பார்ப்போம்.
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...