பட்டறிவு
“பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் யுத்தத்திற்கு இலங்கைவாசிகளின் பணத்திலிருந்து ஒரு சதத்தைக் கூட உதவியாக வழங்கக் கூடாது.”
இரண்டாம் உலக யுத்தத்துக்காக ஆதரவையும், நிதியையும், ஆளணியையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் திரட்டிக்கொண்டிருந்தபோது கூறினார் என்.எம்.பெரேரா. இதனை அவர் அன்றைய பாராளுமன்றத்தில் முன்மொழிந்தபோது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அன்றைய தினம் பிரதிநிதிகள் சபையில் இருந்த அனைவரும் ஆத்திரமுற்றார்கள். அந்தப் பேச்சை எதிர்த்து அவர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டார்கள்.
யுத்தத்துக்கு எதிராக லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்பாட்டின் காரணமாக அன்றைய பிரித்தானிய அரசு லங்கா சம சமாஜக் கட்சியை சட்டவிரோதக் கட்சியாக பிரகடப்படுத்தி 17.06.1940 அன்று என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தன, கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா, எட்மன்ட் சமரக்கொடி ஆகியோரைக் கைது செய்தது. லெஸ்லி குணவர்தன வேறு வேடமணிந்து கட்சிப் பணிகளை முன்னெடுத்தார். கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “சமசமாஜ” பத்திரிகையையும் இழுத்து மூடி சீல் வைத்து அரசு.
கைது செய்யப்பட்ட அத்தலைவர்கள் அனைவரும் கண்டி போகம்பர விசேட சிறைச்சாலைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் சிறை வாழ்க்கை தொடர்ந்த நிலையில் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று நள்ளிரவு என்.எம்.பெரேரா, கொல்வின், எட்மன்ட், ரொபர்ட் குணவர்தன ஆகியோர் உள்ளிட்ட சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த சிறைக்கைதிகள் தந்திரமாக அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒளிந்து மறைந்து வாழ்ந்த அவர்கள் பின்னர் வள்ளம் ஒன்றில் தனுஸ்கோடிக்கூடாக ராசா என்கிற ஒருவரின் உதவியுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். இந்தியாவில் அவர்கள் பல்வேறு பெயர்களில் வேறு அடையாளங்களுடன் இந்திய சுதந்திரப் போராட்டப் பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டனர். பேராசிரியர் விஸ்வநாத் என்கிற பெயரில் இந்திய டிஸ்கவுன்ட் வங்கியில் செயலாளராகவும் பணியாற்றினார் என்.எம்.பெரேரா. அதுபோல கொல்வின் ஆர்.டீ.சில்வா மலையகத்தின் முதல் தியாகியான கோவிந்தனின் பெயரில் இயங்கினார், அதே பெயரில் பல கட்டுரைகளையும் எழுதினார்.. 15.07.1943 அன்று சந்தேகத்துக்கு இடமான 15 இடங்களை ஒரே நேரத்தில் இரகசிய பொலிசார் சுற்றி வளைத்ததில் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் ஆதர் ரோட் என்கிற (இன்று மும்பாய் மத்திய சிறைச்சாலை) சிறைச்சாலையில் விசேட பாதுகாப்புடன் அவர்கள் அனைவரும் 17 நாட்கள் இருட்டறையில் வைக்கப்பட்டு பின்னர் பம்பாயில் உள்ள வேறு சிறைகளுக்கும் அனுப்பப்பட்டு பின்னர் 1943 டிசம்பரில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
சிறைச்சாலைப் பாதுகாப்பிலிருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் என்.எம்.பெரேரா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த விசாரணை வழக்கு 28.12.1943 அன்று கண்டி பொலிஸ் நீதவான் டீ.விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரச வழக்கறிஞர் எஸ்.நடேசன் இலவசமாக என்.எம்.பெரேராவுக்காக வாதிட முன்வந்தார்.
President John F. Kennedy Meets with Members of the Parliament of Ceylon, 14 June 1961, White House, Washington, D.C |
என்.எம்.பெரேரா தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் தான் நிரபராதி என்றும் இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்துவதை தான் நிராகரிப்பதாகவும் அதேவேளை குற்றவாளிக்கூண்டில் இருந்து விளக்கத்தை அளிக்க தனது சம்மதத்தையும் வெளியிட்டார். குற்றவாளிக் கூண்டில் இருந்தபடி என்.எம்.பெரேரா தன்னை சிறைவைக்கவோ, தனக்கு எதிராக வழக்கு தொடுக்கவோ, பிரித்தானிய அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என்றும் இந்த குற்றவாளிக் கூண்டில் இருக்க வேண்டியது தான் அல்ல பிரித்தானிய ஆளுநர் தான் என்றும் வாதிட்டார்.
இந்த மறுப்பும் பிரகடனமும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு.
அவர் அங்கு ஆற்றிய நீண்ட உரையின் ஒரு பகுதி இது தான்.
“இன்று நான் ஒரு குற்றவாளியாக இங்கே இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் ஒரு குற்றவாளி அல்ல. நான் இந்த நாட்டின் ஆளுனரைக் குற்றவாளி என்கிறேன். இந்த விசாரணை எனக்கு எதிராக அல்ல இந்த அயோக்கிய முறைமையின் கருவியான ஆளுநருக்கு எதிராகவே மேற்கொள்ளப்படவேண்டும். ப்ரெஸ்கேர்டலின் வழக்கில் இருந்து பல அரசியல் வழக்குகளின் மூலம் எப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வண்டவாளங்கள் வெளிவருவதற்கு சாதகமானதாக அமைந்ததோ அது போல இந்த வழக்கும் இந்த மோசமான எதிரியின் உண்மை முகத்தைக் கிழித்தெறிய வழிவகுக்கட்டும்.”
பல்லாண்டுகளாக சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகிவரும் லட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களும் விவசாயிகளும் இந்த சுரண்டலுக்கு எதிராக போராடிய வரலாற்று நிகழ்வுகளை என்.எம்.பெரேரா வரிசையாக அந்த வழக்கில் விளக்கினார்.
என்.எம்.பெரேரா பழைய கருப்பு வெள்ளைப் படத்தை இக்கட்டுரைக்காக கலராக ஆக்கப்பட்டது |
18.06.1940 ஆம் திகதியிலிருந்து எந்த வித குற்றச்சாட்டுமின்றி, விசாரணையுமின்றி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். நாட்டின் பௌத்த தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் (உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டீ.பீ.ஜயதிலக்க) கையெழுத்தின் மூலம் அனுமதி கொடுக்கப்பட்டு அன்றைய தினமே நாங்கள் கைதுக்கு உள்ளானது மிகவும் கசப்பான செயல்...
நானும் எனது கட்சித் தோழர்களும் சிறையனுப்புமளவுக்கு நாங்கள் செய்த குற்றம் தான் என்ன? ஆனால் நாங்கள் பல தவறுகளை செய்து தான் இருக்கிறோம். அதாவது ஏழைத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும், நோயாளர்களுக்கும், பெண்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுத்ததது தான் எங்கள் தவறா? நாங்கள் எங்கள் தொழிற் சங்கத்தை சாத்தியமாக இயக்கியிருக்கிறோம். குறிப்பாக மலையகப் பகுதிகளில் “அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தை” இயக்கியிருக்கிறோம். அதன் போது தொழிலாளர்களின் நிலைமையையும், வர்க்க உணர்வையும் நிமிர்த்தியிருக்கிறோம். அதே வேளை சகல முதலாளிமாரின் குரூர சுரண்டலை இயன்றளவு கட்டுப்படுத்தியிருக்கிறோம்.
இவை எல்லாவற்றையும் விட மாபெரும் தவறொன்றை இழைத்திருக்கிறோம். எகாதிபத்திவாதிகளும் அவர்களின் கருப்பு அடிவருடிகளும் அதற்காக எங்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவித்துக்கொண்டு இந்த நாட்டின் சுதந்திரத்தை அடையும் வழியைக் காட்டியிருக்கிறோம். பூரண விடுதலைக்காக இந்த நாட்டு மக்களை தயார்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். இப்படி தயார்படுத்தியதன் விளைவு தான் இந்த வழக்கு எனக் கருதலாம். இந்த அனைத்து குற்றங்களுக்கும் தான் நான் ஒரு குற்றவாளி என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
நான் சிறையிலிருந்து தப்பியது பற்றியது தான் இந்த வழக்கு. சிறையிலிருந்து தப்பியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேவேளை நான் சிறைவைக்கப்பட்டது சட்டரீதியானது என்று ஏற்றுக் கொள்ளமாட்டேன். எந்தளவு அதிகாரம் படைத்த ஒருவராக இருந்தாலும் வெற்று ஆணை சட்டபூர்வமானதென நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை... அரசாங்க சபையில் எங்களை விடுவிக்கும்படி தெளிவான மொழியில் பல தடவைகள் யோசனைகள் முன்மொழியப்பட்டிருக்கிறது. ஜனநாயக அரசாங்க சபையின் முன்மொழிவுகள் தன்னிச்சையாக உதைத்தெறியப்பட்டிருக்கிறது.
நான் கொண்டிருக்கிற கொள்கைக்காகவும் எனது செயற்பாடுகளுக்காகவும் தான் ருவன்வெல்ல தொகுதி மக்கள் என்னைத் தெரிவு செய்திருக்கிறார்கள். தேசத்தின் சுதந்திரத்துக்காகவும், சமவுடமைச் சமூகத்தை உருவாக்கப் போராடுவதை நிறுத்தினால் நான் அவர்களால் வெறுக்கப்படுவேன். எனவே தனியொருவரின் (ஆளுநரின்) ஆணைக்கு நான் கட்டுப்படப் போவதில்லை. அப்படிப்பட்ட அந்த அராஜகன் பல்லாண்டுகளாக இந்த நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து வளர்த்து பலமடைந்த முறைமையின் பிரதிநிதியே தவிர மக்களின் பிரதிநிதி கிடையாது.
நாங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்வது என்கிற திட்டத்துடன் தான் சிறையில் இருந்து தப்பிச் சென்றோம் அந்த மகா தேசத்துக்கு எங்களால் முடிந்த சிறு பங்கையாவது ஆற்றுவதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் விடுதலையின்றி இலங்கைக்கு விடுதலை சாத்தியமில்லை. எங்கள் இரு போராட்டங்களும் ஒரே இலக்குக்கான போராட்டம்.
...இந்தியாவில் நடக்கும் அட்டூழியங்களை ஹிட்லர் அறிய நேரிட்டால் தனது பாசிஸ்ட் நடவடிக்கைகள் அத்தனை கொடூரமில்லை என்று கூறக்கூடும். இந்திய மக்கள் செய்த ஒரே குற்றம் தமது தாய்நாட்டுக்காக சுதத்திரத்தைக் கோரியது தான். ஆனால் பிரித்தானியவோ தாம் சுதந்திரத்துக்காவும், ஜனநாயகத்துக்காகவும் யுத்தம் செய்வதாக கூறிக்கொள்கிறது. வேடிக்கை அல்லவா?
என்.எம்.பெரேராவின் இந்த உரை தமிழில் விரிவாக வெளிவந்ததாகத் தெரியவில்லை. அது போன்று பிலிப் குணவர்த்தனவும் நீதிமன்றில் ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார். அந்த நீதிமன்ற உரை ஆங்கிலேயர்களைக் கலங்கடித்த உரை. ஆனால் இறுதித் தீர்ப்பாக மீண்டும் என்.எம்.பெரேராவுக்கும் பிலிப் குணவர்த்தனவுக்கும் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையுடன் 100 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு கண்டி-போகம்பரை, கொழும்பு –வெலிக்கடை, பதுளை சிறைச்சாலை என்பவற்றில் சிறைவாழ்க்கையை அனுபவித்தார்கள்.
அவர்கள் சிறையில் இருக்கும் போது, ஜே.ஆர், சேர் ஜோன் கொத்தலாவல, டட்லி சேனநாயக்க, ஜோர்ஜ் ஈ டீ சில்வா, டீ.எம்.ராஜபக்ஷ (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்) உள்ளிட்ட பல அரசாங்க சபை பிரதிநிதிகள், அமைச்சர்கள் அடிக்கடி பார்வையிடச் சென்றிருக்கிறார்கள்.
சிறையிலிருந்து வெளியே வந்த போது என்.எம்.பெரேரா |
சிறையில் இருக்கும் போது அவர் “சுதந்திரக் கல்வியின் வடிவம்” என்கிற நூலை எழுதினார். அது மட்டுமன்றி லண்டனில் இருக்கும் போது 1933இல் D.S.C பட்டப்படிப்பிற்காக அவர் சமர்ப்பித்த “பாராளுமன்ற ஜனநாயகம் : ஆங்கிலேய முறைமை பற்றிய ஒப்பீட்டு ஆய்வு” (Parliamentary Democracy: A Comparative Study of the English System) என்கிற ஆய்வுக்காக அவருக்கு உயர் பட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது அவர் சிறையில் இருந்தார்.
30.05.1945 அன்று சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டு அரசாங்க சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 28உம், எதிராக 2 வாக்குகளும் மட்டுமே அளிக்கப்பட்டன. பெரும்பான்மை வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டது. அங்கு உரையாற்றப்பட்டவை இன்றைய அரசியல் கைதிகள் விடுதலை விடயத்திற்கு சிறந்த உதாரணமாக இருக்க முடியும்.
இந்தத் தீர்மானத்தால் குழப்பமடைந்த ஆளுநர் நிபந்தனைகளுடன் அவர்களை ஒரு மாதத்தின் பின்னர் விடுவிக்கலாம் என்றார். நிபந்தனையின்றி விடுவிக்காவிட்டால் தாம் உண்ணாவிரதம் இருப்போம் என்று என்.எம்.பெரேரா உள்ளிட்ட அரசியல் கைதிகள் ஏகமானதாக தெரிவித்துடன் ஜூன் 18 அன்று உண்ணாவிரதத்தையும் தொடங்கினார்கள். அவர்களின் விடுதலைக்காக சிறைக்கு வெளியிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புகள் இணைந்து யூன் 18-25 வரை ஒரு வாரம் அரசியல் சிறைகைதிகளுக்கான வாரமென பிரகடனப்படுத்தி பல்வேறு பிரச்சார, மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இறுதியில் ஜூன் 20 அன்று ஆளுநர் ஹென்றி மொன்க் மேசன் மூர் (Henry Monck-Mason Moore – இலங்கையின் இறுதி பிரிட்டிஷ் ஆளுநர்) அடிபணிந்தார். நிபந்தனையின்றி அனைவரையும் விடுவிக்க சம்மதம் தெரிவித்தார். யூன் 25 அன்று அந்த மக்கள் தலைவர்கள் பதுளை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்கள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...