Headlines News :
முகப்பு » , , , » ஜே.வி.பி : “தமிழீழப் பிரச்சினைக்குத் தீர்வென்ன?” - என்.சரவணன்

ஜே.வி.பி : “தமிழீழப் பிரச்சினைக்குத் தீர்வென்ன?” - என்.சரவணன்1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் அரசின் அனுசரணையுடன் நிகழ்ந்த இனப்படுகொலையை மூடிமறைக்க ஜே.வி.பி பலிக்கடா ஆக்கப்பட்டதை அறிவோம். ஜே.வி.பியின் மீது அத்தகைய பழியைப் போடுவதற்கு உடனடி, நேரடி ஆதாரங்கள் எதுவும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் ஜே.வி.பி மீது அந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு சாதகமான சித்தாந்தப் பின்னணியை ஜேவிபி கொண்டிருந்தது என்பது உண்மை.

இன்றைய ஜேவிபி தலைமையின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிகிற போதும் அம்மாற்றங்கள் அடிமட்டத் தொண்டர்கள் வரை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் எலவே செய்யும். இது வரை ஜேவிபி இனப்பிரச்சினை தொடர்பில் தமது கடந்தகால நிலைப்பாடு பற்றிய சுயவிமர்சனம் பகிரங்கமாக வெளியிட்டதில்லை.

சண்முகதாசன் தலைமையிலான சீன கொம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விஜேவீர நீக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று விஜேவீரவின் இனவாதப் போக்கு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 1966 இல் டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து சிங்கள இனவாத அணியினர் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது விஜேவீரவும் சகாக்களைக் கூட்டிக்கொண்டு அவ்வொப்பந்தத்துக்கு எதிராக ஊர்வலம் சென்றது குறித்து கட்சி விசாரணை நடத்தி அவரை வெளியேற்றியது.

ஜே.வி.பி 1971 கிளர்ச்சியைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த போது ஜேவிபியில் இணைந்தவர்களுக்கு இரகசியமாக நடத்தப்பட்ட பிரதான ஐந்து வகுப்புகளில் ஒன்று இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றியது. அதில் மலையகத் தொழிலாளர்களை சக பாட்டாளி வர்க்கமாக இனங்கண்டு போராட்டத்தில் இணைத்துக்கொள்வதற்குப் பதிலாக சிங்களத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிரித்து  அவர்களை எதிரிகளாக சித்திரித்தது ஜேவிபி.

ரோகண விஜேவீரவும் லயனல் போபகேவும் வெலிக்கடை சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு.கொண்டு செல்லும் வழியில்
விஜேவீரவின் திரிபு

காலத்துக்குக் காலம் இனப்பிரச்சினை குறித்த சர்ச்சையின் காரணமாக ஜேவிபியிலிருந்து பலர் அணியணியாக விலகியிருக்கிறார்கள். அதன் முன்னால் பொதுச் செயலாளர் லயனல் போபகே “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை” ("ජාතීන්ගේ ස්‌වයං නිර්ණ අයිතිය") என்கிற நூலை கட்சியின் ஒப்புதலுடன் 80களின் ஆரம்பத்தில் கட்சியின் வெளியீடாக வெளியிட்டார். ஆனால் விஜேவீரவுக்கு அந்த நூலின் உள்ளடக்கத்தில் உடன்பாடு இருக்கவில்லை. அந்த விவாதம் லயனல் போபகே கட்சியை விட்டு வெளியேறும் அளவுக்கு கொண்டு சென்றது. அதே காலத்தில் வெளியேறிய, வெளியேற்றப்பட்ட பலரும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவானவர்களாக இருந்தனர். சுனிலா, கெலி சேனநாயக்க போன்றோரும் அதில் உள்ளடங்குவர்.

83 கட்சித் தடையைத் தொடர்ந்து ஜே.வி.பி தலைமறைவு அரசியலுக்குத் தள்ளப்பட்டது. அப்போது விஜேவீர “தமிழீழப் பிரச்சினைக்குத் தீர்வென்ன?” என்கிற நூலை தலைமறைவு காலத்தில் எழுதினார். இந்த நூலை 1986இல் வெளியிட்டார்.

இந்த நூல் 1985 கட்சியின் மத்தியகுழு மார்ச் மாதம் இரகசியமாக கூடியபோது முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட ஒரு ஆவணமாகவோ, அரசியல் குழுவின் ஒப்புதலைப் பெற்றோ வெளியிடப்படவில்லை.

315 பக்கங்களைக் கொண்ட சின்ன எழுத்தில் அதிகமான விபரங்களை உள்ளடக்கியது அந்த நூல். இந்த நூலில் மீது பல ஆண்டுகாலமாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஜேவிபி பதிலளித்தது கிடையாது.

நூலில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்காகவே தொகுக்கப்பட்ட நூல் அது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அப்படிப்பட்ட நூலில் கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ரோசா லக்சம்பேர்க் போன்றோரின் விளக்கங்களைக் பல இடங்களில் திரிபு படுத்துகிறார் விஜேவீர.

உதாரணத்திற்கு இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான நியாயங்களை லெனின் வாதிப்பதை தவிர்த்து அதற்கடுத்தடுத்த பந்திகளில் சுநிர்ணய உரிமை கருத்தாக்கத்தில் உள்ள சிக்கலான பக்கங்களை விபரிக்கும் இடங்களை மாத்திரம் தொகுத்திருப்பார் விஜேவீர. மார்க்சிய திரிபு, திரிபுவாதம், திரிபுவாதிகள் போன்ற சொல்லாடல்கள் மாக்சிய இலக்கியத்தில் பரவலாகக் கையாளும் சொற்கள் அப்பேர்பட்ட மார்க்சிய ஆசான்களையே திரித்து விஜேவீர சிங்கள பாட்டாளி வர்க்கத்தை பிழையாக வழிகாட்டியிருப்பதை அதில் காணலாம். அப்படியான திரிபுகள் நூல் நெடுகிலும் காணலாம்.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய பிரச்சினையை அந்த மக்களுக்கு இறுதிவரை சொல்லவில்லை ஜேவிபி. அதாவது இந்த நூல் சிங்களத்தில் மட்டும் தான் வெளியிடப்பட்டது. ஜே.வி.பிக்குள் இருந்த சிங்களத் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்ட அந்த நூல் அன்றைய தலைமறைவு காலத்தில் இக்கட்டான சூழலில் சிங்களத்தில் மாத்திரம் தான் வெளிக்கொணர முடிந்தது என்று கூறினாலும் அதன் பின்னர் கூட வெளியிடப்படவில்லை.


இனவாத நடத்தை

1987 -1989 காலப்பகுதியில் ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி நிகழ்ந்த காலப்பகுதியில் இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கும், 13வது திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மாகாண சபை முறைக்கு எதிராகவும் தீவிரமாக இயங்கியது ஜேவிபி. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக மோசமான இனவாத நிலைப்பாடு எடுத்ததுடன் இலங்கையின் மோசமான இனவாத அமைப்புகளுடன் கைகோர்த்து அவற்றுக்கெல்லாம் தலைமை தாங்குமளவுக்கு சென்றது. தலைமறைவாக இயங்கிய ஜேவிபி அந்தக் காலப்பகுதியில் இப்படியான வெகுஜன வேலைகளுக்கென்று பல முன்னணி அமைப்புகளை அமைத்து இயங்கியது. மாகாண சபை முறைக்கு ஆதரவான பலர் ஜேவிபியால் கொல்லப்பட்டனர்.

இந்தக் காலப்பகுதியில் அடக்கப்பட்டு, கட்சி மோசமாக அழிவுக்குள்ளாகி மீண்டும் 1993இல் பகிரங்க அரசியலுக்கு வந்த வேளை வடக்கில் இனப்பிரச்சினை அடுத்த நிலைக்குச் சென்றிருந்தது. அப்போது இனப் பிரச்சினை “தேசியப் பிரச்சினையாக” உருவெடுத்திருந்த நிலையில் “சுயநிர்ணய உரிமை” பற்றிய விவாதம் கட்சிக்குள் மீண்டும் எழுந்தது. கட்சியின் கொள்கைவகுப்பை உருவாக்குவதற்கான அந்த விவாதத்தில் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட பலர் மீது (குறிப்பாக ஹிரு குழுவினர் மீது) தனிப்பட்ட தாக்குதலை நிகழ்த்தி அவர்களைக் கட்சியில் இருந்து வெளியேறப்பண்ணியது. 

1995ஆம் ஆண்டு மூன்றாவது ஈழப்போர் ஆரம்பமாகி இனப்பிரச்சினை மேலும் தீவிரம் பெற்றிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு விஜேவீரவின் “தமிழீழப் பிரச்சினைக்குத் தீர்வென்ன?” என்கிற நூலை மீண்டும் ஜேவிபி வெளியிட்டது. கொழும்பு போது நூலக கேட்போர் மண்டபத்தில் அது ஆரவாரமாக வெளியிடப்பட்ட போது அநதக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு எழுந்த கேள்வி என்னவென்றால்,

தலைமறைவு காலத்தில் அந்த நூல் கட்சிக்குள் உரிய விவாதத்தை நடத்த சாதகமான சூழல் இல்லாது இருந்திருக்கலாம். ஆனால் 11 வருடங்களுக்குப் பின்னர் இது கட்சியின் அரசியல் குழுவிலோ, மத்திய குழுவிலோ, அல்லது கட்சி உறுப்பினர்கள் மத்தியிலோ போதிய உரையாடல் இன்றி வெளியிடப்பட்டது முறையானதா? சரியானதா? ஜனநாயகமானதா? அப்படிப்பட்ட உரையாடலை மேற்கொள்ளாமல் அவசர அவசரமாக வெளியிடப்பட்டதன் அரசியல் என்ன? இனவாத அரசியல் நடத்தையைத் தவிர வேறென்னவாக இருந்திருக்க முடியும்.

86 இல் இது வெளியிடப்பட்டபோது இருந்த இனத்துவ அரசியல் சூழல் 1997 இல் வேறு வடிவத்தைப் பெற்றிருந்தது. குறைந்தபட்சம் புதிய நிலைமையைக் கருத்திற்கொண்டு போதிய மாற்றங்களை செய்யக் கூடத் துணியவில்லை ஜேவிபி. இன்னொரு வடிவத்தின் இதனைச் சொல்வதென்றால் இலங்கையின் இனப் பிரச்சினை குறித்த விஜேவீரவின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான” இந்தப் பிரகடனம் தான் தமது இன்றைய அரசியல் நிலைப்பாடு என்பதையே அன்று அறிவித்தது. மாக்சியம் ஒரு விஞ்ஞானம் என்றால், மாற்றத்தைத் தவிர அனைத்தும் மாறும் என்று நம்புகிற ஒரு கட்சியால் இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டில் மட்டும் பிழைகளும் திரிபுகளும் நிறைந்த ஒரு நூலை எப்படி எல்லாக்காலத்துக்குமான சர்வரோக நிவாரணியாக ஏற்றுக் கொள்ள முடிந்தது.

மாறமுடியாத வேத நூலா?

இனவாத அணிகளின் பலமான தலைவர்களில் ஒருவராக ஆன விமல் வீரவங்ச ஜேவிபியில் இருந்து விலகிய பின்னும் இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டுக்கு அரசியல் வழிகாட்டும் புனித நூலாக வரிந்து கொண்டதும் இந்த நூலைத் தான். விஜேவீரவை கடவுளாகவும், அவரது நூலை புனித நூலாகவும் ஏற்றுக்கொண்ட மத நிறுவனமா ஜேவிபி என்கிற கேள்வியை எவரும் இதுவரை எழுப்பியிருப்பார்களோ தெரியாது.

1986 இல் வெளியிடப்பட்ட போது தான் தமிழ் மொழியில் வெளியிடப்படவில்லை. 1997 இல் இரண்டாவது பதிப்பும், 2002 இல் மூன்றாவது பதிப்பும்  வெளியிடப்பட்ட வேளையிலும் தமிழில் வெளியிடப்படவில்லை. ஒரு தொழிலாளர் கட்சி குறிப்பிட்ட இன மக்களின் தலையெழுத்தை எப்படி நிர்ணயித்திருக்கிறது என்பது பற்றி உரிய அந்த மக்களுக்கு கூறுவதைத் தவிர்த்ததன அரசியல் என்ன? சிங்கள மக்களுக்கு மாத்திரம் அந்த நிலைப்பாட்டை பல தடவைகள் விளக்கியதன் அரசியலும் என்ன. சரி இப்போது 2008 அதாவது அந்த நூல் வெளியாகி 32 வருடங்கள் கடந்தும் கூட தமிழில் வெளியிடாததன் உள்நோக்கம் என்ன? சிங்களத்தில் இன்றும் கிடைப்பதன் காரணம் என்ன?
சரி இன்று அந்த நிலைப்பாட்டை மாற்றியிருந்தால் அதைப் பகிரங்கமாக அதே சிங்கள மக்களுக்கு சொல்லாததன் அரசியல் தான் என்ன? ஜேவிபி தனது வெளியீடுகளில் 2 வீதத்தைக் கூட தமிழில்வெளியிட்டதில்லை என்பது வேறு கதை. இது இலங்கையின் ஏனைய முன்னணி இடதுசாரிக் கட்சிகளுக்கும் பொருந்தும். இலங்கையின் இடதுசாரி வரலாற்றில் எந்த இடதுசாரிக் கட்சியும் சிங்களத்திலும் தமிழிழும் சமமாக இயங்கியதில்லை. அதாவது சிங்கள மக்களுக்கு சொன்னவற்றை முழுமையாக தமிழ் மக்களுக்கு சொன்னதில்லை. அதன் வெளியீடுகளே சிறந்த சாட்சி. இன்னொரு வகையில் கூறுவதென்றால் இலங்கையில் தொழிலாளர் வர்க்க கட்சி என்று ஒன்று இருந்ததில்லை. இனவாரிக் கட்சிகளாகத் தான் அவை இருந்திருக்கின்றன.
ஜே.வி.பி இன்னமும் இனப்பிரச்சினையைப் பற்றி எப்படி விளங்கி வைத்திருக்கிறது, என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டுமெனில் சமீபகாலத்தில் வெளியான “குழுவாதம் பற்றிய அரசியல் வாசிப்பு” (2011), “தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பிரவேசம் – முன்மொழிவுகள்” (2013), என்கிற நூல்களை வாசித்தறியலாம். அவற்றில் ஜே.விபி அம்பலப்பட்டுப் போகின்றது என்று தான் கூறமுடியும். மேற்படி சிங்கள நூல்களில் சில தமிழில் கிடையாது என்பதையும் அறிக.

சம்பந்தப்பட்ட தமிழர்கள் அறியாத “தமிழீழப் பிரச்சினைக்குத் தீர்வென்ன?” என்கிற அந்த நூல் 90 ளிலேயே ஜப்பான் மக்கள் அறிந்திருந்தார்கள். ஏனென்றால் அது ஜப்பான் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஜேவிபியின் சர்வதேச கிளைகளில் ஜப்பான் கிளை பலமான ஒன்றாக அப்போது இருந்தது. இந்த நூல் பற்றிய மாக்சிய திறனாய்வை சிங்களச் சூழலிலும் விரிவாக செய்தது கிடையாது. தமிழில் செய்வதற்கு இந்த நூல் தமிழ் மொழியில் கிடைத்ததும் கிடையாது. தமிழில் அது வெளிவரும் பட்சத்தில் விஜேவீரவின் திரிபு முழுமையாக அம்பலப்பட்டுப் போய்விடும் என்பது நிச்சயம். ஏன் இன்னமும் தமிழில் வெளியிடவில்லை என்று ஜேவிபியின் தலைமையிடம் கால் நூற்றாண்டாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்னமும் தமிழில் மொழிபெயர்க்க எவரும் இல்லை என்கிற பதிலை வாய்ப்பாடாகவே கூறி வருகிறார்கள்.

சுயவிமர்சனம் முன்நிபந்தனை

வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரித்தது, சுனாமி பொதுக் கட்டமைப்புக்கு தடை விதிக்க வைத்தது, சமாதானப் பேச்சுவார்த்தையை குழப்பி எதிர்த்துக்கொண்டே இருந்தது. யுத்தத்தில் மகிந்த அரசுடன் கைகோர்த்தது என தமிழ் மக்களுக்கு எதிராக பல வகைகளிலும் தமது நிலைப்பாட்டை வெளிக்காட்டி வந்திருக்கிறது ஜேவிபி.

ஜேவிபியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பாரிய கட்சிப் பிளவின் பின் உருவானது. கட்சியில் இருந்து வெளியேறி முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கிய தோழர்கள் குறைப்பாடுகளுடன் என்றாலும் ஒரு விரிவான சுயவிமர்சனத்தை வெளியிட்டார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகவும், கடந்த காலங்களில் தமது நிலைப்பாடு தவறு என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். பல்வேறு தளங்களிலும் தத்துவார்த்த விவாதங்களை முன்னெடுத்தார்கள். அவர்களின் அந்த விவாதத்தின் தாக்கம் ஜேவிபியை சற்று சுயசுத்தம் செய்யத் தள்ளியிருந்தது என்பதை மறுக்க முடியாது.

தமிழ் மக்கள் மத்தியில் வெகுஜன அரசியலை முன்னெடுப்பதற்கு முன்னர் ஜேவிபி வெளிப்படையாக தமது சுயவிமர்சனத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். சிங்களச் சூழலில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் தான். முக்கியமாக தமிழிலும் தான்.

நன்றி - தினக்குரல்விஜேவீர எழுதிய "தமிழ் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு" நூலின் சிங்கள வடிவத்தை முழுமையாக இங்கு வாசித்தறியலாம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates