சிங்கள சமூக அமைப்பில் நிலவிய கன்னித்தன்மையை பரிசோதிக்கும் இந்த சம்பிரதாயம் இலங்கையில் சில பிரதேசங்களில் முஸ்லிம்களிடமும் பரவி புழக்கத்தில் இருந்தது என்கிறார் வினோதினி டி சில்வா (Cultural Rhapsody: Ceremonial food and Rituals of Sri Lanka, Vinodini De Silva, 2000). இந்த இந்த பழக்கம் சிலவேளை அரபு நாடுகளில் இருந்து 17 நூற்றாண்டில் வந்து சேர்ந்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அரபு தேசங்கள் சிலவற்றில் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது என்கிற கதையாடல்களையும் காண முடிகிறது முஸ்லிம் சமூகத்தில் இது எவ்வாறு இருந்திருக்கிறது என்பது பற்றி “இரு உலகங்களுக்கு இடையில்” தலைப்பில் “முஸ்லிம் பெண்கள் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் விளக்கப்பட்டுள்ளது. (Between Two Worlds, published by the Muslim Women’s Research and Action Forum in 1999). அதில் இப்படி குறிப்பிடப்படுகிறது.
“முதலிரவின் போது படுக்கையில் விரிப்பதற்காக மணப்பெண்ணிடம் ஒரு வெள்ளைத்துணி கொடுக்கப்படும். மணமக்கள் பொதுவாக மணப்பெண்ணின் வீட்டில் தான் முதலிரவைக் கழிப்பார்கள். அதற்கடுத்தநாள் மணமகன் வீட்டார் கொழும்பிலுள்ள மணமகளின் வீட்டுக்கு காலை உணவுக்கு அழைக்கப்பட்டார்கள். சிகப்புப் பூக்களும் மஞ்சளும் மணமகனின் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. மணமகள் “கற்புள்ளவள்” என்பதே அதன் பொருள். அம்பாறை போன்ற பிரதேசங்களில் “கற்புத்தன்மை” நிரூபிக்கப்பட்டதன் குறியீடாக மணமகளுக்கு தங்க நகைகள் பரிசளிக்கப்படும்.”
இப்படி திருமணத்தின் போது கன்னித்தன்மை நிரூபிக்கப்படுகையில் தாளம் இசைத்து கொண்டாடுவது மொரோக்கோ, துருக்கி, அசர்பைஜான் என பல நாடுகளிலும் இருந்திருக்கிறது (Encyclopedia of Islam, 1934). உலகப் பிரசித்திபெற்ற அரபுக் கதைகளின் தொகுப்பான “ஆயிரத்தொரு இரவுகள்” என்கிற இலக்கியத்திலும் இது பற்றி மறைமுகமாக குறிப்பிடப்படுகிறது. மணமகளின் தாயார் தனது மகள் கற்புள்ளவர் என்பதை தெரிவிக்க அந்த இரத்தக் கரைகளை அங்கு வந்திருக்கும் பெண் விருந்தினர்களுக்கு கொண்டு சென்று காட்டுவது அந்த நாடுகளில் சம்பிரதாயமாகவும் இருந்திருக்கிறது. பண்டைய யூதர்களிடமும் இப்படி வழக்கம் இருந்திருப்பதை வேதாகம “பழைய ஏற்பாட்டின்” மூலம் அறிய முடிகிறது. இது தண்டனை வழங்கக் கூடிய ஒன்று என்றும் அறிய முடிகிறது.
பைபிள் - உபாகமம், அதிகாரம் 22
15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,
21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம் பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
இது நீண்ட கால மரபாக சிங்கள சமூகத்தில் நிலவியிருக்கிறதா அல்லது இடைக்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பழக்கமா என்பது பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. 17 ஆம் நூற்றாண்டின் இலங்கையின் சமூக பண்பாடு குறித்து அறிய ரொபர்ட் நொக்ஸ்ஸின் நூலைப் பயன்படுத்துவது வழக்கம். அவரது நூலில் இத்தகையை சம்பிரதாயங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அதேவேளை அவரது நூலில் இதற்கு எதிர்மாறான விபரங்கள் காணக்கிடைக்கின்றன. அதாவது திருமணம் செய்துகொள்ளும் பெண்ணானவள்; அதற்கு முன் இன்னொருவரின் துணைவியாக இருந்தாரா இல்லையா என்பது முக்கியமான ஒன்றல்ல என்று ரொபர்ட் நொக்ஸ் பதிவிட்டிருக்கிறார்.
சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும்.
அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
“கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் “முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது.
எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக கடும் உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அவர்களின் அச்சம் அப்பெண்களுக்கு தொற்றிகொண்டிருக்கும். இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு வழியில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
”ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னித்தன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பார்க்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயலறையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான் நம்ப முடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.
இலங்கையில் நிலவும் பல்வேறு கொடிய பிரச்சினைகளுக்கு முன்னாள் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.
இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம்.
"ஆய்வுகளின்படி 76வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்?”
உசாத்துணை:
- என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்.
- The Island 2000 மே,யூன் பத்திரிகைகள்.
- Virginity test — The young woman’s nightmare – Zanita Careem - The Island 04.11.2001
- Virginity – the facts - Dr. (Mrs.) Sriani Basnayake – The Island – 26.11.2000
- பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு
- உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை
- காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம்
- க்ரியா தற்கால தமிழ் அகராதி.
- http://www.suntimes.co.za/1998/05/17/news/nets05.htm
- Along the Pricked Line by Durga de Silva - Thesis submitted to the Faculty of Graduate Studies of The University of Manitoba – 2012
- Between Two Worlds, published by the Muslim Women’s Research and Action Forum in 1999
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...