இன்று பெருந்தோட்டங்களைப்பொறுத்தவரை பிரட்டுக்களம், தேயிலை பறிக்கும் மலைகள், தொழிலாளர் குடியிருப்புக்கள் என எங்கு பார்த்தாலும் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் பற்றிய கதையாகத்தான் இருக்கின்றது. ஊடகங்களும் ஓவ்வொரு நாளும் மக்களுக்கு புதிய தகவல்களை வழங்கி வருகின்றன. புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறைந்தது ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் இருக்க வேண்டுமென்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதை பாராட்டத்தான் வேண்டும். இந்த ஒற்றுமை தொடர்ந்து இருப்பதோடு ஏனைய தொழிற்சங்கங்களினதும் கருத்துக்களை சேர்த்துக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்குமென பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒற்றுமையே வெற்றிக்கு பலம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்தவரை மழை, வெயில் என்று பாராமல் வேலை செய்யும் இவர்கள் வாழ்வில் இன்னும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அவர்கள் தொடர்ந்து தொழிற்சங்கங்களை நம்பியிருக்கின்றனர். இன்று கிடைக்கும் நாட்சம்பளத்தில் குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்து பிள்ளைகளின் கல்வியை கவனிக்க முடியாத நிலையில் கஷ்டப்படுகின்றனர். எனினும் கூட்டு ஒப்பந்தம் என்றால் அவர்களின் சம்பளம் மட்டும் தான் என்பதில்லை. அதைத்தாண்டி அவர்களின் நலன்புரி விடயங்கள் இருக்கின்றன.
தொழிலாளர்கள் நலன் சார்ந்து செய்து கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்தத்தில் பல வருடங்கள் ஆகியும் சில ஷரத்துக்கள் புதுப்பிக்கப்படவில்லை..அது குறித்து பார்த்தல் அவசியம். ஆகவே, இம்முறை நலன் சார்ந்த விடயங்கள் கட்டாயம் உள்ளடக்கப்படவேண்டும். அவை என்ன என்பதைக் கீழே பார்ப்போம்.
(1)தோட்டத்தொழிலாளர்களோ அல்லது அவர் குடும்பத்தில் யாராவது மரணமடைந்தால் தோட்டங்களில் பெட்டிப்பணம்(மரணாதாரப்பணம்) என்று சிறிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இன்றைய நிலையில் வெற்றிலை பாக்குக்கூட வாங்க முடியாது.. ஆகவே வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரும் மரணமடைந்தால் குறைந்தது 25,000 ரூபா வழங்குவதோடு ஓய்வு பெற்ற தொழிலாளர்களோ மற்றும் குடும்பத்தில் யாராவது உறுப்பினர்களோ இறந்தால் குறைந்தது 15,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
(2) தோட்டத்தில் வேலைசெய்யும் போது குளவி கொட்டுதல் , மிருகங்கள் தாக்குதல் அல்லது வேறு ஏதும் விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்கள் குணமடைந்து வரும் வரை குறைந்தது ஒரு நாளைக்கு அரை நாள் சம்பளம் வழங்க வேண்டும்.
(3) அநேக தோட்டங்களில் வைத்தியசாலைகள் குறைவு. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நோய் ஏற்பட்டால் அவர்களின் மருந்துச் செலவுகள் அனைத்தையும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.
(4) தோட்டங்களில் காடுகளை அழித்து தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலையை உருவாக்கவேண்டும்.
(5) தொழிலாளர்களுக்கு மாதத்தில் 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும். இல்லாவிடின் அதற்குரிய சம்பளத்தை வழங்கவேண்டும்.
(6) கவ்வாத்து வெட்டும் தொழிலாளர்களுக்கும் மருந்து தெளிக்கும் தொழிலாளர்களுக்கும் மட்டு மல்லாது கொழுந்து பறிக்கும் , இறப்பர் பால் வெட்டும் ,மலையில் வேலை பார்க்கும் கங்காணிமார்கள், சாக்கு சேர்க்கும் தொழிலாளிகளுக்கும் (Extra Rates) மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படல் வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் தொழிலாளர்கள் நலன் சார்ந்தவையாகும். இவற்றை எல்லாம் கூட்டு ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட தொழிற்சங்கங்கள் ஆவன செய்தல் வேண்டும்.
தொழிலாளர்கள் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இவற்றை எல்லாம் முதலாளிமார் சம்மேளனம் வழங்க முன்வரவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து அரசியல் தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒரே மேசையில் அமர்ந்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாவலர்கள் தொழிற்சங்கங்களே என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. இம்முறை நியாயமான சம்பளம் கிடைக்காவிட்டால் தொழிலாளர்கள் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கு வெளியில் சென்று வேலை செய்வதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே, இந்நிலைமையை ஏற்படுத்தாது நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நவம்பர் மாதம் தீபாவளிப் பண்டிகை வருகிறது ஆகவே, இம்முறை புதிய சம்பளத்தைப் பெற்று தீபாவளி திருநாளை மிக விமர்சையாகக் கொண்டாட எல்லோரும் தயாராகி வருவதுடன், புதிய கூட்டு ஒப்பந்தத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...