Headlines News :
முகப்பு » , , , , , » பண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்

பண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்

பட்டறிவு

“இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (PAUL WIRZ) என்கிற மானுடவியலாளர் எழுதிய ஒரு நூல் 1954 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் (ஒல்லாந்தில்)வெளியிடப்பட்டது.

“இலங்கை” பற்றிய ஆய்வு என்கிற போதும் குறிப்பாக சிங்கள சமூகத்தைப் பற்றியே இந்த ஆய்வு நூல் பல விபரங்களை வெளிப்படுத்துகிறது. சிங்கள பாரம்பரிய பேயாட்டு சடங்குகள் குறித்த ஆய்வுகளுக்கு அடிப்படை விபரங்களை தரும் நூலாக அது திகழ்கிறது. இந்திய உதாரணங்களையும் அவர் பல இடங்களில் கையாள்கிறார்.

பில்லி, சூனியம், வேண்டுதல்கள், செய்வினை, கொடிவினை, நோய் தீர்த்தல், சாமத்திய சடங்கு, முதலிரவு சடங்கு, சிறுதெய்வ வழிபாடுகள் என பல்வேறு சடங்குகளைப் பற்றிய குறிப்புகளையும் அவை சார்ந்த தனது பார்வையையும் பதிவு செய்திருக்கிறார் போல் விஸ் .


இதில் ஒரு அத்தியாயம் “சிங்கள சமூகத்தில் பாலியல் வாழ்க்கை” என்பது பற்றியது. அதில் ருதுவாதல், திருமணம், முதலிரவு, கருவுறல், பிறப்பு, குழந்த வளர்ப்பு, வசீகரப்படுத்தும் சடங்கு, நிர்வாணக் கலை, ரொடியோ சாதியினரின் மீது திணிக்கப்பட்ட “கச்சையணிவதன் தடை” என நீள்கிறது அதன் உள்ளடக்கம்.

ஒரு இடத்தில் “பத்வலங் கஹனவா” (බත්වළං ගහනවා "bat valan gahanava") என்கிற ஒரு பதம் பிரயோகிக்கப்படுகிறது. அதாவது அந்தக் காலத்திலேயே பெண்கள் “ஓரினச்சேர்க்கை”யில் (Lesbianism) ஈடுபடுவதைக் குறிக்க சிங்கள சமூகத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு பதம் பற்றிய குறிப்பு. அதை நேரடியாக மொழிபெயர்த்தால் “சோற்றுச்சட்டியை வழித்தல்” (அல்லது தேய்த்தல் என்றும் பொருள் கொள்ளலாம்). இது எப்படி “பெண் ஓரினச் சேர்க்கை”க்கு குறியீடாக பொருள்கொள்ளப்பட்டது என்பது புரியவில்லை. அந்த நூலில் அதற்கான விளக்கமுமில்லை.

ஆணாதிக்க சமூகத்தால் சோறு சமைத்தல் உள்ளிட்ட சமையல், வீட்டுப்பணிகள்  போன்ற பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ள பெண்களுக்கு சோறு சமைக்கும் பாத்திரங்களும் ஒரு வகையில் பெண்களின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் அதிகமாக கரையோரப் பிரதேசங்களிலேயே இந்தப் பதம் புழக்கத்தில் இருந்திருக்கிற போதும் இப்போது அப்படியொரு சொல் பயன்படுத்தப்பட்டதற்கான தடமே இல்லை. சோற்றுச்சட்டியை வழிப்பது என்பது சாதாரண வழக்கம். சமூகத்தில் ஒருபாலுறவு குறித்த புரிதல் காரணமாக காலப்போக்கில் இந்த பதம் சாதாரண சமூகப் புழக்கத்திலிருந்து கூட இல்லாமல் போயிருக்கிறது. இது குறித்து பரவலாக சிங்கள ஆய்வாளர்கள் மத்தியில் பேசப்படுவதையும் காண முடிகிறது.

அந்த நூலில் இந்தப் பதத்தைப் பற்றி குறிப்பிடும் 250வது பக்கத்தில் இன்னொரு கதையையும் குறிப்பிடுகிறார் போல் விஸ் . ஒரு நடுத்தர வயதைச் சேர்ந்த ஆணொருவர் பசுவொன்றுடன் பாலுறவு கொண்டது ஊரில் பகிரங்கப் பட்டுப்போய்விடுகிறது. அவமானம் தாங்காமல் அந்த ஊரை விட்டு இன்னொரு ஊருக்குத் தப்பிச் சென்று விடுகிறார். பலராலும் அது ஓரளவு மறுக்கப்பட்டதன் பின்னர் ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் ஊரை வந்தடைகிறார்.

சுய கைமைதூனம் என்று அழைக்கப்படும் சுய பாலுறவின்பம் அந்தக் காலத்திலேயே “அத்த கஹனவா” என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

பாலியல் வசியம் செய்வதற்காக அன்றைய நாட்டுமருத்துவத்தில்  “வயச குறுகம” என்று பிரசித்தமாக அழைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான மருத்துவ பதார்த்தம் (“பெஹெத் படு”) செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் பற்றிய விபரங்களையும் விளக்கியிருக்கிறார் போல் விஸ் .

ரொபர்ட் நொக்ஸ் எழுதிய “இலங்கைத் தீவின் வரலாற்றுத் தொடர்பு” (An Historical Relation of the Island of Ceylon by Robert Knox - 1681) நூலானது அன்றைய இலங்கையை அறிய பலராலும் பயன்படுத்தப்படும் முக்கிய நூல். அந்த நூலில் “வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்கவென தமது மனைவியரை அன்றைய இரவு பகிர்வது விருந்தோம்பலின் அங்கமாக சிங்களவர்கள் மத்தியில் இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். அதை போல் விஸ்  தனது நூலில் எடுத்துக் காட்டியதுடன்.  ஆண்கள் தமது மனைவியரை ஒரு சொத்தாகக் கையாண்டு தமது சகோதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்தையும் தெரிவிக்கிறார். (அந்த மரபைப் பற்றி தனியான ஒரு கட்டுரையில் பின்னர் பார்க்கலாம்.)

இரு நபர்களுக்கிடையிலான பாலுறவை அசாத்தியப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சூனியத்துக்கு “கலவ பந்திம” என்கிற சொல் இருந்திருக்கிறது. அந்த நூலில் அதனை  “கலவ பந்திம” என்கிற சொல்லால் அழைக்கிற போதும் இன்றைய சிங்கள ஆய்வுகளில் “கலவ பந்தனய” என்றே அழைக்கப்படுவதைக் கவனிக்க முடிகிறது. பாலுறுப்புகளில் ஏற்படும் நோய்கள், அல்லது பாலியல் சார் பீதியுணர்வு என்பவற்றை சரிசெய்வதற்கான உளவியல் சடங்காகவே “கலவ பந்தனய” என்கிற இந்தச் சடங்கைச் செய்ததாக இன்றைய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பௌத்த விகாரைகளில் பிக்குமாரின் பாலியல் தேவைக்காக இளம் பிக்குமாரும், அங்கு பணிபுரிபவர்களும் துஸ்பிரயோகம் செய்யப்படும் போக்கைப் பற்றி குறிப்பிடும் போது “பௌத்த விகாரைகளில் இப்படி நிகழ்வதைப் பலரும் அறிவார்கள் என்றும் அந்தச் செயலை “பன்சல சூதுவ” ("temple diversions") என்று அழைக்கப்படுவதையும் விபரிக்கிறார்.

இந்த நூலில் காலத்தால் அழிக்கப்பட்ட பல பதங்களின் குறிப்புகளைக் காண முடிகிறது. குறிப்பாக இந்த அத்தியாயத்தில் பாலியல் சார்ந்த கலைச்சொற்கள் பற்றிய ஒரு பட்டியலே இருக்கிறது. 

இலங்கையில் சிங்கள சமூகத்தில் இருந்த ரொடியோ சாதிப் பெண்கள் மார்பை மறைப்பதில்லை. சிங்கள அரசாட்சி காலத்திலேயே ரொடியோ பெண்கள் மார்பை மறைக்க அனுமதி மறுக்கப்பட்டிருகிறது. அதே வேளை தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் மலையகப் பெண் தோட்டத் தொழிலாளர்களும் மேலே வேறெதுவும் அணிவதில்லை அவர்கள் தாம் அணிந்துள்ள சேலையினால் மார்பை மறைத்துக் கொள்வார்கள் என்று விளக்குகிறார்.

இந்த நூலை எழுதியவர் ஈ.எல்.பிரில்  (E. I. Brill) என்று சிங்கள கட்டுரைகளில் காணக்கிடைக்கிறது. ஆனால் பிரில் அந்த நூலை வெளியிட்டவர் மாத்திரம் தான். அந்த நூலின் அட்டையில் இருவரின் பெயரும் மேலும் கீழும் காணக்கிடைப்பதைப் பார்த்து பிரில் என்று நம்பியிருக்கக் கூடும்.

இந்த நூலை எழுதுவதற்கு அவர் கள ஆய்வுகள் செய்தது போல அவருக்கு முன் இவை சார்ந்து எழுதிய பல நூல்களையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதற்காக அவர் பயன்படுத்திய முக்கிய இரு நூல்களில்  ஒன்று 1928இல் ஆனந்த குமாரசுவாமியால் எழுதப்பட்ட “யக்சாஸ்” (Yakshas) என்கிற நூல். அந்த நூல் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்தது “இலங்கையில் பேயியலும் சூனியமும்” (On Demonology and Witchcraft in Ceylon – 1865) என்கிற நூல். அது முதலியார் தந்திரிஸ் டீ சில்வா குணரத்ன என்பவரால் எழுதப்பட்டது. இந்த ஆய்வுகளின் பின்னைய நீட்சியையும், மேலதிகமாக ஆராய்ந்து போல் விஸ்  தனது நூலை வெளியிட்டிருந்தார். பின் வந்த ஆய்வுகளுக்குக் களமமைத்த முக்கிய நூல் என்கிற சிறப்பை இந்த நூல் பெறுகிறது.

நன்றி - அரங்கம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates