தமிழகத்தில் ஆண்டு தோறும் பூவரசி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வரும் சிறந்த அளுமைகளுக்கான விருதுகளில் இம்முறை இலங்கை ஊடகத் துறையில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான பெண் ஆளுமை விருது ஜீவா சதாசிவத்துக்கு வழங்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி சென்னையில் நிகழவிருக்கும் இந்த விருதுவிழாவில் பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு தேசியப் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையில் உதவி பயிற்சி ஆசிரியராக (Trainee Sub - Editor) அறிமுகமானவர். முதல் ஆறு மாதம் தினக்குரலில் பெற்ற பயிற்சியின் பின்னர் பத்திரிகைத்துறையை தனது முழுநேர பணியாக ஆக்கிக் கொண்டவர். அதனை திறம்பட நேர்த்தியாக செயற்வதற்காக ஊடகத்துறையில் உள்ள சக நுணுக்கங்களையும் கற்றிருக்கிறார். ஊடகத்துக்கான கணினித்துறை நுட்பம், தட்டச்சு, பக்க வடிவமைப்பு, புகைப்படவியல், கிராபிக் தொழிநுட்பம், இணையத்தள வடிவமைப்பு என சகலதையும் கற்றுகொண்டார்.
தினக்குரலில் இரண்டரை வருட காலத்திற்குள் பத்திரிகைக்கு தேவையான பயிற்சி, பத்திரிகை ஆசிரியருக்கு தேவையான பயிற்சி போன்ற பலதரப்பட்ட விடயங்களை அங்குள்ள ஏனைய ஆசிரியிர்களுடன் இணைந்து கற்றுக்கொண்டதுடன் தனது தேடலை விரிவாக்கிக் கொண்டவர்.
அந்தப் பத்திரிகையில் உதவி ஆசிரியர் (Sub - Editor), செய்தி சேகரிப்பாளர் (Reporter), பாராளுமன்ற செய்தியாளர் (Parliement Reporter) என்றவாறு செயற்பட்டதுடன் மலையக செய்திகளுக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார்.
ஞாயிறு தினக்குரல் பகுதிக்கு விவரணக்கட்டுரைகள் எழுதுவது, நூல் விமர்சனங்கள் எழுதுவது, நேர்காணல்கள் செய்வது போன்ற பல விடயங்களிலும் ஈடுபட்டு வீரகேசரியில் 2009ஆம் அண்டு உதவி ஆசிரியராக இணைந்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் ஞாயிறு வீரகேசரியில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்ததுடன் மலையகத்துக்கென ஒரு இணைப்பிதழாக வெளிவரும் 'குறிஞ்சிப்பரல்கள்' எனும் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றியிருக்கிறார். வீரகேசரி இணையத்தளத்தில் சுமார் ஆறுமாதங்கள் கடமையாற்றியதுடன் அதற்கான செய்திகள் எழுதுதல் வீடியோ நேர்காணல்களையும் மேற்கொண்டு வந்தார்.
இப்போது வீரகேசரி நாளிதழில் அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் செய்து வரும் அதேவேளை வாராந்தம் புதன்கிழமைகளில் விஷேட அரசியல் பத்தியாக அலசல் என்கிற பத்தி எழுத்தின் மூலம் அவரின் பன்முகப் பார்வையை நிரூபித்து வருகிறார்.
வீரகேசரி நாளிதழின் கலை இலக்கிய விடயங்களை சுமந்து வாராந்தம் சனிக்கிழமைகளில் வெளியாகும் 'சங்கமம்' சிறப்பு பகுதிக்கு பொறுப்பாசிரியராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி வருகிறார்.
“சங்கமம்” பகுதி ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி பல சந்தர்ப்பங்களில் முற்போக்கான வழியில் தரமான உள்ளடக்கங்களுடன் அதனை நடத்தி வருவது அதன் முக்கிய சிறப்பு. இன்றைய தேசிய வெகுஜன பத்திரிகைச் சூழலில் அப்படி தரமான ஒரு இலக்கிய இதழாக நடத்திச் செல்வது சவால் மிகுந்த விடயமே.
கலை, இலக்கிய கட்டுரைகள் , நேர்காணல்கள் (உள்நாடு, புலம்பெயர் எழுத்தாளர்கள்) , இலக்கிய பத்தி போன்ற பலதரப்பட்ட விடயங்களை செய்துவருவதுடன் பல புதிய விடயங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராக இருந்து கொண்டு ஊடகத்துறைக்கும் தனது பரவலான கடமையை ஆற்றிவருகிறார். ஊடகத்துறை சார்ந்த பல பயிற்சிகளுக்கு இலங்கையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பயிற்சியாளராகவும் கலந்து வருகிறார்.
தனது எழுத்துக்களை பதிவு செய்வதற்காக “அலசல்” (https://lindulajeeva.blogspot.no/) என்கிற இணையத்தளத்தையும் தொடக்கி இருக்கிறார்.
பத்திரிகைத்துறையில் பத்தாவது வருடத்தைக் கடக்கும் ஜீவா சதாசிவம் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறையில் முக்கிய பெண் ஆளுமையாக தன்னை பலப்படுத்திவருகிறார். இந்த “பூவரசி விருது” விருது அவரை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரட்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...