Headlines News :
முகப்பு » » ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள் - துரைசாமி நடராஜா

ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள் - துரைசாமி நடராஜா


உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து இப்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தாது வெகுவிரைவில் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களை பிற்போடுவதென்பது ஜனநாயகத்திற்கு முரணான செயலாகுமென்றும் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூட்டணி மார்தட்டி கொள்கின்றது. இது மகிழ்ச்சியான செய்தியே என்றபோதும் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் முழுமையாக உரியவாறு மலையக மக்களை சென்றடைய வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் அதிகார நிறுவனங்கள் என்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக பிரவேசித்த சிலர் அரசியலில் உயர் நிலைக்கு சென்ற வரலாறுகளும் இலங்கையில் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகின்றபோதும் மலையகப் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் மாற்றாந்தாய் மனப்பான்மையிலேயே செயற்பட்டு வருவதும் தெரிந்த விடயமாகும். இதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பிய போதும் உரிய பயனை பெற்றுக்கொள்ள முடியாமல் பெருந்தோட்ட மக்கள் இருந்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.

உள்ளூராட்சி மன்றங்களின் முக்கியத்துவம்
கீழ் மட்ட மக்களின் நெருக்கமான அரசியல் பங்கேற்பு நடவடிக்கைகளுக்கு உந்துசக்தியாக உள்ளூராட்சி மன்றங்கள் விளங்குகின்றன. அவர்களுக்கான அபிவிருத்தி மற்றும் சமுதாய மேம்பாட்டு தேவைகளை அவர்களே திட்டமிட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டு உள்ளூராட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவிக்கின்றார். உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அடிமட்டத்திலும் இடம் பெறுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் உதவுகின்றன. இது ஜனநாயக தன்மை மிக்க ஒரு நிறுவனமாகவும் பெயர் பெற்றுள்ளது. மக்கள் தமக்கு அறிமுகமானவர்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்புவதன் ஊடாக அபிவிருத்திக்கு பாதை அமைத்துக் கொள்கின்றனர். உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக நிர்வாக ஒழுங்கமைப்பு நிலைமையையும் காணக்கூடியதாக உள்ளது. உலகத்தில் அதிகமான நாடுகளில் ஒரு முக்கியமான அமைப்பாக இது காணப்படுகின்றது. கொள்கை உருவாக்கம் என்கிற நிலையில் பாராளுமன்றம் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. மாகாண சபைகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமளிக்கின்றன. இந்த வகையில் கிராம மட்டத்திலான மேம்பாட்டிற்கு உள்ளூராட்சி மன்றங்கள் துணை புரிகின்றன. நகர சபைகள், மாநகர சபைகள் பிரதேச சபைகள் என்பன இவ்விடயத்தில் முக்கிய செயலாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர்களாக இணைந்து பலர் அரசியல் நடைமுறைகளையும் அரசியல் அனுபவங்களையும் பெற்றுக்கொள்கின்றனர். இது பிற்காலத்தில் அவர்கள் அரசியலில் முக்கியப் பதவிகளில் அமர்ந்து மக்களுக்கான சிறந்த சேவையை ஆற்றுவதற்கு ஒரு களத்தை ஏற்படுத்தி கொடுக்கின்றது. நாட்டுக்கு தேவையான சிறந்த தலைவர்களை உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்குகின்றன.

கிராமங்களில் செறிந்து வாழும் மக்களின் பிரதிநிதித்துவம் மாகாண சபை அல்லது பாராளுமன்றத்தில் இல்லாமல் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன. எனவே இத்தகையோர் தமது பிரதிநிதித்துவத்தினை ஓரளவாவது உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் பெரிதும் உதவுகின்றன. சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில் இது ஒரு முக்கிய விடயமாக அமைந்துள்ளது. பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு சமூகத்தில் முக்கியமான ஒரு அரசியல் நிறுவனமாகவும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எட்டாக்கனி
உள்ளூராட்சி மன்றங்கள் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்ற போதும் இம்மன்றங்களின் ஊடான சேவைகளை எம்மவர்கள் பெற்றுக் கொள்வதில் சில இடர்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. 1987 ஆம் ஆண்டு பிரதேச சபைகள் சட்டத்தின் 15 ஆம் இலக்க 33 ஆவது சரத்தானது பிரதேச சபையின் நிதியினை பெருந்தோட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு முட்டுக்கட்டையாக உள்ளது. தோட்டப் பிரதேச குடியிருப்புகள் தனியாரின் உடைமையாக கருதப்படுகின்றன. உள்ளூராட்சி சபைகளின் நேரடி நிதி மூலம் தோட்டப்புறங்களுக்கு சேவையாற்ற முடியாத நிலை காணப்படுகின்றது. உடபளாத்த பிரதேச சபை ஏற்கனவே கலைக்கப்பட்டதற்கு நிதிப் பயன்பாடும் முக்கிய காரணமாக அமைந்தது. பெருந்தோட்டங்கள் தனியார் உடைமைகளாக கருதப்படுவதன் காரணமாக மேலும் பல சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. பெருந்தோட்ட மக்கள் மிகவும் விருப்புடனும் ஈடுபாட்டுடனும் பிரதேச சபை தேர்தல்களில் வாக்களிப்பதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனினும், வாக்களித்து உரிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அரசியலுக்கு அனுப்பிய போதும் உரிய பயன் மற்றும் அபிவிருத்திகள் கிடைக்காத போது அம்மக்களின் முயற்சி பயனற்றுப் போகின்றது. இந்நிலையானது, பெருந்தோட்ட மக்களின் மனதில் தாக்க நிலைமையினை தோற்றுவித்திருக்கின்றது. எனவே பெருந்தோட்டங்களின் அபிவிருத்திக்கு தடைக்கல்லாக உள்ள சரத்துகள் நீக்கப்படுவது மிகவும்அவசியமாக உள்ளது. இச்சரத்துகள் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசியமாக உள்ளது.

எவ்வாறெனினும், மலையக மக்களின் அரசியல் எழுச்சிக்கான ஒரு உந்துசக்தியினை பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன என்றால் அது மிகையில்லை. அரசியல் எழுச்சியின் முக்கிய பங்காளிகளாக உள்ளூராட்சி மன்றங்கள் விளங்குகின்றன.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு
இலங்கையில் சுமார் 52 சதவீதமானவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். நாட்டின் அபிவிருத்தியை பொறுத்தவரையில் பெண்களின் பங்களிப்பு என்பது அதிகமாகவே காணப்படுகின்றது. மலையக பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆடைத் தொழிற்சாலையில் மலையக பெண்கள் பலர் பணிபுரிகின்றனர். பாடசாலைக் கல்வியினை முடித்து கொண்ட யுவதிகளில் பலர் ஆடை தொழிற்றுறையை தெரிவு செய்து உழைப்பில் மூழ்கி வருவதும் தெரிந்த விடயமாகும். இதுபோன்றே தேயிலை தொழிற்துறையில் பல பெண்கள் பணியாற்றுகின்றனர். இன்னும் பல மலையக பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிந்து நாட்டிற்கு பணமனுப்புகின்றனர். எனவே இலங்கையின் வருமானத்தில் மலையக பெண்களின் பங்களிப்பு என்பது அதிகமாகவே காணப்படுகின்றனமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்கள் முக்கியத்துவம் மிக்கவர்களாகவும் நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுப்பவர்களாகவும் இருந்தபோதும் அரசியல் துறைகளில் பெண்களின் வகிபாகம் போதுமானதாக இல்லை. தீர்மானம் மேற்கொள்ளும் இடங்களில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக மிக குறைவாகவே உள்ளது. பல இடங்களில் பெண்கள் புறந்தள்ளப்படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலையில் பெண்களின் அரசியல் ரீதியான பங்கேற்பினை அதிகரிக்கும் நோக்கில் உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கென்று 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வலியுறுத்தி இருந்தமையும் தெரிந்த விடயமாகும். இந்த வாய்ப்பினை மலையகப் பெருந்தோட்ட பெண்களுக்கும் உரியவாறு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர்.

இதேவேளை இலங்கை பாராளுமன்றத் தில் அங்கம் வகிக்கும் 225 பேரில் பெண் உறுப்பினர்களின் சதவீதம் 5.8 ஆக உள்ளதாகவும், மாகாண சபையில் 3.9 சதவீதமாகவும், உள்ளூராட்சி மன்றங்களில் 1.8 சதவீதமாகவும் இது காணப்படுவதாகவும், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர் எம்.கீர்த்திகா அண்மையில் தெரிவித்திருந்தார். 1978 அரசியலமைப்பு முதல் தற்போதைய பாராளுமன்றம் வரையில் இலங்கையில் பாராளுமன்ற பெண் பிரதிநிதிகளின் பங்களிப்பானது ஆறு சதவீதத்துக்கு குறைவானதாகவே இருந்துள்ளது. பாராளுமன்றங்களுக்கு இடையிலான தரப்படுத்தலின் அடிப்படையில் 138 நாடுகளின் பட்டியலில் 128 ஆவது இடத்திலேயே இலங்கை உள்ளது. தெற்காசிய வலயத்தில் ஆணாதிக்க சமூக முறைமை காணப்படுகின்ற அதேவேளை, சமூகம் பெண்களுக்கு கடமைகளையே வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, பெண்கள் அரசியல் போன்ற துறைகளில் பங்களிப்பு செய்வதானது மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்தில் காணப்படினும் இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளைத் தவிர வலயத்தின் ஏனைய நாடுகள் குறிப்பிடத்தக்க அளவிலான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலப்பு முறையில் தேர்தல்
இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விகிதாசார மற்றும் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைமைகள் இணைந்த கலப்பு முறையில் இடம்பெற உள்ளது. விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பு, அதிக செலவுகள், பிரதிநிதிக்கும் மக்களுக்கும் இடையே குறைந்த தொடர்புகள் காணப்பட்டமை என்று பல்வேறு குறைபாடுகள் விகிதாசார தேர்தல் முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைக் கலப்பு முறையில் நடத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் புதிய முறைமையின் கீழ் இத்தேர்தல் இடம் பெறுகின்றது.

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தில் 55 இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள திருத்தங்களில் சிக்கல் நிலை இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் சுட்டிக்காட்டி இருந்தன. எனினும், பின்னர் மக்கள் விடுதலை முன்னணி உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தது. இவற்றோடு ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரச ஆதரவு அணியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பனவும் ஆதரவாகவே வாக்களித்திருந்தமையும் தெரிந்த விடயமேயாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரிப்பு  
மலையக பகுதிகளில் பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் என்பன அதிகரிக்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணி தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வந்திருக்கின்றது. இந்நிலையில் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி என்பன தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடாக இக்கோரிக்கைக்கு வலுச் சேர்த்திருக்கின்றன. மலையக பகுதிகளில் பிரதேச சபைகளில் அதிகரிக்கப்படும் பட்சத்தில் மலையக மக்களுக்கான மாவட்டம் மற்றும் மாகாணம் என்பவற்றை நோக்கி நகர்வதற்கு இது உந்து சக்தியா அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனியான அதிகார அலகு போன்றவற்றை பெற்றுக் கொள்ளவும் இந்நிலை வலுச்சேர்க்கும் என்றும் கருத்துக்கள் பலவும் முன்வைக்கப்பட்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பு குறித்த மக்கள் கருத்தறியும் குழுவிடமும் மலையக மக்களுக்கான தனியான அதிகார அலகு மற்றும் தனியான மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்ததும் தெரிந்ததே.

நாட்டில் பத்தாயிரம் அல்லது அதற்கும் குறைந்த மக்களை கொண்ட பிரிவுகள் பிரதேச சபைகளாக அங்கீகரிக்கப்பட்டிருகின்றன. எனினும் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான சனத்தொகையைக் கொண்ட அம்பகமுவ மற்றும் நுவரெலியா ஆகியவற்றுக்கு தலா ஒரு உள்ளூராட்சி மன்றங்களே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனால் உரிய அபிவிருத்தியை மலையக மக்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி மார்தட்டி கொண்டிருக்கின்றது. இது மலையக மக்களுக்கு பெரும் பக்கபலமாகும் என்றும், அத்துடன் இது ஜனநாயகத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி என்றும் முன்னணி மேலும் தெரிவித்திருக்கின்றது.

உண்மையில் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்கள் கீழ் மட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும் என்பதனை மறுப்பதற்கில்லை. இந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரிப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். நுவரெலியா மாவட்டத்தில் 05 ஆக இருக்கும் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த இணக்கம் காணப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச சபையானது நோர்வூட், மஸ்கெலியா, அம்பகமுவ என்ற மூன்று சபைகளாகவும், நுவரெலியா பிரதேச சபையானது தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா என்று மூன்று சபைகளாகவும் வலப்பனை பிரதேச சபையானது நில்தண்டாஹிள்ளன, வலப்பனை என்கிற இரண்டு சபைகளாகவும், கொத்தமலை பிரதேச சபையானது கொத்மலை மேற்கு மற்றும் கொத்மலை கிழக்கு என்ற இரண்டு சபைகளாகவும், ஹங்குரான்கெத்த பிரதேச சபையானது மதுரட்ட, ஹங்குரான்கெத்த என்ற இரண்டு சபைகளாகவும் மாற்றுவதற்கான அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கி இருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செய்திகள் வலியுறுத்துகின்றன.

இந்நிலையில் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டால் அரசியல் ரீதியான போட்டிகளும் அதிகரிக்கும் சாத்தியம் உருவாகும். ஆனால், பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்டால் மக்களின் சேவைகள் விஸ்தரிக்கப்படுவது மட்டுமல்லாது புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மலையக பட்டதாரி இளைஞர்கள் அதற்குள் உள்வாங்கப்படுவர் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வலியுறுத்தி இருக்கின்றார். அரசியல்வாதிகளா? அதிகாரிகளா? எமக்கு அவசியம் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவற்றின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் பின்வருமாறு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். உள்ளூராட்சி தேர்தல்கள் விரைவில் இடம்பெற உள்ளன. இதனால் பிரதேச சபையினை நாங்கள் முன்னிலைப்படுத்தியிருக்கின்றோம். பிரதேச செயலகங்களை உருவாக்கும் நோக்கிலேயே பிரதேச செயலகங்களை ஏற்படுத்தி இருக்கின்றோம். இதற்கான ஏற்பாடுகள் இப்போது இடம் பெற்று வருகின்றன. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பிரதேச செயலக உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதேச சபை, பிரதேச செயலகம் இரண்டும் சாத்தியப்படும் அதிகமான பிரதேச செயலகங்களே பிரதேச சபைகள் சில இடங்களில் இரண்டு பிரதேச செயலகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு பிரதேச சபை உருவாகி இருக்கின்றது. அதிகமான இடங்களில் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு பிரதேச சபை என்றே காணப்படுகின்றது. பிரதேச சபைகளை இலக்கு வைத்தே எமது முன்னோக்கிய நகர்வு இடம்பெறுகின்றது. பிரதேச சபையின் ஊடாக அரசியல் அதிகாரமும் தேவையாகும். இதனை யாரும் மறுக்க முடியாது. இதேவேளை, நிர்வாக அதிகாரமும் அவசியமாகும். ஒரு சமூகத்துக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்துவிட முடியாது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாக்குபலத்தின் ஊடாக உரியவர்களை அரசியலுக்கு தெரிவு செய்ய வேண்டும். இது அவர்களின் கடமையாகும் என்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிலர் நுவரெலியா மாவட்டத்திற்கு வெளியில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழ்வதாகவும் இவர்களின் நலன் கருதியும் உள்ளூராட்சி மன்றங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பேரும், கேகாலை மாவட்டத்தில் 75 பேரும், பதுளை மாவட்டத்தில் இரண்டு இலட்சம் இந்திய வம்சாவளியினரும் உள்ளனர். கொழும்பு, களுத்துரை, கிளிநொச்சி, வவுனியா போன்ற மாவட்டங்களிலும் இந்திய வம்சாவளி மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய மாவட்டங்களிலும் இந்திய வம்சாவளியினரின் நலன் கருதி உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உள்ளூரில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள இது வாய்ப்பளிக்கும்.

கீழிருந்து மேல்நோக்கிய திட்டமிடல்
திட்டமிடல் என்பது பல வகைகளை கொண்டதாகும். அவற்றுள் கீழிருந்து மேல் நோக்கிய திட்டமிடல் என்பது முக்கியமாகும். இதனை கீழ் மட்ட கிராமங்களே மேற்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் இதற்கு உந்துசக்தியாக அமைகின்றன என்கிறார் பேராசிரயர் சோ.சந்திரசேகரன். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், மேல்மட்ட அதிகார வர்க்கம் கீழ் மட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பது பழைய கோட்பாடாகும். 1950, 70 களில் இத்தகைய நிலை அதிகமாக காணப்பட்டது. கீழ் மட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி கீழ் மட்ட மக்களுக்கே அதிகமாக தெரியும் என்கிற சிந்தனை இன்று வளர்ச்சி பெற்றுள்ளது. இதுவே பொறுத்தமானதுமாகும். மக்கள் பிரச்சினைகளை அறிந்தவர்கள், தீர்வும் தெரிந்தவர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வோம் என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். உள்ளூராட்சி மன்றங்கள் அந்த சிந்தனையையும் பிரதிபலிக்கின்றன.

இதேவேளை, இந்தியாவில் பஞ்சா யத்து முறை காணப்படுகின்றது. பத்து பஞ்சாயத் தினை இணைத்து பஞ்சாயத்து ஒன்றி யங்களும் அமைக்கப்பட்டுள்ளன. காந்திய டிகள் கிராம இராஜ்ஜியங்களை வலியுறுத் தினார். இதன் மூலம் வெற்றியடையலாம் என்ற எண்ணக்கருவை அவர் கொண்டி ருந்தார். மாநிலங்களை அடிப்படையாக வைத்து கிராமங்களை அபிவிருத்திசெய்ய முடியாது. பஞ்சாயத்து மூலமாக இங்கு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. உள்ளூராட்சி ஏற்பாடுகள் இந்தியாவில் சிறப்பாக உள்ளன. இந்தி யாவில் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கின் றது. உள்ளூராட்சி அமைப்புக்களின் ஊடாக ஜனநாயகம் வாழ்வதனைக் காட்டு கின்றது. கீழ் மட்ட குடியரசுக ளுக்கு இந்தியா வழங்கியுள்ள முக்கியத் துவத்தையும் உணர் த்துகின்றது. மக்களுக்கு அருகேயுள்ள நிறுவனங்களே உள்ளூராட்சி மன்றங்களா கும். மக்களின் பங்களிப்பை இவை உறுதி செய்கின்றன. அரசியல் கல்வியை உள்ளூராட்சி மன்றங்கள் வழங்குகின்றன. அபிவிருத்தி குறித்து பேசுகையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முன்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேசிய வருமானம், மொத்த தேசிய உற்ப த்தி என்றெல்லாம் பேசப்பட்டது. இன்று அரசியல் அபிவிருத்தி பற்றி பேசப்படு கின்றது.

இதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் உதவும். ஜனநாயகத்தின் சின்னங்கள் இவை யேயாகும். மக்களாட்சி மலர்வ தற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் வலுப்படுத் தப்பட வேண்டும். குடியரசு என்ற கருத்தை நன்றாக நிறுவக் கூடிய உள்ளூராட்சி நிறுவனங்களே மன்னராட்சி காலத்திலும் இத்தகைய முறையிலேயே இருந்துள்ளன. இங்கிலாந்தில் உள்ளூராட்சி சபைகளிடம் கல்வி இருந்தது.

கல்வித்துறையை கவனிக்கும் அளவிற்கு இங்கிலாந்தில் உள்ளூராட்சி முறை வளர்ந்துள்ளது. பிரித்தானியர் இலங் கையில் கல்வி முறையை உள்ளூராட்சி நிறுவனங்களிடம் ஒப்படைக்க முனைந் தார்கள். இது சாத்தியமாகவில்லை. உள்ளூ ராட்சி நிறுவனங்கள் இலங்கையில் வறுமை யில் இருந்தன. நீண்ட கால பாரம்பரியம் உள்ளூராட்சி முறையில் இருக்கவில்லை. இதனால் சில தோல்விகள் ஏற்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் முக்கியத்து வத் தினை உணர்ந்து செயற்படுவோம்.  

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates