Headlines News :
முகப்பு » , » '20' க்கு இன்னும் வாய்ப்பு இருக்கின்றது - பி. பார்த்தீபன் -

'20' க்கு இன்னும் வாய்ப்பு இருக்கின்றது - பி. பார்த்தீபன் -


"தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கியதேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்தபோதும் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றபோதும்  தேவையான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக்கொடுத்து பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சாத்தியமான சூழலை உருவாக்க பின்னிற்கவில்லை."


"தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களுக்கு எல்லை மீள் நிர்ணயமோ அல்லாது தொகுதிவாரி முறையோ பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்ற நிலைப்பாட்டில் அதன் மூலம் பாதிப்படையக்கூடிய சகோதர முஸ்லிம் , மலையக மக்களுக்காக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் எத்தகைய அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் பரபரப்பாகக் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம், அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை என்பன தொடர்பில் ‘ஞாயிறு’ தினக்குரலுக்கு அளித்த பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்தார். 
அவரது பேட்டியின் விபரம் வருமாறு:

கேள்வி: அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் ஊடாக இலங்கையின் தேர்தல் முறை மாற்றம் முன்வைக்கப்ப டவுள்ளதாக  இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே நீங்கள் தினக்குரல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தீர்கள். தற்போது 20 ஆவது திருத்தம் தொடர்பில் பேசப்பட்டது. ஆனால், அது மாகாணசபையின் ஆயுட் காலம் பற்றியதாகவுள்ளது இது பற்றி கூறுங்களேன்....

2015 ஜனவரி  8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் 19வது திருத்தம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பில் பேசப்பட்டது. அதாவது ஒரு ஜனாதிபதியாக இரண்டு தடவைக்கு மேல் போட்டியிட கூடிய வாய்ப்பை வழங்கிய 18 வது திருத்ததத்தை இல்லாமலாக்கி நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய இன்னும் சில அதிகாரங்களைக் குறைத்து அதனை பாராளுமன்றத்துக்கு வழங்குவதே 19 ஆவது அரசியலமைப்பாக அமைந்தது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து வெற்றிபெறச்  செய்வதற்கு அப்போதைய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிறுவப்பட்ட புதிய அரசு போதிய பலம் கொண்டதாக இருக்கவில்லை. 

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் மைத்திரி ஆதரவு அணியினரின் ஆதரவுடனேயே 19வது திருத்தத்தை றிறைவேற்றக்கூடிய சூழல் இருந்தது. எனவே 19வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவது எனில் 20 ஆவது திருத்தமாக 'தேர்தல் முறையை மாற்றுவது' எனும் திருத்தமும் நிறைவேற்றப்படல் வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது. அதற்கு உடன்பாடு எட்டப்பட்டே 19 வது திருத்தம் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 

அதே நேரம் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வரும் நோக்கோடு பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. சிறுகட்சிகள், சிறுபான்மை கட்சிகளின் அரங்கம் என்ற ஒன்று கூட உருவாகியிருந்தது. இந்த காலப்பகுதியிலேயே புதிய தேர்தல் முறை குறித்தும் 20 வது திருத்தம் குறித்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் கூட வெளியானது.  அதேநேரம் 100 நாள் ஆட்சிக்காலம் 100 நாட்களைக்கடந்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டிய காலகட்டமும் வந்த நிலையில் 20வது திருத்தம் செய்து தேர்தல் முறையை மாற்றாமலேயே நடைமுறையில் உள்ள விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தலை நடாத்துவது என்றும் தேர்தலுக்கு பின்னதாக அமைகின்ற அரசாங்கத்தில்  தேர்தல் முறையை மாற்றுவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. 

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தீவிரமாக இடம்பெற தேர்தல் முறைமை மாற்றத்தையும் அதனூடாகவே கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. ஒரு புறம் புதிய அரசியலமைப்புப் பணிகள் தாமதமடைந்த அதேவேளை கலைக்கபட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தக் கோரிய கோரிக்கைகளும் வலுப்பெறவே எல்லை மீள்நிர்ணய சிக்கல்களை சரி செய்து விகிதாசாரமும் தொகுதிவாரியும் இணைந்த கலப்பு முறையை தேர்தல் முறையாக அறிமுகம் செய்யும் பொருட்டு 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தத்தை நிறைவேற்றி புதிய தேர்தல் முறைமை ஒன்றில் நடாத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேபோல மாகாணசபைகள் சில கலைக்கப்பட வேண்டிய காலம் நெருங்கியபோது அதற்கும் புதிய முறையில் தேர்தலை நடாத்தும் நோக்குடனும் கூடவே ஒரே நாளில் அனைத்து மாகாண சபைக்குமான தேர்தலை நடாத்துவது என்பதையும் இணைத்து 20ஆவது திருத்தம் என்ற ஒன்றை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்தது. இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என நீதிமன்றம் தீர்பப்ளித்த நிலையில் 1988 ஆம் ஆண்டு மாகாண சபைகள் சட்டத்தினை திருத்துவதன் ஊடாக தற்போது மாகாண சபைகளுக்கும் கலப்பு முறை தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இப்போது எஞ்சியிருப்பது நாடாளுமன்ற தேர்தல்கள் முறையை தற்போதைய முறையில் இருந்து மாற்றியமைப்பதே. அதனை புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக கொண்டு வரவேண்டும் என்பதே சிறுகட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இடையில் ஏதேனும் மாற்றுவழிகள் கையாளப்படுமா என்கிற சந்தேகங்களும் இல்லாமல் இல்லை.  அப்படி இருக்கக்கூடிய ஒரே மாற்றுவழி 20வது திருத்தம் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட தேர்தல் முறையை மாற்றியமைக்கும் விடயம்தான். 

இப்போது வெவ்வேறு மாற்று வழிகளில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டம் திருத்தப்பட்டு கலப்பு முறை அறிமுகப்படுத்தப் பட்டுவிட்ட நிலையில், தேர்தல் முறை மாற்ற நடவடிக்கைகளில் அதிக அழுத்தத்தை பிரயோகித்து ஏதேனும் வடிவத்தில் அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஜனாதிபதி மைத்திரியின் அணியான சுதந்திரக்கட்சியினர் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தை கையாளக்கூடிய மாற்றுவழியொன்றாக 20 ஆவது திருத்தம் என்ற ஒன்றை முன்வைக்கும் சாத்தியம் இல்லாமல் இல்லை. 

கேள்வி: இப்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் முறைமையை திருத்தும் யோசனைகள் உள்வாங்கப்ப ட்டுள்ளனவா?

ஆம், ஏற்கனவே குறிப்பிட்டவாறு அந்த யோசனைகள் அறிக்கையில் உள்வாங்கப் பட்டுள்ளன. அதேநேரம் இந்த அறிக்கையின் உப இணைப்புகளாக சேர்க்கப்பட்டுள்ள பிரதான கட்சிகளினதும் கூட்டணிகளினதும் முன்மொழிவுகளில் வெவ்வேறு வகையான நாடாளுமன்ற தேர்தல் முறைமைகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மாகாண சபைகளுக்கும் கலப்பு முறை தேர்தல்கள் உறுதியாகிவிட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கும் இதே முறை கொண்டுவரப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் தெரிகின்றன. ஆனால்,  கலப்பு முறையாயினும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் அதனை கையாள்வதில் வெவ்வேறு வீதாசாரங்கள் பேணப்படுகின்றன. எனவே நாடாளுமன்ற தேர்தல்கள் இதுபோன்ற ஏதாயினும் மாற்று ஏற்பாடுகள் ஊடாக பிரதிபலிக்க முடியும். 

இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கபட்ட நாளில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவையில் ஆற்றிய உரையில் புதிய அரசியலமைப்பு மாற்றங்களின் ஊடாகவே நாடாளுமன்ற தேர்தல்களை மாற்றுவதற்கு உடன்படுவோம் என்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைகளுக்கும் செய்யப்பட்டது போன்ற மாற்றுவழிகளுக்கு இடமளிக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரக்கட்சியும் கலப்பு முறை தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சிறு கட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் நிலைப்பாடு எவ்வாறு அமையப்போகின்றது என்பதனை அரசியல் நகர்வுகளின் ஊடாகவே தீர்மானிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. 

கேள்வி: உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் இரண்டிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. இவையிரண்டின்போதும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் செயற்படும் சூழ்நிலை நிலவியதா?

ஒவ்வொரு கட்சியாக எடுத்து நோக்கினால் ஒவ்வொன்றும் வெவ்வேறான நிலைப்பாடுகளில் நின்றே மேற்படி தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேற்படி தேர்தல் முறையில் தொகுதிவாரி என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போதைய மாவட்ட விகிதாசார முறையில் இருந்து மாற்றம் பெற்றாலும் தொகுதிகளை அமைக்கும்போது தங்களுக்கு பாதகம் ஏற்படாது என்கின்ற நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு அலட்சியப் போக்குடனேயே இதனை எதிர்கொண்டுள்ளது எனலாம். 

வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் அவர்கள் செறிவாக வாழ்கின்ற நிலையில் பிரிக்கப்படுகின்ற தொகுதிகளில் தங்களது பெரும்பான்மை அதிகமாக இருக்கும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடனும் சில பகுதிகளில் சிங்கள மக்களுடன் தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்ள நேரிடும் என்பது தொடர்பாகவோ தற்போது வடக்கில் பல்வேறு குடியேற்ற முஸ்தீபுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அது பின்னாளில் தொகுதிகளை எவ்வாறு பாதிக்கும் என்ற எதிர்வுகூறல்கள்களோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

முஸ்லிம் கட்சிகளைப்பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக தென்கிழக்கு பகுதியில் செறிவாகவும் ஏனைய பகுதியில் சிதறியும் வாழ்வதன் காரணமாக மிகுந்த அக்கறையோடு இந்த தேர்தல்கள் திருத்தத்தை உணர்ந்து செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளார்கள். மலையக கட்சிகளின் நிலைமையும் இதனை ஒத்ததுதான். நுவரெலியா மாவட்டத்தில் செறிவாகவும் ஏனைய மாவட்டங்களில் சிதறியும் வாழ்வதனால் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள அதிக அக்கறையுடன் செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இதில் முஸ்லிம் கட்சிகளிடையே காணப்பட்ட கருத்தொற்றுமை செயற்பாட்டு ஒற்றுமை போன்று மலையகக் கட்சிகளிடையே கருத்தொற்றுமையும் செயற்பாட்டு ஒற்றுமையும் காணப்படுகின்றது என்று சொல்வதற்கில்லை. வெவ்வேறு அரசியல் கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற போதும் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் இது விடயத்தில் ஓரளவு இணக்கப்போக்குடன் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக கலந்துகொண்டு தீர்மானங்களை எடுத்து வருகின்றன. இங்கு இவர்களின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வலுசேர்ப்பதாகவுள்ளது.

 ஆனால் மலையக நிலையமையில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்படும் நாங்கள் ஆறு உறுப்பினர்கள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து ஏதேனும் பொது தீர்மானங்களை எடுத்து அழுத்தங்களை கொடுக்க முன்வருகின்ற நிலையில் ஏனையவர்களின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது. இதில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஸின் நிலைமை வேறு. அவர் ஐக்கிய தேசிய கட்சி எடுக்கும் நிலைப்பாட்டுக்கு உடன்படவேண்டிய நிiலையில் உள்ளார். மறுபுறம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த இரண்டு சந்தரப்பங்களிலும் எத்தகைய கருத்து நிலைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை. ஆனால், பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். 

குறிப்பாக மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்போது முஸ்லிம் கட்சிகளின் 12 உறுப்பினர்களும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்களும் இறுதிநேரம் வரை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக்கொடுத்தோம்.  கலப்பு முறையில் 50க்கு 50, எல்லை மீள் நிர்ணய அறிக்கைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வலியுறுத்தல், எல்லை மீள்நிர்ணய குழுவில் அனைத்து இனங்களினதும் பிரதிநிதிகள், இனத்துவ சனத்தொகையில் குறைந்த தேர்தல் தொகுதிகளை உருவாக்குதல் அதன்போது இன மத அடையாளங்களைக் கவனத்தில் கொள்ளுதல் போன்ற முக்கியமான திருத்தங்களை நாம் வலியுறுத்திய போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்விதத்திலும் இது தொடர்பில் சக சிறுபான்மை இன கட்சிகளிடமோ அல்லது எமது கூட்டணியிடமோ தமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவோ அல்லது சபையில் உரையாற்றி கருத்துக்களைத் தெரிவிக்கவோ இல்லை. 

அதே நேரம் அவர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் என சொல்லியிருந்தேன். இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்காவிட்டாலும் இவர்கள் ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரிகின்றது. ஆனால் சுதந்திரக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானபோதும் கூட ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தீர்மானம் எடுப்பதற்கு பூரணமாக ஒத்துழைத்ததை அவதானிக்க முடிந்தது. அவர் ஜனாதிபதி சார் சுதந்திரக்கட்சியின் சார்பானவராக உள்ளபோதும் இது விடயத்ததில் அவர் அந்த அணியின் சார்பானவராக இருக்கவில்லை. 

இன்று தமிழ்முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்தபோதும் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றபோதும் தேவையான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுத்து பிரதிநித்தித்துவத்தை உறுதிப்படுத்தும் சாத்தியமான சூழலை உருவாக்க பின்னிற்கவில்லை. இவ்வாறெல்லாம் நாம் உருவாக்குகின்ற சூழல்களின் ஊடாக நாளை நன்மையான விளைவுகள் உருவாகுகின்றபோது இ.தொ.காவினர் தாம்தான இதனை முன்வைத்தோம் என்பார்கள். பிரதேசசபை அதிகரிப்பு, பிரதேச சபைச் சட்டத் திருத்தம் போன்ற விடயங்களில் இதனை அவதானிக்கலாம். 

அவற்றில் கூட அவர்கள் குறைந்தபட்சம் அமைச்சர்களை சந்தித்தது பத்திரிகை அறிக்கைகள் விட்டமை இடம்பெற்றன என்று கூட சொல்லலாம். ஆனால் உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்தின்போதோ, மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தன்போதோ கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு அவர்களது இரண்டு நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகாரங்களும் எந்தவித்தத்திலும் பேரம்பேசலுக்குத் துணை நிற்கவில்லை. ஆனால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களுக்கு எல்லை மீள்நிர்ணயமோ அல்லாது தொகுதிவாரி முறையோ பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்ற நிலைப்பாட்டில் அதன் மூலம் பாதிப்படையக்கூடிய சகோதர முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்காக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் எத்தகைய அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை. நாங்கள் திருத்தங்களை சமர்ப்பித்து அரசாங்கத்துடன் போராடிக்கொண்டிருக்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த திருத்தச்சட்டம் மிகச்சிறந்தது என்றும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதை மாத்திரம் வரவேற்று ஆதரவளித்து பேசிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக சட்டமூலம் சமர்ப்பிக்கபடப்டவுடன் விவாதத்தை ஆரம்பித்துவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆணித்தரமாக வரவேற்று பேசிவிட எங்களது பேரம் பேசுதலுக்கு அது தடங்கல்களை ஏற்படுத்துவிடுகின்றது. 

எதிர்க்கட்சியான தமிழ் கட்சியே ஏற்றுக் கொள்கின்றபோது ஆளும் கட்சி பங்காளிகளான நீங்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் எம்மை கேள்விக் கேட்கும் நிலை உருவாகிவிடுகின்றது. முஸ்லிம் கட்சிகளுடன் அவர்களுக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், சகோதர தமிழ் இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதையே காட்டுகின்றது.

இந்த அரசியல் போக்கு ஆரோக்கியமானதல்ல. கடந்த கால வரலாற்றில் இலங்கைத் தமிழர் தரப்பு மலையக மக்களின்  அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எடுத்த தீர்மானங்களை நாங்கள் மீளவும் நினைத்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றோம். எதிர்வரும் காலங்களில் அவர்கள் சார்பான ஏதேனும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இத்தகைய சூழல் உருவாகின்றபோது நாமும் எவ்வாறு நடந்துகொள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் ஆதரவாக வாக்களிப்பதும் கூட இந்த நிலைமைக்கு ஒப்பானதுதான். அவர்கள் வெறுமனே வாக்களிக்கத் தயாராகிவிடுகின்றபோது அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு மக்களின் உரிமைக்காக பேரம்பேசும் எங்கள் மீது அழுத்தத்தைக்கொடுக்கலாம் என நினைக்கிறார்கள் போலும். ஆனால் மலையக சமூகம் என்கின்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு உண்டு. 

மக்கள் விடுதலை முன்னணி சிறுபான்மை கட்சியல்லாத சிறு கட்சி என்கின்ற அடிப்படையில் இந்த கலப்பு முறை அவர்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கும் என்கின்றபடியால் நேரடியான ஆதரவினைத் தெரிவிக்கின்றார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உரைகளிலும் மேடைகளிலும் மலையக மக்களுக்காக வருத்தங்களைத் தெரிவிக்கும் இவர்கள் இவ்வாறான சட்டத்திருத்தங்களின்போது மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் உணரவேண்டும்.  

கேள்வி: உள்ளூராட்சி, மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின்போது  நீங்கள் கொடுத்த அழுத்தங்களின் ஊடாக மலையக மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடிந்ததா?

நடைமுறையில் உள்ள அரசியல் சூழலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாங்கள் தனித்தும் சக முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தும் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநித்ததுவத்தை தக்கவைத்துக்கொள்ள முழுமையான பங்களிப்பைச் செய்துள்ளோம். இப்போதைய நிலையயில் முஸ்லிம் மற்றும் மலையக சமூகம் எதிர்நோக்கும் பிரதான சவால்தான் விகிதாசாரத்தில் தமக்கு இருந்த 100 சதவீத வாய்ப்பு அதைவிட குறைகின்றபோது அந்த குறைகின்ற அளவை இயலுமானவரை குறைத்து வீதாசார வாய்ப்புகளை உச்சமாக்கிக்கொள்வதும் மீதமுள்ள தொகுதிவாரி வாய்ப்புகளில் தமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் சாத்தியமான வழிகளில் தொகுதிகளை உருவாக்கிக்கொள்வதும் ஆகும். 

2012 ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின்படி, அது அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் விகிதாசாரத்தில் வெறும் 28 சதவீத வாய்ப்பே எமக்கு கிடைத்திருக்கும். ஆனால், நாம் அழுத்தங்களைக்கொடுத்ததன் ஊடாக அது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே திருத்தப்பட்ட 2017ஆண்டு உள்ளுராட்சி மன்ற சட்டத்தின்படி அறுபது சதவீதம் தொகுதிவாரியாகவும் 40 சதவீதம் விகிதாசார ரீதியாகவும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியும். 

இந்த அறுபது சதவீத தொகுதிகளைத் தெரிவு செய்வதிலும் மலையக மக்களின் பிரதிநிதிகள் தெரிவாகக் கூடிய வகையில் வட்டாரங்களை மீளமைப்பதிலும்  நாம் பங்களிப்பு வழங்கியுள்ளோம். மத்திரமல்லாது அதிகரிக்கப்படும் வட்டாரங்களுக்கு ஏற்ப புதிய பிரதேச சபைகளை உருவாக்குவதிலும் எமது பேரம்பேசுதல் நாடாளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துகின்றபோதும் அரசாங்கத்தின் முன்மொழிவு அறுபதுக்கு நாற்பது என்பதாகவே அமைந்தது. அதனை நாங்கள் ஐம்பதுக்கு ஐம்பது என கோரிக்கை வைத்து வென்றெடுத்துள்ளோம். இதன்மூலம் விகிதாசார முறையில் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு பத்து சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. எஞ்சிய ஐம்பது சதவீத தொகுதிவாரி முறையிலும் தொகுதிகளை வடிவமைக்கும் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிரயணத்தில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு அவற்றைச் சரி செய்யும் வகையில் சில முன்மொழிவுகளை சட்டத்திருத்தத்தின்போது உள்ளடக்கியிருக்கிறோம்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை மீள்நிர்ணயம் கடந்த ஆட்சியின்போது மிகவும் பாரதூரமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதனை புதிய அரசாங்கத்தில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும் ஏற்கனவே செய்யப்பட்ட எல்லை மீள் நிர்ணயத்தில் இருந்து பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை. 

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் எனும் கட்டாய நிலையில் திருப்தி அற்ற நிலையிலும் கூட நாம் உள்ளுராட்சி மன்ற எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் இணக்கப்பாடுக்கு வரவேண்டியிருந்தது. எனவேதான் மாகாண சபைத் தேர்தல்களுக்கான எல்லை மீள்நிர்ணயத்தின் போது சில முக்கிய விடயங்களில் நாம் உறுதிப்பாட்டைப் பெறவேண்டியிருந்தது. எல்லை மீள்நிர்ணய குழுவில் அனைத்து இன மக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்புடுத்துவது. 

அவர்கள் அனைவரதும் இணக்கப்பாட்டுடன் இறுதி அறிக்கைத் தயாரிப்பது அவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கையை முன்புபோல வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக மாத்திரம் உறுதிப்படுத்துவதாக அல்லாது அந்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படல்வேண்டும் எனும் சரத்தினை சட்டத்திருத்தத்தில் கொண்டுவருவதற்கு நாம் அதிக பிரயத்தனங்களை எடுத்திருந்தோம். சட்டத்திருத்தத்துக்கான வாக்களிப்பு தாமதமானத்துக்கு இதுவே பிரதான காரணமாகும். 

சோல்பெரி அரசியலமைப்பில் காணப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் மீதான அக்கறை தொடல்பிலான விதப்புரை இந்த திருத்தங்களின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அரசியலமைப்பு உருவாக்க முன்மொழிவுகளில் நாம் வலியுறுத்தியிருந்தோம். இனம் மதம் இன்னும் பிற காரணங்கள் அடிப்படையில் செறிவு குறைவாக வாழும் குழுக்களுக்காக தேசிய மட்ட தொகுதித் தெரிவுகளில் இருந்து மாறுபட்ட ஒரு அளவுகோளை எல்லை மீள்நிரண்யக்குழு கடைபிடிக்க இந்த திருத்தச் சட்டம் வாய்ப்பளிக்கின்றது. 

அதேபோல பல அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எனவே, மலையக மக்களின் பிரதிநிதித்துவம் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அல்லாது அவர்கள் செறிவு குறைவாக வாழும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்படக்கூடிய சாத்தியமான சூழலலை உருவாக்குவதில் எமது முயற்சி பலனளித்துள்ளது. 

எது எவ்வாறாயினும் தேர்தல் காலங்களில் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைகளுக்கு அமைவாக கட்சிகள் தமது தேர்தல் நடத்தைகளை வெளிப்படுத்துவதில் இருந்தும் மக்கள் தமது வாக்களிப்பு நடத்தையை வெளிப்படுத்துவதிலும் இருந்துதான் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியும். எனவே இக்கட்டான காலகட்டங்களில் சட்டத்திருத்தங்களின்போது எந்தக் கட்சி எவ்வாறு நடந்துகொள்கிறது? யாரிடம் தூநோக்கம் இருக்கின்றது போன்ற விடயங்களை மக்கள் கவனத்தில் எடுத்து வாக்களிப்பதன் மூலமே மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எல்லா சபைகளிலும் உறுதிப்படுத்தப்படும். 

கேள்வி: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தினூடாகவும் குறிப்பாக மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேர்தல்களை பிற்போடுவது உள்ளிட்ட வேறு அரசியல் நிகழ்ச்சி நிர்லகள் அரசாங்கத்துக்கு இல்லை என சொல்ல முடியுமா?

 அரசாங்கம் என்று வருகின்றபோது எந்தவொரு அரசாங்கத்துக்கும் நேரடி மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு அல்லாமல் எல்லாமே வெளிப்படையாக செய்யப்டுமானால் இந்த நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.  மலையக மக்களைப் பொறுத்தவரையில் இந்த மறைமுக நிகழ்ச்சிநிரல்கள் மூலம் அதிகம் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மக்களாக இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலே உள்ளது. 

மலையக மக்கள் சார்பில் நாடாளுமன்றில் ஏழு பேர் அங்கம் வகித்துக்கொண்டிருக்கத்தக்கதாகவே அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கிய வரலாற்றை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. அதேபோல இரண்டு பிராந்திய வல்லரசு நாடுகளிற்கிடையேயான  முறுகலின்போது தாம் சாரந்திருக்கவேண்டிய அணி தொடர்பில் தீர்மானம் எடுக்க இலக்கை அரசு நாடற்றவர்களாக இருந்த மலையக மக்களை கொத்துக் கொத்தாக நாடுகடத்தியமையையும் மறந்துவிட முடியாததது. 

இன்றைய மலையக சமூகம் என்பது தமது இருநூறு வருடகால வரலாற்றில் முதல் நூறுவருடம் அரசியல் சூனியநிலையிலும் அடுத்த நூறு வருட வரலாற்றை அதற்கு மாறான அரசியல் போராட்ட வரலாற்றையும் கொண்டவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இறுதி நூறு வருடகாலத்தில் பல்வேறு அரசியல் நெருக்குவாரங்கள், இன வனமுறைகள், பொருளாதார ஒடுக்குமுறைகள், நிர்வாக பேதப்படுத்தல்கள், கல்வியில் புறந்தள்ளல் என பல்வேறு பாரபட்சங்களுடனேயே தமது அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளார்கள். இருந்தும் நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் போட்டியிடக்கூடிய அரசியல் நாகரிகத்தையும் கண்டடைந்துள்ளார்கள். 

இந்த நிலையில் நின்றே இன்று நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஒன்பது உறுப்பினர்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு உறுப்பினர்கள் ஒன்றாக, ஒற்றுமையாக நின்று எமது மலையக சமூகத்திற்காக குரல்கொடுக்கின்றோம், செயற்படுகின்றோம். மாகாணசபை தேர்தல்கள் திருத்தச்சட்டம் கொண்டுவந்த நாளில் மலையக மக்களிடையே தோன்றியிருக்கும் புதிய அரசியல் கலாசாரத்தைக் கண்டு ஏனைய கட்சி உறுப்பினர்கள் வியந்தமையை அவதானிக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தக்கவைக்க மலையக சமூகம் இந்த அரசியல் செல்நெறியைத் தொடரவேண்டும். பெருந்தேசிய கட்சிகளினதோ அல்லது பெரும்பான்மை அரசினதோ நேரடி மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எமது அரசியல் பலம் எத்தகையது என்பதை நாம் உணர்ந்துகொண்டுள்ளோம். அதேநேரம் சாணக்கியமான வழிமுறைகளில் எமது உரிமைகளைப் பாதுகாக்க நாம் எமது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகின்றோம். எது எவ்வாறாயினும் இந்த மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தின்போது சிதறிவாழும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல்பலம் உரசிபார்க்கப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல் (ஞாயிறு)



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates