இலங்கையில் தமிழும் அரசகரும மொழியாகவுள்ளது. எனினும், நடைமுறையில் தமிழ் மொழிக்குரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றதா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளில் அரச அலுவலகங்களில் தமிழ்மொழி மூலமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன. தமிழ் ஏட்டளவில் அரச கரும மொழியாக இருந்து வருவதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்நிலை மாற்றப்பட்டு மலையக மக்கள் தமிழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்று மலையக புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
மொழி என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கருத்து பரிமாற்றங்களுக்கு கை கொடுப்பதோடு மனிதர்களிடையே தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கும் மொழி உந்து சக்தியாக அமைகின்றது. உலகில் பல்வேறு மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு தனித்துவமும், மதிப்பும் காணப்படுகின்றது. உலகிலுள்ள பல மொழிகள் இப்போது வழக்கிலுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாதல் வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் நாம் மதிப்பளிப்பதை போன்று ஒவ்வொரு மொழியையும் நாம் மதிக்க கற்று கொள்ளுதல் வேண்டும். மொழியின் ஊடாக புரிந்துணர்வு வலுப்பெறுகின்றது. தொடர்பாடல் மேலோங்குகின்றது. ஒருவன் பல மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பதானது பல நன்மைகளையும் அவனுக்கு பெற்றுக் கொடுப்பதாக அமையும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர். பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒவ்வொரு இனத்தவரினதும் மொழி உரிமையானது உரியவாறு பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இது இல்லாதபோது முரண்பாட்டுச் சூழ்நிலைகள் மேலோங்குவதற்கு மொழி அடிப்படையாக அமைந்து விடும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.
இலங்கையின் கடந்த கால முரண்பாட்டு சூழ்நிலைகளிலும் மொழியின் ஆதிக்கம் என்பது அதிகமாகவே இருந்தது என்பதனை யாவரும் அறிவர். இந்த முரண்பாட்டு சூழ்நிலைகளால் எமது மக்கள் அதிகமான துன்ப துயரங்களையும் அனுபவித்து விட்டனர். இன்னும் அனுபவித்து கொண்டும் இருக்கின்றனர். மொழியின் மகத்துவத்தினை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உரிய இடத்தினை வழங்கவும் முன்வருதல் வேண்டும். மொழிகளின் வரிசையில் தமிழுக்கென்று தனிச்சிறப்புகள் பல உள்ளன. உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் தமிழ் மொழியே உலகின் முதல் மொழி என்று கூறியுள்ளனர். பெயர், சிறப்பு, எழுத்து சிறப்பு, சொற் சிறப்பு, தொன்மைச்சிறப்பு, ஒலிச்சிறப்பு, எளிமை சிறப்பு என்று பல்வேறு சிறப்புகளையும் கொண்டதாக தமிழ்மொழி விளங்குகின்றது. தமிழின் சிறப்பையே தம் வாழ்வின் சிறப்பாகக் கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்தவர்களில் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் முதன்மையானவராக கருதப்படுகின்றார்.
கல்வி மற்றும் அரசாங்கம் என்பவற்றில் தேசிய மொழிகள் இரண்டினதும் (சுயபாஷை) பயன்பாட்டிற்கான ஒரு விவாதம் காலனித்துவத்துக்கு எதிரான தமிழ் அடிப்படை மாற்றத்தினை வேண்டுபவர்கள் ஒன்றிணைந்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸினாலேயே எழுப்பப்பட்டதாக நூல் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் பல்லினத்துவம் மற்றும் மத சார்பற்றதுமான சமுதாய நீதி உணர்வு கொண்ட இலங்கை தேசிய வாதத்தை ஆதரித்துள்ளது. இலங்கை இளைஞர் காங்கிரஸ் 1924இல் அதன் முதலாவது வருடாந்த கூட்டத்தில் சிங்கள பாடசாலைகளில் தமிழை கற்பித்தல் மற்றும் அதேபோன்று தமிழ் பாடசாலைகளில் சிங்களத்தை கற்பித்தல் என்பவற்றின் மூலம் கல்வியின் இருமொழி தன்மையை முன்மொழிந்தது. துரதிஷ்டமாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு மற்றும் கருத்தியல்கள் என்பன 1930இன் நடுப்பகுதிகளில் டொனமூர் அரசியல் திட்ட காலப் பகுதியின் பின்னிருந்த பழைமை வாத தமிழ் காங்கிரஸினால் மழுங்கடிக்கப்பட, சுயபாஷைக்கான கோரிக்கை சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்ததொன்றாகியது. இந்த காலகட்டத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் பிரதான கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கு சிங்களவர்களை அனுமதிப்பதில் திருப்தியடைந்ததுடன் சிங்களவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றனவோ அவற்றை தமிழ் மொழிக்கும் வேண்டி கொள்வதோடு தங்கள் பங்கை மட்டுப்பத்தி கொண்டதாகவும் செய்திகள் வலியுறுத்துகின்றன.
சுயபாஷை கோஷம் பின்னர் ‘தனிச் சிங்கள’ இயக்கமாக உருமாறி போனமையும் நினைவு கூரத்தக்க ஒரு விடயமாக உள்ளது.
1956இன் தனிச் சிங்கள சட்டம்
1950 களில் முன்னணி பிரச்சினையாகிய தமிழர் சிங்களவருடைய மொழி உரிமை பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே எதிர்ப்புகள் வளர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 1944 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிங்களம் சில வருட காலத்துக்குள் அரச கரும மொழியாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 1951 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை நிறுவினார். பண்டாரநாயக்காவின் முதற்கட்சி அறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது. சிங்களத்தையும், தமிழையும் உடனடியாக அரச கரும மொழியாக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்நாட்டு மக்கள் தமது சொந்த நாட்டிலேயே அந்நியராக இருக்கும் நிலை ஒழியும். சிங்களம் மூலமும் தமிழ் மூலமும் கல்வி கற்றோர் இன்று வாழ்க்கையின் கடை நிலையில் இருப்பதற்கு முடிவு கட்டலாம் என்று அந்த அறிக்கை அமைந்திருந்தது. எனினும், முன்னர் சம அந்தஸ்துக்காக வாதாடிய பண்டாரநாயக்கா பின்னர் ‘சிங்களம் மட்டும்’ என்ற நிலைக்கு வலுச்சேர்த்தார். தனிச்சிங்கள சட்டம் பாதக விளைவுகளை தரும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மொழிகளின் சம உரிமையை ஏற்றுக்கொள்ளுதல் எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் கூட்டு ஒற்றுமைக்கும் வழியாகும் என்ற நிலைப்பாட்டில் சிலர் இருந்தனர்.
இரத்தம் வடியும் துண்டிக்கப்பட்ட இரு சிறு அரசுகள் ஒரு அரசிலிருந்து தோன்றக் கூடும். அண்மையில் வெளியேறிய ஏகாதிபத்தியவாதிகள் மீண்டும் எம்மை ஏப்பம்விட ஏதுவாகலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், எல்லாவற்றையும் தாண்டி ‘தனிச்சிங்கள சட்டம்’ உருப்பெற்றது. ‘சிங்கள மொழியே இலங்கையின் ஒரே அரச கரும மொழியாகும்’ என்பதை உறுதிப்படுத்துவதற்கு 1956 இல் அரச கரும மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் தமிழ் அல்லது ஆங்கில மொழிகள் பற்றி வெளிப்படையாக எதனையும் குறிப்பிடவில்லை. ஆயினும், உத்தியோகபூர்வ தேவைகளுக்காக டிசம்பர் 31, 1960 வரை ஆங்கில மொழியின் பாவனையை மறைமுகமாக அனுமதித்தது. வெறுமனே மூன்று பகுதிகளை மட்டும் கொண்டிருந்த இச் சட்டவாக்கம் அதன் சுருக்கமான தன்மைக்கு நேரெதிரான வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்கள சட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த அ.அமிர்தலிங்கம், ‘தனிச் சிங்களம்’ எனும் கொள்கை இந்த நாட்டின் பொது வாழ்க்கையில் தமிழ் மொழியை அதற்குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கி வைப்பதை மட்டும் கருதவில்லை. ஆனால், அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்க்கை என்பவற்றில் இருந்தே வெளியே தள்ளிவைத்துள்ளது என்று (1964) கருத்து வெளியிட்டிருந்தார். உண்மையில் தமிழ் மக்களை எல்லா துறைகளிலும் ஓரம் கட்டும் நோக்கிலேயே இனவாதிகள் ‘தனிச் சிங்கள’ சட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தனர்.
மொழி ரீதியான பாரபட்சமே வடக்கு, கிழக்கு தமிழ் சமூகத்தின் சுயநிர்ணய கோரிக்கைக்கு பங்களிக்கின்ற முக்கியமான குறைபாடென்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உதாரணமாக 1976ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பித்து, அதனை இறைமையுள்ள சோஷலிச தமிழீழ அரசொன்றுக்கான பிரிவினைவாதப் போராட்டத்தில் இணைத்ததுடன், தனிச் சிங்களக் கொள்கை தமிழர்கள் மீது ‘தாழ்வு முத்திரை’ ஒன்று குத்துவதாக தனியாக குறிப்பிட்டுக் காட்டியது என்கிறார் பா.ஸ்கந்தகுமார். 1956 தனிச் சிங்கள சட்டம் உருவாக்கப்பட்டு, அது உணர்வுபூர்வமாக அமுலாக்கப்பட்டது. சிங்கள மொழி மூலம் அரச சேவையில் இணையாதவர்கள் சிங்களத்தை படிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சிறுபான்மையினரை வலிந்து சிங்கள மொழியை ஏற்கும்படி நிர்ப்பந்திப்பது இனக் கலவரத்துக்கு வழிவகுக்கும் என்ற லெஸ்லியின் வார்த்தைகள் இங்கு காற்றில் பறக்கவிடப்பட்டன. ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துள் சிங்கள மொழியில் தேர்ச்சியை பெறாதபோது (தேவையான மட்டத்திற்கு) சேவையில் இருந்து நீக்கப்பட்டனர். தமிழ் மொழியில் கல்வியை பெற்றவர்கள் சிங்கள மொழியில் பரிச்சயமின்மை அல்லது அதனை கற்க மறுத்தமை காரணமாக சிவில் சேவைகளுக்கு விண்ணப்பிக்க ஊக்கம் செலுத்தாது இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால் அரச சேவையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக வீழ்ச்சி கண்டது.
குறிப்பாக, 1956 இல் நிர்வாக சேவையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் 30 சதவீதமாக இருந்தது. 1965 இல் இது இருபது வீதமாக வீழ்ச்சி கண்டது. 1970 இல் ஐந்து வீதமாக மேலும் வீழ்ச்சி கண்டது. இதுபோன்றே எழுதுவினைஞர் சேவையில் 1956 இல் 50 வீதமாக இருந்த தமிழர் பிரதிநிதித்துவம் 1965 இல் 30 வீதமாக வீழ்ச்சி கண்டது. 1970 இல் இது ஐந்து வீதமாக இருந்தது. தனிச் சிங்கள சட்டம் இப்படியெல்லாம் தமிழர்களை ஓரம் கட்டியது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக கணிசமான அளவுக்கு தமிழ் மொழியையும் பயன்படுத்துவதை அனுமதிக்கும் தமிழ் மொழி விசேட விதிகள் சட்டமூலம் 1958 இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் சிங்கள தேசிய வாதிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் வலுவற்றுபோனது.
1972, 1978 அரசியலமைப்பு
1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புகள் சிங்கள மொழியையே முதன்மைப்படுத்தி இருந்தன. 72 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சிங்கள மொழி அரச கரும மொழி என்று குறிப்பிட்டது. இதற்கு முன்னர் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கள மொழி அரச கரும மொழியாக இருந்தாலும் அது பாராளுமன்ற சட்டமாகவே இருந்து வந்தது. இந்த அரசியலமைப்பின் மூலம் முதன் முதலாக அதற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதேவேளை, தமிழ் மொழியின் உபயோகம் 1958 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு இணங்க இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை அரசியலமைப்பின் ஒரு ஏற்பாடாக எந்த வகையிலும் பொருள் கொள்ளக்கூடாது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையானது தமிழ் மொழிக்குரிய அந்தஸ்தினை அரசியலமைப்பின் ஊடாக வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்பதனையே சுட்டிக்காட்டுவதாக புத்தி ஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் ஆரம்பத்தில் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. எனினும் பின்னர் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய அரசியல் அமைப்பில் கொண்டு வரப்பட்ட 1 ஆவது திருத்தத்திற்கமைய சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழியாகவும் ஆங்கிலம் இலங்கையின் இணைப்பு மொழியாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இவ் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கல்வி மொழியை பொறுத்தவரை இலங்கை மக்கள் ஏதாவது ஒரு தேசிய மொழியில் கல்வியினை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. எனினும் தேசிய மொழிகள் அல்லாத ஒரு மொழியை கல்வி மொழியாக கொண்டிருக்கின்ற ஓர் உயர் கல்வி நிறுவனத்திற்கு இது ஏற்புடையது ஆகாது எனவும் கூறப்பட்டது.
ஏட்டளவில் தமிழ்மொழி உரிமை
இந்த நாட்டில் தமிழும் அரச கரும மொழியாக உள்ளது என்று நினைத்து நாம் பெருமைப்பட்டு கொள்ள முடியும். இது உண்மையில் வரவேற்கத்தக்கதும் ஆகும். ஆனாலும், தமிழ்மொழி அரச கரும மொழியாக இருந்தும் நடைமுறையில் சாத்தியப்பாடு என்பது ஏனோ இன்னும் குறைவானதாகவே இருந்து வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பெரும்பாலான அலுவலர்கள் தமிழ் மக்களின் மொழி ரீதியான உரிமைகளை அங்கீகரித்து மதிப்பளிக்க கரிசனை இல்லாதுள்ளனர். இது ஒரு வருந்தத்தக்க விடயமாகும். தமிழ் மொழி 1987 இல் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட போதும் இம் மொழியை ஒரு அரசகரும மொழியாக அமுல்படுத்துவதில் ஈடுபாடின்மை காணப்படுவதும் பெரும் குறைபாடாகும் என்று புத்தி ஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் ஆளணி நிலைமைகள் போதுமானவையாக இல்லாத போதிலும் அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களால் அவை கேட்டுப் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலைமையானது தமிழ் மொழி அமுல்படுத்தலை உறுதிப்படுத்துவதிலான சம்பந்தப்பட்டவர்களின் ஆர்வமின்மை மற்றும் பற்றுறுதியின்மை போன்றவற்றுக்கு பங்களிப்பு செலுத்துவதாக இருப்பதாகவும் என். செல்வகுமாரன் போன்றவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு தமது அறிக்கையின் தமிழ் மொழி அமுலாக்கல் நிலைமைகள் குறித்து பின்வருமாறு வலியுறுத்தி இருந்தது. இரண்டு அரச கரும மொழிகளையும் நிர்வாக மொழிகளாக பயன்படுத்துவதற்கு பணிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் தமிழ்மொழி பேசுவோர்களுக்கு இதுவரை திருப்தியானதோர் சேவையை வழங்க தவறியுள்ளது. குறிப்பிட்ட ஓர் பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்துவதற்கான வசதிகளை வழங்காது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டுமொழிகளையும் நிர்வாக மொழிகளாக பயன்படுத்துதல் வேண்மென வெறுமனே பணிப்பது பயனற்றது. . இந்த திருப்தியற்ற நிலைமை விரைவில் சீர் செய்யப்பட வேண்டிய தேவையைக் கொண்டுள்ளது என்று ஏற்கனவே அரசகரும மொழிகள் திணைக்களம் வலியுறுத்தி இருந்தது. இதேவேளையில் அரசாங்கம் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்படும் பகுதிகளில் தமிழ் மொழியில் தொடர்பாடல்களைப் பெறவும் மற்றும் தொடர்பாடுவதற்கும் மற்றும் அலுவல்களை மேற்கொள்வதற்குமான வசதிகளை அப்பகுதிகளில் உள்ள பிரஜைகளிற்கு வழங்குவதற்கு பொதுவில் தவறியுள்ளது. அலுவலர் ஒருவரினால் நிறைவேற்றப்பட்டு வழங்கப்படும் ஆவணங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்புகளை பெறுவதற்கு போதுமான வசதிகள் இல்லை. தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் பகுதிகளில் இதே சேவைகளை சிங்கள மொழியில் பெறுவதற்கும் இடர்பாடுகள் எதிர்கொள்ளப்படுவதாக கருத்துகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தமிழ் மொழி அமுலாக்கம் குறித்து மேலிடத்தில் இருந்து வரும் கடிதங்களை சில அதிகாரிகள் அக்கறை செலுத்தாது வெறுமனே கிடப்பில் போடுகின்றனர். வெறுமனே சுற்று நிருப கோவைகளில் கோவைப்படுத்தி வைக்கின்றனர். இவ்விடயம் நோக்கத்தக்கதாகும். சுற்று நிருபத்தில் உள்ள தமிழ் மொழி அமுலாக்கலுக்கு வலுச் சேர்க்கும் விடயங்களை உரியவாறு அமுல்படுத்தா விட்டால் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கும் செயற்பாடு முன்வைக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு தண்டனை வழங்கும் செயற்பாடுகள் முன்வைக்கப்படாமையின் காரணமாக ஏனோ தானோ மனபான்மையில் அதிகாரிகள் நடந்து கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பொறுப்பின்றி அதிகாரிகள் செயற்படுகின்றனர். எனவே சுற்றுநிருபத்தை மீறுகின்ற அதிகாரிகளுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதனையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.
தமிழும் மலையகமும்
மலையக பகுதிகளில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். பெருந்தோட்டங்களை பலர் வாழ்விடமாகவும் கொண்டுள்ளனர். மலையகத்தில் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் பலவுள்ளன. எனினும், இங்கு தமிழ்மொழியின் அமுலாக்கல் நடைமுறைப் பயன்பாடு என்பது எவ்வாறுள்ளது? என்று நோக்கும் போது நிலைமை இன்னும் திருப்திகரமானதாக இல்லை. அலுவலங்களுக்கு செல்லும் தமிழ் மக்கள் தமிழில் கருமமாற்ற முடியாத ஒரு நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. அலுவலகங்களுக்கு செல்லும் எம்மக்கள் சிங்களமொழி புரியாது விழித்துக் கொண்டு உரிய கருமங்களை நிறைவேற்ற முடியாது திக்கு முக்காடுகின்றனர். தமிழ் மற்றும் சிங்களம் என்ற இருமொழி பரிச்சயம் மிக்க தொடர்பாடல் உத்தியோகத்தர்களையும் பல இடங்களில் காண முடிவதில்லை. இதன் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில் மலையக தமிழ் மக்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணிகளை நிறைவு செய்து கொண்டு வருகின்றனர்.
அரச அலுவலகங்களில் இருந்து வரும் கடிதங்கள் மற்றும் சுற்று நிருபங்கள் என்பன பல சந்தர்ப்பங்களில் தனிச் சிங்கள மொழியிலேயே காணப்படுவதும் தெரிந்த விடயமாகும். கடினமான சிங்கள சொற்களைக் கொண்டதாக இக்கடிதங்களும் சுற்று நிருபங்களும் சில சந்தர்ப்பங்களில் அமைந்து விடுகின்றன. இந்நிலையானது தமிழ் அதிகாரிகள் தரப்பில் மொழி ரீதியான சிக்கல்களுக்கு இட்டுச் செல்கின்றது. சிங்கள அதிகாரிகளிடம் தமிழ் அதிகாரிகள் கடிதங்களையும் சுற்று நிருபங்களையும் தூக்கிக் கொண்டு விளக்கம் கேட்டு அலைந்து திரியும் இக்கட்டான நிலைமையும் இதனால் ஏற்படுகின்றது.
இதேவேளை ஆசிரியர்களுக்கென்று நடாத்தப்படும் கருத்தரங்குகள், அதிபர் கூட்டங்கள் உள்ளிட்ட மேலும் பல நிகழ்வுகள் சில இடங்களில் தனிச்சிங்களத்திலேயே நடாத்தப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிபர்களும், ஆசிரியர்களும் உரிய விடயம் தொடர்பில் போதியளவு விளக்கத்தினை பெற்றுக்கொள்வதற்கு முடியாத நிலைக்கு உள்ளாகின்றனர். இந்நிலைமையானது பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர் அபிவிருத்தி போன்ற பல விடயங்களிலும் தாக்கத்தினை உண்டு பண்ணுவதாக உள்ளமையும் தெரிந்த விடயமாகும். சில சந்தர்ப்பங்களில் சிங்கள மொழிக்கேற்ப தமிழ் மொழி பெயர்ப்பு சில வழங்கப்பட்டாலும் அவைகள் எந்தளவிற்கு பூரணத்துவம்மிக்கதாக இருக்கும் என்று சிந்திக்க வேண்டியே இருக்கின்றது. தாய்மொழியிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே பயனுறுதிமிக்கதாக அமையும்.
சில காரியாலயங்களிலும், பேருந்துகளிலும் பெயர்ப்பலகைகள் தனிச்சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றன. இதுவும் பாதக விளைவுகளையே ஏற்படுத்துவதாக அமையும். உரிய இடங்களுக்குச் செல்வது தொடர்பில் இதனால் பல சிக்கல்களும் ஏற்படும். பெரும்பாலும் அலுவலகங்களுக்குச் செல்லும் சில தமிழர்கள் வேலை இலகுவிற்காகவும், காரியத்தை சீக்கிரம் முடிப்பதற்காகவும் தனக்கு தெரிந்த அரைகுறை சிங்கள மொழியிலேயே கருமங்களை மேற்கொள்ள முனைகின்றனர். இது பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் போய்விடுகின்றது. இதனால் அலுவலகங்கள் தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாக உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவதில்லை. இந்நிலையில் தமிழர்கள் தமிழிலேயே காரியமாற்ற முனைதல் வேண்டும். தமிழ் தெரிந்த உத்தியோகத்தர்களை பெற்றுக்கொள்ள ஒன்றிணைந்த அழுத்தத்தினை பிரயோகிக்கவும் வேண்டும். மலையக அரசியல் வாதிகள், புத்திஜீவிகள், அரசசார்பற்ற அமைப்புகள் போன்ற பல முக்கிய தரப்பினர்களின் ஒத்துழைப்பினையும் இதற்கென்று பெற்றுக்கொள்ள முடியும்.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை மட்டும் கருத்தில் கொண்டு தமிழ் உத்தியோகத்தர் சிலர் சிங்கள மொழியையும், சிங்கள உத்தியோகத்தர் சிலர் தமிழ் மொழியையும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சமூக ஒற்றுமை, புரிந்துணர்வு, அபிவிருத்தி என்பவற்றை வளர்த்தெடுக்கவும் மொழி ஆளுமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் மொழியுரிமைகளை அங்கீகரிப்பதற்கு உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையின் அவசியத்தை புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். இவ்விதமானதோர் நோக்கு அரசியலமைப்பு ஏற்பாடுகளை வடிவமைக்கும் போதும் மற்றும் அமுல்படுத்தலின் போதும் மனதிருப்பின் அது ஒவ்வொருவரினதும் மொழியுரிமைகளை மதிக்கவும், அவர்கள் நம் உரிமைகளை அனுபவிக்கவும் வழிவகுக்கும். மொழியுரிமைகளை அனுபவிப்பது நிர்வாக செளகரியங்கள் அல்லது அரசியல் சந்தர்ப்ப வாதங்கள் அல்லது அவற்றின் நன்மைகளில் தங்கி இருத்தல் கூடாது. பிரஜைகள் மற்றும் அவர்களது உரிமைகள் என்பன தேசியக் கொள்கையின் கருவாக இருப்பதுடன் கவனத்திற்குரியனவாகவும் இருத்தல் வேண்டும். நிர்வாக அமைப்புகளின் செளகரியம் இரண்டாம் பட்சமானது என்பதுடன் அது பிரஜைகளின் உரிமைகளை புறந்தள்ளுவதாக அமைதல் கூடாது என்றும் மேலும் வலியுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...